இலக்கிய தீபம் – 6

-எஸ்.வையாபுரிப் பிள்ளை

6. தொகை நூல்களின் காலமுறை

தமிழிலுள்ள நூல்களுள் மிகப் பழைமையானவை ‘தொகை நூல்கள்’ எனப்படும். இவற்றுள் அடங்கியவை எட்டு நூல்களாம். இவை இன்னவென்பது

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறு நூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியே அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை

என்ற வெண்பாவினால் அறியலாம். ஒவ்வொரு தொகை நூலும் ஓர் அரசரது ஆணையின்படி ஒரு புலவரால் தொகுக்கப் பட்டதாகும். பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு என்ற மூன்று நூல்களும் முற்றும் அகப்படாமையினாலே, இவை தொகுக்கப்பெற்ற விவரங்கள் அறியக்கூடவில்லை. கலித்தொகை முற்றும் அகப்பட்டுள்ள தெனினும், அதனைத் தொகுத்தாரும் நெய்தற்கலியை இயற்றினாரும் நல்லந்துவனார் என்னும் ஒரு செய்தியன்றி வேறொன்றும் தெரிய மாட்டாது. இத்தொகை பற்றிப் பின்னர் நோக்குவோம். அக நானூறு, ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை என்ற நான்கு நூல்களையும் குறித்துச் சில விவரங்கள் அவற்றின் இறுதியிற் காணப்படுகின்றன.

கீழ்க்கண்ட நூல்களுள், ஐங்குறு நூறுதவிர ஏனைய மூன்றும் அடிகளின் எண்முறை பற்றித் தொகுக்கப் பட்டுள்ளன.

தொகை நூல்களின் காலமுறை

நூல்அடியளவு
சிறுமை பெருமை
தொகுத்தார்தொகுப்பித்தார்
1. ஐங்குறுநூறுபுலத்துறை முற்றிய கூட லூர் கிழார்யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை
2. குறுந்தொகை4 – 8பூரிக்கோ
3. நற்றிணை9 – 12பன்னாடுதந்த பாண்டியன் மாறன் வழுதி
4 அகநானூறு13 – 31மதுரை உப்பூரி கிழார் மகனார் உருத்திரசன்மர்பாண்டியன் உக்கிரப் பெருவழுதி

இவற்றைத் தொகுத்தாருள் ஒருவர் மதுரை நகரினர். தொகுப்பித்தாருள் இருவர் பாண்டியர்; எனவே இவ்விருவரும் மதுரையிலேயே இவ் இலக்கியத் தொகுப்பு முயற்சியைச் செய்வித்தனரென்று கொள்ளலாம். இவ்வாறு தொகுக்கப்பட்டவை நற்றிணையும் அகநானூறும் ஆம். ‘குறுந்தொகை முடித்தான் பூரிக்கோ’ என்று காணப்படுகிறது. இப்பூரிக்கோ மதுரை உப்பூரி குடிகிழான் என்பவரோடு குடிப்பெயரினால் தொடர்புடையார் என்று நினைத்தல் தகும். எனவே பூரிக்கோவும் மதுரை நகரினரென்று கொள்ளலாம். இக்காரணத்தால், குறுந்தொகையும் மதுரையில் தொகுக்கப்பட்டதெனல் பொருந்துவதே.

குறுந்தொகை 270-ம் செய்யுளைப் ‘பாண்டியன் பன்னாடு தந்தான்’ என்பவன் இயற்றினானெனக் காணப்படுகிறது. நற்றிணையில் இரண்டு செய்யுட்களை (98, 301) இயற்றியவன் பாண்டியன் மாறன் வழுதி எனக் காணப்படுகிறது. முற்கூறிய பன்னாடு தந்தானுக்கு மாறன் வழுதி என்ற பெயரும் உள்ளது; பிறர் யாருக்கும் இப் பெயருள்ளதாகத் தெரியவில்லை. நற்றிணையைத் தொகுப்பித்தான் ‘பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி’ என்று கூறப்படுவது இதனை நன்கு விளக்குகிறது. எனவே, பன்னாடு தந்தானும் மாறன் வழுதியும் ஒருவரே என்று கொள்ளுவதற்குச் சான்று உளது.

