கண்ணம்மா மீதான பக்திப்பாடல்கள்

-மகாகவி பாரதி

மகாகவி பாரதியின் பக்திப் பாடல்களில் கண்ணம்மா மீதானவை (52- 55) இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றில்,  “நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி” மிகப் புகழ் பெற்ற பாடல்.  ‘கண்ணன் பாட்டு’ தொகுப்பிலும் ‘கண்ணம்மா - என்ற காதலி’ என்ற தலைப்பில் ஆறு கவிதைகள் உண்டு என்பது இங்கு கவனிக்க வேண்டிய கருத்து.

கடவுளை தனது இணையாக வர்ணிக்கும் பாரதியின் பக்திப் பிரவாஹம், படிக்கப் படிக்க, பாடப் பாட இன்பமளிக்கிறது. “துயர் போயின, போயின துன்பங்கள் நினைப் பொன்னெனக் கொண்ட பொழுதிலே” என்று ஒரு கவிதையில் போற்றும் பாரதி,  “எண்ணத் திதிக்குதடா இவள்பொன் னுடலமுதம்!’’ என்று மற்றொரு கவிதையில் விம்முகிறார். இன்னொரு கவிதையில், “எங்கள் கண்ணம்மா நகை புது ரோஜாப்பூ” என்று வரையும் பாரதி,  “திங்களை மூடிய பாம்பினைப் போலே செறிகுழல், இவள் நாசி எட் பூ” என்று எழுதுகையில் அகப்பாடலின் முழுத்வணியில் லயித்திருப்பதை உணர முடிகிறது. இறைவனை மனையாளின் அன்புருவாகக் கருதும் தூய  ‘அகப்பாடல்கள்’ இவை...

பக்திப் பாடல்கள்

52. கண்ணம்மாவின் காதல்

காற்று வெளியிடைக் கண்ணம்மா; – நின்றன்
      காதலை யெண்ணிக் களிக்கின்றேன்; – அமு
தூற்றினை யொத்த இதழ்களும் – நில
      வூறித் ததும்பும் விழிகளும் – பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் – இந்த
      வையத்தில் யானுள்ள மட்டிலும் – எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே – இங்கோர்
      விண்ணவ னாகப் புரியுமே! இந்தக் (காற்று) 1

நீயென தின்னுயிர் கண்ணம்மா! – எந்த
      நேரமும் நின்றனைப் போற்றுவேன் – துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
      பொன்னெனக் கொண்ட பொழுதிலே – என்றன்
வாயினி லேயமு தூறுதே – கண்ணம்
      மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே – உயிர்த்
தீயினி லேவளர் சோதியே – என்றன்
      சிந்தனையே, என்றன் சித்தமே! – இந்தக் (காற்று) 2

$$$

53. கண்ணம்மாவின் நினைப்பு

பல்லவி

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி – கண்ணம்மா!
தன்னையே சசியென்று சரணமெய்தினேன்! (நின்னையே)

சரணங்கள்

பொன்னை யே நிகர்த்த மேனி மின்னை யே, நிகர்த்த சாயற்
பின்னை யே! நித்ய கன்னியே! கண்ணம்மா! (நின்னையே)

மார னம்புக ளென்மீது வாரி வாரிவீச நீ- கண்
பாரா யோ? வந்து சேரா யோ? கண்ணம்மா! (நின்னையே)

யாவு மே சுக முனிக் கொர் ஈசனா மெனக்குன் தோற்றம்
மேவு மே – இங்கு யாவுமே, கண்ணம்மா! (நின்னையே)

$$$

54. மனப்பீடம்

பல்லவி

பீடத்தி லேறிக் கொண்டாள் – மனப்
பீடத்தி லேறிக் கொண்டான்.

நாடித் தவம் புரிந்து பீடுற்ற முனிவரர்
      கேடற்ற தென்று கண்டுகூடக் கருதுமொளி
மாடத்தி லேறி ஞானக் கூடத்தில் விளையாடி
      ஓடத்தி ரிந்து கன்னி வேடத்தி ரதியைப்போல்.
ஈடற்ற கற்பனைகள் காடுற்ற சிந்தனைகள்
      மூடிக் கிடக்கு நெஞ்சின் ஊடுற்றதை யமரர்
தேடித் தவிக்கு மின்ப வீடொத் தினிமை செய்து
      வேடத்தி சிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா (பீடத்தி) 1

கண்ணன் திருமார்பிற் கலந்த கமலை யென்கோ?
      விண்ணவர் தொழுதிடும் வீரச் சிங்கா தனத்தே
நண்ணிச் சிவனுடலை நாடுமவ ளென்கோ?
      எண்ணத் திதிக்குதடா இவள்பொன் னுடலமுதம்!
பெண்ணி லரசியிவள் பெரிய எழி லுடையாள்
      கண்ணுள் மணியெனக்குக் காத லிரதியிவள்
பண்ணி லினிய சுவைபரந்த மொழியினாள்
      உண்ணு மிதழமுத ஊற்றினள் கண்ணம்மா (பீடத்தி) 2

$$$

55. கண்ணம்மாவின் எழில்

ராகம் – செஞ்சுருட்டி; தாளம் – ரூபகம்

பல்லவி

எங்கள் கண்ணம்மா நகை புது ரோஜாப்பூ,
எங்கள் கண்ணம்மா விழி இந்த்ர நீலப்பூ!
எங்கள் கண்ணம்மா முகஞ் செந்தாமரைப்பூ,
எங்கள் கண்ணம்மா நுதல் பால சூரியன்.

சரணங்கள்

எங்கள் கண்ணம்மா எழில் மின்னலை நேர்க்கும்;
எங்கள் கண்ணம்மா புருவங்கள் மதன் விற்கள்,
திங்களை மூடிய பாம்பினைப் போலே
செறிகுழல், இவள் நாசி எட் பூ. (எங்கள்) 1

மங்கள வாக்கு நித்யானந்த ஊற்று;
மதுர வாய் அமிர்தம்; இத ழமிர்தம்;
சங்கீத மென் குரல் சரஸ்வதி வீணை,
சாய வரம்பை; சதுர் அயிராணி. (எங்கள்) 2

இங்கித நாத நிலைய மிருசெவி
சங்கு நிகர்த்த கண்டம் அமுர்த சங்கம்;
மங்களக் கைகள் மஹா சக்தி வாசம்!
வயி றாலிலை, இடை அமிர்த வீடு. (எங்கள்) 3

சங்கரனைத் தாங்கு நந்தி பத சதுரம்;
தாமரை யிருந்தாள் லக்ஷ்மீ பீடம்;
பொங்கித் ததும்பித் திசை யெங்கும் பாயும்
புத்தன்பும் ஞானமும் மெய்த்திருக்கோலம். (எங்கள்) 4

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s