-மகாத்மா காந்தி

முதல் பாகம்
11. இங்கிலாந்து போக ஆயத்தம்
1887-ல் நான் மெட்ரிகுலேஷன் பரீட்சையில் தேறினேன். அப்பொழுது அகமதாபாத், பம்பாய் ஆகிய இரு இடங்களில் அப்பரீட்சை நடப்பது வழக்கம். நாட்டின் பொதுவான வறுமை நிலை காரணமாக இயற்கையாகவே சமீபத்தில் இருக்கும், அதிகச் செலவில்லாத இடத்திற்கே கத்தியவார் மாணவர்கள் சென்றனர். என் குடும்பத்தின் வறுமையினால் நானும் அவ்விதமே செய்ய வேண்டியதாயிற்று. ராஜ்கோட்டிலிருந்து அகமதாபாத்துக்கு முதன்முதலாக, அதிலும் துணையின்றி, நான் பிரயாணம் செய்தது அப்பொழுதுதான்.
மெட்ரிகுலேஷன் பரீட்சையில் தேறிய பின் நான் கல்லூரியில் சேர்ந்து தொடர்ந்து படித்து வர வேண்டும் என்று வீட்டிலிருந்த பெரியவர்கள் விரும்பினர். பவநகரில் ஒரு கல்லூரி இருந்தது, பம்பாயிலும் இருந்தது. பவநகரில் படித்தால் செலவு அதிகமாகாதாகையால் அங்கே போய்ச் சாமளதாஸ் கல்லூரியில் சேருவதென முடிவு செய்தேன். அவ்வாறே சேர்ந்தும் விட்டேன். ஆனால், அங்கே எனக்குத் திக்குத் திசை புரியவில்லை. எல்லாமே எனக்குக் கஷ்டமாக இருந்தது. நான் சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை என்பது இருக்கட்டும், முதலில் பேராசிரியர்களின் பிரசங்கங்களே எனக்குப் புரியவில்லை. இது அப்பேராசிரியர்களின் குற்றமன்று. அக்கல்லூரி பேராசிரியர்கள் முதல்தரமானவர்கள் என்று பெயர் பெற்றவர்கள். ஆனால், நான் தான் கல்லூரிப் படிப்புக்குப் பண்படுத்தப் படாதவனாய் இருந்தேன். ஆறு மாதமானதும் வீடு திரும்பினேன்.
மாவ்ஜி தவே என்ற கல்வியறிவுள்ள பிராமணர், எங்கள் குடும்பத்திற்கு நண்பரும் ஆலோசகருமாக இருந்தார். அவர் புத்திக் கூர்மையுள்ளவர். என் தந்தையார் இறந்த பிறகும் கூட அவர் எங்கள் குடும்பத்துடன் தொடர்பு வைத்திருந்தார். விடுமுறைக்கு நான் ஊர் போயிருந்த போது ஒரு முறை அவர் எங்கள் வீட்டுக்கு வந்தார். என் தாயாருடனும் என் தமையனாருடனும் பேசிக்கொண்டிருந்தபோது என் படிப்பைப் பற்றியும் விசாரித்தார். நான் சாமளதாஸ் கல்லூரியில் படிக்கிறேன் என்பதை அறிந்ததும் அவர் பின்வருமாறு கூறினார்: ‘இப்பொழுது காலம் மாறிப் போய்விட்டது. தக்க படிப்பு இல்லாமல் உங்களில் யாரும் உங்கள் தந்தையின் பதவிக்கு வர முடியாது. இப்பொழுது இப்பையன் இன்னும் தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பதால், அப்பதவிக்கு இவனைத் தயார் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். இவன் பி.ஏ. பட்டத்தைப் பெறுவதற்கு நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளாவது ஆகும். அப்படிப் பெறும் பட்டம், இவனை ஓர் அறுபது ரூபாய்ப் பதவிக்குத்தான் தகுதியுடையவனாக்குமேயின்றித் திவான் பதவிக்கு தகுதியுடையவானாக்காது. என் மகனைப் போல் இவனும் சட்டம் படித்துத் தேர்ச்சி பெறவும் அதிக காலமாகும். அதற்குள் திவான் பதவியைப் பெற முயலும் வக்கீல்கள் ஏராளமாகி விடுவார்கள். இதையெல்லாம்விட இவனை இங்கிலாந்துக்கு அனுப்புவது எவ்வளவோ மேல் என்று எனக்குத் தோன்றுகிறது. பாரிஸ்டராவது மிக எளிது என்று என் மகன் கேவல்ராம் கூறுகிறான். மூன்று வருடங்களில் இவன் திரும்பி விடலாம், செலவும் நான்கு முதல் ஐயாயிரத்திற்கு மேல் ஆகாது. இங்கிலாந்திலிருந்து இப்பொழுதுதான் வந்திருக்கும் அந்தப் பாரிஸ்டரைப் பாருங்கள், எவ்வளவு நாகரிகமாக அவன் வாழ்க்கை நடத்துகிறான்! கேட்டால் போதும், அவனுக்குத் திவான் பதவி கிடைத்துவிடும். இவ்வருடமே மோகன்தாஸை இங்கிலாந்துக்குக் கட்டாயம் நீங்கள் அனுப்பிவிடவேண்டும் என்றே நான் கூறுவேன். இங்கிலாந்தில் கேவல்ராமுக்கு அநேக நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் அவன் அறிமுகக் கடிதங்கள் கொடுப்பான். மோகன்தாஸ் அங்கே சுகமாக இருந்துவிட்டு வரலாம்!’
மாவ்ஜி தவேயை, ஜோஷிஜி என்று சொல்லுவது வழக்கம். அவர் என்னைத் திரும்பிப் பார்த்து, “இங்கே படிப்பதைவிட இங்கிலாந்துக்குப் போகவே நீ விரும்புகிறாயல்லவா?” என்று முழு நம்பிக்கையுடன் கேட்டார். இதைவிட எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது. கஷ்டமான கல்லூரிப் படிப்புடன் நான் தொல்லைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆகையால், இந்த யோசனையை உடனே ஏற்றுக் கொண்டு, “என்னை எவ்வளவு சீக்கிரத்தில் அனுப்புகிறீர்களோ அவ்வளவுக்கு நல்லது” என்றேன். சீக்கிரத்தில் பரீட்சைகளில் தேறிவிடுவது என்பது எளிதான வேலையே அல்ல. எனவே, “என்னை வைத்தியத் தொழில் பயிற்சிக்கு அனுப்பக் கூடாதா?” என்று கேட்டேன்.
என் சகோதரர் உடனே குறுக்கிட்டு இவ்வாறு கூறினார்: “அது தந்தைக்குப் பிடிப்பதேயில்லை. அவர் உன்னை மனத்தில் வைத்துக் கொண்டே, ‘பிணங்களை அறுத்துச் சோதிப்பது வைஷ்ணவர்களாகிய நமக்குக் தகாது’ என்று சொன்னார். நீ வக்கீல் ஆக வேண்டும் என்றுதான் அவர் விரும்பினார்.”
ஜோஷிஜி இடைமறித்துத் கூறியதாவது: “காந்திஜியைப் போல் வைத்தியத் தொழில் கூடாது என்பவனல்ல நான். நமது சாத்திரங்களும் அதற்கு விரோதமாகக் கூறவில்லை. ஆனால், ஒரு வைத்தியப் பட்டம் உன்னைத் திவான் ஆக்கிவிடாது. நீ திவானாக வேண்டும்; சாத்தியமானால் இன்னும் பெரிய பதவியையும் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்படி ஆனால் தான் உன்னுடைய பெரிய குடும்பத்தை நீ காப்பாற்ற முடியும். காலம் வேகமாக மாறிக்கொண்டே போகிறது. நாளுக்கு நாள் கஷ்டமாகிக் கொண்டும் வருகிறது. ஆகையால், மிகப் புத்திசாலித்தனமான காரியம் பாரிஸ்டராகி விடுவதுதான்!” என் தாயாரைப் பார்த்து அவர் கூறியதாவது: “இப்பொழுது நான் புறப்பட வேண்டும். நான் கூறியதை நன்றாக யோசிக்கும்படி கேட்டுக்கொள்ளுகிறேன். நான் திரும்ப இங்கே வரும்போது, இங்கிலாந்துக்குப் புறப்படுவதற்கான ஏற்பாடுகளைக் குறித்து நான் அறியலாம் என்று எதிர்பார்க்கிறேன். ஏதாவது ஒருவகையில் நான் உதவி செய்ய முடியுமென்றால் நிச்சயமாக எனக்குத் தெரிவியுங்கள்.”
ஜோஷிஜி போய்விட்டார். நானும் மனக்கோட்டைகள் கட்டலானேன்.
என் மூத்த சகோதரரின் மனம் மிகப் பரபரப்படைத்து விட்டது. என்னை அனுப்புவதற்கு வேண்டிய பணத்திற்கெல்லாம் என்ன செய்வது? என்னைப் போன்ற ஓர் இளைஞனை நம்பித் தன்னந்தனியாக வெளிநாடுகளுக்கு அனுப்புவது சரியா?
என் தாயாருக்கும் ஒரே மனக்குழப்பம் ஆகிவிட்டது. என்னை விட்டுப் பிரிய அவர் விரும்பவில்லை. ஆகவே, எனக்குச் சாக்குப் போக்குச் சொல்லிவிட முயன்றார். “இப்பொழுது சிறிய தகப்பனார்தான் நம் குடும்பத்தில் பெரியவர். அவரை முதலில் கலந்து ஆலோசிக்க வேண்டும். அவர் ஒப்புக்கொண்டால் இவ்விஷயத்தைப் பற்றி யோசிப்போம்” என்றார்.
என் சகோதரருக்கு இன்னும் ஒரு யோசனை தேன்றிற்று. அவர் என்னிடம் பின்வருமாறு கூறினார்: “போர்பந்தர் சமஸ்தானத்தினிடம் உதவியை எதிர்பார்க்க நமக்கு உரிமை இருக்கிறது. ஸ்ரீ லேலி அதற்கு நிர்வாக அதிகாரி. நம் குடும்பத்தினிடம் அவருக்கு நல்ல மதிப்பு உண்டு. நமது சிறிய தகப்பானாரிடம் அவர் பிரியமாக இருக்கிறார். இங்கிலாந்தில் நீ படிப்பதற்காக உனக்கு ஏதாவது சமஸ்தான உதவி அளிக்க அவர் சிபாரிசு செய்வது சாத்தியமாகலாம்.”
