-எஸ்.எஸ்.மகாதேவன்

அது ஒரு ராமாயணம் தான், போங்கள்!
எனக்கு ஓரளவு தெரிந்த குடும்பத்தைச் சேர்ந்த அம்மையார். சென்னையில் செட்டில் ஆகிவிட்ட ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி அவர். ஒரு நாள் அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். வரவேற்பறையில் விசாலமான கம்ப்யூட்டர் ஸ்கிரீனைப் பார்த்தபடி உட்கார்ந்து கொண்டு, “ஜெய் ஸ்ரீ ராம் என்று கர்ஜனை செஞ்சாரா அனுமார்? உடனே அவருக்கு பறக்கும் சக்தி வந்திச்சா? வானத்தில் பறந்து போய் கடலைத் தாண்டினாரா?”… ஏதோ கம்ப்யூட்டரே கேட்டுக் கொண்டிருப்பது போல கதை சொல்லிக் கொண்டிருந்தார். நான் போனதும் பாதியில் கதை நின்றது. மன்னிப்புக் கேட்டேன். “பரவாயில்லை, அங்கே பேரன் சாப்பிட்டு விட்டான்” என்றார். புதிராக இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டேன். “கண்ணன் என்னுடைய பெண் வயிற்றுப் பேரன். அமெரிக்காவில் இருக்கிறார்கள். மதியமும் இரவும் நான் கதை சொன்னால் தான் கண்ணனுக்கு சோறு இறங்கும்” என்று புதிரை விடுவித்தார் அந்த அம்மையார். வீடியோ காலில் வந்து கம்ப்யூட்டருக்குள் இருந்தபடி வயிறும் மனமும் நிறைந்தவனாக குழந்தை கண்ணன் என்னைப் பார்த்து புன்னகைத்தான்.
பூமிப்பந்தை ஒரு அரைவட்டம் அடித்து கதை கண்ணனின் காதுகளை எட்டுகிறது என்று புரிந்தது. மாமூலாக ’அடடா, விஞ்ஞானம் எப்படி முன்னேறிவிட்டது!’ என்று சிலாகித்து சிறகடிக்கப் புறப்படும் மனதை கட்டுப்படுத்திக் கொண்டேன். எனக்கு என்னவோ பெரிதாகப் பட்டது, அடுத்த தலைமுறையின் காதில் ராமாயண மகாபாரதக் கதைகளைப் போட்டு வைப்போமே என்று நினைத்த அந்த அம்மையாரின் அர்த்தமுள்ள பாசம்தான்.
சில தலைமுறைகளுக்கு முன் வாழ்ந்திருந்த டாக்டர் அம்பேத்கரும் வ.உ.சிதம்பரனாரும் சிறு பிராயத்தில் ராமாயண மகாபாரதக் கதைகளைக் கேட்டபடி தான் வளர்ந்திருக்கிறார்கள் என்று புத்தகங்கள் பேசுகின்றன. ஒட்டப்பிடாரம் வீட்டில் தாத்தா மடியில் அமர்ந்தபடி கதை கேட்டு வந்த சிதம்பரத்துக்கு ராமாயணக் கதை அத்துபடி ஆகிவிட்டது. மகாபாரத கதை கேட்க ஊரில் உள்ள ஒரு பெரியவர் வீட்டுக்கு ஓடி விடுவானாம் சிறுவன் சிதம்பரம். பட்டாளத்துக்காரரான ராம்ஜி தன் மகன் பீமராவுக்கு இரவில் ராமாயணக் கதை சொல்வார். அதைக் கேட்க கண்விழித்துக் காத்திருப்பான் குழந்தை பீம்.
நாத்திகர் என்று அறியப்பட்ட பண்டித ஜவகர்லால் நேருவின் வாக்குமூலத்தையும்தான் பாருங்களேன்: ” சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் உள்ள வரை பாரத நாட்டின் பாமரனும் பண்டிதனும் ராமாயண மகாபாரதங்களை மறக்கப் போவதில்லை”!
தமிழக முதலமைச்சராக இருந்த ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் எளிய தமிழில் எழுதி 1957இல் வெளியிட்டார். 50 ஆண்டுகளுக்குள் இரண்டும் 10 லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்ததன; விற்பனையில் சாதனை என்று மட்டுமல்ல, தமிழ் மண்ணின் ஆன்மிக தாகம் எப்படிப்பட்டது என்று பாருங்கள்.
