-வ.உ.சிதம்பரம் பிள்ளை

7. பூரண சாந்தியை அடைதல்
புறப் பிரபஞ்சத்தில் இடைவிடாத குழப்பமும், மாறுதலும், அமைதியின்மையும் இருக்கின்றன; எல்லாப் பொருள்களின் அகத்திலும் கலைக்கப்படாத சாந்தி இருக்கின்றது; இவ்வாழ்ந்த மௌனத்தில் மெய்ப்பொருள் வசிக்கின்றது.
மனிதன் இவ்விரட்டைத் தன்மையைக் கொண்டிருக்கிறான். புற அமைதியின்மையும் ஆழ்ந்த நித்திய சாந்தியும் ஆகிய இரண்டும் மனிதனுள் இருக்கின்றன.
மிக மிகக் கொடிய புயல்காற்றும் செல்ல முடியாத மௌன ஆழங்கள் சமுத்திரத்தில் இருப்பதுபோல, பாவமும் துக்கமுமாகிய புயல் காற்றுக்கள் ஒருபோதும் கலைக்க முடியாத தூய மௌன ஆழங்கள் மனிதனுடைய அகத்தில் இருக்கின்றன; இந்த மௌனத்தை அடைந்து அதில் அறிவோடு வாழ்தலே சாந்தி.
புற உலகத்தில் வேற்றுமை நிறைந்திருக்கிறது; ஆனால், பிரபஞ்சத்தின் அகத்தில் உடைக்கப்படாத ஒற்றுமை நிறைந்திருக்கிறது. மனித ஆத்மா, வேற்றுமையான மனோவெழுச்சியாலும் துயரத்தாலும் கிழிக்கப்பட்டு, பாவமற்ற நிலைமையாகிய ஒற்றுமைக்குக் குருட்டுத்தனமாகப் போய்ச் சேர்கின்றது; இந்த நிலைமையை அடைந்து, அதில் அறிவோடு வாழ்தல்தான் சாந்தி.
வெறுப்பு மனித உயிர்களைப் பிரித்து, துன்பப்படுத்தலை வளர்த்து, தேசங்களைக் கொடுமையான யுத்தத்தில் புகுத்தி விடுகின்றது. அப்படியிருந்தும், மனிதர் எல்லாவற்றையும் தழுவிக்கொண்டிருக்கிற ஒரு பூரண அன்பின் இடத்தில் ஒரு சிறிய அளவு நம்பிக்கை மாத்திரம் உடையவராயிருக்கின்றனர்; இதற்குரிய காரணம் அவருக்குத் தெரிவதில்லை, இந்த அன்பை அடைந்து, அதில் அறிவோடு வாழ்தல்தான் சாந்தி.
இந்த அகச்சாந்தி, இந்த மௌனம், இந்த ஒற்றுமை, இந்த அன்பு தேவராஜ்யம்; இந்த இராஜ்யத்தைச் சேர்தல் மிகக் கஷ்டமாயிருக்கிறது; ஏனெனில், தன்னைத் துறந்து சிறு குழந்தைகள்போல் ஆவதற்குச் சித்தமாயிருக்கிறவர் ஒருவரும் இல்லை.
முத்தி வீட்டின் சித்திர வாயில்
மிகவொடுங் கியது; சிறியது; அதனை
உலகப் பிராந்தியால் குருடரா யுள்ள
மூட மனிதரால் காணமுடி யாது;
வாயிலைக் கண்டுளே போக நாடும்
கூரிய பார்வை யாளரும் வாயில்
கதவுதாழ் இடப்பட் டிருப்பதும், திறக்க
முடியா ததுவும் நனிகாண் கின்றனர்;
கதவினுட் புறமுள கனத்த தாழ்கள்
அவா தற் பெருமை, பேராசை, காமமே.
சாந்தி! சாந்தி! என்று மனிதர் சத்தம் இடுகின்றனர்; ஆனால், அதற்கு எதிராக வேற்றுமையையும், அமைதியின்மையையும், சச்சரவையும் காண்கின்றனர். தன்னைத் துறத்தலினின்று பிரிக்க முடியாத ஞானத்திற்கு வேறாக உண்மையானதும் நிலைநிற்கத் தக்கதுமான சாந்தி இருக்க முடியாது.