இந்த யோசனை எனக்கும் பிடித்தமானாதாக இருந்தது. போர்பந்தருக்கு உடனே புறப்படுவதற்கு தயாரானேன். அந்தக் காலத்தில் ரயில் கிடையாது. மாட்டு வண்டியில் ஐந்து நாட்கள் போகவேண்டும். நான் பயங்காளி என்பதை முன்னாலேயே கூறியிருக்கிறேன். இங்கிலாந்துக்குப் போக வேண்டும் என்ற ஆசையே என்னை முற்றும் அப்பொழுது ஆட்கொண்டிருந்ததால் அதன் முன்னால் என் பயங்காளித்தனமெல்லாம் ஓடி மறைந்துவிட்டது. தோராஜி வரைக்கும் ஒரு மாட்டு வண்டியை அமர்த்திக் கொண்டேன் போர்பந்தருக்கு ஒரு நாள் முன்னாடியே போய்விட வேண்டும் என்பதற்காக தோராஜியில் ஓர் ஒட்டகத்தை அமர்த்தினேன். ஒட்டகத்தில் நான் சவாரி செய்தது அதுதான் முதல் முறை.
கடைசியாக போர்பந்தர் போய்ச் சேர்ந்தேன். என் சிறிய தகப்பனாரை சாஷ்டாங்கமாய் வணங்கி எல்லாவற்றையும் அவரிடம் சொன்னேன். அதைப்பற்றி அவர் யோசித்துவிட்டுப் பின்வருமாறு கூறினார்: “மத தருமம் கெடாமல் ஒருவர் இங்கிலாந்தில் இருப்பது சாத்தியம் என்பது எனக்கு நிச்சயமில்லை. நான் கேள்விப்பட்டிருப்பவைகளைக் கொண்டு பார்த்தால் எனக்குச் சந்தேகமாகத்தான் இருக்கிறது. இந்தப் பெரிய பாரிஸ்டர்களை நான் பார்க்கும்போது இவர்கள் வாழ்க்கைக்கும் ஐரோப்பியர் வாழ்க்கைக்கும் எந்த வித்தியாசத்தையும் நான் காணவில்லை. இவர்கள் எந்த உணவையும் சாப்பிடுகிறார்கள். இவர்கள் வாயில் சுருட்டு இல்லாமல் இருப்பதே இல்லை. வெட்கமில்லாமல் ஆங்கிலேயரைப் போலவே உடை உடுத்துகிறார்கள். இவையெல்லாம் தம் குடும்ப பாரம்பரியத்திற்குப் பொருந்தாதவை. சீக்கிரத்தில் நான் க்ஷேத்திர யாத்திரைக்குப் புறப்படப் போகிறேன். இன்னும் பல வருடங்களுக்கு நான் உயிரோடிருக்கப் போவதில்லை. மரணத்தின் தறுவாயில் இருக்கும் நான், இங்கிலாந்துக்குப் போகவும், கடல் கடக்கவும் உனக்கு அனுமதி கொடுக்க எப்படித் துணிவேன்? ஆனால், உன் வழியில் குறுக்கிட மாட்டேன். இதற்கு முக்கியமாக வேண்டியது உன் தாயாரின் அனுமதி. அவர் அனுமதி கொடுத்துவிட்டால், சுகமாகப் போய் வா. இதில் நான் குறுக்கிட மாட்டேன் என்று அவருக்குத் தெரிவி. என் ஆசி உனக்கு எப்பொழுதும் இருக்கும்.”
“இதைவிட அதிகமாக எதையும் நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது” என்றேன். “என் தாயாரின் சம்மதத்தைப் பெற முயல்கிறேன். ஸ்ரீ லேலிக்கு என்னைப் பற்றி நீங்கள் சிபாரிசு செய்கிறீர்களா?” என்று கேட்டேன்.
“அதை நான் எப்படிச் செய்ய முடியும்?” என்றார் அவர். “ஆனால் அவர் நல்லவர். உனது உறவு முறையைத் தெரிவித்து, அவரை நீ பார்க்க விரும்புவதாகக் கேள்; நிச்சயமாகப் பார்ப்பார். உனக்கு உதவி செய்யவும் கூடும்” என்றார்.
என் சிறிய தகப்பனார் எனக்கு ஏன் சிபாரிசுக் கடிதம் கொடுக்கவில்லை என்பதைப் பற்றி என்னால் கூற முடியாது. நான் இங்கிலாந்துக்குப் போவது மத விரோதமான காரியம் என்ற கருத்து அவருக்கு இருந்ததால் நான் போவதில் நேரடியாக ஒத்துழைக்க அவர் தயங்கினார் என்று ஏதோ கொஞ்சம் எனக்கு ஞாபகம் இருக்கிறது.
ஸ்ரீ லேலிக்கு எழுதினேன். தமது வீட்டில் வந்து பார்க்கும்படி அவர் அறிவித்தார். மாடிப் படிக்கட்டு ஏறிக்கொண்டிருந்தபோதே அவர் என்னைப் பார்த்தார். “முதலில் நீ பி.ஏ. பாஸ் செய். பிறகு வந்து என்னைப் பார். இப்பொழுது உனக்கு எந்த உதவியும் செய்வதற்கில்லை” என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு வேகமாகப் படியேறிப் போய்விட்டார். அவரைச் சந்திப்பதற்காக எவ்வளவோ விரிவான முன்னேற்பாடுகளை எல்லாம் செய்திருந்தேன். அவரிடம் பேசச் சில வாக்கியங்களைக் கவனமாகக் கற்று வைத்திருந்தேன். தாழ்ந்து தலைவணங்கி, இரு கரங்களாலும் சலாம் போட்டேன். ஆனால், அவையெல்லாம் ஒன்றுக்கும் பயன்படவில்லை.
பிறகு என் மனைவியின் நகைகளைப்பற்றி நினைத்தேன். என் மூத்த அண்ணன் நினைவும் வந்தது. அவரிடம் எனக்கு முழு நம்பிக்கையும் உண்டு. அவர் தாராளமான மனமுடையவர். என்னைத் தம் மகன் போலவே கருதி அன்பு கொண்டிருந்தார்.
போர்பந்தரிலிருந்து ராஜ்கோட்டுக்குத் திரும்பி, அங்கே நடந்ததையெல்லாம் தெரிவித்தேன். ஜோஷிஜியைக் கலந்து ஆலோசித்தேன். அவரோ, அவசியமானால் கடன் வாங்கும் படியும் யோசனை கூறினார். என் மனைவியின் நகைகளை விற்றால் இராண்டாயிரம் அல்லது மூவாயிரம் ரூபாய் கிடைக்கும். அவற்றை விற்றுவிடும் யோசனையையும் கூறினேன். எப்படியும் பணம் தேடிவிடுவதாக என் சகோதரர் வாக்களித்தார்.
என் தாயார் மாத்திரம் இன்னும் என்னை இங்கிலாந்துக்கு அனுப்ப விரும்பாமலேயே இருந்தார். நுட்பமாக எல்லா விவரங்களையும் விசாரித்துக் கொண்டிருந்தார். வாலிபர்கள் இங்கிலாந்துக்குப் போய்க் கெட்டு விடுகிறார்கள் என்று யாரோ ஒருவர் அவருக்குச் சொல்லிவிட்டார். இன்னும் யாரோ ஒருவர், ‘அவர்கள் மாமிசம் சாப்பிட ஆரம்பித்து விடுகிறார்கள்’ என்று சொல்லிவிட்டார். ‘குடிக்காமல் அங்கே அவர்களால் இருக்கவே முடியாது’ என்று இன்னும் ஒருவர் சொல்லியிருந்தார். “இவைகளுக்கெல்லாம் நீ என்ன சொல்லுகிறாய்?” என்று என் தாயார் என்னைக் கேட்டார். நான், “என்னை நீங்கள் நம்ப மாட்டீர்களா? உங்களிடம் பொய் சொல்ல மாட்டேன். ‘அவைகளில் எதையும் தீண்டுவதில்லை’ என்று உங்களுக்குச் சத்தியம் செய்து கொடுக்கிறேன். அங்கே அப்படிப்பட்ட அபாயம் ஏதாவது இருந்தால் ஜோஷிஜி என்னைப் போக விடுவாரா?” என்றேன்.
“உன்னை நானே நம்பலாம். ஆனால் நீ தொலைவான நாட்டில் இருக்கும்போது எப்படி நம்புவது? எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. என்ன செய்வது என்பதே புரியவில்லை. பேச்சர்ஜி சுவாமியைக் கேட்கிறேன்” என்றார், அன்னை.
பேச்சர்ஜி சுவாமி முன்பு மோத் வணிகர். இப்பொழுது ஜைன சந்நியாசியாகி விட்டார். ஜோஷிஜியைப் போல் இவரும் குடும்பத்திற்கு வேண்டிய ஆலோசனைகளைக் கூறி வருவார். அவர் எனக்கு உதவினார். “மூன்று விரதங்களை அவன் அனுசரிப்பதாக அவனிடம் சத்தியம் வாங்கிக் கொள்ளுகிறேன். பிறகு அவனைப் போகச் செல்லலாம்” என்றார். அவர் என்னிடம் அப்படியே பிரமாணம் வாங்கினார். ‘மதுபானம், பெண், மாமிசம் ஆகியவைகளைத் தொடுவதில்லை’ என்று சத்தியம் செய்து கொடுத்தேன். உடனே என் அன்னை அனுமதி தந்தார்.
என்னைக் கௌரவிப்பதற்காக உயர்நிலைப் பள்ளியில் எனக்கு ஒரு பிரிவு உபசாரம் நடத்தினர். ராஜ்கோட்டைச் சேர்ந்த ஒரு வாலிபன், இங்கிலாந்துக்குப் போகிறான் என்றால் அது சாமானிய விசயமன்று! நன்றி தெரிவிப்பதற்கென்று சில வார்த்தைகள் எழுதி வைத்திருந்தேன். அதைப் படிக்க நான் எழுந்தபோது எனக்கு எவ்விதம் தலை சுற்றியது. உடம்பெல்லாம் எவ்விதம் நடுங்கியது என்பது இன்னும் நினைவிருக்கிறது.
