–எஸ்.எஸ்.மகாதேவன்

17. ஒன்று சொன்னாலும்
நன்று சொன்னார்கள்! என்றோ சொன்னார்கள்!!
தாங்கள் தெரிவிக்கும் எந்த ஒரு கருத்துக்கும் பிரமாணம் (அத்தாட்சி) காட்டுவது பாரதிய சிந்தனையாளர் மரபு. பிரத்தியட்சம் /அனுமானம் /ஆகமம் என்று மூன்றுவித சான்று காட்டுவார்கள். இவற்றில் பிரத்தியட்சம் என்பது கண்கூடு. அனுமானம் என்பது யூகம். ஆகம என்பது நயத்தகு மூத்தோர் சொல். அந்த விதத்தில் ஒரு கட்டுரையிலோ ஒரு சொற்பொழிவிலோ திருக்குறளை மேற்கோள் காட்டுவது ஆகமப் பிரமாணமே தான்.
தன் கருத்துக்கு வலு சேர்க்க பாரதியார் ஒரு குறட்பாவை சுபாஷிதமாக்கிக் கொள்ளும் அழகை ரசிப்போமா? இதோ பாரதி வாக்கு:
"நாட்டில் ஓர் புதிய ஆதர்சம், ஒரு கிளர்ச்சி, ஒரு மார்க்கம் தோன்றுமேயானால் மேன்மக்களின் நெஞ்சம் அனைத்தும் இரவியை நோக்கித் திரும்பும் சூரியகாந்த மலர் போல அந்த ஆதர்சத்தை நோக்கி திரும்புகின்றன. சென்ற சுபகிருது வருஷத்திலே (1902) சர்வ சுபங்களுக்கும் மூலாதாரமாகிய ’தேசபக்தி’ என்ற நவீன மார்க்கம் தோன்றியது. நல்லோர்களின் சிந்தையெல்லாம் உடனே புளகிதமாயின. நல்லோருடைய குணங்களில் குறைபாடு உடையவனாகிய யானும் தேவியினது கிருபையால் அப்புதிய சுடரினிடத்து அன்பு கொண்டேன். அவ்வன்பு காரணமாக … தாயின் பாதமலர்களுக்கு புதிய மலர்கள் கொணர்ந்திருக்கிறேன். இவை (பாரத) மாதாவின் திருவுள்ளத்திற்கு மகிழ்ச்சி அளிக்கும் என்றே நினைக்கிறேன் - ’குழல் இனிது யாழ் இனிது என்ப தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்’ என்பது வேதமாகலின்."
தெய்வப் புலவர் வாக்கை பாரதி வேதம் என்றே பேசுவது அருமை!
“இதம் பரம்பரா பிராப்தம் (இது மரபு) என்று சொல்வது பாரதிய கலாச்சாரம். இது என் ’ஸ்கூல் ஆப் தாட்’ என்று பேசுவது மேற்கத்தியர் பழக்கம்” என்பார் சாவர்க்கர். ’நான் சொல்கி்றேன், கேட்டுக் கொள்ளுங்கள்’ என்பதற்கு பதில், நன்றாக வெளிப்படுத்தப்பட்ட ஒரு மூத்தோர் வாக்கு (சுபாஷிதம்) இதற்கு ஆதாரம் என்று பேசுவது அல்லது எழுதுவது அவையடக்கம் என்ற பண்பால் எழுவது.
கொழுக்கட்டையின் செப்பினுள் பொதிந்த பூரணம் போல, பல சுபாஷிதங்கள் தமக்குள் கதை ஒன்றைக் கொண்டிருக்கும். “அஜராமரவத்” என்ற ஸ்லோகத்தைச் சொல்லலாம். அந்த சுபாஷிதத்திற்குள் பொதிந்திருப்பது மகாபாரதக் கதை ஒன்று. அந்த ஸ்லோகம்:
அஜராமரவத் ப்ராஜ்ஞோ வித்யாம் அர்த்தம் ச ஸாதயேத்! க்ருஹீத இவ கேசேஷு ம்ருத்யுனா தர்மம் ஆசரேத்!! -ஹிதோபதேசம்
(பொருள்: முதுமையும் மரணமும் என்னைத் தீண்டாது என்ற எண்ணத்தோடு ஞானத்தையும் செல்வத்தையும் இடைவிடாமல் தேடிக்கொண்டே இருக்க வேண்டும். தான தர்மங்களின் விஷயத்தில் மட்டும் மரண தேவதை தலைமுடியைப் பிடித்து இழுப்பது போன்று அவசரத்தில் செயல்பட வேண்டும்).
