இலக்கிய தீபம் – 4

-எஸ்.வையாபுரிப் பிள்ளை

4. நெடுநல்வாடையும் நக்கீரரும்*

* குறிப்பு: இக்கட்டுரை,  ஆசிரியர் சுந்தரம் பிள்ளை எழுதிய ஓர் ஆங்கிலக் கட்டுரையைத் தழுவி 1912-ல் எழுதிப் பாளையங் கோட்டை சைவ சபையில் பேசப்பட்டது. பின்னர். 1937-ல் திரு. ச.த.சற்குணர் B.A., அவர்களின் அறுபதாவது ஆண்டு விழா மலரில் வெளிவந்தது.

செந்தமிழணங்கு தன் மக்களாகிய சங்க மருவிய சான்றோரைத் துணைக்கொண்டு தனது நெறிவழியே செல்ல, காலமென்னும் ஆறலை கள்வன் வழிமறித்து அவளது அணிகலன்களையெல்லாங் கவர்ந்துகொள்ள முயன்றனன். துணை வந்த சான்றோர்கள் அவனைத் தகைப்பவும், அவன் அதிக்கிரமித்து ஆபரணங்கள் பலவற்றையும் பறித்துக் கொண்டனன். ஒரு சிலவே எஞ்சின. இவற்றை சேகரித்து அச் சான்றோர்கள் தம் அருமைத் தாயாராகிய தமிழ் மடவரலது கையிலுய்ப்ப, அம்மடவரல் தானும் பிற்காலத்துள்ள தனது மக்கட்கென வழிமுறையே உரிய மாநிதியாக உதவியவைகளில் ‘பத்துப்பாட்டு’ என்னும் அரும்பெறல் மணிக்கோவையும் ஒன்றாம்.

இம்மணிக் கோவையினுள்ளே ஏழாவது மணியாக நின்று மிளிர்வது நாம் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்ட ‘நெடுநல்வாடை.’ இம்மணியினது உயர்வைப் பரிசோதித்தற்குச் சிறந்த ரத்ன பரிசோதகன் ஒருவன் வேண்டுமென்பது மலையிலக்கு. அங்ஙனமிருப்பவும், யான் அத்தொழிலை மேற்கொண்டது தமிழரசியார் மாட்டு எனக்கு உள்ள பக்தியினது பெருவலி ஈர்த்துச் செல்லுதலானென்க.

பாட்டுடைத் தலைவன்

நக்கீரனாரென்னும் புலவர்பெருமான் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைத் தலைவனாகக்கொண்டு இயற்றியது இந்நூல். பாண்டியன் நெடுஞ்செழியன் பகைப்புறஞ் சென்று மண்டமர் தசையோடு கண்படை பெறாது பாசறைக் கண்ணேயிருப்ப அவனோடு இன்புற்றிருக்கப் பெறாது அரண்மனையிலே தனித்திருந்து தனது இன்னுயிர்த் தலைவனது பிரிவை நினைந்து நினைந்து நெஞ்சழிந்து வருந்திக் கொண்டிருக்குந் தலைவியை அவன் விரைவில் அடையக் கடவனென்று கொற்றவையைப் பரவுவாள் கூறியதாக அமைந்துள்ளது இப்பாட்டு.

இனி, பாட்டுடைத் தலைவனாகிய பாண்டியன் நெடுஞ்செழியன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறையொடு பொருது அவனைச் சிறைப்படுத்தி அவற்கு உதவியாக வந்த திதியன் முதலிய எழுவரையும் விண்ணுலகேற்றிய வீரனாவன். இவன் முன்னோரெல்லாம் போரில் தலை நின்று புகழ் நிறுவிய சிறப்பினரென்பது,

முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்துபட்ட வியன் ஞாலம்
தானிற்றந்து தம்புகழ் நிறீஇ
ஒருதா மாகிய வுரவோ ரும்பல்

என்னும் புறநானூற்றுச் செய்யுளால் (18) நன்கு அறியக் கிடக்கின்றது. இவன் தலையாலங்கானத்தில் செருவென்ற வீரனென்பது,

ஞாலம் நெளிய வீண்டிய வியன்படை
ஆலங் கானத்து அமர்கடந் தட்ட
கால முன்ப

என்ற அடிகள் (புறம். 23) விளக்குகின்றன. இவன் வேள் எவ்வியின் மிழலைக்கூற்றத்தையும், பழைய வேளிருடைய முத்தூற்றுக் கூற்றத்தையும் கைக் கொண்டவனென்பது,

ஓம்பா ஈகை மாவே னெவ்வி,
புனலம் புதவின் மிழலையொடு கழனிக்
கயலார் நாரை போர்விற் சேக்கும்,
பொன்னணி யானைத் தொன்முது வேளிர்,
குப்பை நெல்லின் முத்தூறு தந்த
கொற்ற நீள்குடைக் கொடித்தேர்ச் செழிய

என்னுஞ் செய்யுட்பகுதி (புறம். 24) தெரிவிக்கின்றது. இவன் செருவென்ற பொழுது பகைவரது முரசங் கைக்கொண்டானென்பது,

உடலருத் துப்பி னொன்றுமொழி வெந்தரை,
யணங்கரும் பறந்தலை யுணங்கப் பண்ணி,
பிணியுறு முரசங் கொண்ட காலை

என்னும் வரிகள் (புறம். 25) புலப்படுத்துகின்றன.

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி,
மாங்குடி மருதன் தலைவ னாக,
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற்,
புலவர் பாடாது வரைகவென் னிலவரை,
புரப்போர் புண்கண் கூர,
இரப்போர்க் கீயா வின்மையா னுறவே

என்னும் அடிகள் (புறம். 72) இவனுக்குத் தமிழ்ப் புலவர்கள் மாட்டுள்ள அன்பினையும் நன் மதிப்பினையும் இவனது ஈகைக் குணத்தையும் மதுரைகாஞ்சி இயற்றிய மாங்குடி மருதனார் இவனது வாயிற்புலவர் என்பதையும் நன்கு வலியுறுத்துகின்றன. இவன் செருவென்ற காலத்தில் ஆண்டின் இளையவனென்பது,

பொருநனு மிளையன் கொண்டியும் பெரிதென

என்னும் அடி (புறம்.78) உணர்த்துகிறது. இவ்வாறே இவன் தற்பெருமையுடையானல்ல னென்பது புறநானூற்று 77-ம் செய்யுளாலினிது பெறப்படுகின்றது. இவனது குணாதிசயங்கள் இவ்வாறுள்ளன. இனி இவன் வாழ்ந்து அரசு புரிந்த காலம் இதுவென நிச்சயிக்க முயலுவோம்.

