எனது முற்றத்தில் – 13

ஒரே தெருக்காரர்களான 5, 6 குடும்பத்தினர் ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாக சித்திரான்னம் எனப்படும் விதவித கலவை சாதம் கட்டிக்கொண்டு காவிரியை அல்லது தாமிரபரணியை அல்லது பக்கத்தில் உள்ள ஏதாவது ஒரு நதியை நோக்கி நடையைக் கட்டுவார்கள். அல்லது வண்டி கட்டுவார்கள்.  ஆற்றங்கரை மணல் பரப்பில் அன்று ஒரு வேளை சாப்பாடு அத்தனைபேருக்கும் பொது. ஆனால் அவரவர் வீட்டில் சமையல் செய்து எடுத்து வந்து பகிர்வார்கள். எந்த வீட்டில் இருந்து என்ன கலவை சாதம் என்று முன்கூட்டியே  பேசியிருப்பார்கள்.  காலங்காலமாக நதியைப் பெண்ணாகப் போற்றும் நமது தொன்மை நாகரீகம் காரணமாக அன்றைய தினம் ஆற்றை வழிபடுவார்கள்.  அடுத்து  கட்டுச்சோற்றை ஒரு கட்டுக் கட்டுவார்கள். எல்லாவற்றுக்கும் இடையில் ’கம்புக்கும் காவல், தம்பிக்கும் பெண் பார்த்த’ படலங்களும் அரங்கேறும்.

சிவகளிப் பேரலை – 71

எவ்வளவு சிறப்பான பேரரசுகளும் ஒருகாலத்தில் அழிந்துவிடும், மண்ணோடு மறைந்துவிடும். ஆனால், சிவபெருமான் மீதான பக்தி சாம்ராஜ்யம், அவரது பாதார விந்தங்களில் உறைகின்ற முக்தி சாம்ராஜ்யம் அழிவற்றது. இதனை இந்த ஸ்லோகத்தில் அருமையாக விளக்குகிறார் பகவத்பாதர். ....

பாரதியின் தனிப்பாடல்- 23

காரைக்குடியில் இளைஞர்கள் சிலர் சேர்ந்து ‘ஹிந்து மதாபிமான சங்கம்’ அமைத்து தொண்டாற்றி வந்தனர். அவர்களது அழைப்பின் பேரில் காரைக்குடி சென்று இரு நாட்கள் தங்கியிருந்து, அங்கு 9.11.1919 இல் சொற்பொழிவு நிகழ்த்தினார் மகாகவி பாரதி. தற்போது நமக்குக் கிடைக்கும் பாரதியின் கருப்பு-வெள்ளைப் புகைப்படங்கள், அப்போது அங்கு எடுக்கப்பட்டனவே. மகாகவி பாரதியின் முழு உருவத்தையும் புகைப்படத்தில் பதிவு செய்து பெருமை பெற்ர காரைக்குடி ‘ஹிந்து மதாபிமான சங்கம்’, பாரதியால் வாழ்த்துக் கவிதையும் பெற்று பெரும்பேறு அடைந்தது. அக்கவிதையே இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

நகரம்

வால்ட் விட்மான் ஒரு நகரம் கற்பனை பண்ணுகிறார். அந்த நகரத்தில் ஆணும் பெண்ணும் சபதத்தில் துஞ்சார். அங்கே அடிமையுமில்லை, ஆண்டையுமில்லை. அங்கே, ஸ்தானிகர்களின் முடிவற்ற செருக்கை பொதுஜனம் உடனே சினந்து எதிர்க்கிறது. அங்கே, நகரத்தான் தலை, நகரத்தான் பிரமாணம்; அவனுடைய சம்பளக்காரரே பிரஸிடெண்டு, மேயர், கவர்னர் எல்லாரும். அங்கே குழந்தைகள் தமக்குத் தாமே பதி செய்து கொள்ளவும், தம்மைத் தாமே காத்துக் கொள்ளவும் பயிற்சி பெறுகிறார்கள். அங்கே, பெண்கள் வீதிகளில் ஆண்களைப் போலவே கூட்டங்கூடி ஊர்வலம் வருகிறார்கள். அங்கே, பொதுக் கட்டிடங்களில் பெண்கள் ஆண்களுக்கு நிகரான இடம் பெறுகிறார்கள்.