எங்கள் வீட்டுப் பெரியவர்களின் ஆசிர்வாதத்தைப் பெற்று நான் பம்பாய்க்குப் புறப்பட்டேன். ராஜ்கோட்டிலிருந்து நான் பம்பாய்க்குச் சென்றது இதுவே முதல் முறை. என் சகோதரரும் என்னுடன் வந்தார். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுவதற்குள் எத்தனையோ விபத்துக்களும், சமாளித்தாக வேண்டிய கஷ்டங்களும் பம்பாயில் காத்திருந்தன.
$$$
12. சாதிக் கட்டுப்பாடு
பிறந்து சில மாதங்களே ஆன குழந்தையுடன் என் மனைவியை விட்டுவிட்டு, என் தாயாரின் அனுமதியையும் ஆசிர்வாதங்களையும் பெற்றுக்கொண்டு நான் குதூகலமாகப் பம்பாய்க்குப் புறப்பட்டேன். அங்கே போய்ச் சேர்ந்ததும், ஜூன், ஜூலை மாதங்களில் இந்து மகாசமுத்திரத்தில் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும் என்றும், நான் இப்பொழுதுதான் முதல் முறையாகக் கப்பல் பிரயாணம் செய்வதால் நவம்பர் மாதம் வரையில் நான் கப்பலேற அனுமதிக்கக் கூடாது என்றும் நண்பர்கள் என் சகோதரரிடம் கூறினர். இப்பொழுதுதான் புயல் காற்றினால் ஒரு கப்பல் மூழ்கி விட்டது என்றும் யாரோ சொன்னார்கள். இதனால் என் சகோதரருக்கு மனக்கலக்கம் உண்டாயிற்று. உடனே கப்பல் பிரயாணம் செய்ய என்னை அனுமதிக்கும் அபாயத்திற்கு உடன்பட அவர் மறுத்து விட்டார். என்னைப் பம்பாயில் ஒரு நண்பரிடம் விட்டுவிட்டுத் தம் வேலைகளைக் கவனிக்க அவர் ராஜ்கோட்டுக்குத் திரும்பினார். என் பிரயாணச் செலவுக்கென்று வைத்திருந்த பணத்தை ஒரு மைத்துனரிடம் கொடுத்து, வைத்திருக்கச் சொல்லிவிட்டு, எனக்குத் தேவையான உதவிகளையெல்லாம் செய்யுமாறு, சில நண்பர்களிடம் சொல்லிப் போனார்.
பம்பாயில் நாளை எண்ணிக்கொண்டே காலம் கழித்தேன். இங்கிலாந்துக்குப் போகப்போவதைப் பற்றி ஓயாமல் கனவு கண்டு கொண்டிருந்தேன்.
இதற்கு மத்தியில் நான் வெளிநாட்டுக்குப் போகப் போவதைக் குறித்து என் சாதியினர் பரபரப்படைந்தார்கள். மோத் வணிக சாதியைச் சேர்ந்த யாரும் இதுவரை இங்கிலாந்துக்குப் போனதில்லை; நான் போகத் துணிந்தால், எனக்குத் தக்க சிட்சை விதிக்க வேண்டும்! சாதியினரின் பொதுக்கூட்டம் ஒன்றைக் கூட்டினர். அதன் முன்னால் ஆஜராகுமாறு எனக்குக் கட்டளை அனுப்பினார். நானும் போனேன். திடீரென்று எனக்கு எப்படி அவ்வளவு தைரியம் வந்தது என்பது எனக்கே தெரியவில்லை. எதற்கும் அஞ்சாமல், கொஞ்சமும் தயக்கமின்றிக் கூட்டத்திற்கு முன்னால் போனேன். சாதி நாட்டாண்மைக்காரரான சேத் எனக்குத் தூர பந்து. என் தந்தையாருக்கு மிகவும் வேண்டியவராயிருந்தார். என்னைப் பார்த்து அவர் பின்வருமாறு கூறினார்:
“இங்கிலாந்துக்குப் போவதென்று நீ ஏற்பாடு செய்திருப்பது சரியல்ல என்பது நம் சாதியினரின் அபிப்பிராயம். வெளிநாடுகளுக்குக் கப்பல் பிரயாணம் செய்வதை நம் மதம் அனுமதிக்கவில்லை. நம் மத தருமங்களைக் கைவிடாமல் அங்கே வசிப்பதே சாத்தியமில்லை என்று நாங்கள் கேள்விப் பட்டிருக்கிறோம். ஐரோப்பியருடன் சேர்ந்து சாப்பிடவும் குடிக்கவும் வேண்டிவரும்!”
இதற்கு நான் சொன்ன பதிலாவது: “இங்கிலாந்துக்குச் செல்வது நம் மதத்திற்கு விரோதம் என்று நான் கருதவில்லை. மேற்கொண்டு படிப்பதற்காகவேதான் நான் அங்கே போக உத்தேசித்திருக்கிறேன். நீங்கள் எவற்றைக் குறித்து அதிகமாகப் பயப்படுகிறீர்களோ அந்த மூன்றையும் தீண்டுவதில்லை என்று என் தாயார் முன்னிலையில் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன். அந்தப் பிரதிக்ஞை என்னைப் பாதுகாக்கும் என்று நான் நிச்சயமாயிருக்கிறேன்.”
இதற்குச் சேத், “அங்கே நமது மதாசாரங்களைக் கடைப்பிடித்து நடப்பது சாத்தியமே அல்ல என்று நாங்கள் சொல்லுகிறோம். எனக்கும் உன் தந்தைக்கும் இருந்த உறவு, உனக்குத் தெரியும். ஆகவே, நான் கூறும் புத்திமதியை நீ கேட்க வேண்டும்” என்றார்.
“அந்த உறவுகளையெல்லாம் நான் அறிவேன். நீங்கள் எனக்குப் பிதாவைப் போன்றவர். ஆனால் இதில் நான் வேறு எதுவும் செய்வதற்கில்லை. இங்கிலாந்துக்குச் செல்வதென்று தீர்மானித்து விட்டதை நான் மாற்றுவதற்கில்லை. என் தந்தையின் நண்பரும் ஆலோசகரமான கற்றரிந்த ஒரு பிராமணர், நான் இங்கிலாந்து செல்வதில் எந்தவித ஆட்சேபமும் இருப்பதாகச் சொல்லவில்லை. என் தாயாரும், சகோதரரும் எனக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள்” என்றேன்.
“என்றாலும், சாதிக்கூட்டத்தின் கட்டளையை நீ மீறி நடக்கப் போகிறாயா?”
“எனக்கு வேறு வழியில்லை. இவ்விஷயத்தில் சாதி தலையிடக் கூடாது என்றே நான் நினைக்கிறேன்.”
இதைக் கேட்டதும் சேத்துக்குக் கோபம் வந்துவிட்டது. கடுமையாகப் பேசினார். அதற்கெல்லாம் அசையாமல் உட்கார்ந்திருந்தேன். எனவே, சேத் வருமாறு உத்தரவு பிறப்பித்தார். “இன்று முதல் இப்பையனை சாதிப் பிரஷ்டம் செய்யப்பட்டவனாக நடத்த வேண்டும். இவனுக்கு யார் உதவி செய்தாலும், இவனை வழியனுப்ப யார் துறைமுகத்திற்குச் சென்றாலும். அவர் ஒரு ரூபாய் நான்கணா அபராதம் விதிக்கப் படுவார்!”
இந்த உத்தரவைக் கேட்டு நான் கலங்கிடவில்லை. சேத்திடம் விடைபெற்றுக் கொண்டு திரும்பினேன். இதை என் சகோதரர் எப்படி ஏற்பாரோ என்றே பயந்திருந்தேன். அதிர்ஷ்டவசமாக, அவர் உறுதியுடன் இருந்தார். சேத்தின் கட்டளை எதுவானாலும் நான் போவதைத் தாம் அனுமதிப்பதாகக் கடிதம் எழுதி எனக்கு உறுதி கூறினார்.
என்றாலும், கப்பல் ஏறிவிட வேண்டும் என்ற என் ஆர்வத்தை இச்சம்பவம் அதிகமாக்கி விட்டது. என் சகோதரரைக் கட்டாயப்படுத்தி அவர் மனத்தை மாற்றிவிடுவதில் அவர்கள் வெற்றி பெற்று விட்டால் என்னவாகும்? எதிர்பாராதது ஏதோ நிகழ்ந்து விடுகிறதென்று வைத்துக் கொள்ளுவோம். அப்பொழுது? எனக்குள்ள சங்கடத்தைக் குறித்து இப்படியெல்லாம் எண்ணி நான் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தபோது, பாரிஸ்டர் ஆவதற்காக ஜுனாகத் வக்கீல் ஒருவர், செப்டம்பர் 4-ஆம் தேதி புறப்படும் கப்பலில் இங்கிலாந்துக்குப் போகிறார் என்று கேள்வியுற்றேன். என்னைக் கவனித்துக் கொள்ளுமாறு என் சகோதரர் சொல்லிப் போயிருந்த நண்பர்களைச் சந்தித்து, விஷயத்தைக் கூறினேன். அத்தகைய துணையுடன் போவதற்கு வாய்த்த சந்தர்ப்பத்தை இழந்துவிடக் கூடாது என்று அவர்களும் ஒப்புக் கொண்டார்கள். காலம் தாழ்த்துவதற்கே இல்லை. அனுமதியளிக்குமாறு என் சகோதரருக்குத் தந்தி கொடுத்தேன். அவரும் அனுமதித்தார். பணத்தைக் கொடுக்கும்படி என் மைத்துனனைக் கேட்டேன். ஆனால், அவரோ, சேத்தின் உத்தரவைக் குறிப்பிட்டு, தாம் சாதிப் பிரஷ்டன் ஆக முடியாது என்று சொல்லிவிட்டார். பிறகு நான் குடும்ப நண்பர் ஒருவரை நாடினேன். கப்பல் கட்டணத்துக்கும் சில்லரைச் செலவுக்கும் வேண்டிய அளவுக்கு எனக்குப் பண உதவி செய்யுமாறும் அக்கடனை என் சகோதரரிடமிருந்து வாங்கிக் கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டேன். இந்த நண்பர் என் கோரிக்கைக்கு ஒப்புக் கொண்டதோடு என்னை உற்காசப்படுத்தியும் அனுப்பினார். அவரிடம் மிக்க நன்றியுடையவனானேன். அந்தப் பணத்தில் ஒரு பகுதியைக் கொண்டு உடனே கப்பல் டிக்கெட் வாங்கினேன். பின்பு பிரயாணத்திற்கு எனக்கு வேண்டியவைகளைத் தயாரிக்கலானேன். இவ்விஷயத்தில் அனுபவம் வாய்ந்த மற்றொரு நண்பர் இருந்தார். உடைகளையும், மற்றவைகளையும் அவர் தயாரித்துக் கொடுத்தார். உடைகளில் சில எனக்குப் பிடித்த மாயிருந்தன, சில எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. கழுத்தில் டை கட்டிக்கொள்ளுவதில் பின்னால் நான் பெருமகிழ்ச்சி அடைந்ததுண்டு. ஆனால், அப்பொழுது அது எனக்கு வெறுப்பாயிருந்தது. குட்டைச் சட்டை அணிவது, வெட்கத்தை விட்டும் செய்யும் காரியம் என்று கருதினேன். இங்கிலாந்துக்குப் போகவேண்டும் என்ற ஆர்வமே என்னிடம் மேலோங்கி நின்றதால், அதன் எதிரே இந்த வெறுப்பெல்லாம் மேலோங்கவில்லை. கப்பலில் ஜுனாகத் வக்கீல் ஸ்ரீ திரியம்பக் ராய் மஜ்முதார் செல்ல இருந்த அதே அறையிலேயே நண்பர்கள் எனக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். என்னைக் கவனித்துக் கொள்ளுமாறும் அவரிடம் கூறினர். அவர் அனுபவமுள்ளவர், நல்ல வயது வந்தவர், உலகமறிந்தவர், நானோ, உலக அனுபவமே இல்லாத பதினெட்டு வயதுச் சிறுவன். என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்று ஸ்ரீ மஜ்முதார் என் நண்பர்களுக்குக் கூறினார்.