காலம்

பண்டைக்கால ஆராய்ச்சியிற் றலையிட்ட அறிஞர்களுக்குள்ளே, டாக்டர். S. கிருஷ்ணசாமி யையங்காரவர்கள் முன்னணியில் நிற்பாராவர்.இவர்கள்  ‘கடைகாலம்’ என்றதோர் வியாசம் வெளியிட்டுள்ளார்கள். அதில் கடைச்சங்கப் புலவர்கள் என்று கருதப்பட்டவர்களுட் பலர் கி.பி. 100 முதல் 300 வரையிலுள்ள காலத்தில் வெவ்வேறு பகுதிகளிலிருந்தார்களென்றும், அப்போது பாண்டியர்களில் நெடுஞ்செழியனும், அவன் மகன் இளஞ்செழியனும் அவன் மகன் தலையாலங்காலத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனும், சோழர்களில் கரிகாற் பெருவளத்தானும் அவன் பௌத்திரன் கோக்கிள்ளியும், சேரர்களிற் செங்குட்டுவனும் அரசு புரிந்து வந்தனர் என்றும் நிறுவியிருக்கிறார்கள் *1. இவர்கள் காலஞ்சென்ற ஸ்ரீ வி.கனகசபைப் பிள்ளையவர்களைப் பின்பற்றியே இம்முடிபிற்கு வந்துள்ளார்கள்.

பிள்ளையவர்கள் கரிகாற் பெருவளத்தானுக்கும் கோக்கிள்ளிக்கும் இடையில் நலங்கிள்ளி யென்டொருவன் இருந்ததாகக் கொள்வார்கள். இலங்கையரசனான முதற்கஜபாகு கண்ணகி யென்னும் பத்தினிக் கடவுட்குச் செங்குட்டுவன் கோயிலமைத்தபோது வந்திருந்தான் என்றும், அவனும் இளஞ்செழியனும், உறையூர்க்கிள்ளியும் அக்கடவுட்குத் தனித்தனியே கோயிலமைத்தார்களென்றும் சிலப்பதிகாரத்தால் விசதமாகின்றது. கஜபாகுவின் காலம் கி.பி. 171-193 என்று இலங்கைப் புராதன சரித்திரமாகிய மகாவம்சத்தினைப் பதிப்பிட்ட கெய்கர் (Geiger) கூறுவர். இதனாலே இளஞ்செழியனுக்குப் பின் அவன் மகன் நெடுஞ்செழியன் அரசாட்சி செய்தது கி.பி. 225-ஐ அடுத்த காலம் என்பது தெளிவாகின்றது.

இறையனா ரகப்பொருளுரை உக்கிரப் பெருவழுதியார் காலத்து நக்கீரர் இயற்றினாரென்பது கன்னபரம்பரைச் செய்தி. இவ்வரசன்றான் முதல் நெடுஞ்செழியன் என்பது ஐயங்காரவர்களுக்கும் பிற அறிஞர்களுக்கும் கருத்தாகும். அங்ஙனமே கொண்டால், இவனது பௌத்திரனான தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தும் நக்கீரர் இருந்து அவனது வென்றிச் சிறப்பைப்பற்றி நெடுநல்வாடை யியற்றினார் என்பது போதரும். இதற்கேப்ப இளஞ்சென்னியைப் பற்றி அவன் கண்ணகியார்க்குக் கோயில் சமைத்தானென்ற செய்தியன்றி வேறொன்றும் நூல்களிற் காணப்படாமையாலே இவன் சிறிது காலந்தான் உயிர் வாழ்ந்து அரசு புரிந்தான் என்பது வெளியாகின்றது. ‘பொருநனு மிளையன்’ என்று புறம் 78-ல் நெடுஞ்செழியன் குறிக்கப்படுவதால், அவன் தலையாலங்கானத்துப் போர் புரிந்தபோது இளங்காளையா யிருந்தானென்று யான்மேலே சுட்டியதும் ஈண்டைக்கு அமைவுடைத்தாதல் காணப்படும். ஏனெனில், அவன் முதியனான பின்றையே போர் நிகழ்த்தினானெனின், நக்கீரர் அத்துணைக்காலம் உயிர் வாழ்தல் அசம்பாவிதமாகலான். இக்கூறியவற்றையுற்று நோக்கும்போது உக்கிரப் பெருவழுதியும் ஆண்டில் இளைஞனாகவே யிறந்திருத்தல் வேண்டும், அல்லாக்கால் அவன் விருத்தனா யிருக்கும்போது நக்கீரர் இளைஞராயிருந்தாராகல் வேண்டும். இவர் சங்கப் புலவர்களுக்குள்ளெல்லாம் தலைமை பெற்றாராகலின் இவ்வாறு கொள்ளுதல் அத்துணைப் பொருத்த முடையதன்று.

இக்காரணங்களால் நக்கீரர் ஆண்டின் முதியவராயிருந்தபோது நெடுநல்வாடை யியற்றினாரென்பதும் அப்பாட்டுடைத் தலைவனது காலம் 3-ம் நூற்றாண்டின் முற்பகுதியாயிருக்கலா மென்பதும் நிச்சயித்தல் தகும்.

இந்நூலில் வரும் ஜோதிஷக் குறிப்பும் பிற செய்திகளும் இத்துணிவினையே வலியுறுத்துகின்றன.

தலைக்குறிப்பாராய்ச்சி

இனி, நெடுநல்வாடை யென்ற செய்யுளின் தலைக்குறிப்பைப்பற்றி சிறிது சிந்தனை செய்வோம். இப்பெயர் நெடிதாகிய நல்லதோர் வாடையென விரிதலில் பண்புத்தொகையாகும். பகைவர்மேற் சென்ற தலைவனைப் பிரிந்து இராக்காலங்களிற் சிறிதும் இமை பொருந்தப் பெறாளாய் இருக்கும் தலைவி மிகவும் வருத்தத்தோடு உயிர் தாங்குபவளாத லியற்கை. மற்றைய காலங்களைக் காட்டினும் வாடைக் காலத்தில் நுகர்ச்சி விருப்பம் மிகுதி நிகழ்வதாகும். ஆதலால் அக்காலத்தே அது நுகரப் பெறாதது மட்டுமின்றி இன்னுயிர் மணாளன் தன்னருகிருக்கவும் பெறாதாளாகிய தலைவிக்கு ஒவ்வொரு நொடியும் ஓரூழியாகத் தோன்றும் என்பது வெளிப்படை. ஆகவே, அவட்கு இக்காலம் நெடியதோர் வாடைக் காலமாயிற்று. தலைவற்கோ வெனில், அவனது விருப்புப் போகத்தின்கண் மட்டும் நிகழ்வதொன்றன்று. பல அரசர்கட்குள் ஒருவன் எனப் பொதுவாக வைத்தெண்ணப்படுதலை வேண்டாது, அவருளெல்லாம் தலைமை பெற்றானிவன் என்று புகழப்படுதலை வேண்டி, போகத்தின்கண் மனமற்று, தன்னோடொப்ப வீற்றிருந்த அரசர்கள் மேற் படையெடுத்து வேற்றுப் புலத்துப் போதலை மேற்கொள்ளுகின்றான். பிற அவாவின் கண் எவ்வளவு தூரம் இவன் பற்றறுகின்றானோ அவ்வளவு தூரம் தான் மேற்கொண்ட தொழில் மேலேயே கருத்துக்கொண்டு மனவலிமையுடையனாகின்றான்.

ஆகவே, அவனது நோக்கத்தை முற்றுற முடித்தற்கு மனவெழுச்சியை யூக்குதலினாலே, இஃது அவற்கும் நல்லதோர் வாடைக்காலமாயிற்று.

இச்செய்யுள் தானும் தலைவன் பிரிந்தமை கூறி, போர்க்களத்தே அவனை வெற்றியெய்த வைத்தலின், இது பாலையும் அதற்குப் புறனாய வாகை திணையுமாயிற்று. பாலையினது இயல்பு பிரிதல்; வாகையினது இயல்பு பகைவரை வெல்லுதலும் வெல்லுதல் நிமித்தமும் ஆம்.

