இன்றைய இந்தியாவின் முகங்கள் – 6

-திருநின்றவூர் ரவிகுமார்

6. மோகன்தாஸ் பை 

ஆரம்பத்தில் இன்போசிஸ் நிறுவனம் முதலீட்டைத் திரட்ட பங்குகளை சந்தையில் வெளியிட முடிவு எடுத்தது. அதற்கான முன்வெளியீட்டுக் கூட்டத்திற்கு வந்த ஒருவர் ஆழமான, பொருள் பொதிந்த கேள்விகளைக் கேட்டார். அந்தக் கூட்டத்தின் தொடர்ச்சியாக பம்பாயில் பங்கு சந்தை ஆய்வாளர்கள்/ விமர்சகர்கள் கூட்டத்தை இன்போசிஸ் கூடியபோது அதற்கும் அவர் வந்திருந்து கூரிய கேள்விகளைக் கேட்டார். இன்போசிஸ் பங்கு வெளியீட்டை முன்னின்று நடத்திய பங்கு சந்தை தரகர் வல்லப் பன்சாலி அவரது கேள்விகளால் ஆடிப் போனார்; அவரது கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டாம் என நிறுவனத்தை ஆரம்பித்த  நாராயணமூர்த்திக்கும் இணை ஸ்தாபகர் நந்தன் நிலேகனிக்கும் அறிவுறுத்தினார். இறுதியில் கேள்வி கேட்ட நபர் ஆயிரம் பங்குகளை வாங்கினார். ஆனால் அவரது கேள்விகளால் தூண்டப்பட்ட இன்போசிஸ் நிறுவனம் அவரை தனது நிறுவனத்தில் ஆலோசகராக நியமித்தது.

ஆலோசகராக இருந்தவர் பின்பு முழு நேரப் பணியாளர் ஆனார். நிதி, மனிதவள மேம்பாடு, கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறை பொறுப்பாளர், நிறுவனத்தின் உள்கட்டமைப்புக்கான தலைவர், நிறுவனத்தின் இயக்குனர், இன்போஸிஸ் பி பீ ஓ (BPO) சேர்மன் என தன் திறமையால் தானும் உயர்ந்து நிறுவனத்தையும் உயர்த்தியவர் மோகன்தாஸ் பை.  இவர் சட்டம் பயின்றவர்; பட்டயக் கணக்காளர். பெங்களூரில் நடுத்தர வருமானப் பிரிவைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர். பிரகாஷ் லீசிங் என்ற நிதி நிறுவனத்தில் ஏழு ஆண்டுகள் பணி புரிந்தவர். பின்பு 1992-இல் வெளிநாட்டுக்கு வேலை தேடிச் செல்ல நினைத்திருந்த போதுதான் மேற்கண்ட இன்போஸிஸ் விவகாரம் நிகழ்ந்தது.

இவர் இன்போசிஸிஸின் நிதித்துறைத் தலைவராக ( CFO) இருந்தபோது நிதி மேலாண்மையில் வெளிப்படைத்தன்மை, முதலீட்டாளர்களுக்கு முழுமையான தகவல்களை அளித்தல், அதன்மூலம் நிறுவனத்தின் நம்பகத்தன்மையை நிலைநிறுத்தல் ஆகியவற்றை ஏற்படுத்தினார். நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையை இவர் தயாரித்து வெளியிட்ட விதம் பலவிதங்களில் முன்மாதிரியாக விளங்கியது; பலரது பாராட்டைப் பெற்றது.

சர்வதேச அளவில் இவரது பங்களிப்பு பாராட்டத்தக்கது. சர்வதேச அளவில் நிதி அறிக்கை குறித்து ஒரு நிரந்தர வடிவத்தை உருவாக்க இன்டர்நேஷனல் பைனான்சியல் ரிப்போர்ட்டிங் ஸ்டாண்டர்டு பவுண்டேஷன், இன்டர்நேஷனல் அக்கவுண்டிங் ஸ்டாண்டர்டு போர்டு ஆகியவை இவரை தங்கள் குழுவில் இணைத்துக் கொண்டன.