கடைசியாகச் செப்டம்பர், 4-ஆம் தேதி பம்பாயிலிருந்து நான் கப்பலில் புறப்பட்டேன்.
$$$
13. முடிவாக லண்டனில்
கப்பல் பிரயாணத்தில் எனக்கு மயக்கம் எதுவும் வரவே இல்லை. ஆனால், நாளாக ஆக எனக்கு அலுப்புத்தான் அதிகமாக இருந்தது. பிரயாணிகளின் சாப்பாட்டு வசதிக்காரியஸ்தரிடம் பேசக்கூட எனக்குக் கூச்சமாக இருந்தது. ஆங்கிலத்தில் பேசி எனக்குப் பழக்கமே இல்லை. நாங்கள் இருந்த இரண்டாம் வகுப்பில் ஸ்ரீ மஜ்முதாரைத் தவிர மற்றெல்லோரும் ஆங்கிலேயர்கள். அவர்களுடன் என்னால் பேச முடியவில்லை. அவர்கள் என்னிடம் வந்து ஏதேனும் பேசினால், அவர்கள் சொல்லுவது என்ன என்பதைப் புரிந்துகொள்ளுவதும் கஷ்டமாக இருந்தது. புரிந்து கொண்டாலும் என்னால் பதில் சொல்ல முடியவில்லை. பேசுவதற்கு முன்னால் ஒவ்வொரு வாக்கியத்தையும் மனத்திற்குள் நான் சொல்லிப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. கத்தியையும் முள்ளையும் கொண்டு எடுத்துச் சாப்பிடவும் எனக்குத் தெரியாது. பரிமாறப் போகும் உணவு வகையைக் குறிப்பிடும் சீட்டில் கண்டவைகளில் மாமிசம் கலவாத பண்டம் எது என்று கேட்டுத் தெரிந்து கொள்ளவும் அப்பொழுது எனக்குத் தைரியமில்லை. ஆகையால், சாப்பாட்டு அறைக்குச் சென்று உட்கார்ந்து நான் சாப்பிடவே இல்லை. என் அறையிலேயே சாப்பிட்டு விடுவேன். நான் சாப்பிட்டதெல்லாம் பெரும்பாலும் நான் உடன்கொண்டு வந்திருந்த மிட்டாயும் பழங்களுமே. ஸ்ரீ மஜ்முதாருக்கு இத்தகைய சங்கடம் எதுவுமே தோன்றவில்லை. அவர் எல்லோருடனும் சகஜமாகப் பழகிக் கொண்டிருந்தார். நாளெல்லாம் நான் அறைக்குள்ளேயே அடைப்பட்டுக் கிடப்பேன். மேல் தளத்தில் அதிகம் பேர் இல்லாதபோதுதான் அங்கே போகத் துணிவேன். ஆனால் ஸ்ரீ மஜ்முதாரோ மேல் தளத்திற்கு அடிக்கடி போய் உலாவுவார். பிரயாணிகளுடன் கூடிப் பழகி, அவர்களுடன் தாராளமாகப் பேசும்படி அவர் எனக்கு அடிக்கடி சொல்லுவார். வக்கீல்களுக்குப் பேச்சுச் சாமர்த்தியம் இருக்க வேண்டும் என்பார். வக்கீல் தொழிலில் தமது அனுபவங்களையும் எடுத்துக் கூறுவார். ஓர் அந்நிய மொழியில் பேசும்போது தவறு ஏற்படுவது சகஜம் என்றும், ஆகையால் அதைப் பொருட்படுத்தாமல் சாத்தியமான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆங்கிலேயத்திலேயே பேசும்படியாகவும் எனக்கு அவர் புத்திமதி கூறினார். ஆனால், அவர் என்ன சொல்லியும் எனக்கு இருந்த கூச்சத்தை மாத்திரம் போக்கடிக்கவே முடியவில்லை.
ஆங்கிலப் பிராணி ஒருவர், என்மீது பிரியம் கொண்டு என்னைப் பேச்சுக்கு இழுத்தார். அவர் என்னை விட மூத்தவர். நான் என்ன சாப்பிட்டேன், நான் யார், நான் எங்கே போகிறேன், நான் இப்படிக் கூச்சப்படுவது ஏன் என்றெல்லாம் அவர் என்னை விசாரித்தார். சாப்பாட்டு அறைக்கு வந்து எல்லோருடனும் சாப்பிடும்படியும் சொன்னார். மாமிசம் சாப்பிடுவதில்லை என்று நான் பிடிவாதமாகக் கூறியதைக் கேட்டுச் சிரித்தார். நாங்கள் செங்கடலை அடைந்ததும் அவர் நட்பும் முறையில் பின்வருமாறு கூறினார்: “அதெல்லாம் இதுவரை மிகவும் சரி. ஆனால், பிஸ்கே குடாக்கடல் போய்ச் சேர்ந்ததும் உம்முடைய தீர்மானத்தையெல்லாம் மாற்றிக் கொண்டுவிட வேண்டியதுதான். இங்கிலாந்தில் குளிர் அதிகமாகையால் மாமிசம் சாப்பிடாமல் அங்கே யாருமே உயிர் வாழ முடியாது.”
“அங்கும் மாமிசம் சாப்பிடாமல் மனிதர் இருக்க முடியும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றேன்.
“அதெல்லாம் வெறும் கதை. இதை நிச்சயமாக நம்பும். புலால் உண்ணாமல் அங்கே இருப்பர் எனக்குத் தெரிந்த வரையில் யாருமே இல்லை. நான் குடிக்கிறேன். ஆனால் உம்மையும் குடிக்குமாறு நான் சொல்லவில்லையல்லவா? மாமிசம் சாப்பிடாமல் அங்கே உயிர் வாழ முடியாதாகையால் நீர் புலால் உண்டே ஆக வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.
“உங்கள் அன்பான புத்திமதிக்கு என் நன்றி. ஆனால், புலாலைத் தீண்டுவதில்லை என்று என் அன்னைக்கு நான் சத்தியம் செய்து கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். ஆகையால் அதைத் தின்னுவது என்பதை நான் நினைப்பதற்கும் இல்லை. அதைத் தின்னாமல் இருப்பது சாத்தியமில்லை என்று கண்டால் நான் இந்தியாவுக்கு திரும்பி விடுவேனேயன்றி அங்கே இருக்க வேண்டும் என்பதற்காக மாமிசம் தின்ன மாட்டேன்” என்றேன்.
பிஸ்கே குடாக்கடலை அடைந்தோம். மாமிசம் திண்பதும் குடிப்பதும் அவசியம் என்ற உணர்ச்சி அப்பொழுதும் எனக்கு ஏற்படவில்லை. மாமிசமே சாப்பிடாமல் இருந்ததற்கு அத்தாட்சிப் பத்திரங்களைச் சேகரித்து வைத்துக் கொள்ளுமாறு சொல்லியிருந்தார்கள். ஆதலால், அத்தகைய அத்தாட்சி ஒன்று எழுதித் தருமாறு அந்த ஆங்கில நண்பரிடம் கேட்டேன். அவரும் மகிழ்ச்சியுடன் கொடுத்தார். அதைக் கொஞ்ச காலம் பத்திரமாக வைத்தும் இருந்தேன். ஆனால் மாமிசம் சாப்பிடுகிறவர்களும் அத்தகைய அத்தாட்சியைப் பெற்றுவிட முடியும் என்பதை நான் பின்னால் கண்டதும், அத்தாட்சி பத்திர விஷயத்தில் எனக்கிருந்த மோகம் போய் விட்டது. என் வார்த்தையில் நம்பிக்கை இல்லையென்றால் இவ்விஷயத்தில் அத்தாட்சிப் பத்திரம் வைத்திருந்துதான் என்ன பயன்?
முடிவாக, சௌத்தாம்டன் துறைமுகம் போய்ச் சேர்ந்தோம். அன்று சனிக்கிழமை என்றே எனக்கு ஞாபகம். கப்பலில் இருந்த போது கறுப்பு உடை தரித்திருந்தேன். என் நண்பர்கள் தயாரித்துக் கொடுத்த வெள்ளைக் கம்பளி உடையைக் கப்பலிருந்து இறங்கும்போது போட்டுக்கொள்ளுவது என்று வைத்திருந்தேன். இறங்கும்போது வெள்ளை உடை அணிந்தால் அழகாயிருக்கும் என்று நினைத்தேன்.
ஆகவே, வெள்ளை கம்பளி ஆடை உடுத்திக் கொண்டு இறங்கினேன். அப்பொழுது செப்டம்பர் மாதக் கடைசி, அத்தகைய உடை உடுத்தியவன் நான் ஒருவனே என்பதைக் கண்டேன். மற்றவர்களெல்லாம் கிரிண்ட்லே கம்பெனியின் ஏஜெண்டிடம் தங்கள் சாமான்களை எல்லாம் ஒப்படைத்து விட்டு இறங்கினார்கள். நானும் அப்படியே செய்ய வேண்டும் என்று என் சாமான்களை – சாவி உட்பட அந்த ஏஜெண்டிடம் ஒப்பித்தேன்.
