-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
31. நஞ்சுண்ட நாதன்
.
நாலம் வா பரமோபகாரகமிதம் த்வேகம் பசூ’னாம்பதே
பச்’யன் குக்ஷிகதான் சராசரகணான் பாஹ்யஸ்திதான் ரக்ஷிதும்/
ஸர்வாமர்த்ய பலாயனௌஷத மதிஜ்வாலாகரம் பீகரம்
நிக்ஷிப்தம் கரலம் கலே ந கிலிதம் நோத்கீர்ணமேவ த்வயா//
.
இஃதொரு உபகாரம் போதாதா பசுபதியே?
உள்ளிருக்கும் உயிர்களுடன் வெளியுயிரும் காத்திடவே
தேவரும் நடுங்கிய தீயுரு விஷந்தனை
தேக்கினாய் கழுத்தினில் இழுத்துமிழ வில்லையே?
.
முன்பொருமுறை தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக, மேருமலையை மத்தாகவும் வாசுகி என்னும் ஐந்து தலைப் பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது, அமுதம் தோன்றுவதற்கு முன்பு ஆலகால விஷம் தோன்றியது. அதிபயங்கரமான அந்த நஞ்சைக் கண்டு மகாசக்தி வாய்ந்த தேவர்கள் அலறி ஓடினார்கள். அசுரர்கள் உள்பட சகலஜீவராசிகளும் அச்சத்தில் அலறின. அப்போது அனைத்து உயிர்களையும் காப்பாற்றுவதற்காக, கனல் கக்கும் அந்த நஞ்சை எடுத்து வெண்ணெய்யைப் போல உருட்டி, தமது வாயில்போட்டுக்கொண்டு, தொண்டைக்குழியில் தேக்கிக்கொண்டார் பரமேஸ்வரன்.
உலக உயிர்களின் தலைவராகிய, பசுபதியாகிய பரமசிவன், அனைத்து உயிரினங்களையும் காப்பாற்றுவதற்காகச் செய்த இந்த ஒரு உதவி போதாதா, அவரை வாழ்நாள் எல்லாம் துதித்துப் பாராட்டுவதற்கு? என்று கேட்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.
தமது கழுத்தில் நஞ்சைத் தேக்கிய சிவபெருமான் அதனை தமது வயிற்றுக்குள்ளும் செல்ல விடவில்லை, உமிழ்ந்துவிடவுமில்லை. தமது உள்ளிருக்கும் உயிர்களுக்கு மட்டுமின்றி வெளியில் இருக்கும் உயிர்களுக்கும் எந்தத் துன்பமூம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சிவபெருமான் அப்படிச் செய்தாராம். அதனால்தான் சிவபெருமான் ஸ்ரீகண்டர் (விஷத்தைக் கழுத்தில் தேக்கியவர்), நீலகண்டர் என்றும் தியாகராஜன் என்றும் போற்றப்படுகிறார்.
சிவபெருமானின் இந்தத் தியாகத்தால் அவரைத் தமிழ்ச் சங்க இலக்கியங்கள், மணிமிடற்று அண்ணல் (குன்றம்பூதனாரின் பரிபாடல் பாட்டு), காரிஉண்டிக் கடவுள் (பெருங்கௌசிகனாரின் கூத்தராற்றுப்படை) என்று போற்றுகின்றன.
$$$