பட்டயக் கணக்காளர் சங்கத்தின் (ICA), தெற்காசிய கணக்காளர்களின் கூட்டமைப்பின் (SAFOA) விருது என பல விருதுகள் சிறந்த நிதி அறிக்கைக்காக இன்போசிஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டன. இதற்குக் காரணமானவர் மோகன்தாஸ் பை. இவருக்கு 2001, 2002, 2004 ஆண்டுகளில் சிறந்த சிஎப்ஓ க்கான விருது வழங்கப்பட்டது. 

நிதித்துறை பற்றி இவரது ஆழ்ந்த அறிவு மற்றும் அனுபவம் காரணமாக இந்திய அரசு இவரிடம் ஆலோசனை கேட்டது; வரித்தகவல்களுக்கான  நெட்வொர்க் குறித்து சிறப்பு அதிகாரம் கொண்ட உயர்நிலைக் குழுவின் உறுப்பினர் ஆக்கியது. நேரடி வரி விதிப்பு, அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள், இந்தியாவில் வசிக்காத இந்தியர்களுக்கான வரிவிதிப்பு, இ-காமர்ஸ் (இணைய வழி வர்த்தகம்) போன்றவை குறித்த குழுவில் இவரை உறுப்பினராக  நியமித்தது. மாநில அரசுகளும் கல்வி, திறன்மிகு பணியாளர்களை உருவாக்குவது ( Skilled Manpower) இணைய வர்த்தகம் பற்றி அவரது ஆலோசனைகளைக் கேட்டிருக்கின்றனர்.

இவரது முயற்சியால் உருவான ‘முதலீட்டில் பணியாளர் பங்கு திட்டம்’ (Employees Stock Option) என்பது இன்று இன்போஸிஸ் மட்டுமன்றி இந்தியாவில் மிகப் பெரிய பங்குச் சந்தை திட்டமாக உள்ளது. 5 மில்லியன் டாலர் (1 மில்லியன்  =10 லட்சம்; ஒரு டாலர்= சுமார் 77 ரூபாய்) வருமானம் கொண்ட இன்போசிஸ் நிறுவனத்தை 6.5 பில்லியன் டாலர் (1 பில்லியன்= 100 கோடி) வருமானம் கொண்டதாக மாற்றிய நிலையில், 2011 மோகன்தாஸ் பை இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இயக்குனர் பதவி முதல் எல்லா பதவிகளையும் விட்டு விலகியபோது பலரும் அதிர்ச்சி அடைந்தனர். விலகிய பிறகு அவர் தன் நேரத்தில் முப்பது சதவீதத்தை உயர்கல்வித் துறையிலும் முப்பது சதவிகிதம் நேரத்தை தான் ஆலோசகராக, இயக்குனராக உள்ள நிறுவனங்களுக்கும், நாற்பது சதவீத நேரத்தை குடும்பத்திற்காகவும் செலவிட இருப்பதாக அறிவித்தார்.

பிரதமர் மோடியின் ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ திட்டம் புதிய தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் திட்டமாகும். ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் மிகப் பெரிய பிரச்னை நிதி. 2015 இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்வது வெறும் 5 சதவீதமாக இருந்தது. அதே காலகட்டத்தில் சீனாவில் அது 65 சதவீதம். சர்வதேசச் சந்தையில் சீனப் பொருட்கள் குவிவதற்கு இதுவும் ஒரு காரணம். நிதித்துறை வல்லுனரான மோகன்தாஸ் ஸ்டார்ட் அப் முதலீட்டில் முன்னோடி என்றே கூறலாம். ஆரின் கேப்பிட்டல்ஸ், சகா ஃபண்ட், யூனிடஸ் சிட் ஃபண்ட், டெண்டம் கேப்பிட்டல்ஸ், எக்ஸ்ஃபினிடி வென்சர்ஸ் என பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களைத் தொடங்கி அதன்மூலம் ஸ்டார்ட் அப் துறையில் நிதி மட்டுமன்றி எல்லாவிதமான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். சுமார் 325 மில்லியனாக உள்ள இந்த முதலீடுகளை 750 மில்லியனாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக இவர் (2015) கூறியுள்ளார். இத்துறையில் இவரது மகன்களான சித்தார்த் ஆகியோர் இவரது ஆலோசனைப்படி செயல்பட்டு வருகின்றனர்.