என்னிடம் நான்கு அறிமுகக் கடிதங்கள் இருந்தன. டாக்டர் பி.ஜே. மேத்தா, ஸ்ரீ தளபத்ராம் சுக்லா, ராஜகுமாரர் ரஞ்சித் சிங் ஜி, தாதாபாய் ஆகிய நால்வருக்குமே அக்கடிதங்கள். லண்டனில் விக்டோரியா ஹோட்டலில் போய்த் தங்கும்படி கப்பலில் யாரோ ஒருவர் சொன்னார். அதன்படி நானும் ஸ்ரீ மஜ்முதாரும் அங்கே போனோம். நான் ஒருவனே வெள்ளையுடையுடன் இருப்பது எனக்குப் பெரிய அவமானமாக இருந்தது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. ஆகையால், என் சாமான்களைக் கிரிண்ட்லே கம்பெனியார் அதற்கு மறுநாளே கொண்டுவந்து சேர்பார்கள் என்று ஹோட்டலில் கூறியதும் எனக்கு ஆத்திரம் வந்துவிட்டது.
டாக்டர் மேத்தாவுக்கு சௌத்தாம்டனிலிருந்து தந்தி கொடுத்திருந்தேன். அன்றிரவு எட்டு மணிக்கு அவர் என்னைப் பார்க்க வந்தார். மிக்க அன்புடன் எனக்கு முகமன் கூறினார். நான் வெள்ளை கம்பளி உடை தரித்திருப்பதைப் பார்த்துச் சிரித்தார். நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது அவருடைய உயரத் தொப்பியை எடுத்தேன். அது அவ்வளவு மிருதுவாக இருக்கிறது என்பதை அறிய அதைத் தடவி பார்த்தேன். தெரியாமல் எதிர்ப்புறமாகத் தடவி விட்டேன். அது ஒரு பிராணியின் மிருதுவான ரோமத்தால் ஆனது. எனவே, நான் தடவியதனால் அந்த ரோமமெல்லாம் கலைந்து விட்டது. நான் செய்ததையெல்லாம் ஒரு மாதிரி கோபத்துடன் டாக்டர் மேத்தா பார்த்துவிட்டு என்னைத் தடுத்தார். ஆனால், விஷயம் நடந்தது நடந்துவிட்டது. இச்சம்பவம் வருங்காலத்திற்கு எனக்கு ஓர் எச்சரிக்கையாயிற்று. ஐரோப்பிய மரியாதைச் சம்பிரதாயங்களில் நான் கற்ற முதல் பாடம் இது. அந்தச் சம்பிரதாய விவரங்களைப் பற்றி டாக்டர் மேத்தா வேடிக்கையாகவே எனக்குப் பாடம் கற்பித்தார். “பிறருடைய சாமான்களைத் தொடாதீர்” என்றார். “ஒருவர் முதன்முதலில் அறிமுகமானதும் இந்தியாவில் கேட்பதுபோல் அவரிடம் கேள்விகளெல்லாம் போடாதேயும்; இரைந்து பேசக் கூடாது; பேசிக் கொண்டிருக்கையில் இந்தியாவில் நாம் கூப்பிடுவதைப் போல் யாரையும், ‘ஸார்’ என்று கூப்பிடக் கூடாது. வேலைக்காரர்களும் கீழிருப்பவர்களும் மாத்திரமே அப்படிக் கூப்பிடுவார்கள்” என்றார். இப்படியெல்லாம் பல விஷயங்களை எனக்கு போதித்தார். ஹோட்டலில் தங்கினால் செலவு அதிகமாகும் என்றும், தனிப்பட்ட ஒரு குடும்பத்தினருடன் தங்கியிருப்பதே நல்லது என்றும் சொன்னார். அதைப் பற்றித் திங்கட்கிழமை யோசிப்பதென்று ஒத்திவைத்தோம்.
ஹோட்டல் வாசம் – எனக்கும் சரி, ஸ்ரீ மஜ்முதாருக்கும் சரி, சங்கடமானதாக இருந்தது. அதோடு, செலவும் அதிகமாயிற்று. மால்டாவிலிருந்து எங்களுடன் கப்பலில் வந்த ஒரு சிந்திக்காரர் ஸ்ரீ மஜ்முதாருக்கு நண்பரானார். லண்டன் அவருக்குப் புதிதல்ல. ஆகவே, நாங்கள் தங்குவதற்கு அறை பார்த்துத் தருவதாக அவர் சொன்னார். நாங்களும் ஒப்புக் கொண்டோம். திங்கட்கிழமை எங்கள் சாமான்கள் வந்த சேர்ந்ததும் ஹோட்டல் கணக்கைத் தீர்த்து விட்டு, சிந்தி நண்பர் எங்களுக்காக வாடகைக்கு அமர்த்திய அறைகளில் இருக்கப் போய்விட்டோம். ஹோட்டலுக்கு நான் 3 பவுன் கொடுக்கவேண்டி வந்தது! அந்தத் தொகையைக் கண்டதும் நான் அதிர்ச்சியடைந்தேன் என்பது எனக்கு நினைவிருக்கிறது. செலவு இவ்வளவு அதிகமாக இருந்ததே ஒழிய, அங்கே நான் எதுவும் சாப்பிடாமல் பட்டினி கிடந்தேன் என்றே சொல்ல வேண்டும்! அங்கே கொடுத்த சாப்பாட்டில் எதுவுமே எனக்குப் பிடிக்கவில்லை. ஓர் உணவு எனக்குப் பிடிக்கவில்லை என்று வேறொன்றைக் கொண்டுவரச் சொன்னால், இரண்டுக்கும் சேர்த்துப் பணம் கொடுக்க வேண்டி வந்தது. இதெல்லாம் இப்படி இருக்க உண்மை என்னவென்றால் பம்பாயிலிருந்து கொண்டு வந்த ஆகாரதிகளைக் கொண்டே நான் காலம் கழிக்கலானேன்.
புது அறையிலும் எனக்கு மன நிம்மதியே இல்லை. வீட்டு நினைவும், நாட்டு நினைவுமே எனக்கு இடைவிடாமல் இருந்து கொண்டிருந்தன. என் அன்னையின் அன்பு அடிக்கடி என் நினைவுக்கு வரும். இரவில் கண்ணீர் பெருகி, கன்னங்களில் அருவியாக வழியும். வீட்டைப் பற்றிய எல்லாவித நினைவுகளும் வந்துவிடவே தூங்கவே முடியவில்லை. என் துயரத்தை யாரிடமாவது சொல்லி ஆறுதல் அடையலாம் என்றால் அதற்கும் வழியில்லை. என் துயரத்தை யாரிடமாவது சொல்லிக்கொள்ள முடிந்திருந்தாலும் அதனாலும் ஒரு பயனும் இராது. ஏனெனில், எனக்கு எதுவும் ஆறுதல் அளிக்க முடியாது என்பதை நான் அறிவேன். மக்கள், அவர்களுடைய பழக்க வழக்கங்கள் அவர்களுடைய வீடுகள் எல்லாமே விசித்திரமாக இருந்தன. ஆங்கில மரியாதை முறைகள் விஷயத்திலோ எனக்கு எதுவுமே தெரியாது. ஆகையால், எங்கே தவறு செய்துவிடுவேனோ என்பதற்காக எப்பொழுதும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டியிருந்தது. சைவ உணவு விரதமோ அதிகப்படியானதோர் அசௌகரியம். நான் சாப்பிடக்கூடிய ஆகார வகைகளும் ருசியற்றவைகளாகவும் சப்பென்றும் இருந்தன. எனவே, இருதலைக்கொள்ளி எறும்பு போல் ஆனேன். இங்கிலாந்து வாசத்தை என்னால் சகிக்க முடியவில்லை ஆனால், இந்தியாவுக்கு திரும்பிவிடுவது என்பதையோ நினைக்கக்கூட முடியாது. வந்தது வந்துவிட்டேன், மூன்று ஆண்டுகள் இருந்து முடித்துவிட வேண்டும் என்று கூறியது, என் அந்தராத்மா.
$$$
14. விரும்பி மேற்கொண்ட விரதம்
விக்டோரியா ஹோட்டலில் என்னைப் பார்க்கலாம் என்று எதிர்பார்த்து திங்கட்கிழமையன்று டாக்டர் மேத்தா அங்கே சென்றார். அங்கிருந்து நாங்கள் போய்விட்டோம் என்பதை அறிந்தார். எங்கள் புதுவிலாசத்தைத் தெரிந்துகொண்டு, எங்கள் அறைகளுக்கு வந்து என்னைப் பார்த்தார். கப்பலில் நான் செய்துவிட்ட தவறினால் என் உடம்பில் படை வந்துவிட்டது. அலம்புவதற்கும் குளிப்பதற்கும் கப்பலில் கடல் நீரையே உபயோகித்து வந்தோம். அந்நீரில் சவுக்காரம் கரையாது. சோப்பு உபயோகிப்பது நாகரிகத்திற்கு அழகு என்று கருதி நான் சோப்புத தேய்த்துக் கடல் நீரில் குளித்தேன். அதன் பலனாக உடம்பு சுத்தமாவதற்குப் பதிலாகப் பிசு பிசுப்பாயிற்று. இதனால் உடம்பில் படை வந்துவிட்டது. அதை டாக்டர் மேத்தாவுக்குக் காட்டினேன். அவர் காடித் திராவகத்தை போடச் சொன்னார். அதைப் போட்டதும் ஒரே எரிச்சலெடுத்து, நான் கதறி அழுதது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. டாக்டர் மேத்தா, என் அறையையும் அதில் நான் சாமான்கள் வைத்திருந்ததையும் பார்த்தார். அதில் தமக்குக் கொஞ்சமும் திருப்தியில்லை என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தார். “இந்த இடம் உதவாது” என்றார். “நாம் இங்கிலாந்துக்கு வருவது படிப்பிற்கு மாத்திரம் அல்ல. முக்கியமாக ஆங்கிலேயரின் வாழ்க்கையிலும், பழக்க வழக்கங்களிலும் அனுபவம் பெறுவதற்காகவும் வருகிறோம். இதற்கு நீர் ஓர் ஆங்கிலக் குடும்பத்துடன் வசிப்பது நல்லது. ஆனால் நீர் அப்படி வசிப்பதற்கு முன்னால் … என்பவருடன் சிறிது காலம் இருந்து பயிற்சி பெற வேண்டும் என்று நினைக்கிறேன். அவரிடம் உம்மை அழைத்துப் போகிறேன்” என்றும் கூறினார்.
