-எஸ்.எஸ்.மகாதேவன்

8. பாரதமே, உனக்கு பேச்சியம்மன் தான் துணை!
வெளிநாடு ஒன்றில் ஹிந்து கலாச்சாரத்தைப் பரப்புவதை தொண்டாகச் செய்து வருபவர்; சொந்த ஊர் தமிழகத்திலிருந்து சற்றுத் தொலைவான இந்திய மாநிலத்தில் உள்ளது. அவர் பேசும் மொழியும் தமிழ் அல்ல. வீட்டுக்கு வந்திருந்தார். காபி குடிக்கும் பழக்கம் இல்லை என்றாலும் நான் காபி கலந்து கொடுக்கிறேன் என்பதால் மட்டும் குடிப்பதாக சொல்லி இசைவு தெரிவித்தார்; காப்பியைக் கலந்து எடுத்து டம்ளரில் நிரப்பி டம்ளரை டபராவில் வைத்து அவரிடம் அளித்தேன். காபி டம்ளரை மட்டும் எடுத்துக்கொண்டார். டபராவை காட்டி ‘இது எதற்கு?’ என்றார். என் அறிவாற்றலை முழுமையாகப் பயன்படுத்தி மூன்று காரணங்களை அடுக்கினேன். 1. காபியில் சர்க்கரை நன்றாக கலப்பதற்கு டபராவில் ஊற்றி ஆற்றலாம். 2 சூடான காபி நிறைந்த டம்ளரை தொடர்ந்து கையில் பிடிப்பதைத் தவிர்க்க டபராவைப் பயன்படுத்தலாம். 3. டம்ளர் என்றாலே கவிழக் கூடியது என்பதால் காப்பி சிந்தி உடையில் காபிக் கறை படியாமல் தவிர்க்க டபராவை கேடயமாகப் பயன்படுத்தலாம்.
எதற்கு இந்த டபரா புராணம்? ஒரு காபி குடிக்கிற நேரம் அளவு மட்டுமே பாரத நாட்டில் ஒரு ஊருக்குப் போனாலும் அந்த ஊர் வளப்பம் என்று ஏதாவது கண்ணில் தட்டுப் படும். அதன் சுவாரஸ்யம் நமக்கு அலுப்புத் தட்டாமல் செய்துவிடும். சென்னைக்கு வந்திருந்த ஒரு மத்தியப் பிரதேச பெரியவருக்கு பக்கத்தில் அமர்ந்து சாப்பிடும் பாக்கியம் கிடைத்தது. சாம்பார் சாதம் ஆயிற்று, அடுத்து மோர் சாதமும் சாப்பிட்டாயிற்று. இப்போது அந்த பெரியவர் தன் தட்டில் சில துளிகள் தண்ணீர் ஊற்றி தட்டில் ஒட்டிக்கொண்டிருந்த மோர்த் துளிகளைப் பருகினார். காரணம் கேட்டேன். “நிஸ்ஸேஷம் கிருத பாயஸம்” (பரிமாறப்பட்டவற்றில் நெய்யால் / பாலால் ஆன பண்டங்களை மீதம் வைத்து வீணாக்கக் கூடாது) என்பது சாஸ்திரம் என்று பதிலளித்தார். அட, கோமாதாவுக்கு இப்படியெல்லாம் கூட மரியாதை செய்யலாம் போலிருக்கிறதே என்று எனக்கு சட்டென்று தோன்றியது.
டபரா புராணத்தை விட்டுத் தள்ளுங்கள், இந்த சாஸ்திரத்தை பாரத நாடு முழுவதும் பொருள் உணர்ந்து கடைபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஏன், உலகம் முழுவதுமே கோமாதாவின் அருளை நாடி பாரதத்தின் பக்கம் திரும்புகிறது என்றால் அது மிகை அல்ல. வளைகுடா நாட்டுக்கு பசுஞ் சாணம் ஏற்றுமதி ஆவதும் தற்செயல் அல்ல. அமெரிக்காவிலுள்ள நார்த் ஈஸ்ட் பல்கலைக்கழகம் ‘பசுஞ்சாணத்தால் ஆன மிக நுண்ணிய ( நானோ) வடிகட்டியால் கடல் நீரை வடிகட்டினால் அதிக செலவில்லாமல் பக்கவிளைவு இல்லாமல் நன்னீர் ரெடி’ என்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்து அறிவித்திருக்கிறது. கோமாதாவின் அருமை பெருமைகளை கவனத்தில் கொள்ளாமல் அடிமாடாக விற்பது எந்த வகை புத்திசாலித்தனம்?