நூலிற் பொதிந்த பொருள்

இனி நெடுநல்வாடை யென்னும் செய்யுளிற் பொதிந்த பொருளினைச் சுருங்க வுரைக்கின்றேன். தலைவி, தலைவன் பிரிந்தமையை ஆற்றாளாய், அவன் வரும் வழிமேல் விழி வைத்துக் கழிக்கும் குளிர்கால இரவினுள் ஒன்றைப் புலவர் பெருமானாகிய நக்கீரர் வருணிக்க எடுத்துக்கொண்டார். இரவுப் பொழுதை வருணிக்க எடுத்துக்கொண்டதன் காரணம் என்னென்று சிறிது சிந்தித்தல் வேண்டும். பகற் போதில், ஈண்டெடுத்துக்கொண்ட அரசியைப் போலும் ஒரு தலைவி தோழியர் பலர் தம்மைப் புடைசூழ இருப்பர். இவர் பிரிவினால் வருந்துவதை அவர்கள் கண்ணுற்றால், தேறுதல் சொல்லுதல் ஒருதலை. அன்றியும், அரசியர்க்குக் கணவனது நினைவுண்டாகா வண்ணம் பகற் காலத்துப் பற்பல ஆடல் பாடலள் நிகழும். மேலும் பகற் பொழுது போகந் துய்த்தற்குரிய காலமுமன்று:

காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி,
மாலை மலருமிந் நோய்

தத்தம் இருக்கை ஏகுதலினாலே, தனிமையாயிருக்க நேர்ந்த தலைவிக்கு ஊற்றுக்கண் போலும் அவளது நெஞ்சிலே நினைவு ஒன்றன்பின்னொன்றாய் உதித்துக் காமம் கைம்மிக அளக்கொணாத் துயர அளக்கரில் விழுதலின், அக்காலம் நெடியதாய்த் தோன்றுமென்க.

இவ்வண்ணமாகத் தலைவிக்கு நெடியதாயும், தலைவற்கு நல்லதாயும் உள்ளது வாடை. தலைவியை நோக்கும் போது அகத்திணையாகவும் தலைவனை நோக்கும்போது புறத்திணையாகவும் இச் செய்யுள் அமைந்தது. நூலின் கண்ணும், வாடைக் காலத்தை வருணித்த பின்னர், தலைவிக்கு இரவு நெடியதாயவாறும், தலைவற்கு அக்காலம் நல்லதாயிருகுமாறும், தலைக்குறிப்புச் சொற்களை நிறுத்த முறையிலே கூறுதல் ஈண்டுநோக்கிக் கொள்க. மேற் கூறியவற்றால், இந்நூல், அகமும் புறமும் விரவி வந்து இனிமை பெற்றுள்ளது என்பது தெளிவாம். அகம் ஈன்றதில் ஒரு சிறு வேறுபாடு நோக்குதற்குரியது. சுட்டி யொருவர்ப் பெயர் கொள்ளாமையின் அகமாயிற்று (தொல். அகத். 54.) ‘வேம்புதலையொத்த நோன்காழெஃகம்’ என அடையாளப்பூக் கூறினமையின் அகமாகாதாயிற்று. எனவே, புறத்தோடு இயைவதற்கு ஓர் இடைப்பட்ட தன்மையை இவ்வகம் கொண்டுள்ளது. ஒரு செய்யுளில், அகத்தை மட்டும் அல்லது புறத்தைமட்டுங் கூறினால், அஃது இத்துணைச் சிறப்புப் பெறாதென்பது சொல்லாமே அமையும்.

இப்போது கார் காலமாகையால் மேகம் பருவம் பொய்யாமல் புதுப் பெயலைப் பொழிந்து சிறிது இடைவிட்டிருக்கின்றது. ஆறு முதலியன பெருக்கெடுத்து ஓடுகின்றன. இடையர்கள் பசுநிரைகளைத் தம் ஊர்க்கு அண்ணிய இடத்திலே மேய்த்துத் தம்மூரின் கண்ணேயே தங்கப் பெறாமையாலே வருந்துகிறார்கள். அவர்கள் வெள்ளத்தை முனிந்து தூரவிருக்கும் மேட்டு நிலத்தின்கண்ணே தம் பசுநிரைகளை மேயவிட்டுப் போகட்டு, பற்பறை கொட்டக் குளிர் தாங்க மாட்டாது நடுங்குகிறார்கள்; பலரும் ஒருங்குகூடி நெருப்பெழுப்பித் தம் கையை நெருப்பிலே காய்த்தி அதிற்கொண்ட வெம்மையைக் கன்னத்திலே உய்த்துக்குளிர் ஒருவாறு நீங்கி யிருக்கிறார்கள். விலங்குகள் இரை தேடற்றொழிலை மறந்து ஒடுங்கி யிருக்கின்றன. குரங்குகள் குளிர் மிகுதியால் நடுக்கமெய்தி உறுப்புகளைச் சுரித்து வலித்துக் கொண்டிருக்கின்றன. காற்றின் கொடுமையால் பறவைகள் நிலத்தே வீழ்கின்றன. எனினும், கொக்குக்கூட்டமும் நாரைகளும் புதுப்புனல் வரும் வேகத்திற்கு ஆற்றாது விலகி, ஓடுதலில்லாத நீர் இருக்கும் இடங்களிற் பாயுங் கயல் முதலிய மீன்களின் மேற் கருத்து வைத்தனவாய்த் தத்தித் தத்தி இயன்றமட்டும் பறந்து வந்து இரை கொள்ளுகின்றன. பசுக்கள் தம் கன்றுகளின் மேல் இயற்கையிலேயே கொண்ட அன்பை மறந்து, அவைகளை உதறி உதைக்கின்றன. அமோகமாய் வருஷித்த மேகமும் இப்போது சிறு துவலையாகப் பிலிற்றுதற்குக் கற்றுக் கொண்டிருப்பது போலத் தோன்றிற்று.

இவ்விதமான கிராமாந்தரங்களிலிருந்து நாம் நகர்ப்புறமணுகியதும், வயற்புறங்கள் தோறும் நீர் வளத்தால் நெற்பயிர்கள் செழித்து வளர்ந்து கதிர்கள் முற்றி இறைஞ்சி நிற்பதையும், அடிபருத்த கமுகினது பாளைவிரிந்த தாறுகளில் பசிய காய்கள் நீர்திரண்டு புறம் பருத்து முற்றிக் குலை குலையாய்த் தொங்குவதையும், பூக்கள் நிரம்பிய குளிர்ச்சியான சோலைகளிற் கிளைகள் ஒன்றோடொன்று உராய்ந்து தழுவி நிற்ப அவைகளிலிருந்து மழைத் துளிகள் இடையறாது வீழ்ந்து கொண்டிருப்பதையுங் காணப் பெறுகின்றோம். இத்தகைய இரவில் அரசியார் கண்படுக்கும் பள்ளியறைக்கு நாம் சென்று அவ்விடத்து அவரெய்துறும் பருவரலுக்குள்ளுடைந்து அநுதபித்தலியலும். அங்கே சென்று எய்துதற்கு, நகரத்திற்கு வெகுதூரத்திலுள்ள கிராமப் பிரதேசங்களிலிருந்து புறப்பட்டு நம்மையுமுடன் கொண்டு போகின்றார் நக்கீரர்.

