-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
6. வீண்வாதம் வேண்டாம்
.
கடோ வா ம்ருத்-பிண்டோப்யணுரபி ச தூமோsக்னி-ரசல:
படோ வா தந்துர்வா பரிஹரதி கிம் கோரச’மனம்/
வ்ருதா கண்டக்ஷோபம் வஹஸி தரஸா தர்க்கவசஸா
பதாம்போஜம் ச’ம்போர்-பஜ பரமஸௌக்யம் வ்ரஜஸுதி://
.
குடம்மண் அணுக்கூட்டம் புகைநெருப்பு புடவைநூல்
மடமையாம் வாதங்கள் மாய்ப்போனைத் தள்ளிடுமோ?
தொண்டை வறட்சி வேண்டாமே நல்லோனே
கண்டன் பதமலர்துதி களிபேரின்பம் பெறவே.
.
தர்க்கவாதத்திற்குப் புகழ்பெற்ற ஸ்ரீ ஆதிசங்கரர், பக்திக்கு முன்பு எந்த வாதமும் எடுபடாது, சிவபக்தி ஒன்றே போதும் என்று இங்கே கூறுகிறார். ஞானம் இறைவனோடு ஐக்கியத்தை ஏற்படுத்தினாலும், அது முழுமையடையும் வரையில், தான் என்ற நினைப்பு கூடவே இருக்கும். ஆனால், கனிந்த பக்தியில் தன்னைக் கரைத்துக்கொண்டு இறைவனே எல்லாம் என்பதால், தான் என்ற அகம்பாவம் அடிப்படையிலேயே காணாமல் போய்விடுகிறது.
மண்ணால் ஆனது குடம் என்பதால், குடம் வேறு மண் வேறு என்று கூற முடியாது என்பது ஒருவகை வாதம். உலகத்தில் உள்ள உயிரினங்கள் உட்பட அனைத்துமே அணுக்கூட்டங்களால் ஆனவை என்பது வைசேஷிக தத்துவ வாதம். புகை இருந்தால் நெருப்புக்கு அங்கே இடமுண்டு என்பதை அறியலாம் என்பது ஊகம் எனப்படும் தர்க்க வாதம். இதேபோல் புடவையும் நூலும் வேறு வேறல்ல ஒன்றேதான் என்பது ஒருவகை வாதம்.
இதுபோன்ற வாதங்களால் தொண்டை வறட்சிதான் ஏற்படும் என்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். இந்த வாதங்கள், பிறவிச் சுழலில் இருந்து தப்பிக்க உதவுமா? என்றும் வினவுகிறார். ஆகையால், பூர்வ ஜென்மங்களிலோ அல்லது இந்த ஜென்மத்திலேயோ செய்த நற்செயல்களால், நல்ல புத்தி படைத்திருப்போனே, நீலகண்டனாகிய சிவபெருமானின் திருவடித்தாமரைகளைப் பற்றிக்கொண்டு துதித்திடு, உலகப் பிணிகளில் இருந்து விடுதலை அளிக்கும் பேரின்பம் பெற்று உயர்ந்திடு என்று அவரே விடையைக் கூறி நம்மை ஆற்றுப்படுத்துகிறார்.
(அலைகள் தொடரும்)
$$$