-எஸ்.எஸ்.மகாதேவன்

4. இரண்டு எதார்த்தங்கள்
** ஆயுத பூஜை வந்து விட்டால் போதும். உதவி ஸ்டேஷன் மாஸ்டர் கான் அப்துல் கான் தன் வேட்டைத் துப்பாக்கியை சுத்தமாகத் துடைத்து ரயில் நிலைய ஆயுத பூஜையில் கொண்டுவந்து வைப்பார். ஸ்டேஷன் மாஸ்டரான என் தந்தையார் அந்தப் பட்டாணியரின் துப்பாக்கிக்கும் பூஜை செய்து பிரசாதம் கொடுப்பார். கான் மகிழ்ச்சியோடு பெற்றுக் கொள்வார். சோழவந்தானை அடுத்த சமயநல்லூர் ரயில் நிலையத்தில் ஆண்டுதோறும் நிகழும் இந்தக் காட்சி பள்ளி மாணவனான என் மனதில் அன்று எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. சகஜமாக நடப்பதுதானே என்றுதான் நினைப்பேன்.
** அந்த ஊரில் எங்கள் ரயில்வே காலனி வீட்டுக்குப் பின்புறம் கொடிக்கால் தொழிலாளர்கள் குடிசைகளில் வசித்து வந்தார்கள். சமையலுக்கு விறகு அடுப்பு தான். களிமண்ணைப் பிசைந்து அடுப்பு கூட்டுவார்கள். புதிய அடுப்பில் முதல் முறை சமையல் செய்வதற்கு நல்ல நாள் பார்க்கச் சொல்லி அந்த வீட்டுப் பெண் என் அம்மாவை அணுகுவார். அடங்கிய குரலில், “சாமியாருக்கு தெரிஞ்சா திட்டுவாரு” என்பார். அவர் வீட்டில் எல்லோரும் கிறிஸ்தவர்கள். ஏன் இதற்காக பாதிரியிடம் அவர் பயப்பட வேண்டும் என்று அன்று எனக்குப் பிடிபடவில்லை. பள்ளிக்கூடம், விளையாட்டு என்று அது மறந்து போனது.
** தஞ்சாவூர்க்காரரான செய்தியாளர் ஒருவர் என் நண்பர். ஜோதிடரான தன் தந்தையாரைப் பார்த்து ராசி பலன் அறிந்துகொள்ள பக்கத்து கிராமத்திலிருந்து ஒரு பாயம்மா கித்தான் திரையிட்ட மாட்டு வண்டியில் வந்து போவார் என்று ஒருமுறை பேச்சுவாக்கில் தெரிவித்த போதும் எனக்கு ஆச்சரியம் ஏற்படவில்லை.
** டில்லியில் ஆண்டுதோறும் நடக்கும் பிரம்மாண்டமான ராம்லீலா திருவிழாவில், இருபது ஆண்டுகளுக்கு மேலாக சீதை வேடம் அணிந்து ராமாயண நாடகத்தில் நடிப்பவர் வழக்கறிஞர் தொழில் புரியும் ஒரு முஸ்லிம் பெண்மணி என்பதாக ஒரு செய்தி படித்தேன். தனக்கு சீதையின் பண்பு மனதுக்கு மிகவும் பிடித்திருப்பதாக பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்திருந்தார். அந்தப் பெண்மணியின் பக்தி அபூர்வம் என்று எனக்குப் படவில்லை .
அன்றாட யதார்த்த வாழ்வில் சாமானிய முஸ்லிமோ கிறிஸ்தவரோ அந்த உதவி ஸ்டேஷன் மாஸ்டர் போல, புதிய அடுப்பில் சமையல் தொடங்க நல்ல நாள் பார்த்த அந்த கொடிக்கால் தொழிலாளர் குடும்பத்துப் பெண் போல, ஹிந்து வாழ்க்கைமுறையை ஏற்றுக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறார்கள் என்ற நிலை இருந்தது. இப்போது அப்படி இல்லை என்று கிடையாது. இலை மறை காயாக இருக்கவே செய்கிறது.
அதுதான் கிறிஸ்தவ, முஸ்லிம் மத அதிகார பீடத்தில் உள்ளவர்களுக்கு கிலி ஏற்படுத்துகிறது. தங்கள் வசம் உள்ள சாமானியர்களை மூளைச் சலவை செய்தாவது அவர்கள் வேலி தாண்டாமல் (தாய்மதம் திரும்ப விடாமல்) தடுக்க முடியுமா என்று பார்க்கிறார்கள். அண்மையில் சென்னை பத்திரிகை அலுவலகம் ஒன்றில் அலுவலர் ஒருவர் அது தன் பிறந்த நாள் என்பதால் கேசரி (இனிப்பு) வழங்கிக் கொண்டே வந்தார். துப்புரவுத் தொழிலாளரான கிறிஸ்தவப் பெண் ஒருவர், “இது கும்பிட்டதா?” என்று சென்னைத் தமிழில் கேட்டார். பூஜையில் நிவேதனம் செய்த பிரசாதமா என்று அதற்கு அர்த்தம். எப்படிப் பட்டவர்கள் மனதில் எல்லாம் இப்படி விஷம் ஏற்றப்பட்டிருக்கிறது பாருங்கள்!