புலவரோடு கூட நகர்க்குள் நாம் பிரவேசித்ததும் மாலைக்காலமாகின்றது. தெருக்கள் ஆறு கிடந்ததுபோல அகன்று நெடியதாயிருக்கின்றன. அங்கே அழகிய திண்ணிய தோளினையும் தேகப் பயிற்சியால் சதைகள் ஏறப்பெற்று முறுக்குண்ட மேனியையுமுடைய மிலேச்சர்கள் கள்ளுண்ட மகிழ்ச்சியால் தலைதடுமாறி மழைத் துவலையையும் சிறிதுங் கருதாதவராய், பகல் கழிந்து விட்டமையையும் நோக்கா தவராய், துகில்களை முன்னும் பின்னும் நால விட்டுக் கொண்டு, தமக்கு வேண்டிய விடத்தெல்லாம் திரிவதைக் காண்கின்றோம். தெருவில் இருமருங்குமுள்ள மடவரல் மகளிர் பருவத்தின் தன்மையால் இரவும் பகலும் தெரியாதவராய் மயங்கி, பின் பூந்தட்டிலே இட்டு வைத்திருக்கும் பிச்சிப்போதுகள் மெல்லென முகையவிழ்ந்து நறுமணங் கமழுகையினாலே அந்திகாலமாயிற்றென்பதை யுணர்ந்து, இரும்பினால் செய்த தகளியில் நெய்வார்த்துத் திரியிட்டு விளக்கேற்றி, நெல்லும் மலருந் தூவிக் கை தொழுகின்றார்கள். அங்காடிகளெல்லாம் மாலைக்காலத்தே மிகச் சிறப்புடனே விளங்குகின்றன.

இங்ஙனம் பொழுதறிந்து கோடற்கு வகைதெரியாத மனையுறை புறவுகள் தம் பேடுகளுடனே இரைதேடற்குச் செல்லாது, ஒரே நிலையிலிருந்து கடுத்த காலானது ஆறும்படியாக இடம் மாறி மாறிப் பெயர்ந்து, கபோதகத்தலையில் இருக்கின்றன. வேனிற்காலத்தே உபயோகப்படும் தண்ணறுஞ் சாந்தமும் சிலாவட்டமும் இப்போது குளிர்ச்சி மிகுதியினால் மகளிர்க்கு வேண்டப்படாது கழிய, அவர்தங் குற்றேவலாளர்கள் கொள்ளின் நிறத்தை யொத்த சாத்தம்மியிற் கஸ்தூரி முதலிய பசுங்கூட்டு அரைக்கின்றார்கள். அம்மகளிர் மாலை யணிந்து கோடலை விரும்பாதவராய்ச் சின்மலர் பெய்து முடித்தலை வேண்டி, தம் கூந்தற்கு அகில் முதலியவற்றா லுண்டாகும் நறும்புகையை ஊட்டுகின்றார்கள். கைவல் கம்மியன் அழகுபெற இயற்றிய ஆலவட்டங்கள் உறையிடப்பட்டுச் சிலம்பியினது வெள்ளிய நூல் அவைகளிலே பற்றிப் படர்ந்திருப்ப முளைக்கோலிலே தொங்குகின்றன. வேனிற் காலத்துத் துயில் கொள்ளும் மேன்மாடத்தின் அறைகளில் தென்றற் காற்று மெல்லெனத் தவழும் சாளரங்கட்கு எதிரே நின்று உலாவாது, அச்சாளரங்களை நன்கு பொருந்த அடைத்துத் தாழிட்டு, இளையோரும் முதியோரும் வாடைக் காற்றின் கொடுமைக் காற்றாது நெருப்பினை யெழுப்பிக் குளிர்காய்ந்து கொண்டிருக்கின்றார்கள். வேனிற்காலத்து ஆடற்றொழிலை விரும்பும் மகளிர், அவ் ஆடலை இப்போது துறந்து, பாடலை விரும்பி யாழினையெடுத்து, அதன் நரம்புகள் குளிர்ச்சியாலே நிலைகுலைந்திருப்பக் கண்டு தம் மார்பகத்தே தடவி வெம்மையூட்டி, பண்ணுமுறை நிறுத்துகின்றார்கள்.

இவ்விதமாக, காலமழை செறிந்த வாடைகாலத்து நிகழ்வன முழுமையுங் கண்குளிரக்கண்டு சிறிது தூரம் சேறலும், அரண்மனையின் கோபுரவாயிலை யடைகின்றோம். அரசனது பெரும் பெயர்க்கு ஒப்ப மனைவகுத்தது போல அரண்மனை விளங்கியது. அதன் கோபுரம் பெரியதொரு குன்றினைக் குடைந்து வாயிலமைத்தது போன்ற தோற்றமுடையதாய், வென்றெழு கொடியோடு வேழஞ்சென்று புகும்படியாக உயர்ந்த நெடுநிலை யுடையதாயும் நிற்கின்றது. உத்திரக்கற்கவியிலே நடுவே திருவும் இருபுறத்தும் இரண்டு செங்கழுநீர்ப்பூவைக் கைக்கொண்ட இரண்டு பிடியும் அமைக்கப்பட்டிருகின்றன. நிலையிலே அமைந்திருக்கும் கதவுகளிரண்டும் கம்மியனது வேலைப்பாட்டின் திறத்தால் புகையுமுட்புக இடைவெளியின்றி நன்றாய்ப் பொருந்தியிருக்கின்றன. ஆனால் புலவரது பெருங்கருணைக்குப் பாத்திரராகிய நாம் அவருடன் உட்செல்லப்பெற்று அரண்மனை முற்றத்தை அடைகின்றோம். அவ்விடத்தே மணல் பரப்பியிருக்க, கவரிமாவும் அன்னமும் அதில் தாவித் திரிகின்றன. குதிரைகள் பந்தியிலேயே நிற்க நேர்ந்ததனை வெறுத்து உணவைக் குதட்டுங் குரலும், வெள்ளிய நிலா முற்றத்தே மகரவாயாகப் பகுத்த வாயிலிருந்து கலங்கின மழைநீர் வந்துவிழும் ஓதையும், மயில்கள் செருக்கி ஆரவாரிக்கும் இசையும் செறிந்து மலையினிடத்து ஓசைபோல ஒரே ஓசையாய் கேட்கப்படுகின்றதேயன்றி, மற்றைக் காலங்களிற் போல வேறுபடுத்து அறியக்கூடிய ஆடல் பாடல் முதலிய இன்னோசை கேட்கப் பெறுகின்றிலம்.

இனி, அரண்மனையினுள்ளே பிரவேசித்ததும் நாம் காணுங்காட்சி நம்மைப் பெரிதும் வசீகரிக்கின்றன. யவனர்கள் தொழில்முற்ற இயற்றிய பாவைகள் நெய் வார்க்கப்பட்ட தகளியில் விளக்கமேந்தி அழகிதாகக் கட்டுக்கள் தோறும் நிற்கின்றன. கட்டுக்களை ஒவ்வொன்றாய்க் கடந்து அரிதினியன்ற அந்தப்புரத்தை யடைகின்றோம். அது, வரைகண்டன்ன தோற்றத்தை யுடையதாய், வரையிலே இந்திரதனுசு கிடந்தாற்போல வீழ்ந்து கிடக்கும் கொடியினதாய், கரியதிண்ணிய தூண்களையும், செம்பிலே செய்யவல்ல தொழில்கள் பலவும் அமைந்த சுவரினையுங்கொண்டு கவினுற விளங்குகின்றது.

