-மகாகவி பாரதி

மகாகவி பாரதியின் பக்திப்பாடல்களில் திருமகள் மீதான நான்கு பாடல்கள் (56- 59) இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. செல்வத்தின் மகிமையை வெளிப்படுத்தும் கவிதைகள் இவை…
பக்திப் பாடல்கள்
56. திருக்காதல்
திருவே! நினைக்காதல் கொண் டேனே – நினது திரு
உருவே மறவாதிருந் தேனே – பல திசையில்
தேடித் திரிந்திளைத் தேனே – நினக்கும் மனம்
வாடித் தினங்களைத் தேனே – அடி, நினது
பருவம் பொறுத்திருந் தேனே – மிகவும் நம்பிக்
கருவம் படைத்திருந் தேனே – இடை நடுவில்
பையச் சதிகள்செய் தாயே – அதனிலுமென்
மையல் வளர்தல் கண்டாயே – அமுத மழை
பெய்யக் கடைக்கண்நல் காயே – நினதருளில்
உய்யக் கருணைசெய் வாயே – பெருமை கொண்டு
வையந் தழைக்கவைப் பேனே – அமரயுகஞ்
செய்யத் துணிந்துநிற் பேனே – அடியெனது
தேனே! என்திரு கண்ணே – எனையுகந்து
தானே! வருந் திருப் – பெண்ணே
$$$
57. திருவேட்கை
ராகம் – நாட்டை; தாளம் – சதுஸ்ர ஏகம்
மலரின் மேவு திருவே! – உன்மேல்
மையல் பொங்கி நின்றேன்,
நிலவு செய்யும் முகமும் – காண்பார்
நினைவ ழிக்கும் விழியும்
கலக லென்ற மொழியும் – தெய்வக்
களிது லங்கு நகையும்,
இலகு செல்வ வடிவும் – கண்டுன்
இன்பம் வேண்டு கின்றேன். 1
கமல மேவும் திருவே! -நின்மேல்
காத லாகி நின்றேன்.
குமரி நினை இங்கே – பெற்றோர்
கோடி யின்ப முற்றார்.
அமரர் போல வாழ்வேன் – என்மேல்
அன்பு கொள்வை யாயின்,
இமய வெற்பின் மோத – நின்மேல்
இசைகள் பாடி வாழ்வேன். 2
வாணி தன்னை என்றும் – நினது
வரிசை பாட வைப்பேன்!
நாணி யேக லாமோ? – என்னை
நன்க றிந்தி லாயோ?
பேணி வையமெல்லாம் – நன்மை
பெருக வைக்கும் விரதம்
பூணு மைந்த ரெல்லாம் – கண்ணன்
பொறிக ளாவ ரன்றோ? 3
பொன்னும் நல்ல மணியும் – சுடர்செய்
பூண்க ளேந்தி வந்தாய்!
மின்னு நின்றன் வடிவிற் – பணிகள்
மேவி நிற்கும் அழகை
என்னு ரைப்ப னேடீ – திருவே!
என்னு யிர்க்கொ ரமுதே!
நின்னை மார்பு சேரத் – தழுவி
நிக ரிலாது வாழ்வேன். 4
செல்வ மெட்டு மெய்தி – நின்னாற்
செம்மை யேறி வாழ்வேன்,
இல்லை என்ற கொடுமை – உலகில்
இல்லை யாக வைப்பேன்,
முல்லை போன்ற முறுவல் – காட்டி,
மோக வாதை நீக்கி,
எல்லை யற்ற சுவையே! – எனை நீ
என்றும் வாழ வைப்பாய். 5
$$$
58 திருமகள் துதி
ராகம் – சக்ரவாகம்; தாளம் – திஸ்ர ஏகம்
நித்தமுனை வேண்டி மனம்
நினைப்ப தெல்லாம் நீயாய்ப்
பித்தனைப் போல் வாழ்வதிலே
பெருமை யுண்டோ? திருவே!
சித்தவுறுதி கொண்டிருந்தார்
செய்கை யெல்லாம் வெற்றி கொண்டே
உத்தம நிலை சேர்வ ரென்றே
உயர்ந்த வேத முரைப்ப தெல்லாம்,
சுத்த வெறும் பொய்யோடீ?
சுடர் மணியே! திருவே!
மெத்த மையல் கொண்டு விட்டேன்
மேவிடுவாய், திருவே! 1
உன்னையன்றி இன்ப முண்டோ
உலக மிசை வேறே?
பொன்னை வடிவென் றுடையாய்
புத்தமுதே, திருவே!