மேற்கூறியபடி ‘பன்னாடு தந்தான்’ குறுந்தொகைச் செய்யுளொன்றை இயற்றியவனாதலினால், இந்நூலைத் தொகுத்த காலத்துக்கு முன்பாகவேனும் அல்லது சம காலத்திலேனும் இவன் வாழ்ந்தவனாதல் வேண்டும். நற்றிணையைத் தொகுத்தவனும் இவனேயாவன். ஆகவே, இவ்விரண்டு நூல்களும் ஏறத்தாழச் சமகாலத்தில் தொகுக்கப் பட்டனவென்று கொள்ளலாம். இங்ஙனமாயினும், முதலில் தோன்றியது குறுந்தொகையென்பது வேறொரு செய்தியால் தெளிவாகின்றது. இத்தொகை நூற் செய்யுட்களிலே நான்கினை (9, 356, 378, 396) இயற்றியவர் கயமனார் என்ற புலவர். இப்பெயர்

பாசடை நிவந்த கணைக்கா னெய்தல்
இனமீ னிருங்கழி யோத மல்குதொறுங்
கய மூழ்கு மகளிர் கண்ணின மானும் (9)

என்ற செய்யுள் காரணமாகப் பிறந்தது என்று கொள்ளலாம். டாக்டர் உ.வே.சாமிநாதையரவர்களும் இக்கருத்தே கொண்டுள்ளார்கள் என்பது அவர்களது குறுந்தொகைப் பதிப்பின் முகவுரையால் (பக். 3) அறியலாகும். குறுந்தொகையைத் தொகுத்தார் யாதாமொரு காரணத்தால் இயற்பெயரை நீக்கி இப்பெயரைக் கற்பித்து வழங்கியிருக்கலாமென்றல் பொருத்தமுடையதே.

இப்பெயர் நற்றிணைப் புலவர்கள் வரிசையுள்ளும் காணப்படுகிறது. எனவே, காரணப் பெயரின் விளக்கத்தைக் காட்டியமைந்த குறுந்தொகையும், அப்பெயரை எடுத்தாண்ட நற்றிணையும், முறையே ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றியிருக்க வேண்டும். குறுந்தொகை நான்கடிச் சிறுமையும் எட்டடிப் பெருமையும் கொண்டதென்பதும் நற்றிணை நூல் ஒன்பதடிச் சிறுமையும் பன்னிரண்டடிப் பெருமையும் கொண்டதென்பதும் கற்றார் அறிவர். இந்த அடியளவும் இம்முறையையே ஆதரிக்கிறது. ஒரே தலைமுறையில் இரண்டு நூல்களும் சற்று முன்பின்னாகத் தோன்றின என்று கொள்ளுதல் பலவகையாலும் பொருத்த முடையதாம்.

இனி, அகநானூற்றை நோக்குவோம். இதனைத் தொகுப்பித்தவன் உக்கிரப் பெருவழுதி. இவன் இயற்றிய செய்யுட்கள் அகநானூற்றிலும் (26), நற்றிணையிலும் (98) காணப்படுகின்றன. எனவே, நற்றிணை தொகுக்கப் பெற்ற காலத்தேனும் அல்லது சிறிது முன்பாகவேனும் உக்கிரப் பெருவழுதி வாழ்ந்தவனாதல் வேண்டும். இவன் அகநானூறு தொகுத்த காலத்தும் இருந்தவன். ஆதலால் இவன் இருந்த காலத்தேயே நற்றிணையும் அகநானூறும் தொகுக்கப் பெற்றன என்று கொள்ளலாம். இரண்டு நூல்களும் பெரும்பாலும் சம காலத்தன என்று கொள்ளுதல் பொருத்தமுடைத்தாம். இங்ஙனமாக, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு என்ற மூன்று தொகை நூல்களும் ஏறத்தாழச் சமகாலத்தன என்பது விளங்கும். எனினும், குறுந்தொகை முற்பட்டும், நற்றிணை இதன் பின்னும், அகநானூறு இதற்குப் பிற்பட்டும் தொகுக்கப்பட்டன என்று ஒருவாறு துணியலாம். அகநானூற்றின் அடியளவு சிறுமை பதின்மூன்று; பெருமை முப்பத்தொன்று எனக் கூறப்பட்டுள்ளது. இந்த அடியளவும் இத் தொகுப்பு முறையையே வலியுறுத்துகிறது.

