-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
1. சிவசக்தி வணக்கம்
.
கலாப்யாம் சூடாலங்க்ருத ச’சி’ கலாப்யாம் நிஜதப:
பலாப்யாம் பக்தேஷு ப்ரகடிதபலாப்யாம் பவதுமே/
சிவாப்யா-மஸ்தோக த்ரிபுவனசி’வாப்யாம் ஹ்ருதிபுனர்
பவாப்யா-மானந்த-ஸ்புர-தனுபவாப்யாம் நதிரியம்//
.
கலைவடிவே சூடியபிறை கலையணியே மெய்த்தவப்
பலன்வடிவே பக்தர்தம் பலனருளே பணிந்தேன்
செவ்வடிவே மூவுலகின் செம்பொருளே நினைதொறும்
வெவ்வடிவே விளையுயிர் திளைகளியே இணையே.
எடுத்த எடுப்பிலேயே, தமது மேதாவிலாசத்தால் சிவசக்தி ஸ்வரூபத்தை சிலேடையாகப் புகழ்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். எவ்வாறு சிவ-சக்தி ரூபம், இரண்டற்ற ஒன்றாய் அருள்பாலிக்கிறதோ அதேபோல இந்த முதல் செய்யுள்- சிவன், சக்தி ஆகிய இரு இறையுண்மைகளையும் ஒரே பாட்டால் பாராட்டுகிறது, பணிந்து வணங்குகிறது. பரமசிவன், பராசக்தி ஆகிய இருவருமே கலை வடிவானவர்கள். இருவருமே சந்திர கலையை அதாவது பிறைநிலவைத் தலையில் அணிந்தவர்கள். இதற்கு சங்க இலக்கியத்தில் இருந்தும் சிலப்பதிகாரத்தில் இருந்து மேற்கோள் காட்டலாம். புறநானூற்றில் அதியமானைப் புகழ்ந்து ஔவையார் பாடிய பாடல் ஒன்றில், சிவபெருமானை “பிறைநுதல் பொலிந்த சென்னி” என்று குறிப்பிடுகிறார். நெற்றியிலே பிறை ஒளிருகின்ற தலையை உடையவர் என்று இதற்குப் பொருள். இதேபோல் சிலப்பதிகாரம் மதுரைக்காண்டம் வேட்டுவ வரியில், சக்தியை “இளந்திங்கள் வாழ்சடையாள்” என்று இளங்கோ அடிகள் போற்றுகிறார். சிவ, சக்தி இருவருமே ஒருவருக்கொருவர், உண்மையான தவப்பயனால் உருவெடுத்தவர்கள். பக்தர்களுக்குப் பலன்களை அருளக் கூடியவர்கள்.
இருவருமே சிவ வடிவானவர்கள். சிவம் என்றால் மங்களம் என்று பொருள். சிவ என்பது சம்ஸ்கிருதத்தில் மங்களத்தைக் குறிப்பதைப்போல, தமிழிலே மங்களத்தின் வடிவமான செம்மையை சிவ என்ற சொல் தாங்கி நிற்கிறது. ஆக, இறைவனும், இறைவியும் செம்மையின் வடிவமாகக் காட்சி தருபவர்கள். மூவுலகிற்கும் குறைவற்ற செம்மைகளை, மங்களங்களைக் கொடுப்பவர்கள். நினைக்கும்தோறும் புதிது புதிதாய் வெவ்வேறு வடிவங்களில் தோன்றி அருள்பாலிப்பவர்கள். உலகில் தோன்றிய அனைத்து உயிர்களிலுமே ஆத்ம அனுபவத்தால் மகிழ்ச்சிக் கடலில் திளைப்பவர்கள். அப்படிப்பட்ட இணைந்த வடிவாகிய, அர்த்தநாரீஸ்வர வடிவமான சிவ சக்தியை வணங்குகிறேன் என்கிறார் ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர். “சிவனும், சக்தியும் சொல்லையும், பொருளையும்போல இணைபிரியாதவர்கள்” (வாகர்த்தாவித சம்ப்ரக்தௌ) என்று மகாகவி காளிதாஸர் கூறிய கவிதை வரிகள் இங்கே ஒப்புநோக்கத் தக்கவை.
(அலைகள் தொடரும்)
$$$