-உ.வே.சாமிநாதையர்
தமிழ்த் தாத்தா என்று அன்புடன் அனைவராலும் அழைக்கப்படும் உ.வே.சாமிநாதையரை உருவாக்கியவர், திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள். அவரது வீட்டில் குருகுலவாசம் இருந்து தமிழ் கற்ற உ.வே.சா. பிற்காலத்தில், தமிழுக்கு அணியாகத் திகழும் பல இலக்கியங்களை கால வெள்ளத்தில் மறையாமல் பதிப்பித்துக் காத்தார். உ.வே.சா. தனது குருநாதரின் வாழ்க்கை வரலாற்றை விரிவாகவும் தகுந்த ஆதாரங்களுடனும் எழுதிய நூல் இது. ”திருவாவடுதுறை யாதீனத்து மகாவித்துவான் திரிசரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்” என்பதே ஐயர் அளித்த தலைப்பு. இங்கு நமது வசதிக்காக, ’மகாவித்துவான் சரித்திரம்’ என்று குறிக்கப்படுகிறது. இந்நூலில் தனது குரு மீதான பக்தியை சீடர் வண்ணமுற வெளிப்படுத்துகிறார். வாழையடிவாழையென வந்துதித்த மரபால் நமது தாய்த் தமிழ் மொழி காக்கப்பட்டு வந்துள்ளது என்பதற்கு மிகச் சரியான சான்றான இந்நூல், நமது தளத்தில் தொடர்ந்து வெளியாகும்.
திருவாவடுதுறை யாதீனத்து மகாவித்துவான் திரிசரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்
உ.வே.சாமிநாதைய ஐயர் எழுதியது.
ஆதாரம்:
திருவாவடுதுறை யாதீனத்து மகாவித்துவான்
திரிசரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்.
முதற்பாகம்:
இது மேற்படி பிள்ளையவர்கள் மாணாக்கர் மகாமகோபாத்தியாய
தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே.சாமிநாதையரால் எழுதப்பெற்று,
சென்னபட்டணம், கேஸரி அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப் பெற்றது.
ஸ்ரீமுகளும் கார்த்திகை மீ, 1933
(விலை ரூபா 2-0-0.)
$$$

திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம்
பாகம்- 1
கணபதி துணை
உள்ளடக்கம்
முகவுரை
1. முன்னோரும் தந்தையாரும்
2. இளமைப் பருவமும் கல்வியும்
3. திரிசிரபுர வாழ்க்கை
4. பிரபந்தங்கள் செய்யத் தொடக்கம்
5. திருவாவடுதுறை வந்தது
6. திருப்பைஞ்ஞீலித் திரிபந்தாதி முதலியவற்றை இயற்றியது
7. சென்னைக்கு சென்று வருதல்
8. கல்வியாற்றலும் செல்வர் போற்றலும்
9. அம்பலவாண முனிவரிடம் பாடங்கேட்டல்
10. பெரியபுராணப் பிரசங்கமும் பாடஞ் சொல்லுதலும்
11. சில பிரபந்தங்களும் தியாகராச லீலையும் இயற்றல்
12. சிவதருமோத்திரச் சுவடி பெற்ற வரலாறு
13. பங்களூர் யாத்திரை
14. உறையூர்ப்புராண அரங்கேற்றமும் பல பிரபந்தங்களை இயற்றலும்
15. இலக்கண விளக்கம் பாடங்கேட்டது
16. சில மாணவர்கள் வரலாறு
17. இரண்டாவதுமுறை சென்னைக்குச் சென்றது
18. சீகாழிக்கோவை இயற்றி அரங்கேற்றல்
19. மாயூர வாசம்
20. திருவாவடுதுறையாதீன வித்துவான் ஆகியது
21. பல நூல்கள் இயற்றல்
22. ரங்கசாமி பிள்ளையைத் திருவாவடுதுறை மடத்திற்கு வரச்செய்தது
23. கும்பகோண நிகழ்ச்சிகள்
24. புராணங்களும் பிரபந்தங்களும் இயற்றல்
$$$

முகவுரை
திருத்தாண்டகம்.
”ஒருமணியை யுலகுக்கோ ருறுதி தன்னை
உதயத்தி னுச்சியை யுருமா னானைப்
பருமணியைப் பாலோடஞ் சாடி னானைப்
பவித்திரனைப் பசுபதியைப் பவளக் குன்றைத்
திருமணியைத் தித்திப்பைத் தேன தாகித்
தீங்கரும்பி னின்சுவையைத் திகழுஞ் சோதி
அருமணியை யாவடுதண் டுறையுண் மேய
அரனடியே யடிநாயே னடைந்துய்ந் தேனே.”
திருச்சிற்றம்பலம்.
