எனது முற்றத்தில் – 7

-எஸ்.எஸ்.மகாதேவன்

7. நாம் மறக்கலாம், நாடு மறக்கலாமா?

‘தியாக பூமி’ என்றால் தமிழக மக்களுக்கு, சற்றே முதிய மக்களுக்கு, பிரபல திரைப்பட இயக்குனர் கே.சுப்பிரமணியம் ( பரதநாட்டிய மேதை டாக்டர் பத்மா சுப்பிரமணியம் அவர்களின் தந்தையார்) எடுத்த தியாக பூமி என்ற சுதந்திரப் போராட்ட வரலாறு சொல்லும் திரைப்படம் ஞாபகம் வரும். கல்கி எழுதிய அதே பெயரிலான புதினம் தான் திரைக்கதை மூலம்.  ஆங்கிலேயே அரசு முதலில் அந்தப் படத்தைத் தடை செய்துவிட்டு பிறகு தடையை நீக்கியது. 

ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட ஹிந்து இயக்கங்களின் இதழியல் பணி பற்றி அறிந்தவர்கள் 1979இல்  விடைபெற்ற  அதே பெயருள்ள ‘தியாகபூமி’ சிற்றளவு வார இதழ் ஞாபகம் வரும். 1950களின் தொடக்கத்தில் மதுரையில் இருந்து வெளிவரத் தொடங்கிய தியாக பூமியில் 1973 ஜூன் 5 தொடங்கி 1978 ஜூன் 5 வரை  (சென்னையில்) ஆசிரியர் பொறுப்பில் இருந்தேன். ‘தியாகபூமி’ திரைப்படத்துக்கு ஏற்பட்ட அதே கதி ‘தியாகபூமி’ வார இதழுக்கும்  ஏற்பட்டது. சுதந்திர பாரதத்தில் இந்திரா காந்தி அரசு  நெருக்கடி நிலவரக் காலத்தின் போது தியாகபூமி அலுவலகத்தை  பூட்டி ‘சீல்’ வைத்தது. மக்கள் போராடி சர்வாதிகாரியைத் தோற்கடித்த பிறகு தியாகபூமி அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டது!

பாரதம் சுதந்திரம் பெற்று வெள்ளி விழா கொண்டாடிய 1972இல் ‘தியாகபூமி’ சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டது. அதன் அட்டையில் வெளியிட கார்ட்டூன் ஒன்று தயாரானது.  ஓங்கி வளர்ந்து தழைத்து, நிறைய  பழங்கள் கனிந்து, மங்கலமாகக் காட்சி தந்தது ஒரு மரம்.  அதன் அடி மரத்தில் ஒரு கோடரி பாய்ந்திருந்தது.  பிரிவினைவாதம் என்று அதன் மீது குறித்திருந்தது.  மரம் தான் தேசம். செழிப்பு, பாதுகாப்பு, வளர்ச்சி –  இவை கனிகள்.  கார்ட்டூனை எடுத்துக்கொண்டு  அன்றைய கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜகந்நாதன் இல்லம் சென்றேன். மந்தைவெளியில் ‘காந்தமலை’ என்று பெயர் பதித்திருந்த  வீட்டின் உள் திண்ணை தரையில் அமர்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். அவரிடம்  கார்ட்டூனைக் காட்டி “இதற்கு ஒரு கவிதை நீங்கள் எழுதித் தரவேண்டும்” என்று வேண்டினேன். உடனே புதிதாக ஒரு தாளை எடுத்து இடைநில்லாமல் எழுதி முடித்து என்னிடம் கவிதையை நீட்டினார்.  கார்ட்டூன் கருத்தை, தேசத்தின் நிலையை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு அதை கவிதைத் தமிழில் ஆக்கித் தர அவர் எடுத்துக் கொண்ட நேரத்தை, கண்ணிமைக்கும் நேரம் என்றுதான் என்னால் வர்ணிக்க முடியும். எட்டு வரியில் இருந்த அந்த கவிதை எனக்கு மறந்து போய்விட்டது.