காற்றிடைச் சாளரம் – 14

காற்றை ரசிக்கும் இளம் பாரதி இவர்....காற்றை இக்கவிதையில் கட்டிப் போட முயற்சிக்கிறார்.

சத்திய சோதனை- 3(1-5)

என்னுடைய சோதனைகளின் முடிவான பலன், காலத்தின் கருப்பையில் இருக்கிறது. இந்த விஷயத்தை நான் இங்கே விவாதிப்பதற்கு முக்கியமான நோக்கம் ஒன்று உண்டு. நாகரிக வளர்ச்சியின் வரலாற்றை ஆராயும் ஒருவர், கட்டுப்பாட்டோடு கூடிய வீட்டுப் படிப்பிற்கும், பள்ளிக்கூடப் படிப்பிற்கும் உள்ள வித்தியாசத்தையும், பெற்றோர்கள் தங்களுடைய வாழ்க்கையில் செய்யும் மாறுதல்களுக்கு ஏற்ற வகையில் குழந்தைகளிடையே ஏற்படும் மாறுதல்களையும் ஓரளவு அறிந்துகொள்ளக் கூடும் அல்லவா? இந்த அத்தியாயத்தை எழுதுவதற்கு மற்றொரு காரணமும் உண்டு: சத்தியத்தை நாடும் ஒருவர், சத்தியத்தைக்கொண்டு, தாம் செய்யும் சோதனைகளில் எவ்வளவு தூரம் போக வேண்டியிருக்கிறது என்பதையும் சுதந்திரத்தை நாடுபவரிடமிருந்து அக்கண்டிப்பான சுதந்திர தேவி, என்ன என்ன தியாகங்களை எதிர்பார்க்கிறாள் என்பதையும் காட்டுவதே அக்காரணம் ஆகும். எனக்குச் சுயமரியாதை உணர்ச்சி இல்லாதிருந்திருக்குமானால், மற்றவர்களுக்குக் கிட்டாத கல்வி, என் குழந்தைகளுக்குக் கிடைப்பதைக் கொண்டு நான் திருப்தியடைந்து விடுபவனாக இருந்திருந்தால், அவர்களுக்கு நல்ல இலக்கியக் கல்வியை அளித்திருப்பேன். ஆனால், சுதந்திரத்திலும் சுயமரியாதையிலும் அவர்கள் பெற்றிருக்கும் அனுபவப் படிப்பு, அப்போது அவர்களுக்கு கிடைத்திருக்காது. சுதந்திரம் அல்லது படிப்பு ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டி வரும் போது, படிப்பைவிடச் சுதந்திரமே ஆயிரம் மடங்கு மேலானது என்று யார்தான் கூறமாட்டார்கள்?

சிவகளிப் பேரலை- 70

எங்கும் நிறைந்துள்ள பரம்பொருளாகிய சிவபெருமான் பூஜை செய்வதற்கு எளியவர்.  அவரை இப்படித்தான் வணங்க வேண்டும் என்றில்லை. பக்தி நம் மனத்தில் இருந்து, அது அவரது நினைப்பில் ஊறியிருந்தால் சடங்கு, சம்பிரதாயங்கள் அவசியமில்லை. அதேநேரத்தில் எங்கும் நிறைந்திருக்கும் அவரை நமது விருப்பத்திற்கேற்ற  பலவித ஆசார சடங்குகள் மூலமும் வெளியே அவரை ஆராதிக்கலாம். ....