இனி ஐங்குறு நூற்றை நோக்குவோம். இதனைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்; தொகுப்பித்தவன் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும் பொறை. யானைகட்சேய் ‘மேலோருலகம்’ எய்திய செய்தியை புறம் 229-ம் செய்யுள் குறிக்கின்றது. இதனால், புறநானூறு தொகுக்கப் பெற்றதற்கு முன்பே ஐங்குறுநூறு தொகுக்கப் பெற்றதாதல் ஒருதலை.

இதனையடுத்து, புறநானூற்றைக் கவனிப்போம். இந்நூல் ஐங்குறு நூற்றின் பின் தொகுக்கப்பட்டதாதல் ஐயத்திற்கிடனின்றித் தெளிவாயுள்ளதென மேலே காட்டப்பட்டது. குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு என்ற மூன்று தொகைகளுக்கும் இது பிற்பட்டதா என்பதை நோக்குதல் வேண்டும்.

ஓரேருழவன், கயமனார், காக்கை பாடினியார் நச்செள்ளையார், தும்பிசேர் கீரனார் என்ற புலவர் பெயர்கள் குறுந்தொகையில் (131, 9, 210, 392) வந்துள்ளன. இந்நூலில் இப்புலவர்களின் பெயர்கள் காரணம்பற்றி அமைந்துள்ளன என்பது விளங்குகிறது. எனவே, இந்நூலிலேயே இப்புலவர்களின் பாடல்கள் முதலில் தொகுக்கப் பட்டனவென்று கொள்ளுதல் வேண்டும். இப்பெயர்கள் புறநானூற்றுச் செய்யுட்களிலும் (193, 254, 278, 249) வருகின்றன. ஆதலால் குறுந்தொகைக்குப் பிற்படத் தொகுக்கப்பட்டது புறநானூறு. நற்றிணையிலும் (277) தும்பிசேர்கீரனார் என்ற பெயர் காரணம் பற்றி அமைந்துள்ளதெனக் கொள்ளலாம். குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு என்ற மூன்றும் ஏறத்தாழச் சம காலத்தில் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றியிருத்தல் வேண்டுமென்பது மேலே காட்டப்பட்டது. எனவே புறநானூறு இம்மூன்றிற்கும் பின் தோன்றியிருத்தல் வேண்டும். அன்றியும் இந்நூல் அகநானூறு என்றதனோடு பெயரமைப்பில் ஒத்துள்ளது. இக்காரணத்தாலும் இந்நூல் அகநானூற்றின் பின் தொகுக்கப்படடதெனக் கொள்ளுதல் பொருந்தும்.

