-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
38. சிவச் சந்திரன் (சிலேடை)
.
ப்ராக்புண்யாசல மார்கதர்சி’த ஸுதாமூர்த்தி: ப்ரஸன்னச்’சி’வ:
ஸோமஸ்ஸத்குண ஸேவிதோ ம்ருகதர: பூர்ணஸ்தமோ-மோசக:/
சேத: புஷ்கர லக்ஷிதோ பவதி சேதானந்தபாதோ நிதி:
ப்ராகல்ப்யேன விஜ்ரும்பதே ஸுமனஸாம் வ்ருத்திஸ்ததா ஜாயதே//
.
தவமலை யால்கண்ட அமுதன் நகையன்
சிவசோமன் நற்கூட்டன் மானேந்தி பூரணன்
இருள்நீக்கி மதியோன் அவர்கண்டால் மேலெழுந்து
கடலானந் தம்பொங்கும் நல்லோர்பூ மலருமே.
.
இந்த ஸ்லோகம் சிவபெருமானுக்கும் அவர் சிரசில் சூடியுள்ள சந்திரனுக்கும் சிலேடையாகக் கூறப்பட்டுள்ளது.
.முதலில் சந்திரன்: புண்ணியம் நிறைந்த முனிவர்கள் தவம் செய்கின்ற மலையின் வழியாகக் காணப்படுகிறான் சந்திரன். அவன் அமுதைப் பொழிகிறான். ஆபரணத்தைப்போலப் பிரகாசிக்கிறான். சிவமாகிய மங்களத்தைத் தருகிறான் அந்தச் சோமன். சிறந்த நட்சத்திரக் கூட்டங்களோடு விளங்குகிறான். சந்திரனுக்கு நடுவே மான் போன்ற தோற்றம் தென்படும். தனது கதிர்களால் பூரணமாய்த் திகழும் சந்திரன், இரவு நேரத்தில் தோன்றுகின்ற இருளை நீக்குகிறான். மதி என்றும் போற்றப்படுகிறான். அப்படிப்பட்ட சந்திரனைக் கண்டதும் அவனது கதிர்களால் கடல் ஆனந்தம் கொண்டு தனது அலைகளை வீசிப் பொங்கும். மேலும், அல்லி போன்ற நல்ல பூக்கள் மலரும்.
இப்போது சிவபெருமான்: முற்பிறவிகளில் செய்த தவமாகிய மலையால் காட்சி தருகின்ற இறைவன் சிவபெருமான். அழிவில்லா அமுதமாக விளங்குபவர். புன்னகை தவழ்கின்ற வதனம் உடையவர். மங்களத்தைத் தருகின்றவர், சந்திரனைச் சூடியவர். நற்குணங்களுக்கு உறைவிடமாக இருப்பவர். (நல்லோர் கூட்டம் சூழப்பட்டிருப்பவர் என்றும் பொருள்.) ஒரு கரத்தினிலே மானை ஏந்தியவர். பரிபூரணமானவர். அஞ்ஞானமாகிய இருளை நீக்குபவர். மதி நிறைந்தவர். அவரைக் கண்டதும் பக்தர்களிடம் கடல் அளவுக்கு ஆனந்தம் பொங்கும். நல்லவர்களின் மனமாகிய பூ மலர்ந்து, உய்யும் வழி தோன்றும்.
$$$