-மகாகவி பாரதி

பக்திப் பாடல்கள்
65. ஆறு துணை
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – பரா சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி – ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.
1. கணபதி ராயன் – அவனிரு
காலைப் பிடித் திடுவோம்;
குண முயர்ந் திடவே – விடுதலை
கூடி மகிழ்ந் திடவே.
(ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
2. சொல்லுக் கடங்காவே – பரா சக்தி
சூரத் தனங்க ளெல்லாம்;
வல்லமை தந்திடுவாள் – பரா சக்தி
வாழி யென்றே துதிப்போம்.
(ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
3. வெற்றி வடிவேலன் – அவனுடை
வீரத்தினைப் புகழ்வோம்,
சுற்றி நில்லாதே போ! – பகையே!
துள்ளி வருகுது வேல்.
(ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
4. தாமரைப் பூவினிலே – சுருதியைத்
தனியிருந் துரைப்பாள்
பூமணித் தாளினையே கண்ணி லொற்றிப்
புண்ணிய மெய்திடுவோம்.
(ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
5. பாம்புத் தலைமேலே – நடஞ் செயும்
பாதத்தினைப் புகழ்வோம்;
மாம்பழ வாயினிலே – குழலிசை
வண்மை புகழ்ந்திடு வோம்.
(ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
6. செல்வத் திருமகளைத் – திடங்கொண்டு
சிந்தனை செய்திடுவோம்;
செல்வ மெல்லாந் தருவாள் – நம தொளி
திக்க னைத்தும் பரவும் ஓம் சக்தி.
(ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
$$$