தமிழ் நூல்களை நன்றாகப் பயின்றும் வேறு பாஷைகளில் உள்ள நூற்கருத்துக்களை அறிந்தும் அவற்றின்பாலுள்ள பலவகைச் சுவைகளையும் நுகர்ந்து பிறரும் நுகர வேண்டுமென்னும் அவாவினால் பலவகை நூல்களையும் உரை முதலியவற்றையும் இயற்றியும் பாடஞ்சொல்லியும் பேருதவி புரிந்த தமிழ்ப்புலவர்கள் பலர் பல்லாயிர வருஷங்களாக இத்தமிழ்நாட்டில் விளங்கி வந்து தங்கள் தங்கள் புகழை நிலைநாட்டி இருக்கின்றனர். தோலா நாவின் மேலோராகிய அவர்களுடைய கைம்மாறில்லாத பேருதவியினால் தமிழ்மொழி அடைந்த பெருமையும் தமிழரசர்களும் தமிழ்நாட்டினரும் பெற்ற பயனும் அளவில் அடங்குவனவல்ல.
பலர் ஒருங்கு கூடியும் தனித்தனியே இருந்தும் அரசர்களாலும் பிரபுக்களாலும் ஆதரிக்கப்பட்டும் செல்வத்திற் சிறந்தும் வறுமையில் வாடியும் இன்பத்தில் இருந்தும் துன்பத்தில் துளைந்தும் தமிழை மறவாமல், “இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர், விருந்தமிழ்த மென்றாலும் வேண்டேன்” என்ற வீரத்துடன் விளங்கிய புலவர்களின் பெயர்கள் பல தெரிய வருகின்றன. இக்காலத்தில் பல துறைகளிலும் உழைத்து ஆராய்ச்சி செய்து பயனடைவோர்களுக்கெல்லாம் அந்தப்புலவர்கள் இயற்றி வைத்துள்ள நூல்களே முக்கிய சாதனங்களாக உள்ளன.
ஆயினும், அவர்களுள்ளே பல புலவர்களின் உண்மை வரலாறுகளை நன்றாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை. சிலருடைய வரலாற்றிற் சிலசில பகுதிகள் மட்டும் ஒருவாறு தெரிகின்றன. அவர்களை மிகச் சிறந்தவர்களாக எண்ணிப் பாராட்டி வருகின்றோம். அவர்களுக்கு முன்பு இருந்து விளங்கி அவர்களுடைய அறிவைப் பண்படுத்திய நூல்களை இயற்றிய புலவர்களின் நிலைகள் இன்னும் பல மடங்கு உயர்ந்தனவாக இருக்க வேண்டுமென்பதை நினைக்கும்பொழுது அவற்றையெல்லாம் அறிய முடியவில்லையே என்ற வருத்தம் அடிக்கடி உண்டாகிறது.
தமிழ்ப்புலவர்களின் வரலாறுகள் தமிழகத்தில் ஒரு வரையறையின்றி வழங்குகின்றன. கர்ணபரம்பரைச் செய்திகள் முழுவதையும் நம்ப முடியவில்லை. எந்தப் புலவர்பாலும் தெய்வீக அம்சத்தை ஏற்றிப் புகழும் நம் நாட்டினரில் ஒரு சாரார் புலவர்களைப் பற்றிக் கூறும் செய்திகளிற் சில நடந்தனவாகத் தோற்றவில்லை. அங்ஙனம் கூறுபவர்கள் அப்புலவர்களுக்கு மிக்க பெருமையை உண்டாக்க வேண்டுமென்பதொன்றனை மட்டும் கருதுகிறார்களேயல்லாமல் நடந்த விஷயங்களை நடந்தபடியே சொல்லுவதை விரும்புவதில்லை. கம்பர் முதலிய சில புலவர்களை வரகவிகளென்றும் கல்லாமலே பாடிவிட்டனரென்றும் ஸரஸ்வதிதேவியின் திருவருளால் அங்ஙனமாயினரென்றும் கூறுவதுதான் பெருமையெனவும், அவர்கள் பழம்பிறப்பிற் செய்த புண்ணியத்தாலும் திருவருளாலும் கிடைத்த நல்லறிவைத் துணைக்கொண்டு பல நூல்களைப் பயின்று செயற்கையறிவும் வாய்க்கப்பெற்று நூல் முதலியன இயற்றினார்களென்பது சிறுமையெனவும் சிலர் எண்ணுகின்றார்கள். மிகவும் புகழ்பெற்ற ஒரு புலவர் செய்தனவாகத் தெரிவித்தால் அவற்றிற்கு மதிப்புண்டாகுமென்று தாமாகவே கருதி அவருடைய தலையில் பிழைமலிந்த நூல்களையும் உரைகளையும் தனிப்பாடல்களையும் ஏற்றி விடுகின்றனர்; சரித்திரங்களையும், அவற்றிற்கு ஏற்ப அமைத்துவிடுகின்றனர். ஒருவருடைய வரலாறும் அவர் செய்த நூல் முதலியனவும் வேறொருவருடைய வரலாறாகவும் வேறொருவர் செய்தனவாகவும் வழங்குகின்றன. தங்கள் தங்கள் அபிமானம் காரணமாக புலவர்களின் சாதி, மதம், தொழில், ஊர் முதலியவற்றை மாறுபாடாகக் கூறி அவற்றிற்கு உரியவற்றைக் கற்பித்தவர்களும் உண்டு. ஆண்பாலாரைப் பெண்பாலாராகவும் பெண்பாலாரை ஆண்பாலாராகவும் மயங்கிக் கூறுவதும் ஒருகாலத்தில் இருந்தவரை வேறொரு காலத்தவராகக் கூறுவதும் பிறவுமாகிய தடுமாற்றங்கள் புலவர் வரலாறுகளில் மலிந்திருக்கின்றன. மிகவும் சமீபகாலத்தில் இருந்த புலவர்களுடைய வரலாறுகளிற்கூட இத்தகைய செய்திகள் இருக்கின்றன.