பாரதியின் தனிப்பாடல்- 22

எட்டயபுரத்தில் பிறந்த மகாகவி பாரதிக்கு அந்த சமஸ்தான மன்னரான வெங்கடேசு ரெட்டப்ப பூபதியுடன் ஆரம்பகாலம் முதலே நல்ல தொடர்பு இருந்தது. தினசரி மன்னரின் கச்சேரியில் ஆஜராகி பத்திரிகை படித்துக் காட்டும் பணியை இளம் வயதில் பாரதி செய்திருக்கிறார். ஆயினும் அவரால், மன்னரின் அதிகாரத் தோரனையுடன் ஒன்றியிருக்க முடியவில்லை. அதனால் தான் ஆசிரியத் தொழிலை நாடி எட்டயபுரத்திலிருந்து அவர் வெளியேறினார். அது மட்டுமல்ல, மன்னரின் படாடோபம், அரண்மனையின் சில்லறை அரசியல், மன்னரின் அடிவருடிகளின் கேளிக்கைகள் ஆகிவற்றை வெறுத்த அவர், அதனை தனது வேடிக்கைக் கதைகளில் பூடகமாக புகுத்தி இருக்கிறார். எனினும் ஆங்கிலேய அரசால் வேட்டையாடப்பட்டு வறுமை சூழ்ந்த நிலையில், தனது குடும்ப நலனுக்காக, மன்னரிடம் உதவி கோரினார் பாரதி. அப்போது (1919) மகாகவி பாரதி எழுதிய விண்ணப்பக் கவிதையே இது... மன்னரிடம் உதவி கேட்கும்போதும்கூட, யாசகமாகக் கேளாமல், புவி ஆளும் மன்னரான எட்டயபுரம் ராஜா கவியரசனான தனக்கு உரிய கௌரவம் செய்ய வேண்டும் என்று கேட்கும் துணிவை இக்கவிதையின் நாம் காணலாம். இக்கவிதையில் இடம்பெற்றுள்ள ‘பொருள் புதிது’ என்ற மந்திரச் சொல்லே நமது தளத்தின் பெயராக அமைந்திருப்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

மகாவித்துவான் சரித்திரம் -1(1)

பண்டைக் காலத்தில் தமிழ்நாட்டில் ஊர்கள்தோறும் பள்ளிக்கூடங்கள் இருந்தன. திண்ணைப் பள்ளிக்கூடங்களென்னும் பெயரால் அவை வழங்கப் பெறும். அங்கே தமிழ் நூல்களைப் படித்து இன்புறுதற்குரிய அறிவு பெறுவதற்குக் கருவிகளாகிய நிகண்டு, நீதி நூல்கள், பிரபந்தங்கள் முதலியன கற்பிக்கப்பட்டன. கணிதத்துக்கு அடிப்படையான எண்சுவடி முதலியவற்றையும் கற்பித்தனர். அவற்றின் உதவியால் மிகச் சிறிய பின்னங்களையும் அமைத்துக் கணக்கிடும் ஆற்றல் மாணாக்கர்களுக்கு உண்டாகும். குடும்பத்துக்கு வேண்டிய வைத்திய முறைகளும், நாள் பார்த்தல், சாதகம் பார்த்தல் முதலிய சோதிட நூல் வழிகளும், ஆலய வழிபாட்டு முறை, குலாசாரங்கள் முதலியனவும், ஞாபக சக்தியை வளர்ப்பதற்குரிய பயிற்சிகளும் கற்பிக்கப்பட்டன. உபாத்தியாயர்கள் மாணவர்களுள் ஒவ்வொருவரையும் தனித்தனியே கவனித்துத் தக்க உணர்ச்சியையடையும்படி செய்தார்கள்......

சிவகளிப் பேரலை – 69

ஒரு தாய் எப்படி தனக்குப் பிறந்த குழந்தைகளைப் படித்தவர், படிக்காதவர், அழகுள்ளவர், அழகற்றவர், பலவான், பலவீனன்,   நல்லவர், கெட்டவர் என பேதம் பார்க்காமல் அன்பு செலுத்துகிறாளோ, அதனைப்போல உயிர்களின் தோற்றத்திற்கும், வாழ்வுக்கும், ஒடுக்கத்திற்கும் காரணமான சிவபெருமான் தாயுமானவனாக இருந்து பன்மடங்கு அன்பு பாராட்டி பக்தரை அரவணைக்கிறார். ....

