-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
46. திருவடி மாளிகையில் சுகிக்கும் மன அன்னம்
.
ஆகீர்ணே நகராஜிகாந்தி விபவை ருத்யத்ஸுதா வைபவை
ராதௌதேபி ச பத்மராகலலிதே ஹம்ஸவ்ரஜைராச்ரிதே/
நித்யம் பக்திவதூகணைச்’ச ரஹஸி ஸ்வேச்சாவிஹாரம் குரு
ஸ்தித்வா மானஸராஜஹம்ஸ கிரிஜாநாதாங்க்ரி ஸௌதாந்தரே//
.
நகவரிசை நன்கொளிர வளர்பிறையோ சிரசொளிர
சிகப்பழகாம் பதமலரை அம்சங்கள் சூழ்ந்திருக்க
மலைமகளின் நாதனவன் திருவடியாம் மாளிகையுள்
மணமகளாம் பக்தியுடன் மனவன்னமே சுகிப்பாயே!
.
முந்தைய ஸ்லோகத்தில் மனத்தை பறவையாக வர்ணித்த ஸ்ரீ ஆதிசங்கரர், இங்கே அதனை ஓர் அன்னப் பறவையாக உருவகப்படுத்துகிறார். அன்னப்பறவை அழகு பொருந்திய மாளிகைக்குள் வளர்க்கப்படும் பேறு பெற்றது. சிவபெருமானின் திருவடிகளே, மனமாகிய அன்னம் சுகித்திருக்கும் மாளிகை என்பதை அழகு மிளிர எடுத்துரைக்கிரார் ஆதிசங்கரர்.
சிவபெருமானின் நகங்கள் ரத்தினங்களைப்போல் ஒளிர்கின்றன. வளர்பிறையோ அவரது தலைமீது பிரகாசிக்கிறது. செக்கச்செவேல் என ஜொலிக்கும் அவரது திருப்பாதங்களை, பரமஹம்சர்களாகிய (மகா யோகிகளாகிய) பெரிய அன்னங்கள் சூழ்ந்திருக்கின்றன. இப்பேர்ப்பட்ட ஒளிமயமாகவும் சிறப்புடையதாகவும் மலைமகளின் நாதனாகிய சிவபெருமானின் திருவடி மாளிகை திகழ்கிறது. அந்த மாளிகைக்குள் பக்தியாகிய மணப்பெண் வசிக்கின்றாள். மனமாகிய அன்னமே! சிவபெருமானின் அப்பேர்ப்பட்ட திருவடித் தாமரையாம் மாளிகையில் நீயும் குடியிருந்து, பக்தியாகிய மணப்பெண்ணுடன் கூடிக் குலாவி, மகிழ்ந்திடு! இந்த ஸ்லோகத்திலே உருவக அணியைப் பயன்படுத்தியுள்ளார் ஸ்ரீ ஆதிசங்கரர்.
$$$