பண்டைக்காலத்தில் முறையாகப் பாடஞ்சொல்லிவந்த வித்துவான்கள் நூலாசிரியர்களுடைய வரலாற்றை மாணாக்கர்களுக்கு முதலிற் சொல்லிவிட்டு அப்பால் நூலை அறிவுறுத்தி வந்தனர்; அதனால்தான் புலவர்களுடைய சரித்திரத்தை எழுதிவைக்கும் வழக்கம் இலதாயிற்றென்று தோற்றுகின்றது. இங்ஙனம் அவ்வரலாறுகள் வழிவழியே வழங்கிவந்தன. முறையாகப் பாடஞ் சொல்லுதலும் கேட்டலும் தவறிய பிற்காலத்தில் ஆசிரியர் வரலாறுகள் பலபடியாக வழங்கத் தலைப்பட்டன. ஒரு புலவர்பால் பாடங்கேட்டவரேனும் பழகினவரேனும் அவருடைய பரம்பரையினரேனும் அவரது சரித்திரத்தை எழுதிவைப்பது தமிழ்நாட்டில் இல்லாமற்போயிற்று. இஃது ஒரு பெருங்குறையே.
தமிழ்ப்புலவர் சரித்திரங்கள் இங்ஙனம் இருத்தலை எண்ணிய பொழுது சங்ககாலம் முதல் சமீபகாலம் வரையில் இருந்து விளங்கிய வித்துவான்களைப்பற்றி ஆராய்ந்து தெரிந்தவற்றைத் தொகுத்து எழுதவேண்டுமென்னும் அவா எனக்கு உண்டாயிற்று. ஆதலின் நூல்களை ஆராயும் பொழுதெல்லாம் ஆசிரியர்கள் வரலாற்றைப் பற்றித் தெரிய வந்தனவற்றையெல்லாம் குறித்துக்கொள்ளும் வழக்கத்தை மேற்கொண்டேன். வெளியூர்களுக்கு யாத்திரையாகச் சென்றபோது கிடைத்த சிலருடைய வரலாறுகளையும் குறித்துவைத்துக் கொண்டேன். தக்க உதவியும் திருவருளும் இருக்குமாயின் அவற்றை முறையே வெளியிடும் விருப்பம் உண்டு. நிற்க.
எனக்குத் தமிழை அறிவுறுத்தி அதன்பாலுள்ள பலவகை நயங்களையும் எடுத்துக்காட்டி மகோபகாரம் செய்த ஆசிரியராகிய திருவாவடுதுறை யாதீனத்து மகாவித்துவான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களைப் பற்றி நான் கண்டும் கேட்டும் அறிந்தவைகளிற் சிலவற்றை நண்பர்களிடம் பேசும்பொழுதும் வேறு சில காலங்களிலும் சொல்லி வந்ததன்றி, நான் ஆராய்ச்சி செய்து பதிப்பித்த சில நூல்களின் முகவுரைகளிலும் தொடர்புடைய சில சரித்திரப்பகுதிகளை எழுதியிருப்பதுண்டு. அவற்றையெல்லாம் அறிந்த தமிழன்பர்கள் பலர் பிள்ளையவர்களுடைய சரித்திரம் முழுவதையும் எழுதி வெளியிட வேண்டுமென்று விரும்பினர்; நேரிற் பழகிப் பாடங்கேட்டும் பிறர்பால் அறிந்தும் நூல்களை ஆராய்ந்தும் பிள்ளையவர்களைப் பற்றி நான் அறிந்தவற்றை எழுதினால் இக்கவிஞர் பெருமானுடைய ஆற்றலை யாவரும் ஒருவாறு அறிந்து கொள்வார்களென்றும் வற்புறுத்தினர். அதனாலும் பிள்ளையவர்கள் திறத்தில் நான் செய்யத்தக்க பணி இதனினும் சிறந்ததொன்றில்லை யென்னும் எண்ணத்தினாலும் சற்றேறக்குறைய 45 வருஷங்களுக்கு முன்பு இந்த முயற்சியைச் செய்யத் தொடங்கினேன்.