இனி பதிற்றுப்பத்தினை எடுத்துக் கொள்வோம். ஐங்குறுநூறு தொகுப்பித்த யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை

செறுத்த செய்யுட் செய்செந் நாவின்
வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்
இன்றுளனாயின் நன்றுமன்

என்று இரங்கிக் கூறியதாகக் காணப்படுகின்றது.இதற்கேற்ப, கபிலர் வடக்கிருந்ததைக் குறிக்குஞ் செய்யுளொன்றும் (236) புறநானூற்றில் காணப்படுகிறது. இக்கபிலர் யானைக்கட்சேய் தொகுத்த ஐங்குறுநூற்றில் குறிஞ்சி பற்றிய செய்யுட்களையும், பதிற்றுப்பத்தில் செல்வக்கடுங்கோ வாழி யாதன் மீது 7-ம் பத்தையும் பாடியவர். எனவே, யானைக்கட் சேய்க்கு முற்பட்டவர் கபிலர். இவர் பாடிய ஐங்குறு நூற்றுப் பகுதியும் சேய்க்கு முற்பட்டாதல் வேண்டும். பெரும்பாலும் ஐங்குறுநூறு தொகுக்கப் பெற்றதும் பதிற்றுப் பத்துக்கு முன்பேயாகலாம். பதிற்றுப்பத்தில் 6-ம் பத்தைப் பாடியவர் காக்கை பாடினியார் நச்செள்ளையார். இப்புலவர் பெயர் முதன்முதலில் குறுந்தொகையில் காரணம் பற்றி வழங்கப்பட்டதென்று முன்னமே கூறியுள்ளேன். எனவே, குறுந்தொகையின் பின் பதிற்றுப்பத்து தொகுக்கப்பட்டிருக்க வேண்டு மென்பதும் எளிதிற் புலப்படும்.

பதிற்றுப்பத்தின் இறுதிப்பத்து யானைக்கட்சேய் மாந்தரஞ் சேர லிரும்பொறை மீது பாடப்பெற்றது என ஊகிக்க இடமுண்டு. பெரும்பாலும் இது தொகுக்கப் பெற்ற காலத்து இவ் இரும்பொறை ஜீவதசையிலிருந்தவனாகலாம். புறநானூறு தொகுக்கப் பெற்ற காலத்து இவ் இரும்பொறை மரணமாகி விட்டான். எனவே புறநானூற்றின் முன்பாகப் பதிற்றுப்பத்துத் தோன்றியிருக்க வேண்டும்.

குறுந்தொகைக்கு ஐங்குறு நூறு முற்பட்டதா அல்லது பிற்பட்டதா என்று துணிதற்கு யாதொரு சான்றும் காணப்படவில்லை. யானைக்கட் சேய் இறந்தசெய்தியைக் குறித்த கூடலூர்கிழார் குறுந்தொகையில் மூன்று செய்யுட்களை (166,167, 214) இயற்றியுள்ளார். யானைக்கட் சேய் 17-ம் புறப்பாட்டால் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியனது காலத்தவனென்பது அறியலாம். நெடுஞ்செழியன் தானும் புறத்தில் ஒரு செய்யுள் (72) செய்துள்ளான். இச் செய்யுளில் குறிக்கப்படுகிற மாங்குடி மருதனார், மதுரைக் காஞ்சிப் புலவன் (119) எனவும், மாங்குடி கிழார் எனவும் காஞ்சிப் புலவனார் (நற்.123) எனவும் வழங்கப்பட்டாரெனத் தெரிகின்றது. இவர் அகநானூறு (89), குறுந்தொகை (164,173, 302), நற்றிணை (120,123) புறநானூறு (24, 26, 313, 335, 372, 396) என்ற நான்கு நூல்களிலும் செய்யுட்கள் இயற்றியுள்ளார். இச்செய்திகளை ஊன்றி நோக்கினால் இங்கு குறித்த நூல்களனைத்திற்கும் முற்பட்டு ஐங்குறுநூறு தொகுக்கப்பட்ட தாகலாமென்று கொள்ளுதல் பொருந்தும். மேலும் ஐங்குறுநூறு தொகுத்தற்கு எளிதாயுள்ளது. அடியின் சிற்றெல்லை குறுந்தொகையிற் காட்டிலும் குறைந்துள்ளது. இக்காரணங்களை நோக்கும்போது ஐங்குறுநூறு முதலில் தோன்றியது என்று கொள்ளலாம். குறுந்தொகை, நற்றிணை என்ற இரண்டு நூலிலுமுள்ள செய்யுட்களுக்குத் திணை வகுக்கப்படவில்லை. ஏட்டுப் பிரதிகளிலும் காணப்படவில்லை. டாக்டர் ஐயரவர்களுடைய குறுந்தொகைப் பதிப்பு இதனை நன்கு புலப்படுத்துகிறது. ஒரு சில குறுந்தொகைப் பதிப்புகளிலும் நற்றிணைப் பதிப்பிலுங் காணப்படுந் திணைவகுப்பு பதிப்பாசிரியர்கள் கொடுத்துள்ளதேயாகும். அகநானூறு திணை வகுப்பை நன்கு தழுவியுள்ளது.