ராமாயணமும் மகாபாரதமும் பூமியை ஒரு அரைவட்டம் அடித்து கண்ணனுக்கு சோறூட்டப் போய்ச் சேர்கிறதே! நமது இதிகாசங்களுக்கு தூரம் ஒரு பொருட்டல்ல. நூற்றாண்டுக் கணக்கில் அல்ல, யுகக் கணக்கில் இந்த இதிகாசங்களின் வயதை அளக்கிறார்கள். நமது இதிகாசங்களுக்கு காலமும் ஒரு பொருட்டல்ல. ஆனாலும் இவை முந்தாநாள் வாழ்ந்த பாரதிக்குக் கை கொடுக்கிறது; அடிமைப்பட்ட பாஞ்சாலியைப் பார்க்கிறார், அடிமைப்பட்ட பாரதமாதா அவர் மனக்கண் முன் தோன்றுகிறாள், பாஞ்சாலி சபதம் பிறக்கிறது. நேற்று வாழ்ந்த திரைப்படக் கவிஞர் வாலி தன் பங்குக்கு ராமாயணத்தையும் மகாபாரதத்தையும், அவதாரத்தின் கதையாக, பாண்டவர் பூமியாக புது முறையில் பொட்டலம் போட்டு தந்து விட்டுப் போயிருக்கிறார்.
இருட்டி வெகு நேரம் ஆகிறதே ராமாயணம் கேட்கப் போன நரேனைக் காணோமே என்று தேடிக்கொண்டு பெற்றோர் புறப்பட்டார்கள். யாரையோ எதிர்பார்த்து சிறுவன் நரேன் வாழைத் தோப்பில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார்கள். “கதை சொன்ன தாத்தா வாழைத்தோப்பு அனுமாருக்கு பிடிச்ச இடம்னு சொன்னாரா, அதனால ஒரு தடவை அனுமாரப் பார்த்துட்டு வந்துடலாம் அப்படின்னு காத்துக்கிட்டு இருக்கேன்” என்று (பின்னாளில் விவேகானந்தர் ஆன) குழந்தை சொன்னதைக் கேட்டு பெரியவர்கள் சிரித்தார்கள். ஒரு மன்னர் இதுபோல சொன்னால் சிரிப்பதற்கு யாருக்கும் தைரியம் வராது தானே? ஆனால் சொன்னாரே! குலசேகர பாண்டியர் பரம ராம பக்தர். ராம கதை நடந்து கொண்டிருந்தது. ராவணன் சீதையை அபகரித்த கட்டம் வந்தது. லயித்துப் போய் கேட்டுக்கொண்டிருந்த மன்னர், “யாரங்கே, படை அணி வகுக்கட்டும், இலங்கை மீது போர் தொடுக்க வேண்டும்” என்று கர்ஜித்தாராம்.
இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு என்று கேட்கும் சந்தேகப் பிராணிகள் கூட மூக்கில் விரல் வைக்கும் விதத்தில் ஒரு சம்பவம், ராமானந்த சாகர் தயாரித்த ராமாயணம் டி.வி. தொடர் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த 1987 காலகட்டத்தில் நடந்தது. ராம – ராவண யுத்தத்தில் லட்சுமணன் இந்திரஜித்தின் நாக பாசத்தால் மயக்கமடைந்து களத்தில் விழும் காட்சி ஒளிபரப்பானது. சென்னையில் அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பிசினஸ்மேன் தாங்க முடியாமல் கதறி மயக்கமடைந்து கோமாவுக்கு போய்விட்டார். அந்த குடும்பத்தாரின் டாக்டர், மும்பை ராமானந்த சாகர் நிறுவனத்தை அணுகினார். லட்சுமணன் மயக்கம் தெளிந்து எழும் காட்சி அதற்கு சில வாரங்களுக்கு பிறகுதான் ஒளிபரப்பாக இருந்தது. என்றாலும் அந்தக் காட்சியின் சுருக்கமான வடிவத்தை வீடியோ பதிவு செய்து விமானத்தில் சென்னைக்கு அனுப்பினார்கள் சாகர் டிவி நிறுவனத்தார். அதை பலமுறை போட்டுக் காட்டிய பிறகுதான் அந்த பிசினஸ்மேனுக்கு நினைவு திரும்பியது (சாகர் நிறுவனத்தின் இணையதளம் (sagartv.org) தரும் தகவல் இது).
ராமன் கட்டிய சேதுவை NASAவின் சாட்டிலைட் விண்வெளியில் இருந்து பார்த்து படம் எடுத்துக் காட்டிய பிறகு, கிருஷ்ணனின் துவாரகையை நமது Ocean Archaeology நிபுணர்கள் கண்டறிந்து சொன்ன பிறகு… ராமன் இருந்தானா, கிருஷ்ணன் வாழ்ந்தானா என்று யாராவது கேள்வி கேட்டால் பதில் சொல்வதற்கு விஞ்ஞானம் இருக்கிறது; என்றாலும் ராமனும் கண்ணனும் நடந்த பாரத பூமி இன்னும் இருக்கிறதே … இதுவே போதுமான அத்தாட்சி!
$$$