அந்த மகாபாரதக் கதை:
தர்மபுத்திரனின் அரச சபைக்கு ஒரு ஏழை பண்டிதர் உதவி கேட்டு வந்தார். வேறு வேலையில் ஆழ்ந்திருந்த தர்மபுத்திரன் ‘நாளை வாருங்கள்’ என்று கூறி அவரை அனுப்பினான். வெறுங்கையோடு திரும்பிச் செல்லும் அந்தப் பண்டிதரைக் கண்ட பீமன் விவரம் அறிந்து அவரையும் உடன் அழைத்துக்கொண்டு அரச சபையில் இருந்த ஆராய்ச்சி மணியை ஓங்கி அடிக்கத் தொடங்கினான். அந்த ஓசை கேட்டு கோட்டையில் இருந்த முக்கிய பிரமுகர்கள் அனைவரோடும் கூட தர்மபுத்திரனும் அங்கு வந்து சேர்ந்தான். அரசன் யாருடனாவது போரில் வெற்றி பெற்றால் அடிக்கும் வெற்றிமணி அது. இப்போது யார் வெற்றி பெற்றார்கள் என்று தர்மபுத்திரன் பீமனிடம் வினவினான். அதற்கு, “நீங்கள் தான் அண்ணா! இந்தப் பண்டிதர் உங்களிடம் உதவி கோரி வந்தபோது நாளை வரச் சொன்னீராமே! நாளை வரை உயிரோடு இருப்போம் என்று அத்தனை நம்பிக்கை உள்ள நீங்கள் மரணத்தை வென்று விட்டீர்கள்!” என்றான் பீமன் ஏளனமாக. தர்மபுத்திரனுக்கு விஷயம் தெளிவாகியது. பண்டிதருக்கு தகுந்த விதத்தில் பரிசளித்து அனுப்பினான். நல்ல செயல்களை தள்ளிப் போடக் கூடாது என்று அறிவுறுத்தும் கதை இது.

இன்னொரு சுபாஷிதத்தில் கிடைக்கிறது இன்னொரு சுவாரஸ்யம்:
நன்றி பாராட்டும் பண்பிற்குத் தமிழகப் பள்ளிப் பிள்ளைகள் அறிந்த உதாரணம் தென்னை மரம். “நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி … ” என்ற ஔவையின் மூதுரை அவர்களுக்கு நன்கு தெரிந்தது தானே ? அதே பண்பைச் சொல்ல அதே உவமையை கையாள்கிறது இந்த சமஸ்கிருத சுபாஷிதம்:
ப்ரதம வயசி பீதம் தோயம் அல்பம் ஸ்மரந்த:
சிரசி நிஹிதபாரா நாரிகேலா நராணாம் !
சலிலம் அம்ருத கல்பம் தத்யுர் ஆஜீவிதாந்தம்
ந ஹி க்ருதம் உபகாரம் ஸாதவஹ விஸ்மரந்தி !!
(பொருள்: செடியாக இருக்கும் போது நாம் ஊற்றும் சிறிது நீரைக் குடித்து தென்னை மரம் வளர்கிறது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தன் வாழ்நாள் முழுவதும் தலை மீது தேங்காய்களின் பாரத்தை சுமந்து அமுதம் போன்ற இளநீரை நமக்கு
அளிக்கிறது. பிறர் செய்த உதவியை நல்லோர் மறக்க மாட்டார்கள்).
தேசம் ஒன்று, அதன் சிந்தனை ஒன்று என்பதற்கு நயமான எடுத்துக்காட்டு இந்த ஸ்லோக இணை.
வேதமே பிரமாணம். என்றாலும் “அனந்த்தோ வை வேதா:” என்ற வேத வரி வேதத்தின் எல்லையற்ற தன்மையை மட்டும் சொல்ல வந்ததில்லை. வேதத்தின் எல்லை காணும் முயற்சியில் வாழ்நாளை செலவிட்டுக் கொண்டிருக்காமல் ஓதிய அளவில் ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்ற வேதவாக்கை சாதகன் வாழ்க்கையில் அனுபவித்து உணர்வதற்கே முன்னுரிமை என்று உணர்த்துகிறது அந்த வேத வரி . சுபாஷிதத்திற்கு இப்படி ஒரு அற்புத பிரயோஜனம் (என்கிறார் வேதம் பயின்ற சென்னை யோக ஆசிரியர் முனைவர் ம.ஜெயராமன்).
வேதத்தை விளக்க வந்த இதிஹாச புராணங்கள் சுபாஷித சுரங்கங்கள்; பின்னாளில் அறநெறிகளை மட்டும் அடுக்கி ’சுபாஷித ரத்னாகர பாண்டாகாரம்’ போன்ற தத்துவக் கொத்துக்கள் கொண்ட கலைக்களஞ்சியங்கள் தோன்றின. சுபாஷிதங்களின் அருமை பெருமைகள் அனந்தம். ஒருவர் தன் கருத்தை வெளியிடுகையில் அவருக்கு சுபாஷிதம் இன்றியமையாததாகி விடும். கூடவே அவர் எடுத்தாளும் சுபாஷிதம் அவரை விஷய ஞானம் உள்ளவராக அறிமுகப்படுத்தும்; இதைக் சுட்டும் சுபாஷிதம்:
ப்ருதிவ்யாம் த்ரீணி ரத்னானி - ஜலம்,அன்னம், சுபாஷிதம் ! மூடைஹி பாஷாண கண்டேஷு ரத்ன சஜ்ஞா விதீயதே !! -சாணக்ய நீதி.