ஜன சமூக சௌகரியங்களாலும், கணத்திற் கழிந்துபோம் சிற்றின்பங்களாலும், லௌகிகக் காரியங்களின் வெற்றிகளாலும் உண்டாகும் சாந்தி அதன் இயற்கையிலேயே நிலையற்றது; ஆபத்துக் காலத்தில் அழிந்து போகின்றது. முத்தியின் சாந்தி மாத்திரம் எல்லா ஆபத்துக்களிலும் அழியாது நிலை நிற்கின்றது; சுயநயமற்ற அகம்மாத்திரம் முத்தியின் சாந்தியை அடையக்கூடும்.
தூய்மை ஒன்றே அழியாத சாந்தி; தன்னை அடக்கல் அதற்கு வழி; மேன்மேலும் வளர்ந்துகொண்டிருக்கிற ஞான ஒளி யாத்திரிகனை அவன் வழியில் நடத்துகின்றது. ஒழுக்க நெறியில் பிரவேசித்த உடனே அவ்வொளி சிறிது அடையப்படுகின்றது; ஆனால், அது ‘யான்’ என்பது ஒழிந்து ஒரு மாசற்ற வாழ்க்கையிலே பூரணமாக அடையப்படுகின்றது.
தன்னைநே சிக்கும் தவறையும் வாழ்க்கையிற்
கொண்டுள ஆசைக் கூறையும் வெல்லலும்,
ஆழ்ந்தகா மத்தை அகத்தைவிட் டோட்டலும்,
அகச்சச் சரவை அகத்தினின் றகற்றலும்
உண்மைச் சாந்தியை உண்டாக் கும்மே.
வாசிப்பவர்களே! ஒருபோதும் மங்காத ஒளியையும், ஒருபோதும் முடிவுறாத ஆனந்தத்தையும், அசைக்க முடியாத சாந்தியையும் அனுபவிக்க விரும்புவீர்களாயின், உங்கள் பாவங்களையும், உங்கள் துக்கங்களையும், உங்கள் கவலைகளையும், உங்கள் குழப்பங்களையும் அடியோடு விட விரும்புவீர்களாயின், இவ்விரட்சிப்பையும், இவ்வுயர்ந்த பெருமை பொருந்திய வாழ்க்கையையும் அடைய விரும்புவீர்களாயின், உங்களை நீங்கள் வெல்லுங்கள். ஒவ்வொரு நினைப்பும், ஒவ்வொரு மனோவெழுச்சியும், ஒவ்வொரு விருப்பமும் உங்களுள் வசிக்கின்ற தெய்வ சக்திக்குப் பூரணமாகக் கீழ்ப்படியுமாறு செய்யுங்கள். இதைத் தவிர சாந்திக்கு வேறு வழி இல்லை; இதன் மூலமாக நடப்பதற்கு நீங்கள் மறுப்பீர்களாயின், நீங்கள் அதிகமாகச் செய்யும் பிரார்த்தனையும், நீங்கள் மதச் சடங்குகளைச் சரியாகச் செய்தலும், பயனற்றவையும் உபயோகமற்றவையாயும் தீரும். தேவர்களாவது, தேவ தூதர்களாவது உங்களுக்கு உதவி செய்ய முடியாது. ‘யான்’ என்பதை வென்றவனுக்கு மட்டும்தான் அவனுடைய புதியதும் அழியாததுமான பெயர் எழுதப்பட்ட நல்ல வாழ்க்கை நல்கப்படுகின்றது.
புறப்பொருள்களிலிருந்து, பொறியின்பங்களிலிருந்து, புத்திவாதங்களிலிருந்து, உலகக் கிளர்ச்சிகளிலும் சந்தடிகளிலுமிருந்து, சிறிது நேரத்திற்கு வெளியே வாருங்கள், உங்கள் அகங்களின் உள்ளுள்ளேயிருக்கிற அரங்குட் செல்லுங்கள்; அங்கே சகல சுயநய விருப்பங்களின் அசுத்தப் பிரதேசங்களினின்றும் விடுபட்டு ஓர் ஆழ்ந்த மௌனத்தை, ஒரு தூய அமைதியை ஓர் இன்பகரமான வாழ்வைக் காண்பீர்கள்; அந்தத் தூய இடத்தில் நீங்கள் சிறிது நேரம் ஒய்வாயிருந்து தியானம் செய்வீர்களாயின், மெய்ப்பொருளின் குற்றமற்ற ஞானக்கண் உள்ளுள்ளே திறக்கும்; பொருள்களையெல்லாம் அவற்றின் உண்மையான தன்மையில் நீங்கள் பார்ப்பீர்கள். உங்கள் உள்ளேயிருக்கிற இந்தத் தூய இடம். உங்களுடைய உண்மையான அழிவில்லாத ஆத்மா. அஃது உங்கள் உள்ளே இருக்கிற தெய்வம்; நீங்கள் அதுவானபோது, “சரியான மன உடையைத் தரித்திருக்கிறீர்கள்” என்று சொல்லப்படுவீர்கள். அதுதான் சாந்தியின் வீடு; ஞானத்தின் கோவில்; மரணமின்மையின் வாசஸ்தானம். இந்த உள்நோக்கிய ஓய்விடத்திற்கு, உண்மைக் காட்சிமலைக்கு வேறாக உண்மைச் சாந்தியாவது, மெய்ஞ்ஞானமாவது இருக்க முடியாது. அந்த இடத்தில் நீங்கள் ஒரு நிமிஷம், ஒரு மணி, ஒரு நாள் தங்க முடியுமானால், அங்கு நீங்கள் எக்காலத்திலும் தங்கியிருக்க முடியும்.
