-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
7. சிந்தையெல்லாம் சிவமயம்
.
மனஸ்தே பாதாப்ஜே நிவஸ்து வச:ஸ்தோத்ர-பணிதௌ
கரௌசாப்யர்ச்சாயாம் ச்ருதரபி கதாகர்ணன-விதௌ/
தவ த்யானே புத்திர்-நயனயுகளம் மூர்த்தி-விபவே
பரக்ரந்தான் கைர்வா பரமசி’வ ஜானே பரமத://
.
மனத்தில் நின்திருவடி வாக்கில் நின்புகழ்
கரங்களால் நின்பூசை செவிகளுக்கு நின்கதை
புத்தியில் நின்நினைப்பு பார்வைக்கு நின்திருவுரு
பதிந்தபின் பற்றுவதேன் பிறகருத்து பரமசிவனே.
.
தியானம் என்றால் ஆழ்ந்த நினைப்பு, உறுதியான நினைப்பு என்று பொருள். மனத்தையும் ஐம்புலன்களையும் அடக்குவதால் தியானம் கைகூடுவதில்லை. அடக்க நினைத்தால் மனம் அடங்காமல் திமிருகிறது. ஆனால், அதன் நினைப்பை ஓரிடத்தில் குவிக்கும்போது வேறு எங்கும் சிதறாமல் ஒன்றிவிடுகிறது. ஆகையால் சிவபெருமானின் நினைப்பாலேயே சிவபெருமானின் அருளை நாம் சிக்கெனப் பிடித்துவிடலாம். ஆக, அவன் அருளால் அவன் தாள் வணங்குமாறு பக்தனைப் பணிக்க, சிவபெருமானிடம் “உன் நினைப்பே என்னைக் கடைத்தேற்றும்” என்கிறார் ஆதிசங்கரர்.
மனத்தில் சிவனின் திருவடித் தாமரையைப் பற்றிக்கொண்டு, சொற்களில் அவனது புகழையே பாடிப் பரவிக்கொண்டு, கைகளால் சிவனது லிங்கத் திருமேனிக்கு பூஜைகளைச் செய்துகொண்டு, செவிகளால் அவனது பெருமையைக் கூறும் கதைகளையே கேட்டுக்கொண்டு, புத்தியிலும் சிவனது நினைப்பையே பதித்துக்கொண்டு, பார்க்கும் இடத்தில் எல்லாம் அவனது உருவத்தையே பார்த்துக்கொண்டு இருந்தால் எனக்கு வேறு நினைப்பு எவ்வாறு பற்றும் என்கிறார் ஆதிசங்கரர்.
அனைத்தும் அவன் செயல் என்பதை அறிந்துகொண்டு, அனைத்துச் செயல்களையும் அவன்பாலே செய்துவிட்டால் பாவ – புண்ணியம் எவ்வாறு நம்மைப் பற்ற முடியும்? நினைப்புதான் நம்மை உயர்த்துகிறது. நினைப்புதான் நம்மைத் தாழ்த்துகிறது. அந்த நினைப்பேயே இறைமயம் ஆக்கிவிட்டால், உலகியல் செயல்களுக்கு நாம் இரையாக மாட்டோம்.
(அலைகள் தொடரும்)
$$$