‘செய்வன திருந்தச்செய்’ என்பது அமுத வாக்காதலின் தொடங்கிய முயற்சியை இயன்றவரையில் ஒழுங்காக நிறைவேற்ற வேண்டுமென்னும் அவாவினால், நான் அறிந்தன போக வேறு செய்திகள் கிடைக்கலாமென எண்ணி, பிள்ளையவர்களோடு பழகிய பலர்பாற் சென்று சென்று விசாரித்தேன்; இவருடைய கடிதங்கள், தனிப்பாடல்கள், நூல்கள் முதலியன கிடைக்குமென்று அறிந்த இடங்களுக்கெல்லாம் சென்று சென்று தேடினேன்; நான் பார்த்துவந்த வேலைக்கும் நூலாராய்ச்சிகளுக்கும் இடையூறு வாராமல், ஒழிந்த காலங்களிலெல்லாம் பலவகையாக முயன்று செய்திகளைத் தொகுத்து வந்தேன். பிள்ளையவர்கள் பால் நான் பாடங்கேட்ட காலத்திலேனும் அதன் பின்பு திருவாவடுதுறை மடத்தில் நான் இருந்த காலத்திலேனும் இவருடைய இளம்பிராய முதற்கொண்டு பழகிய தியாகராச செட்டியார், சோடசாவ தானம் சுப்பராய செட்டியார் முதலிய பெரியோர்கள் இருந்த காலத்திலேனும் இந்த முயற்சியை மேற்கொண்டிருப்பேனாயின் இன்னும் எவ்வளவோ அரிய செய்திகளும் செய்யுட்கள் முதலியனவும் கிடைத்திருக்கும்.
இக்கவிஞர் சிகாமணியோடு நெருங்கிப்பழகி இவருடைய பல வகை ஆற்றல்களையும் நேரிற்கண்டு இன்புற்றவர்களுள் ஒருவரேனும் இவருடைய சரித்திரத்தை எழுத முயன்றதில்லை. சீவக சிந்தாமணிப் பதிப்பில் திருத்தக்கதேவர் வரலாற்றை நான் எழுதிச் சேர்த்ததைக்கண்ட சோடசாவதானம் சுப்பராய செட்டியார், “ஐயா அவர்களுடைய சரித்திரத்தை எழுதினால் நலமாயிருக்கும்” என்று சொன்னார்.
இப்புலவர்பெருமான்பாற் பாடங்கேட்டபொழுது இவர் மூலமாகவும் வேறு வகையாகவும் நான் அறிந்த செய்திகளையும் விசாரித்துத் தெரிந்து கொண்டவற்றையும் துணைக்கொண்டு, தொடங்கிய இம்முயற்சியை ஒருவாறு நிறைவேற்றலாமென்னும் எண்ணத்தால் அவ்வப்பொழுது குறிப்புக்களை எழுதித் தொகுத்து வந்தேன். 1900- ஆம் வருஷம் அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி வெளிவந்த சுதேசமித்திரனில், இச்சரித்திரத்தை நான் எழுதத் தொடங்கியிருப்பதையும் தமிழ்நாட்டினர் தங்கள் தங்களுக்குத் தெரிந்தவற்றை அறிவிக்க வேண்டுமென்பதையும் குறித்து ஒரு விரிவான வேண்டுகோளை வெளியிட்டேன். அதனைப் பார்த்தபின் அன்பர்கள் பலர் பலசெய்திகளை அனுப்பக்கூடுமென நான் எதிர்பார்த்திருந்தும் சிலரே சில செய்திகளைத் தெரிவித்தனர். பிள்ளையவர்களுடைய மாணவரும் புதுச்சேரியில் இருந்தவருமாகிய செ.சவராயலு நாயகரென்பவர் தம் விஷயமாகப் பலர் பாடிய சிறப்புக்கவிகள் முதலியவற்றைத் தொகுத்து அச்சிட்ட புத்தகமொன்றை அனுப்பி ஒரு கடிதமும் எழுதினர். அது வருமாறு:-
புதுவை,
22-10-1900.”ம-ள-ள-ஸ்ரீ வே. சாமிநாத ஐயர் அவர்கள் சமுகத்துக்கு.
”தாங்கள் திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை யவர்கள் சரித்திரத்தை எழுத எத்தனித்திருக்கிறதாக இம்மாதம் 8-ஆம் தேதி திங்கட்கிழமை வெளிப்பட்ட 146- நெம்பர் சுதேசமித்திரன் பத்திரிகையால் அறிந்து நான் மெத்தவுஞ் சந்துஷ்டி யடைந்தேன்.”தியாகராச செட்டியார் என்பேரில் பாடியிருக்கும் இரட்டை மணி மாலையில் குரு வணக்கமாகக் கூறியிருக்கும் வெண்பாவை அப்பத்திரிகையில் தாங்கள் எடுத்தெழுதியிருப்பதையும் பார்த்து மகிழ்ந்தேன். ஏறக்குறைய நாற்பத்தைந்து வருஷத்திற்கு முன் நானும் மேற்படி தியாகராச செட்டியாரும் வேறு சிலரும் அந்த மகானிடத்தில் வாசித்தோம். அவருக்கு என் மட்டிலிருந்த பக்ஷத்தையும் மதிப்பையும் தாங்கள் அறியும்படிக்கும் பல சமயத்தில் அவரும் மேற்படி தியாகராச செட்டியார், வல்லூர்த் தேவராச பிள்ளை முதலியவர்களும் என் பேரில் பாடியிருக்கும் பாடல்களைத் தாங்கள் காணும்படிக்கும் நான் 1869 – இல் அச்சிட்டிருக்கும் பாடற்றிரட்டு என்னும் ஓர் புத்தகத்தை இன்று தங்களுக்கு இனாமாகத் தபால் மார்க்கமாக அனுப்பியிருக்கிறேன்.
