-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
2. நூற்பயன்
.
கலந்தீ சம்போ த்வச்சரித-ஸரித: கில்பிஷரஜோ
தலந்தீ தீகுல்யாஸரணிஷு பதந்தி விஜயதாம்/
திசந்தீ ஸம்ஸார-ப்ரமண பரிதாபோபசமனம்
வஸந்தீ மச்சேதோ ஹ்ரதபுவி சிவானந்தலஹரீ//
.
பெருக்காம் அரனேநின் வரலாற்றில், பாவத்துகள்
அறுப்பாம் அறிவோடைப் பாய்ச்சலாம் வெல்கவே
ஆறுதலாம் பிறவிச்சுழல் பெருந்துயரப் பிணிக்கே
உறுதலாமென் சிந்தையில் சிவகளிப் பேரலையே.
சம்பு என்றழைக்கப்படும் அரனே, உமது வரலாறாகிய (வரல் + ஆறு = வரலாறு) நதியில் இருந்து பெருகுவதாயும், மனிதர்கள் சேர்த்து வைத்திருக்கும் பாவத்துகள் மூட்டைகளை அழிக்கக் கூடியதாகவும், அதற்குத் தேவையான புத்தியை அறிவு ஓடையாகப் பாயச் செய்வதுமாகவும், மீண்டும் மீண்டும் பிறந்து மரிக்கின்ற பிறவிச்சுழலால் ஏற்படுகின்ற பெரிய பிணிக்கு ஆறுதல் அளிக்கும் மாமருந்தாகவும் உள்ள இந்த சிவகளிப் பேரலை, சிவானந்த வெள்ளம் நான் உய்வடையும் பொருட்டு எனது சிந்தையில் தங்குவதாகுக.
சிவானந்த லஹரீ (சிவகளிப் பேரலை) என்ற இந்த நூலின் பயனை, உள்ளடக்கத்தை இந்த 2-வது ஸ்லோகத்தில் மிக அழகாக எடுத்துரைத்துள்ளார் ஸ்ரீ ஆதிசங்கரர்.
பல்லாயிரம் ஆண்டுகளாக பக்தகோடிகளால் உரைக்கப்பட்டு வருகின்ற சிவலீலை எனப்படும் சிவன் சரிதம் என்ற ஆற்றிலிருந்து பாய்ந்து வரக்கூடிய சிற்றோடையாக இந்த நூலை உருவகப்படுத்தியுள்ளார். மனிதர்களின் பாவங்களை அழிப்பதுடன், அவர்களைப் பிறவித் தளையில் இருந்து விடுவிக்கும் மாமருந்தாகவும், அதற்கான அறிவைத் தருவதாகவும் விளங்கும் இந்த நூல், இதனைப் படிப்போர் சிந்தையில் தங்கி, அவர்களுக்குப் பயன் தரும் என்பதையும் உணர்த்தியுள்ளார்.
(அலைகள் தொடரும்)
$$$