கடலூரை அடுத்த கிள்ளை என்ற ஊரில் முஸ்லிம் ஒருவர் கோயில் கட்டி பூஜை நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார் என்ற சம்பவத்தை ஏதோ அதிசயம் நடந்து விட்டது போல சில ஊடக நண்பர்கள் ’ஐந்து காலம்’ செய்தியாக்கிக் கொண்டாடினார்கள் என்றால் அது ஊருக்குள் பரவிய விஷத்தின் எதிரொலி என்பதையே காட்டியது. அது போன்ற நாடக பாணி நிகழ்வுகளில் மட்டும்தான் சமூக நல்லிணக்கம் காப்பாற்றப்படுகிறது என்பது அவர்களுக்கு எண்ணம்.
எல்.கே.அத்வானி மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சராக இருந்தபோது இந்தோனேஷியாவில் இருந்து வந்த ஒரு கலாச்சாரக் குழுவினர் அவரைச் சந்தித்தார்கள். அனைவரும் முஸ்லிம்கள். அதெப்படி ராமாயண நாட்டிய நாடகம் எல்லாம் நடத்துகிறீர்கள் என்று அத்வானி கேட்டபோது “நாங்கள் மதம் மாறியிருக்கலாம்; ஆனால் எங்கள் மூதாதையர்களை மாற்றிக் கொள்ளவில்லை. ராமர் எங்கள் மூதாதை” என்று விளக்கினார்கள். இந்தோனேசிய அரசே கரன்சி நோட்டில் கணபதி படம் அச்சிட்டு வருகிறது; கருடா ஏர்வேஸ் என்று தனது விமானக் கம்பெனிக்குப் பெயர் என ஹிந்து அடையாளங்களை விருப்பத்தோடு ஏற்கிறது. அந்த நாட்டு மக்கள் மனதில் ஹிந்து என்றால் முகத்தை திருப்பிக் கொள்ளும்படி சொல்லும் விஷம் எப்படி பரவும்?
ஊருக்குள் ஹிந்துக்கள் மீது துவேஷம் காட்டுமாறு பரப்பப்படும் விஷத்திற்கு முறிவாக நாட்டுக்குள் ஏதாவது நடக்கிறதா என்ற கேள்வி எழுப்பினால் கிடைக்கும் பதில் சுவாரசியமாக உள்ளது: நாடு நெடுக முஸ்லிம்கள் கோசாலை நடத்துகிறார்கள். அவர்களுக்கான அகில பாரத மாநாடு நடைபெற்றிருக்கிறது. கோமாதா வதை செய்யப் படுவதை தடை செய்யுமாறு கோரி எட்டரை லட்சம் முஸ்லிம்கள் கையெழுத்திட்ட மனு பாரத ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. எல்லாம் கடந்த சில ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள். இதை சாத்தியமாக்கியவர்கள் யார்? மூத்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகரான இந்திரேஷ்குமாரைப் புரவலராகக் கொண்ட முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் அமைப்பை சேர்ந்தவர்கள் தான் என்பது சுவாரசியம் தானே?
இதையெல்லாம் இங்கு சொல்வதற்கு என்ன தேவை? ஒரு மாவட்டத் தலைநகரில் ஜவுளிக்கடை நடத்தும் அன்பரின் நெருங்கிய உறவினர் ஆர்.எஸ்.எஸ்.ஸில் தன்னை இணைத்துக் கொண்டார். அவரை அழைத்து அந்தக் கடைக்காரர், “எனக்கு முஸ்லிம் வாடிக்கையாளர்கள் உண்டு. எனவே நீங்கள் ஆர்.எஸ்.எஸ்.ஸைத் தவிர்க்கலாமே?” என்று சொல்லிப் பார்த்தார். முஸ்லிம்கள் எல்லோருமே ஹிந்து கலாச்சாரத்தையும் அதன் மீது பெருமிதம் கொள்ளச் செய்யும் ஆர்.எஸ்.எஸ்.ஸையும் எதிர்ப்பவர்கள் என்ற பொதுவான அபிப்பிராயம் தான் அவரது இந்த மனப்பான்மைக்கு காரணம். ஊருக்குள் யதார்த்தம் வேறு மாதிரி உள்ளது என்பதை அவர் போன்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டாமா? அதற்காகத்தான்.
ஜிகாதிகள் கோயம்புத்தூரில் நடத்திய குண்டு வெடிப்புக்குப் பிறகு அந்த ஊரில் முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பது இல்லை என்பதாக முஸ்லிம் ஊடக நண்பர் ஒருவர் நீண்ட நெடிய கட்டுரை ஒன்றை ’த ஹிண்டு’ தமிழ் நாளிதழில் எழுதியிருந்தார். பொதுமக்களின் எச்சரிக்கை உணர்வு என்ற ரீதியில் ஊருக்குள் இந்த யதார்த்தமும் இருக்கத்தானே செய்யும்?
“பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே” என்று பாடிய அதே பாரதி, “பாதகம் செய்பவரைக் கண்டால் மோதி மிதித்துவிடு” என்றும் பாட நேர்ந்திருக்கிறதே?
$$$