சரி, ஊர் விட்டு ஊர் போய் சுவாரசியம் சுவைத்த கதைக்கு வருவோம். சில ஆண்டுகளுக்கு முன் ஒரு 25 வயது இளைஞர் சென்னையிலிருந்து கொல்லம் சென்றார். மாணவர்களுக்கு புல்லாங்குழல் கற்றுக்கொடுப்பது அவர் முன் இருந்த பணி. ஒருநாள் இடைவேளையில் கண்ணப்ப நாயனார் கதையை உணர்ச்சிபூர்வமாக இந்த இளைஞர் சொன்னார்; அந்த கேரளப் பிள்ளைகள் இப்படியெல்லாம் சிவபக்தி உள்ளவர்கள் இருந்தார்களா என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டதாக அந்த இளைஞர் திரும்பி வந்தபின் என்னிடம் சொன்னார். எனக்குப் பொறி தட்டியது. நூலகங்களில் என்னதான் புத்தகங்கள் நிரம்பி வழியட்டுமே, மரத்தடியில் பிள்ளைகளை அமர வைத்து மனதார கதை சொன்னால் அதன் குணமே தனி. தமிழ் இளைஞர், மலையாளப் பிள்ளைகளை எப்படி அந்தக் கதையின் உணர்ச்சி வளாகத்திற்குள் கொண்டுவந்தார்? மெத்தப் படித்தவர்கள் தொட்டது வைத்ததற்கு எல்லாம் லாங்வேஜ் பிராப்ளம் என்று புலம்புவார்களே, அதெல்லாம் எங்கே போயிற்று இந்தச் சம்பவத்தில்?
ஒரு ஆசை. விடுமுறைக் காலத்தில் கன்னியாகுமரியில் இருந்து உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 20 பேரை மூன்று வாரம் குஜராத் மாநிலம் சிறிய நகர் ஒன்றில் பண்பாடு உள்ள குடும்பங்களில் தங்க வைப்பது; அதேபோல மறு திசையில் குஜராத் பிள்ளைகள் 20 பேரை மதுரை வாழ் பண்பட்ட குடும்பங்களில் தங்க வைப்பது. விளைவை சற்று கற்பனை செய்து பார்ப்போம்: பிள்ளைகள் தங்கும் ஊரின் மொழியின் சில வாக்கியங்களைக் கற்பார்கள், பலகாரங்கள், விளையாட்டுக்கள், பண்டிகைகள், பாட்டு, மகான்களின் கதைகள், திருத்தலப் பெருமை என்று அவர்களின் அனுபவப் பட்டியல் அமோகமாக இருக்கும். வாழ்நாளெல்லாம் அது அவர்களுக்கு மறக்காது. அந்த தமிழ்ப் பிள்ளைகளுக்கு குஜராத் சகஜமாக பிடித்துப் போய்விடும். அதேபோல குஜராத் பிள்ளைகளுக்கு தமிழ்நாடு விடுமுறைக்கு பாட்டி வீட்டுக்குப் போவது போல ஆகிவிடும். கற்பனையில் இருந்து சற்று வெளியில் வருவோமா?
அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் என்ற அகில பாரத மாணவர் பேரியக்கம் Students’ Experience in Inter-state Living (SEIL) என்ற பெயரில் மாணவர்களுக்கு, குறிப்பாக வடகிழக்கு வனவாசி பிள்ளைகளுக்கு, பாரத கலாச்சாரத்தை கண்கூடாக அனுபவத்துக்கு கொண்டுவர ’மாநிலம் விட்டு மாநிலம் வாழும் மாணவர்கள் அனுபவம்’ என்ற இந்த நிகழ்ச்சியை 50 ஆண்டுகளாக நடத்தி நாட்டுக்கு நல்ல பலன் கிடைக்கச் செய்தார்கள் (https://seil.org.in/home.html). 2015 ல் SEIL ன் பொன் விழா கொண்டாடினார்கள். மொழி மக்களைப் பிரிக்காது, மொழி இணைக்கும் என்பது SEIL அனுபவம்.
இன்று எல்லாப் பாடங்களையும் பாரத நாட்டு மாணவர்கள் ஆங்கிலத்தின் வழியாக படிக்கும் நிலை உள்ளது. சுதந்திரத்தின் 75வது ஆண்டு நடைபெறும் இந்த நேரத்தில் இந்த நிலை நீடிக்கலாமா என்ற எண்ணம் உள்ளவர்கள் முதல் காரியமாக, ஒரு பாரத மொழியும் இன்னொரு பாரத மொழியும் கலந்துறவாடினால் பரஸ்பரம் பலன் அடைய முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும். அப்போதுதான் பாரத மொழிகள் பற்றி மனதில் ஒரு பெருமிதம் ஏற்படும். என்னென்ன செய்தால் அதை சாதிக்க முடியும்? யோசிப்போம்.