மின்னொளி தருநன் மணிகள்
மேடை யுயர்ந்த மாளிகைகள்
வண்ண முடைய தாமரைப் பூ
மணிக்குள முள்ள சோலைகளும்;
அன்னம் நறுநெய் பாலும்
அதிசயமாத் தருவாய்!
நின்னருளை வாழ்த்தி என்றும்
நிலைத்திருப்பேன், திருவே! 2
ஆடுகளும் மாடுகளும்
அழகுடைய பரியும்
வீடுகளும் நெடுநிலமும்
விரைவினிலே தருவாய்
ஈடு நினக்கோர் தெய்வமுண்டோ?
எனக்குனை யன்றிச் சரணுமுண்டோ?
வாடு நிலத்தைக் கண்டிரங்கா
மழையினைப் போல் உள்ள முண்டோ?
நாடுமணிச் செல்வ மெல்லாம்
நன்கருள்வாய், திருவே!
பீடுடைய வான் பொருளே
பெருங்களியே, திருவே! 3
$$$
59. திருமகளைச் சரண்புகுதல்
மாதவன் சக்தியினைச் – செய்ய
மலர்வளர் மணியினை வாழ்த்திடுவோம்!
போதுமிவ் வறுமையெலாம் – எந்தப்
போதிலுஞ் சிறுமையின் புகைதனிலே
வேதனைப் படுமனமும் – உயர்
வேதமும் வெறுப்புறச் சோர்மதியும்
வாதனை பொறுக்கவில்லை – அன்னை
மாமக ளடியிணை சரண்புகுவோம். 1
கீழ்களின் அவமதிப்பும் – தொழில்
கெட்டவ ரிணக்கமும் கிணற்றினுள்ளே
மூழ்கிய விளக்கினைப் போல் – செய்யும்
முயற்சியெல் லாங்கெட்டு முடிவதுவும்,
ஏழ்கட லோடியுமோர் – பயன்
எய்திட வழியின்றி இருப்பதுவும்
வீழ்கஇக்கொடு நோய்தான் – வைய
மீதினில் வறுமையோர் கொடுமை யன்றோ? 2
பாற்கட லிடைப் பிறந்தாள் – அது
பயந்தநல் லமுதத்தின் பான்மை கொண்டாள்;
ஏற்குமோர் தாமரைப் பூ – அதில்
இணைமலர்த் திருவடி இசைந்திருப்பாள்;
நாற்கரந் தானுடையாள் – அந்த
நான்கினும் பலவகைத் திருவுடையாள்!
வேற்கரு விழியுடையாள் – செய்ய
மேனியள் பசுமையை விரும்பிடுவாள். 3
நாரணன் மார்பினிலே – அன்பு
நலமுற நித்தமும் இணைந்திருப்பாள்;
தோரணப் பந்தரிலும் – பசுத்
தொழுவிலும் சுடர்மணி மாடத்திலும்,
வீரர்தந் தோளினிலும் – உடல்
வெயர்த்திட உழைப்பவர் தொழில்களிலும்
பாரதி சிரத்தினிலும் – ஒளி
பரவிட வீற்றிருந் தருள் புரிவாள். 4
பொன்னிலும் மணிகளிலும் – நறும்
பூவிலும் சாந்திலும் விளக்கினிலும்,
கன்னியர் நகைப்பினிலும் – செழுங்
காட்டிலும் பொழிலிலும் கழனியிலும்,
முன்னிய துணிவினிலும் – மன்னர்
முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப்
பன்னிநற் புகழ்பாடி – அவள்
பதமலர் வாழ்த்திநற் பதம்பெறுவோம். 5
மண்ணினுட் கனிகளிலும் – மலை
வாய்ப்பிலும் வார்கட லாழத்திலும்,
புண்ணிய வேள்வியிலும் – உயர்
புகழிலும் மதியிலும் புதுமையிலும்
பண்ணுநற் பாவையிலும் – நல்ல
பாட்டிலும் கூத்திலும் படத்தினிலும்
நண்ணிய தேவிதனை – எங்கள்
நாவிலும் மனத்திலும் நாட்டிடுவோம். 6
வெற்றிகொள் படையினிலும் – பல
விநயங்கள் அறிந்தவர் கடையினிலும்,
நற்றவ நடையினிலும் – நல்ல
நாவலர் தேமொழித் தொடரினிலும்
உற்றசெந் திருத்தாயை – நித்தம்
உவகையிற் போற்றியிங் குயர்ந்திடுவோம்;
கற்றபல் கலைகளெல்லாம் – அவள்
கருணைநல் லொளிபெறக் கலிதவிர்ப்போம். 7
$$$