பாரதியின் ஞானப்பாடல் – 25

-மகாகவி பாரதி

ஞானப் பாடல்கள்

25. கற்பனையூர்

கற்பனை யூரென்ற நகருண்டாம்-அங்குக்
      கந்தர்வர் விளையாடு வராம்.
சொப்பன நாடென்ற சுடர்நாடு-அங்குச்
      சூழ்ந்தவர் யாவர்க்கும் பேருவகை 1

திருமணை யிதுகொள்ளைப் போர்க்கப்பல்-இது
      ஸ்பானியக் கடலில் யாத்திரை போம்
வெருவுற மாய்வார் பலர் கடலில்-நாம்
      மீளவும் நம்மூர் திரும்பு முன்னே 2

அந்நகர் தனிலோர் இளவரசன்-நம்மை
      அன்பொடு கண்டுரை செய்திடுவான்;
மன்னவன் முத்தமிட் டெழுப்பிடவே-அவன்
      மனைவியும் எழுந்தங்கு வந்திடுவாள். 3

எக்கால மும்பெரு மகிழ்ச்சி- யங்கே
      எவ்வகைக் கவலையும் போருமில்லை;
பக்குவத் தேயிலை நீர் குடிப்போம்-அங்குப்
      பதுமை கைக் கிண்ணத்தில் அளித்திடவே. 4

இன்னமு திற்கது நேராகும்-நம்மை
      யோவான் விடுவிக்க வருமளவும்,
நன்னக ரதனிடை வாழ்ந்திடு வோம்-நம்மை
      நலித்திடும் பேயங்கு வாராதே. 5

குழந்தைகள் வாழ்ந்திடும் பட்டணங்காண்-அங்குக்
      கோல்பந்து யாவிற்குமுயி ருண்டாம்
அழகிய பொன்முடி யரசிகளாம்-அன்றி
      அரசிளங் குமரிகள் பொம்மையெலாம். 6

செந்தோ லசுரனைக் கொன்றிடவே-அங்குச்
      சிறுவிற கெல்லாம் சுடர்மணி வாள்
சந்தோ ஷத்துடன் செங்கலையும் அட்டைத்
      தாளையுங் கொண்டங்கு மனைகட்டுவோம். 7

கள்ளரவ் வீட்டினுட் புகுந்திடவே-வழி
      காண்ப திலாவகை செய்திடுவோம்-ஓ!
பிள்ளைப் பிராயத்தை இழந்தீரே!-நீர்
      பின்னுமந் நிலைபெற வேண்டீரோ? 8

குழந்தைக ளாட்டத்தின் கனவை யெல்லாம்-அந்தக்
      கோலநன் னாட்டிடைக் காண்பீரே;
இழந்தநல் லின்பங்கள் மீட்குறலாம்-நீர்
      ஏகுதிர் கற்பனை நகரினுக்கே 9

[ஜான் ஸ்கர் என்ற ஆங்கிலப் புலவன் ‘நக்ஷத்ர தூதன்’ என்ற பத்திரிகையில் பிரசுரித்த   'THE TOWN OF LET'S PRETEND' என்ற பாட்டின் மொழிபெயர்ப்பு.] 

குறிப்பு: இப்பாடலின் பொருள்: கற்பனை நகரமென்பது சித்தத்தில் குழந்தை நிலை பெறுவதை இங்கு குறிப்பிடுகிறது. ‘யோவான்’ என்பது குமார தேவனுடைய பெயர். ‘அக்கடவுள் மனிதனுக்குள்ளே நிலைபெற்று, மனிதன் மோக்‌ஷ நிலையை அடைவதற்கு முன்னர் குழந்தைப் பருவத்தை அடைய வேண்டும்’ என்று யேசு கிறிஸ்து நாதர் சொல்லியிருக்கும் பொருளை இப்பாடல் குறிப்பிடுகிறது. கவலைகளை முற்றுந் துறந்துவிட்டு உலகத்தை வெறுமே லீலையாகக் கருதி னாலன்றி மோக்ஷம் எய்தப் படாது.

மகாகவி பாரதியின்

ஞானப் பாடல்கள் நிறைவு

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s