சொத்து என்பது இறைவன் கொடுத்தது. அதை அப்படியே தன் பிள்ளைகளிடம் கொடுத்துவிட்டு போவதற்காகக் கொடுக்கவில்லை. சொத்தின் வலிமையே அதை பிறருக்குக் கொடுப்பதில் தான் உள்ளது என்று கூறுகிறார் மோகன்தாஸ் பை. இவர் சேர்த்ததை விடவும் அதிகம் இவர் கொடுத்தது.

 2000-ஆம் ஆண்டில் இஸ்கான் உடன் இணைந்து இவர் செயல்படுத்தியது ‘அக்ஷய பாத்திரம்’ திட்டம். இத்திட்டத்தின் மூலம் கர்நாடகத்தில் பள்ளி மாணவர்களுக்கு மதிய சத்துணவு வழங்கப்படுகிறது. இவர் தனது பணத்தை மட்டுமன்றி தன் செல்வாக்கைப் பயன்படுத்தி பல அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்தினார். இன்று உலகிலேயே மிகப் பெரிய சத்துணவு வழங்கும் திட்டம் ‘அட்சயபாத்திரம்’. பல லட்சம் குழந்தைகள் இதனால் பயனடைகின்றனர். சுமார் பத்திற்கும் மேற்பட்ட மாநிலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப் படுகிறது. இத்திட்டம் செயல்படும் பள்ளிகளில் கல்வி இடைநிறுத்தம் பத்து சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

பொதுவாழ்வில் ஈடுபாடு கொண்ட மோகன்தாஸ் பை, பெங்களூர் பொலிடிகல் ஆக்சன் கமிட்டி என்ற அமைப்பை ஆரம்பித்தார். மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அதன் நோக்கம். தேர்தலின்போது நல்ல வேட்பாளர்களை மக்களுக்கு அடையாளம் காட்டுவது இதன் செயல்பாடு.

மணிபால் குளோபல் எஜுகேஷன் சர்வீஸஸின் சேர்மனாக இருக்கும் மோகன்தாஸ் பை மணிபால் எஜுகேஷன் அண்ட் மெடிகல் குருப்-பின் ஆலோசகராகவும் உள்ளார். புவனேஸ்வர், ஹைதராபாத் ஐஐடியில் நிர்வாகக் குழுவிலும் இவர் பணியாற்றி உள்ளார். கர்நாடக அரசு இவரது சமூகப் பணிகளைப் பாராட்டி 2004-ஆம் ஆண்டு கர்நாடக ராஷ்ட்ரோதய சேவா விருதை அளித்து உள்ளது.

தேசிய சிந்தனை கொண்ட மோகன்தாஸ் பை, கேட்வே அவுஸ் மும்பை என்ற சிந்தனையாளர் அமைப்பை ஏற்படுத்தியவர். இதன்மூலம் வெளியுறவுக் கொள்கை தொடர்பான சிந்தனையாளர் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. வெளியுறவுக் கொள்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமன்றி, இந்திய அரசுக்கு உரிய ஆலோசனைகளையும் வெளியுறவுக் கொள்கையில் தாக்கத்தை இது ஏற்படுத்தி வருகிறது. கல்வி மற்றும் நிர்வாக துறையில் இவரது பங்களிப்பைப் பாராட்டி 2015-இல் இந்திய அரசு இவருக்கு பத்ம ஸ்ரீ விருது அளித்து கௌரவித்துள்ளது.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s