அவருடைய யோசனையை நன்றியறிதலுடன் ஏற்றுக் கொண்டு, அந்த நண்பரின் அறைகளுக்கே குடிபோனேன். அவர் முழு அன்புடன் என்னைக் கவனித்துக் கொண்டார். தமது சொந்த சகோதரனைப் போலவே பாவித்து என்னை நடத்தினார். ஆங்கிலேயரின் நடை உடை பாவனைகளையெல்லாம் எனக்கு கற்றுக் கொடுத்தார். ஆங்கில மொழியில் பேசவும் கற்றுக் கொடுத்தார். என்றாலும், என் சாப்பாட்டு விஷயம்தான் சங்கடமான பிரச்சனையாயிற்று. உப்போ, மசாலோ இல்லாமல் வேகவைத்த காய்கறிகள் எனக்கு பிடிக்கவே இல்லை. எனக்காக என்ன சமைப்பதென்று புரியாமல் எங்களுக்கு உணவளித்த வீட்டு அம்மாள் திகைத்தார். காலை ஆகாரத்திற்கு ஓட்ஸ் தானியக் கஞ்சி இருக்கும். அது கூடியவரை வயிற்றை நிரப்பும். ஆனால், மத்தியானச் சாப்பாட்டிலும் இரவுச் சாப்பாட்டிலும் எப்பொழுதும் எனக்குப் பட்டினிதான். அந்த நண்பர் மாமிசம் சாப்பிடும்படி ஓயாமல் எனக்கு எடுத்துக் கூறிக்கொண்டே இருந்தார். நானும் என் விரதத்தை அதற்குச் சமாதானமாகக் கூறிவிட்டுப் பேசாமல் இருந்துவிடுவேன். மத்தியானச் சாப்பாட்டிற்கும் இரவு உணவுக்கும் எங்களுக்குப் பசலைக் கீரையும் ரொட்டியும் ஜாமும் இருக்கும். நானோ நன்றாகச் சாப்பிடுகிறவன். பெருவயிறு படைத்தவன். ஆனால் இரண்டு மூன்று ரொட்டித் துண்டுகளுக்கு அதிகமாகக் கேட்பது சரியல்லவென்று தோன்றிதால் அதிகமாகக் கேட்கவும் எனக்கு வெட்கம். போதாதற்கு மத்தியானத்திலும், இரவிலும் சாப்பாட்டில் பாலும் கிடையாது. இந்த நிலையைக் கண்டு அந்த நண்பருக்கு வெறுத்துப் போய் விட்டது. அவர் பின்வருமாறு சொன்னார்: “நீர் என் சொந்தச் சகோதரனாக இருந்தால் மூட்டை கட்டி ஊருக்கு அனுப்பியிருப்பேன். இங்குள்ள நிலையை அறியாமல், எழுத்து வாசனையே இல்லாத ஒரு தாயாரிடம் செய்து கொடுத்த சத்தியத்திற்கு என்ன மதிப்பு உண்டு? அது ஒரு விரதமே அல்ல. சட்டப்படி அதை ஒரு விரதமாகவும் கருதுவதற்கில்லை. அத்தகைய ஒரு சத்தியத்தில் விடாப்பிடியாக இருப்பது மூடநம்பிக்கையைத் தவிர வேறொன்றுமில்லை. மேலும், இந்தப் பிடிவாதத்தினால் இங்கே உமக்கு எந்தவிதப் பயனும் உண்டாகாது என்பதையும் கூறுகிறேன். மாமிசத்தை முன்பு சாப்பிட்டதாகவும், அது உமக்குச் சுவையாக இருந்தது என்றும் ஒப்புக் கொள்ளுகிறீர், எங்கே முற்றும் அவசியமில்லையோ அங்கே நீர் அதைச் சாப்பிட்டிருக்கிறீர். அவசியமான இடத்தில் உண்ண மாட்டேன் என்கிறீர், இது என்ன பரிதாபம்!”
ஆனால் நான் பிடிவாதமாக இருந்தேன். நாள் தவறாமல் அவர் இதைக் குறித்து என்னிடம் தர்க்கம் செய்துகொண்டே இருப்பார். முடியாது என்று எப்பொழுதும் அவருக்குப் பதில் சொல்லி விடுவேன். அவர் தர்க்கம் செய்யச் செய்ய நானும் அதிகப் பிடிவாதக்காரனாவேன். கடவுளின் பாதுகாப்பைக் கோரித் தினமும் பிரார்த்திப்பேன். அதை அடையவும் அடைவேன். கடவுளைப் பற்றிய ஞானம் அப்பொழுதே எனக்கு இருந்தது என்பதல்ல, நம்பிக்கை தான் அது. எனக்குச் செவிலித் தாயாக இருந்த அந்த நல்ல ரம்பா விதைத்த நம்பிக்கையின் விதையே வேலை செய்து வந்தது.
ஒரு நாள் அந்த நண்பர், பெந்தாம் எழுதிய பயன்படுவதன் தத்துவம் (Theory of Utility) என்ற நூலை எனக்குப் படித்துக் காட்டினார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அதன் நடை நான் புரிந்துகொள்ள முடியாத அளவுக்குக் கடினமாக இருந்தது. அதன் பொருளை விளக்கவும் ஆரம்பித்தார். அப்பொழுது நான் சொன்னேன்: “தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள், இந்த நுட்பமான விஷயங்களெல்லாம் எனக்கு விளங்கமாட்டா. மாமிசம் சாப்பிடுவது அவசியம் என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனால் நான் கொண்ட விரதத்திற்குப் பங்கம் செய்ய முடியாது. இதைப் பற்றி என்னால் விவாதிக்கவும் முடியாது. அப்படியே உங்களோடு விவாதித்தாலும் வெற்றி பெற முடியாதென்பதும் நிச்சயம். நான் முட்டாள் பிடிவாதக்காரன் என்று என்னை விட்டு விடுங்கள். என் மீது நீங்கள் கொண்டிருக்கும் அன்பை உணருகிறேன். என் நலத்தில் நீங்கள் அக்கறை கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் அறிகிறேன். எனக்காக நீங்கள் கவலைப்படுவதனாலேயே இதைப் பற்றி அடிக்கடி எனக்கு கூறி வருகிறீர்கள் என்பதையும் அறிவேன். ஆனால், நான் உங்கள் புத்திமதிப்படி நடக்க முடியாது. விரதம் விரதமே. அதற்குப் பங்கம் செய்ய என்னால் ஆகாது.”
அந்த நண்பர் ஆச்சரியத்தோடு என்னை உற்றுப் பார்த்தார். புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, “நல்லது. இனிமேல் உம்மிடம் வாதம் செய்ய மாட்டேன்” என்றார். நான் மகிழ்ச்சியடைந்தேன். பிறகு இது விஷயமாக என்னிடம் அவர் விவாதிக்கவே இல்லை. ஆனால், என் விஷயத்தில் கவலைப்படுவதை மாத்திரம் அவர் விட்டுவிடவில்லை. அவர் புகை பிடிப்பார், குடிப்பார். ஆனால் அப்படி செய்யுமாறு என்னை அவர் கேட்டதே இல்லை. உண்மையில் இந்த இரண்டு பழக்கங்களும் எனக்குக் கூடாது என்றே சொல்லி வந்தார். மாமிசம் சாப்பிடாவிடில் நான் பலவீனமாகிவிடுவேன், அதனால், இங்கிலாந்தில் நான் சுகமாக வசிக்க முடியாது போகும் என்பது ஒன்றே அவருடைய கவலையெல்லாம்.
இப்படி ஒரு மாதம் நான் பயிற்சி பெற்றேன். நண்பரின் வீடு ரிச்மாண்டில் இருந்தது. வாரத்தில் இரண்டொரு முறைகளுக்கு மேல் லண்டனுக்குப் போவது சாத்தியமில்லை. ஆகவே, லண்டனுக்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு குடும்பத்தோடு என்னைத் தங்க வைக்க வேண்டும் என்று டாக்டர் மேத்தாவும் ஸ்ரீ தளபத்ராம் சுக்லாவும் முடிவு செய்தனர். மேற்குக் கென்சிங்கனில் ஓர் ஆங்கிலோ இந்தியரின் வீட்டைக் கண்டுபிடித்து, ஸ்ரீ சுக்லா என்னை அங்கே கொண்டு போய் விட்டார். அந்த வீட்டுக்கார அம்மாள் விதவை. என்னுடைய விரத்தைக் குறித்து அவரிடம் கூறினேன். என்னைச் சரியாகக் கவனித்துக் கொள்ளுவதாக அம்மூதாட்டி வாக்களித்தார். அவர் வீட்டில் வசிக்கலானேன். அங்கும் கூட அநேகமாக நான் பட்டினி கிடக்கவே நேர்ந்தது.
மிட்டாயும் பலகாரங்களும் அனுப்புமாறு வீட்டுக்கு எழுதியிருந்தேன். ஆனால், எதுவும் இன்னும் வந்து சேரவில்லை. அங்கே கொடுத்த சாப்பாடெல்லாம் எனக்குச் சப்பென்று இருந்தது. சாப்பாடு பிடித்திருக்கிறதா என்று அம்மூதாட்டி தினமும் என்னைத் கேட்டார். ஆனால், அவர்தான் என்ன செய்வார்? முன்பு இருந்தது போலவே இன்னும் எனக்கும் கூச்சம் இருந்தது. முதலில் பரிமாறியதை விட அதிகமாக எதையும் கேட்கும் துணிவு எனக்கு இல்லை. அந்த அம்மாளுக்கு இரு பெண்கள். அதிகப்படியாக இரண்டொரு ரொட்டித் துண்டுகளை அப்பெண்கள் வற்புறுத்தி எனக்கு வைப்பார்கள். ஆனால், ஒரு முழு ரொட்டிக்குக் குறைந்த எதனாலும் என் வயிறு நிரம்பாது என்பது அவர்களுக்குத் தெரியவே இல்லை!