பாலை வியமெல்லாம் பத்தாம் பனிநெய்தல்
நாலு நளிமுல்லை நாடுங்கால்-மேலையோர்
தேறும் இரண்டெட் டிவை குறிஞ்சி செந்தமிழின்
ஆறும் மருதம் அகம்

என்ற செய்யுளால் இதன் உண்மை தெளியலாம். இங்ஙனம் அமைத்தற்கு ஐங்குறுநூறு காரணமாயிருந்ததெனல் பொருந்துவதே. குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு என்ற மூன்றும் ஏறத்தாழச் சமகாலத்துத் தொகுக்கப் பட்டிருக்க வேண்டுமென்று முன்னர் துணிந்தோம். இத்துணிபோடு பொருந்த ஐங்குறுநூறு எல்லாவற்றிலும் முற்படத் தொகுக்கப்பட்டதென நாம் கொள்ளலாம். ஐங்குறு நூற்றுப் புலவர்கள் இன்னாரென்பது

மருதம் ஓரம்போகிநெய்தல் அம் மூவன்
கருதுங் குறிஞ்சி கபிலன்-கருதிய
பாலைஓத லரத்தை பனிமுல்லை பேயனே
நூலையோ தைங்குறு நூறு

என்ற செய்யுளால் அறியலாம். இவர்கள் தொகை நூலிற் பாடிய செய்யுட்களின் விவரம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது:

ஐங்குறு நூறு

திணைபுலவர்அகம்குறுந்தொகைநற்றிணைபுறம்
1.மருதம்ஓரம்போகி286, 31610, 70,122,127, 38420, 360284
2.நெய்தல்அம்மூவன்10, 35,140, 280, 370, 39049,125,163, 303, 306, 318, 327, 340, 351, 397,4014, 35, 76,138, 275, 307, 315, 327, 395, 397
3.குறிஞ்சிகபிலன்2,12,18,42, 82,118,128, 158,`182,203, 218, 238, 248, 278, 292, 318, 332, 38213, 18, 25, 38, 42, 87, 95,100, 106,115,121, 142,153, 187, 198 ,208, 225, 241, 246, 249, 259, 264, 288,8,14,105-111,113-124,143, 200-202, 236, 337, 347 பதிற்றுப் பத்து-VII, குறிஞ்சிப் பாட்டு
4.பாலைஓதலாந்தை12, 21, 329
5.முல்லைபேயன்234533, 339, 359, 400

மேலே பொருந்துவதாகலாம் என்று நாம் கொண்ட முடிபோடு முரணுவதாக இவ்விவரத்தில் யாதும் காணப்படவில்லை. ஐங்குறுநூற்றின் பின்னும், குறுந்தொகை முதலியவற்றின் பின்னும் தோன்றியது பதிற்றுப்பத்தென முன்பு கண்டோம். எனவே, தொகை நூல்களைக் கால முறையில் கீழ்வருமாறு அமைக்கலாம்:

1.குறுந்தொகை4.ஐங்குறுநூறு
2.நற்றிணை5.பதிற்றுப்பத்து
3.அகநானூறு6.புறநானூறு

தொகை நூல்களில் எஞ்சியுள்ள கலித்தொகையும் பரிபாடலும் தோன்றிய காலமுறை எளிதில் வரையறுக்கக் கூடியதன்று. நல்லந்துவனார் நெய்தற் கலியை இயற்றினார் என்பது

'சொல்லொடுங் குறிப்பொடு முடிவுகொ ளியற்கை 
புல்லிய கிளவி யெச்சமாகும் என்பதனால் 
சொல்லெச்சமுங் குறிப்பெச்சமுமாகத் தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்லந்துவனார் செய்யுட் செய்தார்.

என்ற 142-ம் கலியின் உரைப்பகுதியால் அறியலாம். கலித்தொகையைத் தொகுத்தவரும் இவரே யென்பர்.

'ஈணடுப் பாலைத்திணையையும் திணையாக ஆசிரியர் நல்லந்துவ னார் கோத்தார் என்று கூறுக' (கலி.1.உரை), 
ஆகலின் இத்தொகைக் கண்ணும் இவை மயங்கிவரக் கோத்தார் என்று கூறிவிடுக்க' (கலி.1. உரை), 
பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தலெனவும் கோத்தார்: ஐங்குறு நூற்றினும் பிற வற்றினும் வேறுபடக் கோத்தவாறு காண்க '(கலி.1.உரை), 
'இது புணர்தல் நிமித்த மாதலிற் குறிஞ்சியுட் கோத்தார்', 
(கலி. 56. உரை)' இது ஊடற் பகுதியாகலின் மருதத்துக் கோத்தார்' (கலி.94.உரை)

என்று வரும் உரைப்பகுதிகள் இதற்குச் சான்றுகளாம்.

நாடும் பொருள் சான்ற நல்லந் துவனாசான்
சூடுபிறைச் சொக்கன் றுணைப்புலவோர்-தேடுவார்
கூட்டுணவே வாழ்த்தோடு கொங்காங் கலியினையே
ஊட்டினான் ஞாலத் தவர்க்கு

என்ற பிற்காலச் செய்யுளும் இதனை வலியுறுத்தும். ஒவ்வொரு திணைக்குமுரிய கலிச் செய்யுட்களை இயற்றினார் இன்னின்னரென ஒரு செய்யுள் கூறுகின்றது. அது வருமாறு:

பெருங்கடுங் கோன் பாலை கபிலன் குறிஞ்சி
மருதனிள நாகன் மருதம்-அருஞ்சோழ
னல்லுத் திரன்முல்லை நல்லந்துவன் 
நெய்தல் கல்விவலார் கண்ட கலி.