பீடுகெழு சிறப்பிற் பெருந்தகை யல்லது
ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின்

கர்ப்பக்கிரகத்தினுள்ளே, புலவர் சிறிதும் அஞ்சாது நம்மையிட்டுக் கொண்டு சென்று அரசரது சயனக் கிரகத்தினுள்ளே நம்மை உய்க்கின்றார்.

இவ்வழகிய அறையின் கண்ணே, நாற்பத்திற்றியாண்டு சென்ற யானையினது தந்தத்தினை யளவுதகச்செத்தி இலைத் தொழில் இடையிடையே பெய்து அமைத்த பெரியதோர் கட்டில் காண்கின்றோம். ஒழுக மெல்லிதாய்த் திரண்ட கால்களிலே யமைத்துள்ள குடங்கள், மெல்ல அசைந்து நடக்குமியல்பினராகிய கர்ப்பிணிகளது பால்கட்டி வீங்கிய ஸ்தன்னிய பாரங்களை யொத்து விளங்குகின்றன. மூட்டுவாய் சிறிதுந் தெரியாதபடி நன்கு பொருந்தின சாளரங்களை ஆணி கொண்டு மேற்கட்டியில் தைத்துக் கட்டிலைச் சுற்றி முத்துவடம் நாற்றியிருக்கின்றது. கட்டிலின் நடுவிடத்திலே புலிவடிவம் பொறித்த அழகிய நிறம் பொருந்திய தகடு ஒன்று பரப்பியிருக்கின்றது. மெல்லிய உரோம முதலியன உள்வைத்த மெத்தை யதன்மேல் இடப்பட் டிருக்கின்றது. அன்னத்தூவிகளைப் பரப்பி, ஒள்ளிய துகிலொன்றும் அதில் விரித்திருக்கின்றது.

இன்னணமமைந்த படுக்கையின் மேலே ஓர் பெண்மணி படுத்திருப்பக் காண்கின்றோம். கருத்தொருங்கிக் கணவன் மேலே நினைவு வைத்தவளாய்க் கிடத்தலின், மனோ பாவகத்தினாலன்றிச் சரீரியாய் நாம் அங்கிருந்த போதிலும் நம்மை யறியக்கூடாத நிலைமையிலிருந்தாள். முத்தாரங்களைச் சுமந்து அழகு பெற்றுத்தோன்றிய அவள் மார்பிடத்தே, திருமாங்கல்ய மட்டும் தாழ்ந்து அசைந்து கிடப்பதையன்றி வேறோரணியும் காணக்கூடவில்லை. புனைதல் செய்யாமல் அவளது அளகம் நுதற்புறத்திலே யுலறிக் கிடக்கின்றது. ஒளி மிகுந்த குழைகள் கவின் பெறக்கிடந்த அவள் காதிலே ஒரு சிறு தாளுருவி அழுந்திக் கிடக்கின்றதே யன்றி வேறொன்றுமில்லை. பொற்றொடி கிடந்து தழும்பேறியிருந்த அவளது முன் கையிற் சங்கினாற் செய்த வளைகள்தாம் காணப்படுகின்றன். அவ்வணங்கனாரது திவ்ய சரீரத்திலே மெல்லிய பட்டாடை யொன்றுமின்றிச் சாதாரணமான புடைவையொன்றுதான் இருக்கின்றது. இவ்விதமாக, வண்ணங்களைக் கொண்டு எழுதப்பெறாது வடிவமட்டுங் காட்டப்பட்ட சித்திரம் போன்று அவள் படுக்கையிற் கிடந்தாள். இயற்கை வனப்பு வாய்ந்த சிலதியர்கள் அரசியினது திருவடியை வருடி நிற்கின்றார்கள். அவட்கு ஆற்றாமை மிகுந்ததினாலே, நும் இன்னுயிர்த் தலைவர் விரைவில் வந்து நும்மை அடைகுவர் எனப் பலவாறாக அவர்கள் இன்னுரை இயம்பியும், அவைகளைக் கருத்துட் கொள்ளாளாய் மிகக் கலங்கி, கட்டிலின் திரையிலே மெழுகுசெய் படத்தில் சந்திரனோடு பிரிவின்றி அமைத்திருக்கும் உரோகிணியைப் பார்த்து நெட்டுயிர்க்கின்றாள். கடைக்கண்ணில் கண்ணீர் மல்கித் ததும்பி வழிகின்றது. அதனைத் தன் விரலிற் சேர்த்தித் துளி துளியாகத் தெளித்து, தனிமையாகப் போக்கருந் துயரப்புணரியில் அழுந்திக் கிடக்கின்றாள். நன்று; இத்துணைத் துன்பத்திற்குக் காரணமான அரசன் யாண்டுளன்?

அரசன் இருக்குமிடத்தை அறிவுறுத்தற்குப் புலவர் நாட்டைக் கடந்து வெகு தூரத்திற்கு நம்மை இட்டுக்கொண்டு செல்கின்றார். அங்கே பகைப்புலத்திலே கார் காலத்துப் பாசறைக்கண்ணே இருக்கின்றான் அரசியின் காதற்கணவன். இந் நள்ளிரவில் இனிய கனாக்கண்டு நித்திரை செய்துகொண்டிருக்கின்றானா? இல்லை. அவனும் தன் தலைவியை நினைத்துக் காமவசத்தனாய் உழல்கின்றானா? இல்லை; இல்லை. அவ்வினிய செயலுக்கு இப்பொழுது இவன் உடன்படான் என்று அறிக. யானையொடு மலைந்து வென்றி கொண்ட வீரர்களது விழுப்புண்களைக் கண்டு அவற்றைப் பரிகரித்தற்குப் புறம்பே போதருகின்றான். வடதிசைக் கண்ணிருந்து வருகின்ற குளிர்ந்த காற்றிற்கு எதிர்ப்பட்ட விளக்கினது சுடர் தெற்காகச் சாய்ந்து எரிகின்றது. தனது தோளிலிருந்து நழுவி வீழ்ந்த துகிலை ஒரு பக்கத்தே அணைத்துக்கொண்டு, தனது உறை கழித்த வாளினை ஏந்தி வருபவன் தோளிலே தன் கையை அமைதியோடு சேர்த்தி யுள்ளான். இங்ஙனம் நடக்கும்போது அவன் யுத்தத்திற்குச் சன்னத்தனாய் இருப்பதைத் தெரிவிப்பன போலச் சேணமிட்ட குதிரைகள், மழைத்துளியை உதறிப் போகட்டுக் கனைக்கின்றன. தனக்கு முன்னாலே செல்கின்ற சேனாதிபதி புண்பட்ட வீரரை முறையே காட்ட, அவர்களுக்கு அகமலர்ச்சி யுண்டாகும் வண்ணம் சுமுகனாய் இன்சொற் சொல்லித் தன்னுயிரினுமினியராகிய சிலரோடு பாசறைப் புறத்தே திரிதருகின்றான்.