பாரதியின் தனிப்பாடல் – 21

தமிழன்னையின் சிறப்பணிகளான பழந்தமிழ் இலக்கியங்கள் பலவும் கரையானுக்கு இரையாகாமல் காத்து, ஏடுகளைச் சரிபார்த்து செம்மையாக்கிப் பதிப்பித்தவர் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர். அவரது அளப்பரிய ஆற்றலால் தான் நமது தாய்மொழி செம்மொழி என்னும் பெருமையை நம்மால் தக்கவைக்க இயன்றது. அவர் மீது மகாகவி பாரதி பாடிய அற்புதமான வாழ்த்துப்பா இது.

மகாவித்துவான் சரித்திரம்- முகவுரை

தமிழ்த் தாத்தா என்று அன்புடன் அனைவராலும் அழைக்கப்படும் உ.வே.சாமிநாதையரை உருவாக்கியவர், திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள். அவரது வீட்டில் குருகுலவாசம் இருந்து தமிழ் கற்ற உ.வே.சா. பிற்காலத்தில், தமிழுக்கு அணியாகத் திகழும் பல இலக்கியங்களை கால வெள்ளத்தில் மறையாமல் பதிப்பித்துக் காத்தார். உ.வே.சா. தனது குருநாதரின் வாழ்க்கை வரலாற்றை விரிவாகவும் தகுந்த ஆதாரங்களுடனும் எழுதிய நூல் இது. ”திருவாவடுதுறை யாதீனத்து மகாவித்துவான் திரிசரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்” என்பதே ஐயர் அளித்த தலைப்பு. இங்கு நமது வசதிக்காக, ’மகாவித்துவான் சரித்திரம்’ என்று குறிக்கப்படுகிறது. இந்நூலில் தனது குரு மீதான பக்தியை சீடர் வண்ணமுற வெளிப்படுத்துகிறார். வாழையடிவாழையென வந்துதித்த மரபால் நமது தாய்த் தமிழ் மொழி காக்கப்பட்டு வந்துள்ளது என்பதற்கு மிகச் சரியான சான்றான இந்நூல், நமது தளத்தில் தொடர்ந்து வெளியாகும்.

காற்றிடைச் சாளரம் – 13

பிச்சையெடுத்தா பிண்டமிடுவது?- இந்தக் கடைசி வரிக் கேள்வியில் தான் இக்கவிதை தொக்கி நிற்கிறது...

பாரதியின் தனிப்பாடல் – 20

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் எட்டயபுரம் அரண்மனையின் அரசவையில் கர்நாடக இசைக் கலைஞராக இருந்தவர் சுப்பராம தீட்சிதர் (1839- 1906). இவர் தெலுங்கு மொழியில் எழுதிய ‘ஸங்கீத சம்பிரதாயப் பிரதர்ஷினி’ என்ற நூல் மிகவும் அரிய இசை நூல் எனப் பாராட்டப்படும் ஒரு இசைக்களஞ்சியம். இசை மும்மூர்த்திகள் எனப்படுபவர்களில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதரின் இசைக் குடும்பத்தைச் சார்ந்தவர் இவர். எட்டயபுரம் அரண்மனையுடன் தொடர்பு கொண்டிருந்த மகாகவி பாரதி, இசையின் மீதும் பற்று மிகக் கொண்டவர். அவர் சுப்பராம தீட்சிதரின் இசைத்தொண்டை மிகவும் மதித்தவர். சுப்பராம தீட்சிதர் இறந்தபொழுது மனம் வருந்தி அவர் எழுதிய அஞ்சலிக் கவிதை இது...

சிவகளிப் பேரலை – 68

முன்பொரு ஸ்லோகத்தில் பக்தியைத் தாயாக வர்ணித்த ஸ்ரீ ஆதிசங்கரர், இந்த ஸ்லோகத்தில் பக்தியை பால் சுரக்கும் பசுவாக வர்ணிக்கிறார். பசு பால் தருவதைப் போல பக்தியாகிய பசு, எல்லையில்லாத மகிழ்ச்சி என்ற அமுதத்தை மென்மேலும் சுரந்து, பெருக்கெடுத்து ஓடவிடுகிறது.