இச்செய்யுள் ’இன்னிலை’ ’ஊசிமுறி’ முதலிய நூல்களின் சிருஷ்டி கர்த்தரென்று கொள்ளத்தகும் காலஞ்சென்ற த.மு.சொர்ணம் பிள்ளையவர்கள் முதன்முதலில் வெளியிட்டது. தொகை நூல்களுள் ஒன்றாகிய கலித்தொகையில் ஒவ்வொரு திணையையும் இயற்றினாராக ஆசிரியர் ஐவரைப் பெயர்களால் விளக்குதலால், இது பழஞ் செய்யுளெனப் பலராலும் மயங்கிக் கொள்ளப்பட்டது. இச்செய்யுள் என் பார்வைக்கு வந்த இந்நூலின் ஏட்டுப்பிரதிகளில் காணப்படவில்லை. இந்நூலை முதன்முதலில் வெளியிட்ட ராவ் பகதூர் சி.வை.தாமோதரம் பிள்ளையவர்களுக்குக் கிடைத்த பிரதிகளிலும் இது காணப்பட்டதில்லை. இருக்குமாயின், அவர்கள் காட்டியிருப்பார்கள். காட்டாததனோடு, இச்செய்யுட்கு முற்றும் மாறாக நல்லந்துவனாரே நூல் முழுதும் இயற்றியவரெனவும் கருதினார்கள். இக் கொள்கை மிகவும் வன்மையுடையதென்றே தோன்றுகிறது. கலித்தொகையை நல்லுந்துவனார் கோத்தாரென்று கூறும் நச்சினார்க்கினியரும் இங்ஙனம் ஒரு செய்யுள் உளதாகக் குறித்ததில்லை. ஒவ்வொரு திணையையும் இன்னார் இயற்றினாரெனவும் இவ்வுரைகாரர் காட்டியதில்லை. அன்றியும், குறிஞ்சிக் கலியை இயற்றியவராகக் கூறும் கபிலர் மேற்குறித்த ஆறுதொகை நூல்களிலும் பத்துப் பாட்டிலுமாக 206 செய்யுட்கள் இயற்றியுள்ளார். இவற்றுள் ஒன்றிலேனும் பாண்டியனைக் குறித்தும் கூடல் நகரைக் குறித்தும் யாதொரு செய்தியும் இல்லை. இப்புலவருக்கும் பாண்டியனுக்கும் யாதோர் இயைபும் இல்லை. ஆனால் குறிஞ்சிக் கலியோவெனின் (21), பாண்டியனைப் புகழ்ந்து கூறுகிறது. இங்ஙனமாக, பிற இலக்கியச் சான்றுகளுக்கும் முரணாகவுள்ளது இச் செய்யுள்.

இக்காரணங்களால் இச் செய்யுளை இயற்றியவர் சொர்ணம்பிள்ளை யென்றே தோன்றுகிறது. இதனை நம்பி எடுத்தாளுதல் கூடாது. இவ்வாறு கூறுவதனால் கலித்தொகை தொகுக்கப்பட்ட தென்பதனை மறுத்ததன்று. தொகுக்கப்பட்டதாகவும் இருக்கலாம். தொகுக்கப்பட்டதாயின், ஒவ்வொரு திணைக்குமுரிய செய்யுட்களை இயற்றிய புலவர் இன்னாரெனத் தெரிதற்குத் தற்காலத்தில் இயலவில்லை யென்றதனோடு நாம் அமைய வேண்டும். ஆனால், இப் புலவர்களனைவரும் பாண்டி நாட்டைச் சார்ந்தவர்களென்றே நாம் கொள்ளுதல் வேண்டும். பாலைக் கலியில் (30)

மீனிவேற் றானையர் புகுதந்தார்
நீளுயர் கூடல் நெடுங்கொடி யெழவே

எனவும், குறிஞ்சிக்கலியில் (21)

பூந்தண்டார்ப் புலர்சாந்திற் றென்னவ னுயர்கூடல்

எனவும், மருதக்கலியில் (33)

பொய்யாவாட் டானைப் புனைகழற்காற் றென்னவன்

எனவும், முல்லைக்கலியில் (4)

வாடாச் சீர்த் தென்னவன்

எனவும், நெய்தற் கலியில் (26)

தென்னவற் றெளித்த தேஎம் போல

எனவும் வருதலால் இது தெரியலாகும். இவர்கள் ஒரே காலத்தவர்களென்பதும் இந் நூலினைக் கற்றாரனைவரும் ஒப்புக்கொள்வர்.

கலித்தொகை போன்றே, பரிபாடலும் சில சிக்கலான வினாக்களுக்கு இடந்தருகின்றது. இவ்வினாக்கள் பரிபாடற் செய்யுட்களை இயற்றிய புலவர்கள் பற்றியும், நூற்பொருள்கள் பற்றியும், நூலகத்துள்ள மொழியாட்சி பற்றியும் எழுவனவாம்.

இவை போன்ற விஷயங்களை யெல்லாம், கலித்தொகை பரிபாடல் பற்றிய அளவில், ஆராய்ந்து தனியே யொரு கட்டுரை வெளியிட எண்ணுகிறேன்.

(தொடர்கிறது)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s