“இப் புத்தகத்திற் பற்பல இடத்தில் பிள்ளையவர்கள் பெயர் இருப்பதால் ஆங்காங்குக் குறிப்பிட்டிருக்கிறேன். ஆகையால் முதல் ஏடு தொடங்கிக் கடைசி ஏடு வரையில் பார்வையிடும்படி தங்களைக் கோருகிறேன். இதனால் அவருடைய மாணாக்கர்களில் அநேகரைத் தாங்கள் தெரிந்து கொள்ளவும் கூடும்.
”தாங்கள் எழுதும் அவர் சரித்திரத்தில் நான் அவர் பேரில் பாடியிருக்கும் பாடல்களையும் பல சமயத்தில் அவருக்கு நான் செய்த தோத்திரங்களையும் அவர் என் பேரில் கூறியிருக்கும் தமிழ்மாலை முதலிய பற்பல பாடல்களையும் நன்றாக எடுத்துக் காண்பிக்கும்படி தங்களை நிரம்பவும் பிரார்த்திக்கின்றேன்.
‘வேதநாயக விற்பன்னர் சரித்திரம்’ என்று அச்சிடப்பட்டிருக்கும் ஓர் சிறு புத்தகத்தில் பிள்ளையவர்களுடைய நல்ல பாடல்களும் அவர் பேரில் அநேகம் பாடல்களும் இருக்கின்றன.
”மிகவுஞ் சிறந்த இந்த ஆசிரியரின் சரித்திரத்தைத் தாங்கள் எழுதி அச்சிட்டால் தங்களைப் பற்பல வித்துவான்களும் மேலோர்களும் நெடுங்காலம் வாழ்த்துவார்கள் என்பதற்குச் சந்தேகமில்லை.
”நான் முன்னதாகவே பிரியத்தோடே என் வாழ்த்துதல்களைத் தங்களுக்குக் கூறுகின்றேன்.
”தாங்கள் ஆரம்பித்த இச் சிறந்த வேலை இடையூறின்றி நிறைவேறும்படி கடவுளை மெத்தவும் பிரார்த்திக்கின்றேன்.
இங்ஙனம்:
தங்கள் அன்பை விரும்புகின்ற
– செ.சவராயலு.”
பின்பு 1902- ஆம் வருஷத்தில் பல அன்பர்கள் விரும்பியபடி கும்பகோணம் போர்ட்டர் டவுன் ஹாலில் இரண்டு நாளும் கும்பகோணம் காலேஜில் ஒருநாளுமாக மூன்று நாள் தொடர்ந்து பிள்ளையவர்களுடைய சரித்திரத்தைப் பிரசங்கம் செய்தேன். அப்பொழுது காலேஜ் பிரின்ஸிபாலாக இருந்த அன்பர் ஸ்ரீமான் ஜே.எம்.ஹென்ஸ்மன் முதலியவர்கள் கேட்டு மகிழ்ந்து விரைவில் இவர் சரித்திரத்தை எழுதி அச்சிட்டு வெளியிட வேண்டுமென்று வற்புறுத்தினார்கள்.
முன்பே பிள்ளையவர்களுடைய நூல்கள் சிலவற்றைத் தியாகராச செட்டியார், சுப்பராய செட்டியார் முதலியவர்களிடமிருந்தும் வேறு சிலரிடத்திலிருந்தும் சேகரித்து வைத்திருந்ததுண்டு; பின்பும் அவற்றை முயன்று தேடித் தொகுத்தேன். அவற்றை வெளியிட வேண்டுமென்னும் விருப்பமும் எனக்கு இருந்தது. ஆயினும், நூல்களெல்லாவற்றையும் வெளியிடுவதாயின் மிக்க பொருட் செலவும் உழைப்பும் வேண்டுமாதலின் பிள்ளையவர்களுடைய பிரபந்தங்களையேனும் தொகுத்து வெளியிடலாமென்றெண்ணினேன். எவ்வளவோ முயன்று பார்த்தும் இவருடைய *1 பிரபந்தங்களுள்ளும் சில கிடைக்கவில்லை. கிடைத்தவற்றைத் திருவருளின் துணையால் 1910- ஆம் வருஷம் மே மாதம் *2 முதன்முறை வெளியிட்டேன். அப்புத்தகத்தின் முகவுரையில், “இவர்கள் ஒவ்வொரு காலத்திற் சமயோசிதமாகப் பாடிய தனிச் செய்யுட்களை இவர்கள் சரித்திரம் எழுதும்போது சந்தர்ப்பத்தைப் புலப்படுத்தி வெளியிடக் கருதி இதிற் சேர்க்காமல் வைத்திருக்கிறேன்” என்று இவருடைய சரித்திரத்தை வெளியிடும் எண்ணம் இருந்ததைப் புலப்படுத்தியதுண்டு.
தாம் இளமையில் இயற்றிய செய்யுட்களையும் நூல்களையும் சிறப்புடையனவாகக் கருதவில்லையாதலின் அவற்றைப் பிள்ளையவர்கள் பாதுகாத்து வைக்கவில்லை. அந்தப் பாடல்களையும் நூல்களையும் பல இடங்களில் மிகவும் முயன்று தேடியபொழுது கிடைத்தவை சிலவே.