உங்களுடைய சகல பாவங்களும் துக்கங்களும், உங்களுடைய சகல அச்சங்களும் கவலைகளும் உங்களுக்கே சொந்தமானவை; அவற்றை நீங்கள் பற்றிக்கொண்டிருக்க அல்லது விட்டுவிட முடியும். உங்கள் சொந்த விருப்பப்படி உங்கள் அமைதியின்மையைப் பற்றிக் கொள்ளுங்கள்.; அல்லது உங்கள் சொந்த விருப்பப்படி நிலையான சாந்தியை அடையுங்கள். பாவத்தை உங்களுக்காக வேறொருவர் விட முடியாது; அதனை நீங்கள்தான் விட வேண்டும். மிக மிகப் பெரிய ஆசிரியரும் தமக்காக மெய்ப்பொருள் வழியில் நடப்பதையும், அவ்வழியை உங்களுக்குக் காட்டுவதையும் தவிர அதிகமாக ஒன்றும் செய்ய முடியாது; உங்களுக்காக நீங்கள்தான் அவ்வழியில் நடக்க வேண்டும். சாந்தத்தைக் கெடுப்பதும், ஆத்மாவைப் பந்தப்படுத்தி யிருப்பதுமான கட்டை உங்கள் சொந்த முயற்சிகளாலே அவிழ்த்து, நீங்கள் விடுதலையும் சாந்தியும் அடைய முடியும்.
தெய்வ சாந்தி, தெய்வ ஆனந்தம். இவற்றின் தேவ தூதர்கள் உங்கள் பக்கத்திலே எப்பொழுதும் இருக்கிறார்கள்; நீங்கள் அவர்களைக் காணாததற்கும், அவர்கள் பேச்சைக் கேளாததற்கும், அவர்களோடு வசியாததற்கும் காரணம், நீங்கள் அவர்களினின்று ஒளிந்துகொண்டு, உள்ளத்திலிருக்கிற தீய பிசாசுகளின் கூட்டுறவை விரும்புவதே.
நீங்கள் எவ்வாறிருக்க ஆசை கொண்டுள்ளீர்களோ, நீங்கள் எவ்வாறிருக்க விரும்புகிறீர்களோ, நீங்கள் எவ்வாறிருக்கக் கோருகிறீர்களோ, அவ்வாறிருக்கின்றீர்கள். உங்களைத் தூய்மைப்படுத்த நீங்கள் தொடங்கலாம்; அவ்வாறு செய்வதனால் நீங்கள் சாந்தியை அடையலாம். அல்லது உங்களைத் தூய்மைப்படுத்த நீங்கள் மறுக்கலாம்; முன்போலவே துன்பத்தை அனுபவதித்துக் கொண்டிருக்கலாம்.
நீங்கள் புறப்படுங்கள்; வாழ்க்கையின் காய்ச்சலையும் எரிச்சலையும் விட்டு வெளியே வாருங்கள்; ‘யான்’ என்பதன் சுடுகிற வெப்பத்தை விட்டு வெளியேறுங்கள்; உங்களை அமைதிப்படுத்தி, புதுப்பித்து, மீட்டும் சாந்தியின் காற்றுக்கள் வீசுகின்ற அகத்தின் அமைதியிடத்துள் புகுங்கள்.
பாவமும் துன்பமுமாகிய புயல்களை விட்டு வெளியே வாருங்கள். சாந்தியாகிய முத்தி வீடு அவ்வளவு சமீபத்தில் இருக்கும்போது, ஏன் தொந்தரவுப் படுகின்றீர்கள்? புயலிற் சுழலுகின்றீர்கள்?