ஆனால், இதற்குள் எனக்குக் கால் முளைத்துவிட்டது. இன்னும் என் பாடங்களை நான் படிக்க ஆரம்பிக்கவில்லை. ஸ்ரீ சுக்லா தூண்டியதன் பேரில் அப்பொழுதுதான் பத்திரிகைகளைப் படிக்க ஆரம்பித்தேன். இந்தியாவில் நான் செய்திப் பத்திரிகைகளைப் படித்ததே இல்லை. இங்கே தொடர்ந்து படித்து வந்தால் பத்திரிகைகளை, படிப்பதில் எனக்குச் சுவை ஏற்பட்டது. டெய்லி நியூஸ், டெய்லி டெலிகிராப், பால்மால் கெஜட் ஆகிய பத்திரிகைகளைப் எப்பொழுதும் மேலெழுந்த வாரியாகப் படிப்பேன். இதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகாது. ஆகவே, அங்கும் இங்கும் சுற்ற ஆரம்பித்தேன். சைவச் சாப்பாடு விடுதி எங்காவது இருக்கிறதா என்று தேட முற்பட்டேன். அத்தகைய சாப்பாட்டு விடுதிகள் நகரில் இருக்கின்றன என்று நான் தங்கியிருந்த வீட்டுக்கார அம்மாள் கூறியிருந்தார். தினம் பத்துப் பன்னிரண்டு மைல் தூரம் சுற்றுவேன். மலிவான சாப்பாட்டு விடுதிக்குப் போய் அங்கே வயிறு நிறைய ரொட்டியைத் தின்பேன். என்றாலும், எனக்கு திருப்தி ஏற்படாது. இவ்வாறு சுற்றி அலைந்து வரும்போது ஒரு நாள் பாரிங்டன் தெருவில் ஒரு சைவச் சிற்றுண்டிச் சாலையைக் கண்டுபிடித்தேன். அதைக் கண்டதும், தன் மனத்துக்கு இனியதைக் கண்டதும் ஒரு குழந்தை என்ன குதூகலம் ஏற்படுமோ அவ்வளவு ஆனந்தம் எனக்கு உண்டாயிற்று. அதற்குள் போகும் முன்பு, கதவுக்கு அருகில் கண்ணாடி ஜன்னலில் விற்பனைக்காகப் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். அவற்றில் சால்ட் எழுதிய சைவ உணவின் முக்கியத்துவம் என்ற புத்தகமும் இருந்தது. ஒரு ஷில்லிங் கொடுத்து அதை வாங்கிக் கொண்டு நேரே சாப்பாட்டு அறைக்குச் சென்றேன். இங்கிலாந்துக்கு வந்த பிறகு நான் வயிறார உண்ட முதல் சாப்பாடு இதுதான். கடவுள் எனக்குத் துணை செய்துவிட்டார்.
சால்ட் எழுதிய அந்த நூலை ஒரு வரிவிடாமல் படித்து முடித்தேன். அது என் மனதைப் பெரிதும் கவர்ந்தது. அந்த புத்தகத்தைப் படித்த நாள் முதற்கொண்டே, என் இஷ்டத்தின் பேரில் நான் சைவ உணவு விரதம் பூண்டவனானேன் என்று நான் சொல்லிக்கொள்ள முடியும். என் தாயாரின் முன்பு நான் விரதம் எடுத்துக்கொண்ட நாளை வாழ்த்தினேன். சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும், நான் எடுத்துக் கொண்டிருந்த விரதத்திற்காகவுமே இதுவரை நான் புலால் உண்ணாமல் இருந்து வந்தேன். ஆனால், அதே சமயத்தில் ஒவ்வோர் இந்தியரும் மாமிசம் சாப்பிடுபவராக வேண்டும் என்று விரும்பி வந்தேன். ஒரு நாள் நானும் தாராளமாகவும், பகிரங்கமாகவும் அப்படிச் சாப்பிடுபவன் ஆக வேண்டும் என்றும், மற்றவர்களையும் இதற்குத் திருப்ப வேண்டும் என்றும் கருதி, அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால், இப்பொழுது நான் சைவ உணவு விரதத்தை விரும்பி மேற்கொண்டுவிட்டதால், இதைப் பரப்புவதே என் வாழ்வின் லட்சியமாயிற்று.
$$$
15. ஆங்கிலக் கனவானாக நடிப்பு
சைவ உணவில் நான் கொண்ட நம்பிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. உணவு சம்பந்தமான ஆராய்ச்சி நூல்களைப் படிக்க வேண்டும் என்ற பசியை சால்ட்டின் புத்தகம் எனக்கு உண்டாக்கிற்று. சைவ உணவைப் பற்றிக் கிடைத்த புத்தகங்களையெல்லாம் வாங்கிப் படித்தேன். ஹோவார்டு வில்லியம்ஸ் எழுதியிருந்த உணவு முறையின் தருமம் (The Ethics of Diet) என்ற நூல், ஆதிகாலத்திலிருந்து இன்றைய வரையில் மனிதரின் உணவு வகையைப் பற்றி எழுதப் பெற்ற எல்லாப் புத்தகங்களின் வரலாற்றுச் சரித்திரத்தையும் கூறுகிறது. பித்தகோரஸ், ஏசுநாதரிலிருந்து தற்காலத்தில் வாழ்கிறவர்கள் வரை, எல்லாத் தத்துவஞானிகளும், தீர்க்கதரிசிகளும் சைவ உணவு உட்கொள்ளுபவர்களாகவே இருந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டவும் இந்த நூல் முயன்றிருக்கிறது.
டாக்டர் அன்னா கிங்க்ஸ் போர்டு எழுதிய உணவுமுறையில் சரியான வழி (The Perfect way in Diet) என்ற நூலும் கவர்ச்சிகரமானது. தேகாரோக்கியத்தையும், சுகாதாரத்தையும் குறித்து டாக்டர் அலின்சன் எழுதியிருந்தவையும் அதே போல உதவியாக இருந்தன. நோயாளியின் ஆகாரத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலமே நோயைக் குணமாக்கும் முறையை அந்த நூலில் அவர் எடுத்துக் கூறியிருந்தார். அவர் சைவ உணவு மாத்திரமே சாப்பிடுகிறவர். ஆகையால், தம்மிடம் வரும் நோயாளிகளுக்கும் கண்டிப்பான சைவ உணவு யோசனையைச் சொல்லி வந்தார். இந்த நூல்களையெல்லாம் படித்ததன் பலனாக, உணவாராய்ச்சி செய்வதும் என் வாழ்க்கையில் முக்கியமான இடம் பெற்றுவிட்டது. ஆரம்பத்தில் தேகசுகத்தை முக்கியமாகக் கருதியே பெரும்பாலும் இந்தச் சோதனைகளைச் செய்து வந்தேன். ஆனால், பிறகோ சமயப்பற்று, இச்சோதனைகளுக்குப் பிரதானமான நோக்கமாயிற்று.
இதன் நடுவில் என் நண்பர் என்னைப் பற்றிக் கவலைப்படுவதை விடவில்லை. மாமிசம் சாப்பிடுவதில் எனக்கு இருக்கும் ஆட்சேபங்களில் நான் பிடிவாதமாகவே இருந்து வந்தால், என் உடல் இளைத்துப் போவதோடு நான் மண்டுவாகவும் இருந்துவிடுவேன் என்று கருதினார். ஏனெனில், மாமிசம் சாப்பிடாதிருந்தால் ஆங்கிலேய சமூகத்தில் நான் சகஜமாகப் பழக முடியாது என்றும் அவர் நினைத்தார். என் மீது அவர் கொண்டிருந்த அன்பினாலேயே இப்படியெல்லாம் எண்ணினார். சைவ உணவின் பெருமையைப் பற்றி கூறும் நூல்களில் கவனம் செலுத்த நான் தலைப்பட்டு விட்டேன் என்பதை அறிந்ததும், அப் புத்தகங்கள் என் புத்தியைக் குழப்பி விடுமே என்று பயந்தார். என் படிப்பை மறந்துவிட்டு, அந்த ஆராய்ச்சிகளிலெல்லாம் இறங்கிப் பித்தனாகிவிடுவேன் என்றும் அஞ்சினார்.
ஆகையால், என்னைச் சீர்திருத்துவதற்காகச் கடைசி முயற்சி ஒன்றையும் செய்தார். ஒருநாள், நாடகம் பார்க்கப் போகலாம் என்று என்னை அழைத்தார். நாடகம் பார்க்கும் முன்பு இருவரும் ஹால்பர்ன் போஜன விடுதியில் சாப்பிடுவது என்றும் ஏற்பாடு செய்திருந்தார். அந்த போஜன விடுதியின் கட்டடம் அரண்மனை போன்றே எனக்குத் தோன்றியது. மேலும், விக்டோரியா ஹோட்டலில் இருந்து வந்து விட்ட பிறகு, நான் சாப்பிடப் போன முதல் பெரிய விடுதியும் இதுதான். அந்த ஹோட்டலில் இருந்தபோது நான் திக்குத் திசை தெரியாதவனாகவே இருந்ததால் அங்கே ஏற்பட்ட அனுபவம் எதுவும் எனக்கு இங்கே உதவியாக இருந்துவிடவில்லை. சங்கோஜத்தினால் நான் கேள்வி எதுவும் கேட்க மாட்டேன் என்று எண்ணியே என் நண்பர் என்னை இந்த விடுதிக்கு அழைத்து வரத் திட்டமிட்டு இருந்தார் என்று தெரிந்தது. அநேகர் அங்கே சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு மத்தியில் நானும் என் நண்பரும் ஒரு மேஜையின் முன் சாப்பிட உட்கார்ந்தோம். முதலில் சூப் வந்தது. அது என்ன சூப் என்பது தெரியாமல் திகைத்தேன். ஆனால் அதைப் பற்றி நண்பரிடம் கேட்கும் தைரியம் எனக்கு வரவில்லை.
ஆகவே, பரிசாரகரைக் கூப்பிட்டேன், நண்பர் நிலைமையைக் கவனித்துக் கொண்டார். “என்ன விஷயம்” என்று என்னைக் கடுமையாகக் கேட்டார். “சூப் சைவ சூப்தானா என்று விசாரிக்க விரும்பினேன்” என்று அதிகத் தயக்கத்துடனேயே சொன்னேன். “நாகரீகமான சமூகத்தில் பழகுவதற்கு நீர் கொஞ்சமும் தகுதியில்லாதவர்” என்று அவர் ஆத்திரத்தோடு கூறினார். “இங்கே சரியானபடி நடந்துகொள்ள உம்மால் முடியாது என்றால் வெளியே போய் விடும். வேறு ஏதாவது ஒரு சாப்பாட்டு விடுதியில் சாப்பிட்டுவிட்டு வந்து எனக்காக வெளியில் காத்திரும்” என்றார். இதைக் கேட்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். வெளியிலும் போய்விட்டேன். பக்கத்திலேயே சைவ உணவு விடுதி ஒன்று இருந்தது. ஆனால் அது அப்பொழுது மூடப்பட்டுவிட்டது. ஆகையால், அன்றிரவு சாப்பாடே இல்லாமல் பட்டினி கிடந்தேன். அந்த நண்பருடன் நாடகத்திற்கு சென்றேன். ஆனால், செய்துவிட்ட அசந்தர்ப்பமான காரியத்தைக் குறித்து அவர் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. என்னைப் பொறுத்தவரையிலோ, நான் சொல்வதற்கு எதுவுமில்லை.