இவரைப் பற்றி நான் கேட்டறிந்த வரலாறுகளிற் பொய்யானவையும் பல இருந்தன. அவற்றை உண்மையல்லவெனப் பலவகையால் தெரிந்துகொண்டேன்:
ஒரு சமயம் சென்னையில் என்னைச் சந்தித்த கனவானொருவர், ”நீங்கள் அச்சிட்டு வெளிப்படுத்தியுள்ள மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டில் அவர்கள் இயற்றியுள்ள திட்டகுடி அசனாம்பிகை பதிகத்தைச் சேர்க்காமல் விட்டுவிட்டீர்களே” என்று சொன்னார். அப்போது நான், “எனக்குப் பிரதி கிடைத்திருந்தால் சேர்த்திருப்பேன்; தாங்கள் கொடுத்தால் அதனை அடுத்த பதிப்பில் உபயோகிப்பேன்” என்று சொல்லி மறுநாட் காலையில் அவர் வீடு சென்று அதனைக் கேட்டேன்; அவர் அதனைக் கொடுத்தனர். அதைப் படித்துப் பார்த்ததில் அது வேறொருவரால் இயற்றப்பெற்றதாகத் தெரியவந்தது. அன்றியும் பிள்ளையவர்களுடைய செய்யுள் நடைக்கும் அந்நூற் செய்யுள் நடைக்கும் வேறுபாடுகள் இருந்தன. ஆனால் திட்டகுடி ஸ்வாமி விஷயமாகப் பிள்ளையவர்களால் ஒரு பதிகம் இயற்றப் பெற்றதுண்டு. அதுவே இம்மாறுபாடான செய்திக்குக் காரணமாக இருக்கலாம்.
இக்கவிஞர் பிரானிடம் நான் படிக்க வருவதற்கு முன்பும் இவரைப் பற்றிப் பல வரலாறுகளைக் கேள்வியுற்றதுண்டு. நான் குன்னம் (குன்றம்) என்னும் ஊரில் இருக்கையில் அங்கே வந்த *3 அரும்பாவூர் நாட்டாரென்னும் ஒரு கனவான், ”பிள்ளையவர்கள் நாகபட்டின புராணம் அரங்கேற்றியபோது நான் போயிருந்தேன். அப்பொழுது ஒருநாள் ‘குறிப்பறிந் தீதலே கொடை’ என்பதற்கு ஐம்பது வகையாகப் பொருள் கூறி ‘இன்னும் சொல்லலாம்’ என்று முடித்தார்கள்” என்று சொன்னார். நான் படிக்கவந்தபின்பு இக் கவிநாயகரிடமே அச்செய்தியைக் கூறினேன். கேட்ட இவர் சிரித்துவிட்டு, “அதுபொய்; ஒரு பாட்டுக்குப் பல பொருள் சொல்லுதல் பெருமையென்ற கருத்து சொன்னவருக்கு இருக்கலாம்” என்று சொன்னார்.
இங்ஙனம் நான் கேட்ட பொய் வரலாறுகள் பல.
பிள்ளையவர்களுடைய வாழ்க்கை வரலாற்றுக்குரிய செய்திகளைத் தொகுத்த பிறகு, கடிதங்கள், நூற் சிறப்புப் பாயிரங்கள் முதலியவற்றோடு பொருத்திக் காலமுறை பிறழாதபடி அமைப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. பல சாதனங்களை வைத்துக் கொண்டு ஒன்றுக்கொன்று முரண்படாதவாறு தெரிந்தவரையில் கால அடைவை வகுத்துக்கொண்டேன். எழுத எழுத அவ்வப்பொழுது நினைவுக்கு வந்தவற்றையும் சேர்க்க வேண்டியிருந்தது. ஒருவகையாகச் சரித்திரத்தை எழுதிப் பூர்த்திசெய்த பின்பும், தனிப்பாடல்கள், கடிதங்கள் முதலியன கிடைக்கலாமென்னும் எண்ணத்தால் வெளியிடாமல் வைத்திருந்தேன். சில நண்பர்கள் இச்சரித்திரத்தை விரைவில் வெளியிட வேண்டுமென்று அடிக்கடி வற்புறுத்தினார்கள். அதனால், தமிழ்நாட்டினருக்கு மீண்டும் வேண்டுகோளொன்றை 30-12-31-இல் சுதேசமித்திரன் பத்திரிகையில் வெளியிட்டேன். அவ்வேண்டுகோளுக்கு விசேஷமான விடை ஒன்றும் கிடைக்கவில்லை. இனித் தாமதிப்பதிற் பயனில்லை யென்று எண்ணி, தமிழ்த் தெய்வத்தின் திருவருளையும் என்னுடைய ஆசிரியரது பேரன்பையும் துணையாகக்கொண்டு இப்பொழுது வெளியிடலானேன்.
இதனை எழுதி வருகையிலும் பதிப்பித்து வருகையிலும் எனக்கு உண்டான மகிழ்ச்சிக்கும் ஊக்கத்துக்கும் அளவில்லை; இத்தகைய கவிஞர்பிரானைப் பற்றி எழுதும் பேறு கிடைத்ததை எண்ணி எண்ணி இன்புறுகின்றேன்.