இவ்வண்ணமா யுள்ளது தலைவி தலைவனது நிலைமை. இதனைக் கண்ணுற்றவர்களும் யாவர்தாம் போர் நன்முடிவெய்தப்பெற்று அரசன் விரைந்து திரும்புதலை விரும்பாதவர்?

செய்யுள் நலம்

இதுவே செய்யுளிற் குறித்துள்ள பொருள். இனி செய்யுளினது நலத்தைச் சிறிது நோக்குவோம். பாட்டிற் சொல்லக்கருதிய தலைமைப் பொருளைப் பலவேறு பிரிவுபடுத்துச் சிதைவுறுக்காமல் ஒருமைப்படுத்தி யாவரும் எளிதின் உணரக் கூடிய இயல்பும் இனிமையும் பெறும்படி அமைத்த ஆற்றலும், அவ்விஷயத்தைத் தோற்றுவாய் செய்து சிறிதும் இடர்ப்படாமல் செய்யுட் போக்கிலேயே வளர்த்து முதிர்ச்சியடைவித்த திறனும், செய்யுட்பொருள் நிகழ்தற்கு இடனாகிச் செய்யுட்குத் துணையாயமைந்த இயற்கையினது நலன்களை உண்மையின் வழாமல் மனங் களிப்ப வருணித்த அருஞ்செயலும், கருதிய பொருள் கற்பார் மனத்திற் பதிந்துகிடந்து இன்புறுவித்தலையே வேண்டி, அதற்கேப்ப ஒவ்வொரு வரியையும் அமைத்த கூர்த்த அறிவும், சுவையறி நுட்பமும், பெரிதும் வியக்கற் பாலனவேயாம்.

பிற்கால நூல்களிற் பயிற்சி மிக்குள்ளானொருவன் இச்செய்யுளைக் கற்பானாயின் அவன் காணும் வேறுபாடு மிகுதியாயிருக்குமென்பதில் ஐயமில்லை.

பிற்காலச் செய்யுட்களிற் பெரும்பாலன எதுகை மோனையாதி கட்டுக்களினாற் பிணிவுறுக்கப்பட்டு,பொருள் வளமின்றி, மிகைபடக்கூறல், கூறியது கூறல் என்பவைகளுக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளும்படி உள்ளன. அவை கவிதையினது உண்மை இயல்பறியாது சுவை யில்லாத சொற்களை இடர் படுத்துப் புணர்த்தி யாக்கப்பட்டவைகளே. ‘சொன்னயமும் பொருணயமும் தொனி நயமும் துறுமி விளங்கா நின்ற” என்று ஆக்கியோனே எழுதின முகவுரைகளிற் காணலாமன்றி, செய்யுள் நூலினுள்ளெ இவைகளைக் காண்பது அரிதினுமரிது. ஓசை நயத்தில் இவ்வகைச் செய்யுட்களிற் காண்பவை யெல்லாம் எதுகையும் மோனையும் முறைப்பட வரலேயாம். இவ்வித விதிகட்கு உட்பட்டமையால், இவை ஓசை வேறுபாடின்றி ஒரே ஓசையினையுடையவாய் கற்போர் மனத்தினைச் சலிப்படையச் செய்கின்றன. சங்கச் செய்யுட்களோ வெனில், பொருள் வளத்தைப் பெரிதுங் கருதி, பொருட்கேற்பச் சொற்களையமைத்து, சொற்களிலும் சுவையுடைய சொற்களையே பிரயோகிக்கப்படுத்தி, பொருட்பொருத்தமுற ஓசையினை அடிக்கடி வேறுபடுத்தி, கற்றார் மனம் களிகூர்ந்து தளிர்க்கும் வண்ணம் இயற்றப்பட்டனவாகும். நமது நெடுநல்வாடையில் மிலேச்சர்கள் கட்குடித்து வெறிகொண்டு மழையில் விரைவாக இறுமாந்த நெஞ்சினர்களாகத் திரிகின்றதனை,

முடலை யாக்கை முழுவலி மாக்கள்
வண்டுமூசு தேறல் மாந்தி மகிழ்சிறந்து
துவலைத்தண்டுளி பேணார் பகலிறந்து
இருகோட் டறுவையர் வேண்டுவயிற் றிரிதர

என்ற அடிகள் குறிப்பிடுகின்றன. இவ்வடிகள் விரைந்து இறுமாந்து செல்லும் நடையைச் செவ்விதில் புலப்படுத்துகின்றமை காண்க. நெடுநல்வாடையிற் சுவையுடைச் சொற்களை ஆசிரியர் பிரயோகித்திருக்கின்றார் என்பதை,

அகலிரு விசும்பீற் றுவலை கற்ப
கதிர்வணங்க, பண்ணுமுறை நிறுப்ப,
சிலம்பி வானூல் வலந்தன தூங்க,
நன்னுதல் உலறிய சின்மெல் லோதி,
முகன் அமர்ந்து

முதலிய உதாரணங்களால் அறிக.

வடமொழிக் கலப்பும் பிற்றைக்காலத்து நூல்களில் மிகுதியாகக் காணப்படும். சங்க நூல்களிலே, பொதுவாக நூற்றுக்கு ஐந்து விழுக்காட்டிற்குமேற் காணப் பெறுவதில்லை. நெடுநல்வாடையில் சற்றேறக்குறைய 610 முழுப்பதங்கள் இருக்கின்றன. இவைகளில் சுமார் 50 வடமொழிச் சொற்களும் பிராகிருதச் சொற்களும் காணப்படுகின்றன. ஆகவே இங்கே நூற்றுக்கு எட்டு வீதந்தான் பிற மொழிச் சொற்கள் உள்ளன வென்பது போதரும்.

பிற்றைக்காலத்து நூல்களிலே அழகு செய்வனவாக கருதப்படுகின்ற அலங்கார வகைகள் மிகுதியுங் காணப்படுகின்றன. அவைகள் உண்மையான செய்யுட்களை சுவைத்தறிந்த ஒருவனுக்கு மிகவும் அருவருப்பைத் தருகின்றன. உண்மையின் வழுவியும் சில விடங்களில் உண்மைக்கு முற்று மாறாகவும் பொருளினது தகுதியை நோக்காமலும், உலகின் கண்ணுள்ள பொய்களையெல்லாந் திரட்டிக் கவிஞர்கள் அலங்காரம் கற்பிக்கின்றனர்; இயற்கை வனப்பின்கண் ஈடுபட்டு நூலியற்றினாரல்லர்; உயர்வு நவிற்சியணியையே சிறந்ததாகக் கொண்டாடுவர். சங்க இலக்கியங்களிலே பயின்று வரும் அணிகளெல்லாம் உண்மையின் வழுவுதல் இன்று. உயர்வு நவிற்சியைக் காண்பது துர்லபம். பொருளினது தகுதிக்கு ஏற்ப உவமானங்கள் காணப்படும். பசும்புற் றரையிலே வெள்ளிய மலர்களை ஆங்காங்குப் பெய்தவிடத்து அது எவ்விதமாய் ஒருவனை இன்புறுத்துமோ அவ்விதமாகவே சங்க நூல்களிற் காணப்படும் அணிகளும் இன்புறுத்தும். சங்கப் புலவர்கள் இயற்கை வனப்பினை நன்கு ஆராய்ந்தவரென்பது தெள்ளிதிற் புலப்படும். அக்காலத்துக் கவிஞர்கள் கூறும் உவமானங்களைக் கேட்டமாத்திரத்தில் பெரியதோர் வியப்புண்டாவதன்றி மனோபாவக வுணர்ச்சியும் கூர்ந்து நுண்மை யடையும். ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட நூலிலே 17 உவமானங்கள் ஆசிரியர் தருகின்றார். அதில் ஒவ்வொன்றும் மிக அழகியதாக அமைந்துள்ளன. உதாரணமாக,

