-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
45. சிவனடிக் கூட்டில் வசிக்கும் மனப்பறவை
.
சந்த: சா’கி சி’கான்விதைர் த்விஜவைரஸ் ஸம்ஸேவிதே சா’ச்’வதே
ஸௌக்யாபாதினி கேதபேதினி ஸுதாஸாரை: பலைர்தீபிதே/
சேத: பக்ஷிசி’காமணே த்யஜ வ்ருதா சஞ்சார மன்யை-ரலம்
நித்யம் ச’ங்கர பாதபத்ம யுகளீ நீடே விஹாரம் குரு//
.
கிளையுச்சி உடையதாய் நற்புட்கள் நாடுவதாய்
நிலையதாய் மகிழ்வதாய் துன்பங்கள் கெடுவதாய்
அமுதக்கனி ஒளிர்மரத்து அருட்சிவன் அடிக்கூட்டில்
விளையாடு மனப்புள்ளே வீணலைச்சல் வேண்டாமே.
.
இந்த ஸ்லோகத்தில் மனத்தைப் பறவையாகவும், நம் இறைவன் சிவபெருமானின் திருவடித்தாமரைகளை அந்தப் பறவை வசிக்கும் உறைவிடமாகிய கூடாகவும் வர்ணிக்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். பறவை அதன் குடும்பத்தோடும் இனத்தோடும் கூடி வாழ்கின்ற இடம் கூடு. அந்தக் கூடுதான், பறவைக்குப் பாதுகாப்பையும், சௌகர்யத்தையும், சுகங்களையும் தருகிறது. அதேபோல் பக்தனின் மனதாகிய பறவைக்கு, இறைவனின் திருவடிகளே சிறந்த சரணாலயம். அப்படிப்பட்ட இறைவனின் திருவடிக்கூடு எப்படி இருக்கிறது?
ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய 4 பிரிவுகள் (சாகைகள்) கொண்ட வேதத்தை கிளைகளாகவும், அறிவின் உச்சமாகிய உபநிஷதங்களையே உச்சியாகவும் கொண்ட மரமாக சிவபெருமான் திகழ்கிறார். நல்ல மனம் கொண்ட பிராமணர்கள், அறிஞர்கள், நல்லோர்கள் ஆகிய பறவைகள் இந்த மரத்தையே நாடுகின்றன(ர்). என்றும் அழிவற்ற நிலையான தன்மை வாய்ந்ததாகவும், எப்போதும் மகிழ்ச்சியை (சதானந்தம்) தருவதாகவும், துன்பங்களைப் போக்குவதாகவும் சிவ பரம்பொருளாகிய மரம் உள்ளது. நிறைவான வாழ்வு எனப்படும் அமுதத்தைத் தருகின்ற பழங்களுடன் அந்த அருட்சிவமாகிய மரம் ஒளிர்கிறது. அதனுடைய திருவடித் தாமரைகளாகிற கூட்டில், ஏ! மனமாகிய பறவையே, நீ விளையாடுவாயாக. இப்படிப்பட்ட மிகச் சிறந்த கூட்டைத் தவிர்த்து தங்குவதற்கு வேறு இடத்தைத் தேடி, மனமே வீணாக அலையாதே! என்கிறார் ஆதிசங்கரர்.
$$$