இவர் 1815 முதல் 1876 வரையில் 61-வருஷங்கள் வாழ்ந்திருந்தனர். அக்கால முழுவதும் நிகழ்ந்தவற்றையெல்லாம் ஒரே புத்தகமாக வெளியிடலாமென எண்ணிப் பதிப்பிக்கத் தொடங்கினேன். அங்ஙனம் செய்வதால் புத்தகம் மிகப் பெரிதாகுமென்று அறிந்து பிள்ளையவர்களிடம் நான் பாடங்கேட்கத் தொடங்கியதற்கு முன்புள்ளவற்றை முதற் பாகமாகவும், பின்புள்ள நிகழ்ச்சிகளை இரண்டாம் பாகமாகவும் அமைத்துக் கொண்டேன். அவற்றுள் இது முதற்பாகமாகும்; இரண்டாம் பாகம் இன்னும் சில வாரங்களில் வெளிவரும்.
இச்சரித்திரத்தில் சிலருடைய பெயர்கள் முதலியவை அவை வழங்கியபடியே உபயோகிக்கப் பட்டுள்ளன. சமீப காலத்து நிகழ்ச்சிகளாதலின் சில வரலாறுகளிற் சிலருடைய பெயர்களைச் சில காரணம் பற்றி எழுதவில்லை. பிள்ளையவர்களைக் குறிப்பிடும்பொழுது பலவிடங்களில் ‘இவர்’ என்றே எழுதி வந்திருக்கிறேன். இவருடைய நூல்களில் ஏதேனும் ஒன்றை எடுத்து ஆராய்ந்து எழுதுவதானால் அவ்வாராய்ச்சியே மிக விரியுமாதலின், நூல்களைப் பற்றிய செய்திகள் வரும் இடங்களில் சிலவற்றிற்குச் சிறிய ஆராய்ச்சி எழுதிச் சேர்த்தும் பெரும்பாலனவற்றிலிருந்து சில செய்யுட்களை மட்டும் எடுத்துக்காட்டியும், இன்றியமையாதவற்றிற்குச் சுருக்கமாகக் குறிப்புரை எழுதியும் இருக்கிறேன். இச் சரித்திரத்திற் கூறப்பட்ட சிலரைப் பற்றி எனக்குத் தெரிந்தவற்றுள் உரிய இடங்களிற் குறிப்பிட்டவை போக எஞ்சியவற்றைச் சுருக்கமாக எழுதிப் பின்னே ‘சிறப்புப் பெயர் முதலியவற்றின் அகராதி’ என்னும் பகுதியில் சேர்த்திருக்கிறேன்.
உரிய இடங்களில் எழுதாமல் விடுபட்ட செய்திகள், கடிதங்கள், தனிப் பாடல்கள் முதலியன இரண்டாம் பாகத்தின் இறுதியில் அனுபந்தமாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
இச்சரித்திரத் தலைவர் பலவகையான சிறப்பை உடையவர்; ஆசுகவி முதலிய நால்வகைக் கவிஞராகவும், நூலாசிரியர், உரையாசிரியர், போதகாசிரியர் என்னும் மூவகை ஆசிரியராகவும், வித்தியா வீரராகவும் இருந்தனர். இந்தச் சரித்திரத்தால் இவர் பாடஞ்சொல்லுதலையே விரதமாக உடையவரென்பதும், மாணாக்கர்கள்பால் தாயினும் அன்புடையவரென்பதும், வடமொழி வித்துவான்களிடத்தில் மிக்க மதிப்புடையவரென்பதும், யாவரிடத்தும் எளியராகப் பழகும் இயல்புடையவரென்பதும், பொருளை மதியாமல் கல்வி அறிவையே மதிக்கும் கொள்கையுடையவரென்பதும், பரோபகாரகுணம் மிகுதியாக வாய்ந்தவரென்பதும், செய்ந்நன்றி மறவாதவரென்பதும், திருவாவடுதுறை, தருமபுரம், மதுரை, குன்றக்குடி, திருப்பனந்தாள் முதலிய இடங்களிலுள்ள மடங்களில் சிறந்த மதிப்புப் பெற்றவரென்பதும், அக்காலத்தில் ஜனங்கள் படித்தவர்களையும் வித்துவான்களையும் அவமதியாமல் அவர்கள் பால் விசேஷ அன்பையும் ஆதரவையும் செலுத்தி வந்தார்களென்பதும், பிறவும் வெளிப்படும். இவர் காலத்திற்குப் பின்பு இவரைப் போன்றவர்களைக் காணுதல் மிக அரிதாக இருக்கின்றது.
இவர் காலத்தில் படம் எடுக்கும் கருவிகள் இருந்தும் இவரோடு பழகியவர்களுள் ஒருவரேனும் இவருடைய படத்தை எடுத்து வைக்க முயலாதது வருத்தத்தை விளைவிக்கிறது. என்னுடைய மனத்தில் இவருடைய வடிவம் இருந்து அவ்வப்பொழுது ஊக்கம் அளித்து வருகிறது; ஆயினும் பிறருக்கு அதனைக் காட்டும் ஆற்றல் இல்லாமைக்கு என் செய்வேன்! இக்கவிச் சக்கரவர்த்தியினுடைய பூதஉடம்பின் படம் இல்லையே என்னும் வருத்தம் இருந்தாலும் இவருடைய புகழுடம்பின் படமாக நூல்களும் செய்யுட்கள் முதலியனவும் இருக்கின்றனவென்றெண்ணி ஒரு வகையாக ஆறுதல் அடைகின்றேன்.