ஆறுகிடத் தன்ன அகனெடுந் தெருவில்,
கொள்ளுறழ் நறுங்கற் பலகூட்டு மறுக

முதலியவைகளைக் காண்க. தலைவனைக் காணப் பெறாது வருந்திக் கவினழிந்து கிடக்கும் தலைவிக்கு,

புனையா ஓவியங் கடுப்ப

என உவமை கூறினார். கம்பர் பெருமானும் இவ்வித சந்தர்ப்பத்தில்,

ஓவியம் புகை யுண்டதே யொக்கின்ற வுருவான்

என்று கூறுகின்றனர். இவ்விரண்டினது தாரதம்மி யத்தை துலைநாவன்ன மனநிலையோடு சீர்தூக்கியறிக.

செய்யுள் நடையினும் சங்ககாலச் செய்யுளும் பிற்காலச் செய்யுளும் தம்முள் மிகுதியும் வேறுபட்டுக் காணப்படும். பல்வகையவாகிய அணிகளையும் பூண்ட ஒரு மங்கை உலகிலுள்ள மக்களெல்லோரும் தன்னையே உற்று நோக்கிக்கொண்டிருப்பதாக எண்ணிக் கர்வத்தினால் மீதூரப் பட்டுக் குறுகுறு எனத் திரியும் நடைக்கும், அழகு மிகுந்த கற்புடைய மங்கை யொருத்தி கர்வமின்றிக் கண்டார் மனம் கனிவுறும்படி, எனினும் வேற்றெண்ணம் கொள்ள முடியாத வண்ணம் பரிசுத்தமான தோற்றத்தையுங் கொண்டு நடக்கும் நடைக்கும் எத்துணை வேறுபாடு உண்டோ, அத்துணை வேறுபாடு இவ்விருகாலத்துச் செய்யுள்கட்கும் உண்டாம். பிற்காலத்துச் செய்யுட்களிலே கருதிய பொருளைத் திறம்பட உரைப்பர்; ஆனால் சொல்லும் முறை மனத்தினை வசீகரிப்பதில்லை. அவை பார்ப்பதற்குத் தளுக்காக மிளிரும்; ஆனால் உண்மையினுயர்ந்த ரத்னங்களுக்குரிய நீர், ஒளி முதலியன அவற்றிற் காணக் கிடையா. அழகாகச் செய்யப்பட்டு அணிகலன்கள் பூட்டி நிரப்பிய மரப்பாவை ஒன்றினை யந்திரக் கயிற்றினால் ஆட்டுவிப்பது போலாம் அச்செய்யுளின் திறம். அவைகட்கு உயிரில்லை யென்றே சொல்லலாம்.

செய்யுளின் ஓசையை நன்கு கவனித்தால், அது செங்கீதத்தில் மிகுதியும் பயிலாது சிறிது பயின்று மெல்லிய குரலோடு ஒருவன் பாடுவானாயின் அஃது எத்துணை இன்பம் பயக்குமோ அத்துணை இன்பந்தான் தருவதாயுள்ளது. சங்கச் செய்யுள்களெல்லாம் சுவையூறிய செழுந்தமிழ்ச் சொற்களால் அமைக்கப்பட்டு விழுமிய ஓசையுடையன வாயிருக்கின்றன. செல்லாறுதோறும் பொருளாழ்ந்து, கற்றோர்க்கு இதயங் களிக்கும் வண்ணம் இயற்றப்பட்டிருக்கின்றன.ஓசையைக் கருதினால், அது சங்கீத ஞானமும் பயிற்சியும் நிரம்பிய ஒருவனிடத்துக் கணகணவென்று சாரீரம் பேசுவது போல், மிக்க இனிமையாய், இழைந்து செல்வதால், அழகாய் இருக்கின்றது; கேட்கக் கேட்க ஆசை கிளருகின்றது. உதாரணமாக,

பின்னமை நெடுவீழ் தாழத் துணைதுறந்து
நன்னுதல் உலறிய சின்மெல் லோதி
நெடுநீர் வார்குழை களைந்தென குறுங்கண்,
வாயுறை யழுத்திய வறிதுவிழ் காதிற்
பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை
வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து
வாளைப் பகுவாய் கடுப்ப வணக்குறுத்துச்
செவ்விரற் கொளீ இய செங்கேழ் விளக்கத்து
... ...
.... ... புனையா ஓவியங் கடுப்ப.

என்று வரும் அடிகளை உற்று நோக்குக.

பிற்றைக் காலத்து நூல்களிற் பலவும் சமயவுணர்ச்சி மிக்க நாளிற் றோன்றினமையாலே அதன் பேராற்றலால் செய்யுட்களெல்லாம் வலித்து ஈர்க்கப்பட்டு அதன் வழிச்செல்கின்றன. பண்டைக்கால நூல்களிலே இவ்வியல்பு காணக் கிடையாது. இதனால் தமிழ்மொழிக் குண்டாகிய ஏற்றமுந் தாழ்வும் இங்கே விரிக்கிற் பெருகும்.

பண்டைக்கால வழக்க வொழுக்கமும் நாகரிகமும்

இனி, இந்நூலிலிருந்து உணரத்தக்க பண்டைக் காலத்து வழக்க வொழுக்கமும் நாகரிகமும் சிறிது நோக்குவோம். அக்காலத்தில் சிற்ப சாஸ்திரம் வல்லுநர் நல்ல மங்கள சமயம் பார்த்து அந்நேரத்தில் திக்குத் தேவதைகளை வணங்கி மனைவகுத்து வந்தனர். அரண்மனை முதலியன மிகவும் உயர்ந்தனவாய், சாளரங்களுள்ள மேல்நிலைகள் பல உடையனவாய் கட்டப்பட்டன. விசிறி முதலியன இயற்றுதலிலும் இடைவெளி சிறிதுமின்றிப் பலகைகளைப் புணர்த்து முறைமையிலும் கைவல்லுநர்களாய் இருந்தார்கள். வண்ணங்கொண்டு படம் முதலியன தீட்டுவதினும் சிறந்தவர்களாய் இருந்தார்களென்பது

புனையா ஓவியங் கடுப்ப

என்பதனானும்,

மெழுகுசெய் படமிசை

என்பதனானும் அறியக் கிடக்கின்றது. கிரேக்கர் முதலிய பிறதேசத்தாரோடு அக்காலத்தவர்கள் பழகியிருந்தார்கள்; கிரேக்கர் முதலியோர் இங்கே வியாபாரத்திற்காக வருவது வழக்கமா யிருந்தது. இது

வடவர் தந்த வான்கேழ் வட்டம்
யவன ரியற்றிய வினைமாண் பாவை

என்ற அடிகளால் புலப்படுகின்றது. சங்கீதத்தினும் நாட்டியத்தினும் அவர்கள் பயிற்சி மிக்குடையவர்களாயிருந்தனர்.

