-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
8. சிவனுக்கு விஞ்சிய இறைவனில்லை
.
யதா புத்திச்’சு’க்தௌ ரஜதமிதி காசாச்’மனி மணிர்
ஜலே பைஷ்டே க்ஷீரம் பவதி ம்ருகத்ருஷ்ணாஸு ஸலிலம்/
ததா தேவ-ப்ராந்த்யா பஜதி பவதன்யம் ஜடஜனோ
மஹாதேவேச’ம் த்வாம் மனஸி ச ந மத்வா பசு’பதே//
.
வெண்சிப்பி வெள்ளியாமோ? காசக்கல் மணியாமோ?
வெண்மாவு பாலாமோ? கானலும் நீராமோ?
மயக்கத்தால் மனம்பிசகும் மூடர்களும் அதுபோலே
மகாதேவா நினையன்றி பிறதெய்வம் நாடுவதே.
.
சிவரூபம்தான் இறைத்தன்மையின் உச்சநிலை என்பதை இங்கே மிக அற்புதமாக எடுத்துரைக்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். வெள்ளையாக இருப்பதாலேயே சிப்பி, வெள்ளிக்குரிய பெருமையைப் பெற்றுவிட முடியுமா? ஒளி வீசுவதாலேயே விலை மலிவான காசக்கல், விலை மதிக்க முடியாத ரத்தினமாகிவிட முடியுமா? வெள்ளையாக இருப்பதால் மாவு, பாலைப்போல பயன் தந்துவிட முடியுமா? இருப்பதைப்போல தோற்றமளித்தாலும் பாலைவனத்தில் தென்படும் கானல் நீர், உண்மையான நீரைப்போல தாகத்தைத் தீர்த்துவிட முடியுமா? அதுபோல்தான், முழுமையான ஞானம் இல்லாத காரணத்தால் ஏற்படுகின்ற மனமயக்கம் காரணமாக, மூடர்கள், அனைத்திலும் மேலான, ஒப்பும் உயர்வும் அற்ற இறை வடிவமான சிவத்தை நினைக்காமல், மற்ற தெய்வங்களை நாடுகிறார்கள் என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.
சிவமே பரம்பொருள் என்பதை மகாபாரதத்தில் அனுசாஸன பர்வத்தில் இடம்பெற்றுள்ள ஸ்ரீ சிவ சஹஸ்ரநாமம் எடுத்துரைக்கிறது:
ப்ரக்ருதீனாம் பரத்வேன புருஷஸ்ய ச ய: பர:
சிந்த்யதே யோ யோகவித்பிர் ருஷிபிஸ் தத்வதர்சி’பி:
அக்ஷரம் பரமம் ப்ரஹ்ம அஸச்ச ஸதஸச்ச ய:
இதன்பொருள்: “அவர் (சிவபெருமான்) இயற்கை ஆற்றலாகிய பிரகிருதிக்கும், புருஷன் எனப்படும் ஜீவனுக்கும் மேம்பட்டவர். யோக மார்க்கத்தை அறிந்து, உண்மையைக் கண்டிருக்கும் ரிஷிகளால் அவர் தியானிக்கப்படுகிறார். அழிவற்ற பரப்ரும்மம் அவரே. காரியப் பிரபஞ்சமாகவும், காரண காரியமாகவும் உள்ளவர் அவரே.”
(அலைகள் தொடரும்)
$$$