(பொருள்: இயற்கையில் உயர்வான ரத்தினங்கள் மூன்று. அவை நீர், உணவு, சுபாஷிதம் (நயத்தகு சொல்). ஆனால் மூடர்கள் ஏனோ கல்லையே ரத்தினம் என்கிறார்கள்).
ஸ்ரீ பி .எஸ்.சர்மா என்பவர் தொகுத்து, தெலுங்கில் பொருளும் விளக்கவுரையும் அளிக்க, பாக்யநகர் ஸ்ரீமதி ராஜி ரகுநாதன் தமிழாக்கியுள்ள இவை போன்ற 108 சமஸ்கிருத ஸ்லோகங்களின் (சுபாஷிதங்களின்) தொகுப்பு ஒன்று கண்ணில் பட்டது. அது பாரத நாட்டின் மூதாதையர் அனுபவ ஞானத்தை அப்படியே “கட்டி வந்து தமிழர் வீட்டில் கதவிடித்துக் கொட்டி”விடக் கூடியது என்று சொல்லலாம்.
ஒரு கட்டுரையையோ கதையையோ ஒரு பாரதிய மொழியிலிருந்து இன்னொரு பாரதிய மொழிக்கு (இங்கே தெலுங்கிலிருந்து தமிழுக்கு) ஆங்கிலத்தை பாலமாகப் பயன்படுத்தாமல் மொழிபெயர்த்தால் மொழிபெயர்ப்பில் அந்தந்த மொழிக்குரிய மரபுச் சொற்றொடர்கள் (இடியம்) பொருத்தமாக வந்தமையும். இந்த வித சுதேசி மொழிபெயர்ப்பு செய்யக்கூடியவர்கள் வெகு சொற்பம். இந்த வகை மொழிபெயர்ப்புப் பணி அதிகரித்தால் மொழியை பிரிவினைக்குப் பயன்படுத்தும் போக்கு மாறி, தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊட்டமளிக்க மொழியைப் பயன்படுத்தும் சூழ்நிலை உருவாகும். அது நல்லதுதானே ?
இந்தக் கட்டுரை தொடங்கியது சுபாஷிதம் பற்றிப் பேசுவதற்கு. ஆதாரமாகக் காட்டுவதற்கு ஆகமமோ, ஆவணமோ தேவைப்படாத அடிப்படை உண்மையைச் சொன்னாலும் கூட முனிவன் வாக்காக ஒரு சுபாஷிதம் சொன்னால் முழு நம்பிக்கையோடு அதை மக்கள் ஏற்கிறார்கள். கலாச்சாரத்தால் ஒன்றுபட்ட பாரத தேசம் தொன்றுதொட்டு ஒரே நாடு என்ற உண்மையை எடுத்துப் பேச வேண்டுமா?
"தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் - இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்"
-என்ற பாரதி வரிகளை சொல்லி அடிக்கோடிட்டுக் காட்டலாம். இது தேசத்தின் தொன்மைக்கு ஆகமம். தேசத்தின் ஒருமைக்கு ஆவணமாக முன்வைக்க பின்வரும் சுபாஷிதம் கைகொடுக்கிறது:
"உத்தரம் யத் சமுத்ரஸ்ய ஹிமாத்ரே சைவ தக்ஷிணம் வர்ஷம் தத் பாரதம் நாம பாரதி யத்ர ஸந்ததிஹி."
(பொருள்: சமுத்திரத்திற்கு வடக்கிலும் இமயத்துக்குத் தெற்கிலுமாக அமைந்த தேசம் பாரத தேசம். இதன் மக்கள் பாரதியர்கள்).
தமிழிலும் சமஸ்கிருதத்திலும் மாதம் ஒரு சுபாஷிதம் வீதம் சொல்ல ஆர்.எஸ்.எஸ் ஷாகாவில் ஸ்வயம்சேவகர்கள் எத்தனையோ ஆண்டுகளாகப் பயிற்சி எடுத்து வருகிறார்கள். எனவே சமுதாய ஒருங்கிணைப்பின் அவசியத்தை வலியுறுத்த வேண்டுமானா,ல் ஆர்.எஸ்.எஸ் அன்பர்கள் “அமந்த்ரம் அக்ஷரம் நாஸ்தி, நாஸ்தி மூலம் அனௌஷதம்; அயோக்ய புருஷஹ நாஸ்தி, யோஜகஸ் தத்ர துர்லபஹ” (மந்திரத்துக்கு ஆகாத அட்சரம் இல்லை, மருந்துக்கு ஆகாத மூலிகை இல்லை, தகுதி இல்லாதவன் என்று யாரும் கிடையாது; ஒருங்கிணைப்பு செய்வோர் கிடைப்பதே அரிது) என்ற சுபாஷிதம் சொல்வது சகஜம். “உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து” என்று ஒருங்கிணைந்த மனித ஆற்றலின் அருமையை வள்ளுவர் இன்னொரு உவமை வாயிலாக வலியுறுத்துவதையும் ஆர். எஸ். எஸ் அன்பர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
$$$