ஆடல் மகளிர் பாடல்கொளப் புணர்மார்

என்ற அடியால் இது விளங்குகின்றது. அக்காலத்திலுள்ளவர் வான சாஸ்திரம் முதலியவற்றை நுட்பமாய் அறிந்திருந்தனர்.

... .... .... மாதிரம்,
விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
இருகோற் குறிநிலை வழுக்காது குடக்கேர்பு
ஒருதிறஞ் சாரா அரைநா ளமையத்து

என்றும்,

செல்வனொடு நிலைஇய, வுரோகிணி நினைவனள் நோக்கி

என்றும்,

நாளொடும் பெயரிய கோளமை விழுமரத்து

என்றும் வருவனவற்றால் இது உணரப்படும். அரசன் போர் வீரரை வித்தியாசம் பாராட்டாது சமமாய் நடத்தி வந்தானென்பதும் போரிலே புண்பட்ட வீரர்கள் புறக்கணிக்கப் படாராய்த் தக்கவாறு பாதுகாக்கப்பட்டு வந்தார்களென்பதும் நூலின் கடையடிகளால் விளங்குகின்றன. மக்கள் தாமும் குளிர் காலத்து நெருப்பெழுப்பிக் குளிர் காய்வது இருட்டியவுடன் பெண்கள் விளக்கினை நெல்லும் மலருந் தூவிக் கைதொழுதலும் அக்காலத்து வழக்கம். இதனை,

பருவாய்த் தடவிற் செந்நெருப் பார

என்றும்,

நெல்லு மலருந் தூஉய்க் கை தொழுது

என்றும் வரும் அடிகளால் உணரலாம்.

உரையாசிரியர் நச்சினார்க்கினியர்

இனி, இந்நூற்கு உரைசெய்த நச்சினார்க்கினியரைப் பற்றிச் சிலவார்த்தைகள் சொல்லி நக்கீரனாரது சரித்திரத்தைக் கூறுகின்றேன். நச்சினார்க்கினியர் 15-ம் நூற்றாண்டினிறுதியில் அல்லது 16-ம் நூற்றாண்டில் இருந்தவரென்பது பலருடைய கருத்தாகும். அவர் மதுரைவாசியாகிய ஓர் அந்தணர். தென்மொழியிலும் வடமொழியிலும் பயிற்சி மிக்குள்ளவர். அவரது உரைத்திறமும் கூர்த்த அறிவும் பெரிதும் வியக்கற்பாலவாம். அவர் பத்துப் பாட்டுத் தவிர, கலித்தொகை, சிந்தாமணி, தொல்காப்பியம் முதலிய அரும்பெரு நூல்களுக்குச் சிறந்த உரைசெய்திருக்கின்றார். இத்துணைப் பெருமையாளராகிய இவர் பத்துப் பாட்டின்கண் ஒரோ விடங்களில் செய்யுளை அலைத்து முன்பின்னாகக் கூட்டிச் சொன்முடிபு காட்டிப் பொருள் கொள்ளுவர்.இதனை மாட்டு என்பதன்பா லாக்குவர். இது செய்யுளியற்கைக்கு மாறாதல் நன்குணரப்படும். இந்நெடுநல்வாடையிலும் ஏறக்குறைய பத்து இடங்களில் ஏலாவுரை உரைத்துள்ளார்.

ஆசிரியர் நக்கீரர்

இனி நக்கீரரைப் பற்றிச் சிறிது கூறி எனது ஆராய்ச்சியை முடிக்கின்றேன். [*2] இவர் மதுரைக்கணக்காயனார் மகனா ரென்றே பெரும்பாலும் குறிக்கப்படுவர். கணக்காயர் என்போர் நூல் கற்பிக்கும் ஆசிரியர். ‘கணக்காயர் ஒத்துரைப்போர்’ என்பது திவாகரம். எனவே, இவர் தந்தையார் நூல் கற்பிக்கும் ஆசிரியருள் ஒருவராயிருந்தாரென்பது தெளிவாம். இவர் சங்கறுப்போர் குலத்திலுள்ளோரென்று சொல்லப்படுவர். அதற்கு ஆதாரம் திருவிளையாடற் புராணம் முதலியன.

இக்குலத்தவர் முற்காலத்தே தனியே குடியிருந்து வந்தவரென்பது மணிமேகலையில்

விலங்கரம் பொருஉம் வெள் வளை போழ்நரோ
டிலங்குமணி வினைஞ ரிரீ இய மறுகும்

என்ற அடிகளால் விளங்குகின்றது. அகநானூற்றிலே 24-ம் பாட்டிலே பிராமணரில் ஒருவகையினர் இத்தொழிலை முற்காலத்துச் செய்தார்க ளென்று வெளிப்படுகின்றது. நக்கீரர் என்ற சொல் ‘வாக்மி’ என்னும் பொருளில் வந்த வடமொழித் திரிபானபெயர் என்று செந்தமிழ்ப் பத்திராசிரியர் கருதுகின்றார். கீர்- சொல். இனி இவரியற்றிய நூல்கள் முருகாற்றுப்படையும் நெடுநல்வாடையும், பதினொராந் திருமுறையிற் சில பிரபந்தங்களுமாம். இவரது பெருமையை இறைவன் இயற்றிய செய்யுளிற் பிழை கண்ட வழியும் குற்றம் குற்றமேயென்று சாதித்து, பின் இறைவன் பெருமையை யுணர்ந்து அடியராயினாரென்று வரும் கதை நன்கு விளக்குகின்றது. இக்கதைதான் அவரது அழிவில்லாப் பெரும் புகழுக்கு அறிகுறியாக நின்று நிலவுகின்றது. நெடுநல்வாடையின் ஆசிரியரது புகழினை எடுத்துப்பேசி முடிக்குந் திறம் அரிய தொன்றாம். ஆதலின், இம்மட்டோடு நிறுத்துகின்றேன்.

இக்கட்டுரையின் கண்ணே, பாட்டுடைத் தலைவன் சிறப்பும், அவன் இருந்து அரசியற்றிய காலமும், நக்கீரனார் இச்செய்யுளை இயற்றிய காலமும், செய்யுளின் தலைக்குறிப்பின் பொருளும், அழகும், நூலிற் பொதிந்த பொருளும், செய்யுளின் நலங் கூறுமுகத்தால் பண்டைக்காலச் செய்யுட்கும் பிற்பட்ட காலத்துச் செய்யுட்கும் உள்ள வேறுபாடுகளும், நூலியற்றிய காலத்து வழக்க வொழுக்கமும் நாகரிகமும் ஒருவாறு ஆராய்ச்சி செய்யப்பட்டன. பின், நச்சினார்க்கினியர் உரைத்திறமும் நக்கீரரது சரித்திரமும் பெருமையும் குறிப்பிக்கப்பட்டன.

$$$

அடிக்குறிப்பு மேற்கோள்கள்:

[1]. இங்குக் குறித்த முறைகளெல்லாம் வெற்றூகங்களேயாம். ஆதாரம் எதுவும் இல்லை.

[2] முருகாற்றுப்படை பற்றி யான் நிகழ்த்தியுள்ள ஆராய்ச்சியில் நக்கீரரைக் குறித்து விரிவாக எழுதியுள்ளேன்.

(தொடர்கிறது)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s