-மகாகவி பாரதி

மகாகவி பாரதியின் பக்திப் பாடல்களில் 64வது கவிதை, வித்தியாசமானது. பெண்மையை கலைமகளாகவும் அலைமகளாகவும் மலைமகளாகவும் புனைந்து அவள் மீது மையல் கொண்ட காதலனாக இப்பாடலை எழுதி இருக்கிறார் பாரதி. மூன்றையும் வெவ்வேறு ராகங்களில், ஒரே தாள கதியில் படும் வகையில், பாரதியே மெட்டு அமைத்திருக்கிறார்…
பக்திப் பாடல்கள்
64. மூன்று காதல்
.
முதலாவது சரஸ்வதி காதல்
ராகம் – ஸரஸ்வதி மனோஹரி; தாளம் – திஸ்ர ஏகம்
பிள்ளைப் பிராயத்திலே – அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட் டேனங்கு
பள்ளிப் படிப்பினிலே – மதி
பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட
வெள்ளை மலரணைமேல் – அவள்
வீணையுங் கையும் விரிந்த முகமலர்
விள்ளும் பொருளமுதம் – கண்டேன்
வெள்ளை மனது பறிகொடுத் தேனம்மா! 1
ஆடிவரு கையிலே – அவள்
அங்கொரு வீதி முனையில் நிற்பாள், கையில்
ஏடு தரித்திருப்பாள் – அதில்
இங்கித மாகப் பதம்படிப் பாள், அதை
நாடி யருகணைந்தால் – பல
ஞானங்கள் சொல்லி இனிமை செய்வாள், “இன்று
கூடிமகிழ்வ” மென்றால் – விழிக்
கோணத்தி லேநகை காட்டிச் செல்வாளம்மா! 2
ஆற்றங் கரைதனிலே – தனி
யானதோர் மண்டப மீதினிலே, தென்றற்
காற்றை நுகர்ந்திருந்தேன் – அங்கு
கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள், அதை
ஏற்று மனமகிழ்ந்தே – “அடி
என்னோ டிணங்கி மணம்புரி வாய்” என்று
போற்றிய போதினிலே – இளம்
புன்னகை பூத்து மறைந்துவிட்டாளம்மா! 3
சித்தந் தளர்ந்ததுண்டோ? – கலைத்
தேவியின் மீது விருப்பம் வளர்ந்தொரு
பித்துப் பிடித்ததுபோல் – பகற்
பேச்சும் இரவிற் கனவும் அவளிடை
வைத்த நினைவை யல்லால் – பிற
வாஞ்சை யுண்டோ? வய தங்ஙன மேயிரு
பத்திரண் டாமளவும் – வெள்ளைப்
பண்மகள் காதலைப் பற்றிநின் றேனம்மா! 4
இரண்டாவது – லக்ஷ்மி காதல்
ராகம் – ஸ்ரீராகம்; தாளம் – திஸ்ர ஏகம்
இந்த நிலையினிலே – அங்கொர்
இன்பப் பொழிலி னிடையினில் வேறொரு
சுந்தரி வந்துநின்றாள் – அவள்
சோதி முகத்தின் அழகினைக் கண்டென்றன்
சிந்தை திறைகொடுத்தேன் – அவள்
செந்திரு வென்று பெயர்சொல்லி னாள், மற்றும்
அந்தத் தின முதலா – நெஞ்சம்
ஆரத் தழுவிட வேண்டுகின் றேனம்மா! 5
புன்னகை செய்திடுவாள் – அற்றைப்
போது முழுதும் மகிழ்ந்திருப்பேன், சற்றென்
முன்னின்று பார்த்திடுவாள் – அந்த
மோகத்தி லேதலை சுற்றிடுங் காண், பின்னர்
என்ன பிழைகள் கண்டோ – அவள்
என்னைப் புறக்கணித் தேகிடுவாள், அங்கு
சின்னமும் பின்னமுமா – மனஞ்
சிந்தியுளமிக நொந்திடுவேனம்மா! 6
காட்டு வழிகளிலே – மலைக்
காட்சியிலே புனல் வீழ்ச்சி யிலே, பல
நாட்டுப் புறங்களிலே – நகர்
நண்ணு சிலசுடர் மாடத்தி லே, சில
வேட்டுவர் சார்பினிலே – சில
வீர ரிடத்திலும், வேந்த ரிடத்திலும்,
மீட்டு மவள் வருவாள் – கண்ட
விந்தை யிலேயின்ப மேற்கொண்டு போமம்மா! 7
மூன்றாவது – காளி காதல்
ராகம் – புன்னாகவராளி; தாளம் – திஸ்ர ஏகம்
பின்னொர் இராவினிலே – கரும்
பெண்மை யழகொன்று வந்தது கண்முன்பு,
கன்னி வடிவமென்றே – களி
கண்டு சற்றேயரு கிற்சென்று பார்க்கையில்
அன்னை வடிவமடா! – இவள்
ஆதிபராசக்தி தேவி யடா ! – இவள்
இன்னருள் வேண்டுமடா! – பின்னர்
யாவு முலகில் வசப்பட்டுப் போமடா! 8
செல்வங்கள் பொங்கிவரும்; – நல்ல
தெள்ளறி வெய்தி நலம்பல சார்ந்திடும்;
அல்லும் பகலுமிங்கே – இவை
அத்தனை கோடிப் பொருளினுள்ளே நின்று
வில்லை யசைப்பவளை – இந்த
வேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியைத்
தொல்லை தவிர்ப்பவளை – நித்தம்
தோத்திரம் பாடித் தொழுதிடு வோமடா! 9
$$$