எங்களிடையே நட்புமுறையில் ஏற்பட்ட கடைசிப் பூசல் இதுவே. எங்களுக்குள் இருந்த உறவை இது கொஞ்சமும் பாதித்து விடவில்லை. என் நண்பர் எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கெல்லாம் காரணம், அவர் என் மீது கொண்டிருந்த அன்பே என்பதை நான் அறிய முடிந்தது. அந்த அன்பைப் போற்றவும் போற்றினேன். எண்ணத்திலும், செயலிலும் எங்களுக்குள் வேற்றுமை இருந்தது உண்மை என்றாலும் அவர் மீது நான் அதிக மதிப்புக் கொண்டேன்.
அதனால், எனக்காக அவர் கொண்டிருந்த கவலையைப் போக்கி விட வேண்டும் என்று தீர்மானித்தேன். இனி நாகரீகக் குறைவாக நடந்துகொள்ள மாட்டேன். சைவ உணவு விரதம் கொண்ருப்பதால் என்னிடம் இருந்த குறைக்கு ஈடு செய்ய நாகரீக சமூகத்திற்குத் தகுதியான மற்ற காரியங்களையெல்லாம் அனுசரித்து நாகரீகமாக நடந்து கொள்பவன் ஆகி விட்டேன் என்று அவருக்கு உறுதியளிக்க வேண்டும் என்பதே என் முடிவு. இதற்காக ஆங்கிலக் கனவானாகவே ஆகிவிடுவதற்கு வேண்டிய அசாத்தியமான காரியங்களையெல்லாம் செய்ய முற்பட்டேன்.
பம்பாயில் தைத்த உடைகளையே தரித்துக் கொண்டிருந்தேன். அந்த உடை ஆங்கிலச் சமூகத்திற்குப் பொருத்தமானதன்று என்று எண்ணினேன். ராணுவக் கடற்படை ஸ்டோரில் புதிய உடை வாங்கினேன். பத்தொன்பது ஷில்லிங் விலையில் ஒரு சிம்னி – பாட் தொப்பி வாங்கினேன். அந்தக் காலத்தில் அது மிகவும் அதிகமான விலை. லண்டனில் நாகரீக வாழ்க்கைக்கு மத்திய இடமான பாண்ட் தெருவில், மாலையில் போட்டுக்கொள்ளும் உடுப்பு ஒன்று வாங்கி பத்துப் பவுனை பாழாக்கினேன். உத்தமரும் உயர் குணம் படைத்தவருமான என் சகோதரருக்கு எழுதி கடிகார இரட்டைவட தங்கச் சங்கிலி ஒன்றை அனுப்பி வைக்கும் படியும் செய்தேன். கடையில் கட்டி விற்கும் கழுத்து டை அணிவது நாகரீகத்திற்குச் சரியல்லவாகையால், ‘டை’யை நானே கட்டிக் கொள்ளும் வித்தையயும் கற்றுக்கொண்டேன். இந்தியாவில் குடும்ப நாவிதர் எனக்கு க்ஷவரம் செய்து விடும்போது மாத்திரமே முகக் கண்ணாடியை பார்க்கும் ஆடம்பரம் எனக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. இங்கோ, ஒரு பெரிய கண்ணாடி முன்னால் நின்று, என்னைப் பார்த்துக் கொள்வதிலும் ‘டை’யைச் சரிபடுத்திக் கொள்வதிலும் நாகரீகத்திற்கு ஏற்றாற்போல் தலைவாரிக் கொள்வதிலும் தினம் 10 நிமிட நேரத்தை வீணாக்குவேன். என் தலை மயிர் மிருதுவானதன்று. ஆகவே, அதைச் சீவிச் சரியாகப் படியவைப்பது தினமும் ஒரு போராட்டமாகி விட்டது. ஒவ்வொரு முறையும் தலையில் தொப்பியை வைக்கும் போதும் எடுக்கும் போதும் தலை மயிரை சரிபார்க்க கை தானாகவே தலைக்குப் போய்விடும். நாகரீக சமூகத்தினரின் நடுவே உட்கார்ந்திருக்கும் போது, ஒவ்வொரு சமயமும் கை இதற்காகவே தலையில் வேலை செய்து கொண்டிருக்கும். மற்றொரு நாகரீகப் பழக்கத்தைப் பற்றியோ சொல்லவே வேண்டியதில்லை.
நாகரீகத்தோற்றம் அளிப்பதற்கு இவ்வளவும் போதாதென்று, ஆங்கிலக் கனவானாவதற்கு வேண்டியவை என கருதப்பட்ட மற்ற அம்சங்களிலும் கவனத்தைச் செலுத்தினேன். நடனம் ஆடக் கற்றுக் கொள்ளுவதும், பிரெஞ்சு மொழி கற்பதும், பிரசங்கவன்மையும் ஓர் ஆங்கிலக் கனவானுக்கு அவசியம் என்றார்கள். பிரெஞ்சு, பக்கத்து நாடான பிரான்ஸின் மொழி என்பது மாத்திரம் அல்ல, ஐரோப்பா கண்டத்தில் ஒரு நாட்டினர் மற்றொரு நாட்டினருடன் பேசுவதற்குப் பொது மொழியாகவும் அது இருந்தது. எனக்கு அக் கண்டம் முழுவதையும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை. ஒரு நடனப் பயிற்சி வகுப்பில் சேர்ந்து நடனம் கற்றுக் கொள்ளுவதெனத் தீர்மானித்து, சில மாதங்களுக்கு மூன்று பவுன் கட்டணமும் செலுத்தினேன். மூன்று வாரங்களில் இதில் ஆறு பாடங்களைக் கற்றிருப்பேன். ஆனால், தாளகதிக்கு ஏற்ப நடனமாடுவது என்பது என்னால் ஆகவில்லை. பியானோ வாத்திய இசையைப் பின்பற்ற முடியாது போகவே தாளத்தை அனுசரிக்கவும் இயலவில்லை.
அப்படியாயின் பிறகு என்ன செய்வது? ஒரு சன்னியாசி, எலி உபத்திரவத்தைப் போக்க ஒரு பூனை வளர்த்தார் என்றும் பூனைக்குப் பால் வேண்டுமே என்பதற்காகப் பிறகு ஒரு பசுவும் வளர்த்தார் என்றும், பசுவைக் கவனிக்க ஓர் ஆள் வைத்தார் என்றும், அப்புறம் சன்னியாசி ஒரு குடும்பஸ்தர் ஆகிவிட்டார் என்றும் ஒரு கதை உண்டு. துறவியின் குடும்பம் வளர்ந்ததைப் போல என்னுடைய ஆசைகளும் வளர்ந்தன. மேனாட்டுச் சங்கீதத்தை ரசிக்கத் தெரிந்து கொள்ளுவதற்காக நான் பிடில் வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். ஆகவே, மூன்று பவுன் கொடுத்து பிடில் வாங்கினேன். அதைச் சொல்லிக் கொடுக்க அதைவிட அதிக தொகை கொடுத்தேன். பிரசங்கத் திறமை வர போதிப்பதற்காக மூன்றாவது ஆசிரியர் ஒருவரைப் பிடித்து அவருக்கு ஆரம்பக் கட்டணமாக ஒரு கினி (21 ஷில்லிங்) கொடுத்தேன். இதற்குப் பாடப் புத்தகமாக பெல் எழுதிய ‘ஸ்டான்டார்டு எலக்யூஷனிஸ்ட்’ என்ற புத்தகத்தை அவர் சிபாரிசு செய்தார். அதையும் வாங்கினேன். பிட்டின் பிரசங்கம் ஒன்றைப் படிக்கத் தொடங்கினேன்.
ஆனால், ஸ்ரீ பெல் என் காதில் எச்சரிக்கை மணியை அடித்தார். நானும் விழித்துக்கொண்டு விட்டேன்.
வாழ்நாளெல்லாம் நான் இங்கிலாந்திலேயே இருக்கப் போவதில்லை என்பதை எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். அப்படியிருக்க, பேச்சுவன்மையைக் கற்றுக் கொள்ளுவதால் என்ன பயன்? அதோடு நாட்டியமாடுவது என்னை எப்படி ஒரு கனவான் ஆக்கிவிடும்? பிடில் வாசிக்க நான் இந்தியாவிலும் கற்றுக் கொள்ளலாம். நானோ மாணவன். ஆகவே என் படிப்பையே நான் கவனித்துக் கொண்டு போக வேண்டும். பாரிஸ்டராவதற்கு வேண்டிய தகுதியையே நான் அடைய வேண்டும். என்னுடைய ஒழுக்கம் என்னைக் கனவானாக்கினால் அதுவே போதும். இல்லையானால் அந்த ஆசையை நான் விட்டுவிட வேண்டியதே.
இவையும், இவை போன்ற எண்ணங்களும் என்னைப் பற்றிக் கொண்டன. பிரசங்கப் பயிற்சிக்காக நான் அமர்த்திக் கொண்டிருந்த ஆசிரியருக்கு இந்த என் எண்ணங்களையெல்லாம் ஒரு கடிதத்தில் எழுதினேன். மேற்கொண்டு பாடல் கற்றுக்கொள்ள வராததற்கு மன்னிக்குமாறும் கேட்டுக் கொண்டேன். நான் கற்றுக் கொண்டதெல்லாம் இரண்டு மூன்று பாடங்களே. இதே போல் நடன ஆசிரியருக்கும் எழுதி விட்டேன். பிடில் வாத்தியாரிடம் நேரில் போய், வந்த விலைக்குப் பிடிலை விற்றுவிடுமாறு கேட்டுக் கொண்டேன். அப்பெண்மணி என்னிடம் நட்புடன் பேசினாள். ஆகவே, நான் தவறான வழியில் போய்க் கொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்த விதத்தை அவரிடம் கூறினேன். முற்றும் உருமாறுதல் அடைந்துவிட வேண்டும் என்பதில் நான் கொண்டிருந்த முடிவை ஏற்று அவர் உற்சாகப்படுத்தினார்.
ஆங்கிலக் கனவான் ஆகி விட வேண்டும் என்பதில் எனக்கு இருந்த மோகம் சுமார் மூன்று மாதங்கள் இருந்திருக்கும். அதற்குப் பின் மாணவனாகி விட்டேன். உடை, சம்பிரதாயப்பூர்வமாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவது மாத்திரம் பல ஆண்டுகள் என்னிடம் இருந்து வந்தது.
(தொடர்கிறது)
$$$