தன்னை நாடுதலையெல்லாம் விட்டு விடுங்கள்; தன்னை விட்டு விடுங்கள், உடனே கடவுட் சாந்தி உங்களுடையதாய் விட்டது.
உங்களுள் இருக்கிற மிருகத்தைக் கீழ்ப்படுத்துங்கள்; ஒவ்வொரு சுயநய எழுச்சியையும் ஒவ்வொரு வேற்றுமைச் சொல்லையும் வெல்லுங்கள்; உங்களுடைய சுயநய சுபாவத்தின் தாழ்ந்த உலோகங்களை அன்பாகிய கலப்பற்ற தங்கமாக மாற்றுங்கள்; பூரண சாந்தி வாழ்க்கையை நீங்கள் அடைவீர்கள். வாசகர்களே! இவ்வாறு கீழ்ப்படுத்தி வென்று, மாற்றி, நீங்கள் ஸ்தூல சரீரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே மரணமாகிய கருங்கடலைக் கடந்து துக்கப் புயல்கள் ஒருபோதும் அடியாத, பாவமும், துன்பமும், சந்தேகமும் அணுகாத கரையை அடைவீர்கள். அந்தக் கரைமீது தூய்மை, இரக்கம், விழிப்பு, தன்னடக்கம், முடிவற்ற சந்தோஷம் இவற்றோடு நின்றுகொண்டு, நீங்கள்,
"என்றும் ஆத்மா பிறந்த தில்லை;
என்றும் ஆத்மா இலாதுபோ காது;
அஃதிலாக் காலம் இலதொரு போதும்;
தொடக்கமும் முடிவும் சொப்பனம் தாமே
பிறப்பும் மாற்றமும் இறப்பும் இன்றி
என்றும் ஆத்மா இருக்கின் றதுகாண்!
அஃதுறை வீடிவண் அழிந்ததாத் தோன்றிலும்
அஃதொரு போதும் அழிந்த தில்லையே''
என்று அறிவீர்கள்.
அப்போது, நீங்கள் பாவம், துக்கம், துன்பம் என்பவற்றின் அர்த்தத்தையும், அவற்றின் அந்தம் ஞானம் என்பதையும் அறிவீர்கள்! இறப்பின் காரணத்தையும் காரியத்தையும் அறிவீர்கள்.
இவ்வறிவுடன் நீங்கள் ஓய்வில் புகுவீர்கள். இதுதான் அழியாத ஆனந்தம்; இதுதான் மாறாத சந்தோஷம்: இது தான் தடையற்ற அறிவு; மாசற்ற ஞானம்; இறவாத அன்பு இது. இது மாத்திரமே, பூரண சாந்தி அனுபவம்.
மெய்ப்பொருள் உணர்ந்த மேலோர் களுக்குக்
கற்பிக்க விரும்பும் கருத்துடை யீரே!
ஐயம் என்னும் அரும்பா லையில்நீர்
நடந்து சென்று கடந்துவிட் டீரா?
துக்க நெருப்பால் தூயரா யினீரா?
அபிப்பி ராய அலகையை இரக்கம்
மனத்தி னின்று துரத்தி விட்டதா?
பொய்நினைப் புக்கள் புகுந்தொளி யாவகை
நும்முடை ஆன்மா நல்லதா யிற்றா?
அன்பைக் கொண்ட அறிவுடை யோர்க்குக்
கற்பிக்க விரும்பும் கருத்துடை யீரே!
ஏங்கி யழுதிடும் இடத்தில் நீவர்
நடந்து சென்று கடந்துவிட் டீரா?
வியாகுலம் என்னும் இருளிராத் திரியில்
அழுது நொந்துநீர் அதுகழித் தீரா?
மிகையும் வெறுப்பும் இடைவிடாப் பாரமும்
கொண்டு வருந்தும் குவலய மக்களைக்
கண்டுளம் உருகிநீர் கருணையுற் றீரா?
சாந்தி யடைந்த மாந்தர் தமக்குக்
கற்பிக்க விரும்பும் கருத்துடை யீரே!
சச்சர வென்னும் மிக்க அகன்ற
கடலினை நீவிர் கடந்துவிட் டீரா?
மோனக் கரையில் வாழ்க்கையின் கொடிய
அமைதி யின்மையை அறிந்துநீர் விடுதலை
பெற்றுவிட்டீரா? பெரியநும் அகத்தில்
வருந்துத லெல்லாம் மாய்ந்தொழிந் தனவா?
வாய்மையும் அன்பும் சாந்தியும் நிற்கவே!
சாந்திக்கு மார்க்கம் முற்றிற்று.
$$$