திரிசிரபுரம் மலைக்கோட்டையின் தெற்கு வீதியில் இவருக்குச் சொந்தமாக இருந்த வீடு இவர் குடும்பத்தில் உண்டான பொருள் முட்டுப்பாட்டினால் இவருக்குப் பிற்காலத்தில் இவருடைய குமாரராகிய சிதம்பரம் பிள்ளையினால் விற்கப்பட்டுப் போயிற்று. இக்கவிஞர் கோமானுடைய பெருமையை அறிந்துள்ள திரிசிரபுரவாசிகள் பலர் அந்த இடத்தை மீட்டும் பெற்று இவர் பெயராலே ஒரு ஸ்தாபனம் அமைக்க வேண்டுமென எண்ணியிருக்கிறார்கள். உண்மைத் தமிழபிமானிகளாகிய அவர்களுடைய எண்ணம் ஸ்ரீ தாயுமானவர் திருவருளால் நிறைவேறுமென்று நம்புகிறேன்.
இந்த வருஷத்தில் இச்சரித்திரத்தை நான் எழுதிவரும் காலத்தில் திரிசிரபுரத்திலும் தஞ்சையிலும் உள்ள சில அன்பர்கள் இப்புலவர் சிகாமணியினுடைய பிறந்த நாட்கொண்டாட்டமாகிய பெருமங்கல விழாவைச் சிறப்பாக நடத்த வேண்டுமென்று சில மாதங்களுக்கு முன்பு எனக்குத் தெரிவித்தார்கள். அவர்கள் தெரிவித்தபடி கொண்டாட வேண்டிய பிறந்தநாள் வருகிற பங்குனி மாதத்தில் வருவதால் அதற்கு முன்னதாக இச்சரித்திரம் வெளியிடும்படி அமைந்ததைக் குறித்து மிகவும் மகிழ்ச்சியுறுகின்றேன்.
”நல்லார் குணங்க ளுரைப்பதுவும் நன்றே” என்பதை எண்ணி இந்த மகாவித்துவானுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளேன். இதன்கண் காணப்படுவனவற்றில் மாறுபாடு தோன்றினாலும், இதிற் காணப்படாத செய்திகள், செய்யுட்கள் முதலியன தெரிந்தாலும் அவற்றை அன்பர்கள் தெரிவிப்பார்களாயின் அடுத்த பதிப்பில் அமைத்துக் கொள்வதற்கு அநுகூலமாக இருக்கும். இதன்பாலுள்ள குறைகளை நீக்கி மற்றவற்றைக் கொள்ளும் வண்ணம் அறிஞர்களை வேண்டுகின்றேன்.
இச்சரித்திரத்தை எழுதிவருங் காலத்திலும், பதிப்பித்துவருங் காலத்திலும் வேண்டிய உதவிகள் புரிந்து வந்த சென்னை கிறிஸ்டியன் காலேஜ் தமிழ்ப்பண்டிதர் சிரஞ்சீவி வித்துவான் வி.மு.சுப்பிரமணிய ஐயருக்கும், சென்னை, ‘கலைமகள்’ உதவிப் பத்திரிகாசிரியர் சிரஞ்சீவி வித்துவான் கி.வா.ஜகந்நாத ஐயருக்கும் அவர்களுடைய நல்லுழைப்பிற்கு ஏற்றபடி தமிழ்த்தெய்வம் தக்க பயனை அளிக்குமென்று கருதுகின்றேன்.
என்னுடைய வேணவாவுள் ஒன்றாகிய இந்தப் பணியை ஒருவாறு நிறைவேற்றிய ஸ்ரீ மீனாட்சிசுந்தரேசப் பெருமான் திருவருளைச் சிந்தித்து வந்திக்கின்றேன்.
(வெண்பா) ''மன்னும் அறிவுடையோர் வைகுமவைக் கண்ணெனையும் துன்னுவித்த மீனாட்சி சுந்தரமான் - தன்னை நினையேனென் னாது நினைப்பேனென் பேனேல் எனையா ரிகழாதா ரீண்டு.'' (தியாகராச செட்டியார் வாக்கு)
‘தியாகராஜ விலாஸம்’
திருவேட்டீசுவரன்பேட்டை,
12-12-1933.
இங்ஙனம்
வே. சாமிநாதையர்.
$$$
அடிக்குறிப்புகள்:
[1] கிடைத்த பிரபந்தங்கள் இன்னார் இன்னாரிடமிருந்து கிடைத்தன வென்பதைப் பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டு முதற் பதிப்பின் முகவுரையில் தெரிவித்திருக்கிறேன்.
[2] இதன் இரண்டாம் பதிப்பு 1926- ஆம் வருஷம் வெளியிடப் பெற்றது. முதற் பதிப்பில் இல்லாத பிரபந்தங்கள் சில அதன்பாற் சேர்க்கப்பட்டுள்ளன.
[3] இவ்வூர் பெரும்புலியூர்த் தாலுகாவிலுள்ளது.