சென்னை பத்திரிகையாளர் ஒருவர் என்ன செய்தார் என்பதை அறிந்து கொண்டா ல் நமக்கு ஒரு உத்தி லாபம் ஆகும். 1980களில் சோவியத் யூனியன் காணாமல் போய் ரஷ்யா தலைதூக்கியது. அந்த மாற்றம் பற்றி மலையாளத்தில் 32 பக்கத்தில் ஒரு சின்னஞ்சிறு புத்தகம் எழுதி வெளியிட்டார் தேசிய சிந்தனையாளரான பெரியவர் பி.பரமேஸ்வரன். சென்னையில் பணிபுரியும் மலையாளம் தெரிந்த ஒரு வங்கி அலுவலரை அழைத்து வாக்கியம் வாக்கியமாக அந்தப் புத்தகத்தை உரக்கப் படிக்க சொல்லி அர்த்தத்தைப் புரிந்துகொண்டு, தேவைப்படும்போது அவரிடமே கேட்டு அறிந்து தமிழில் எழுதி எடுத்துக் கொண்டார் இந்தப் பத்திரிகையாளர். அதாவது ஒரு பாரதிய மொழியிலிருந்து இன்னொரு பாரதிய மொழிக்கு ஆங்கிலத்தைப் பயன்படுத்தாமல் மொழிமாற்றம் செய்ய முடியும் என்பது நிரூபணம் ஆயிற்று.
இன்னொரு சந்தர்பத்தில் ’கதா’ என்ற அமைப்பினர் மொழிபெயர்ப்புக் கதைகளுக்கு போட்டி வைத்து பரிசு கொடுத்தார்கள். அந்தப் போட்டியில் சேர்வதற்காக வங்காளி மொழியிலிருந்து ‘து கன்யா’ என்ற சிறுகதையை இந்தப் பத்திரிகையாளர் தமிழாக்கி போட்டிக்கு அனுப்பினார். பரிசு கிடைக்கவில்லை என்பது பெரிய விஷயம் அல்ல. வங்காளி எழுத்து உருவே தெரியாமல் ஒரு தமிழர் எப்படி ஒரு வங்காளி மொழிக் கதையை தமிழுக்குக் கொண்டு வந்தார்? அதே மலையாளம் டு தமிழ் கதைதான். கல்கத்தாவில் படித்தவரான ஒரு இளைஞரை இதற்காக அழைத்து வாக்கியம் வாக்கியமாக வங்காளி மொழியில் கதையை உரக்கப் படிக்க சொல்லி பொருள் புரிந்து கொண்டு தமிழில் எழுதி எடுத்துக் கொண்டார் இந்தப் பத்திரிகையாளர். நல்ல புரிந்துணர்வு உள்ள இரண்டு வெவ்வேறு மொழி அன்பர்கள் இதுபோல முனைந்தால் விளைவு அபாரம் என்பது அனுபவம்.
சிறுகதையோ அரசியல் கட்டுரையோ மட்டுமல்ல, பள்ளி / கல்லூரி பாடநூல்களையும் நினைத்த மொழியிலிருந்து விரும்பிய மொழிக்குக் கொண்டு வரமுடியும். இதில் கூடுதல் சௌகரியம் ஒன்று உண்டு: பொறியியல் / இயற்பியல் / வேதியியல் தொடர்பான தொழில்நுட்பச் சொற்கள் தேடி அவரவர் மொழிக்குள் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்காமல் இன்னொரு பாரதமொழியிடமிருந்து கட்டி வந்து கதவு இடித்துக் கொட்டலாம். இந்த வகையில் தொன்மையான தமிழால் ஈடு இணையற்ற பங்களிப்பு செய்ய முடியும். மருத்துவ மாணவர்களும் தாவர இயல் மாணவர்களும் லத்தீன் / கிரேக்க / ஆங்கில சொற்களை இத்தனை நாளாகப் புழங்கியது போல அல்ல இன்னொரு பாரத மொழியிடமிருந்து கடன் பெறுவது; இது பாரத மொழிகளை பற்றி பெருமிதம் கொள்வதன் அடையாளம். மொழி காரணமாக தேசபக்தி மக்கள் மனதில் வலுப்படுவது சாதாரண விஷயம் அல்ல.
$$$