அடுத்தபடியாக அதே  கார்ட்டூனுடன், அடையாறு, ஸ்ரீராம் நகரில் வசித்து வந்த கவியோகி சுத்தானந்த பாரதியாரிடம் காட்டி கவிதை கேட்டேன். இரண்டு தும்மல் போட்டேன். கவியோகி உள்ளே போய் ஆயுர்வேத சூர்ணம் கொண்டு வந்து கொடுத்தார். உட்கொண்டேன். சளி விடை பெற்றது; கவிதை கிடைத்தது. கி.வா.ஜ. கவிதை அடைந்த கதி தான் இதற்கும்.  கவியோகியின் கவிதையும் மறந்துவிட்டது. 

கவியோகி எனக்கு வைத்தியம் பார்த்தார் என்றேன் அல்லவா? பிறிதொரு சந்தர்ப்பத்தில் கி.வா,ஜவுக்கு நான் வைத்தியம் பார்த்தது நினைவுக்கு வருகிறது.  ஆர்.எஸ்.எஸ். அன்பர்கள்  தண்டையார்பேட்டையில் மாதாமாதம் நடத்தி வந்த சத்ய நாராயண பூஜையில் ஒருமுறை ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்த கி.வா.ஜ.  வந்திருந்தார்.  பேச ஆரம்பித்தார். இடையிடையே இருமல்  தலை காட்டியது; சிரமப்பட்டார். பக்கத்தில் இருந்த மருந்துக் கடைக்குப் போய் ஸ்ட்ரெப்சில்ஸ் மிட்டாய் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தேன். போட்டுக் கொண்டு, “ஒரு ’மல்’லும் கட்டாதவனுக்கு இருமல் கட்டுகிறதே?” என்று சொல்லி  தனது கதர் ஆடை பழக்கத்தையும், உடன்பிறந்த நகைச்சுவை உணர்வையும் தொட்டுக் காட்டினார். 

வரலாற்றில் இடம் பெற்ற அந்த இருவரில் ஒருவர் பாரத மாதாவின் பரம பக்தர். மற்றவர் தமிழ்த் தாத்தா உ.வே.சா. தமிழ் பயிற்றுவித்த  தலை மாணாக்கர்; தேசியவாதியான தமிழறிஞர். வரலாற்றில் இடம்பெற்ற அந்த பெரியோர்களுடன்  சில நிமிடங்கள் பழகும் பேறு எனக்கு கிடைத்ததே!

வரலாற்றில் இடம்பெற்றவர்தான்  குண்டக்கல் ஹம்பண்ணாவும். இதோ விபரம்: 

ஆண்டு 1893.  குண்டக்கல் ரயில் நிலையத்தில்  வெள்ளைக்கார சிப்பாய்கள் நீலகிரியில் இருந்து செகந்தராபாத் போக ரயிலுக்காகக் காத்திருந்தார்கள்.  அவர்கள் கண்ணில் பட்டார்கள் இரண்டு பெண்மணிகள். இருவரும் கிராமப்புறப் பெண்கள்.  சில சிப்பாய்கள் கெட்ட நோக்கத்தோடு அவர்களைத்  துரத்திக் கொண்டுபோனார்கள்.  மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள இருவரும் கேட்கீப்பர் அறைக்குள் தஞ்சம் புகுந்தார்கள். அவர்களைக் காப்பாற்றுவதற்காக  கேட் கீப்பர் ஹம்பண்ணா  அறையைப் பூட்டி சாவியை பத்திரப்படுத்திக் கொண்டார்;  சிப்பாய்களைத் தடுத்து நிறுத்தினர்.  அவர்கள் சாவி கேட்டு மிரட்டவே கையில் இருந்த தடியால் தாக்கினார்.   உடனே, ஆல்பிரட் என்ற  சிப்பாய் ஹம்பண்ணாவை சுட்டுக் கொன்றுவிட்டான். வழக்கு பதிவானது.  வெள்ளைக்கார நீதிபதி அந்தச் சிப்பாயை விடுதலை செய்து விட்டார். 

அந்தக் காலகட்டத்தில் தேசிய உணர்வுடன் வெளிவந்துகொண்டிருந்த ‘த ஹிந்து’ ஆங்கிலப் பத்திரிகை  இந்தச் செய்தியை வெளியிட்டு, குண்டக்கல் கேட் கீப்பர் அறை அருகே ஒரு நினைவுக் கல்வெட்டு பதிக்க  வாசகர்களின் ஒத்துழைப்பைக் கோரியது. அவ்வாறு வாசகர்கள் அளித்த காணிக்கையைக் கொண்டு, சென்னை- புரசைவாக்கத்தில் இருந்து கல்வெட்டு தயாரிக்கப்பட்டு குண்டக்கல்லில் நிறுவப்பட்டது. அந்த கல்வெட்டில் பின்வரும் வாசகம் இடம் பெற்றது:: “Here lie the remains of Goolapalien Hampanna, the Gatekeeper, who, while defending two Hindu women against a party of European soldiers near the Guntakkal rest camp was shot by one of them on October 4, 1893. He died here on October 5. Raised by European and Indian admirers.”

நாற்பது ஆண்டுகளுக்கு முன் ஓரிரு முறை ஆந்திரப்பிரதேச அன்பர்களின் உதவியுடன் அந்த குண்டக்கல்  ஹம்பண்ணா நினைவுக் கல்வெட்டைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தேன், பலிக்கவில்லை. நூறு பிளஸ் ஆண்டுகளில் அங்கே என்னென்னவோ மாற்றங்கள் நடந்திருக்கக் கூடும். 

தன் தேச மகளிருக்காக உயிர் கொடுத்த ஹம்பண்ணா பெயராவது பதிவாகியிருக்கிறது.  ஆனால் சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகே 1946இல் நிகழ்ந்த ஓர் அப்பாவி இளைஞனின் உயிர்த்தியாகம் எங்குமே பதிவாகாமல் இருக்கிறதே?

ஒரு கூட்டத்தார் நின்று அப்போது பிரிட்டிஷ் அரசை எதிர்த்து நடைபெற்றுக் கொண்டிருந்த கப்பல் படை வீரர்களின் கலகத்தை ஆதரித்து முழக்கம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். அந்த வழியே சென்னை உயர்நீதிமன்றம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது வெள்ளைக்கார நீதிபதி ஒருவரின் கார்.  கார் மீது கூட்டத்தார் கல்வீச்சு நடத்தினார்கள். வெள்ளைக்கார நீதிபதி துப்பாக்கியை எடுத்து கூட்டத்திலிருந்த இளைஞன் ஒருவனை நோக்கிச் சுட்டார்.  அவன் அந்த இடத்திலேயே சடலமாக விழுந்தான். 

வழக்குப் பதிவானது.  நேரடி சாட்சிகள் இருந்ததால் வெள்ளைக்கார நீதிபதி குற்றவாளி என்று தீர்ப்பு ஆயிற்று.  நீதிபதிக்கு என்ன தண்டனை கொடுப்பது என்று கேள்வி எழுந்தது.  ஒப்புக்காவது அந்த நீதிபதி தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றிக்கொண்டிருந்த வி.எல்.எத்திராஜ்  (பின்னாளில் எழும்பூர் எத்திராஜ் கல்லூரியை நிறுவியவர்). இந்த நீதிபதியிடம் இனி வழக்கு எதுவும் விசாரணைக்கு அனுப்பப்படக் கூடாது என்பதுதான் கிடைத்த தீர்ப்பு. 

இது, கருப்பையா என்ற புனைபெயரில் எத்திராஜ் வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதிய தினமணி செய்தியாளர் தனது நூலில் தரும் தகவல். குண்டக்கல் ஹம்பண்ணாவுக்காவது ஒரு கல்வெட்டு பதிக்கப்பட்டு காணாமல் போனது.  அந்த வெள்ளைக்கார நீதிபதியால் கொல்லப்பட்ட இளைஞனுக்கு அந்த பாக்கியம்கூட கிடைக்கவில்லை. அப்போது கிடைக்கவில்லை; இப்போதாவது, இனி எப்போதாவது கிடைக்குமா? 

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s