-பத்மன்

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய
சிவகளிப் பேரலை
மூலம்: சிவானந்த லஹரீ
தமிழாக்கம், விளக்கம், கவியாக்கம்: பத்மன்
ஆதி சங்கரரின் ‘சிவானந்த லஹரீ’யை அருந்தமிழில் ‘சிவகளிப் பேரலை’யாக தமிழாக்கம் செய்து, தமிழ்க் கவியும் புனைந்து விளக்குகிறார் மூத்த பத்திரிகையாளர் திரு. பத்மன். நமது தளத்தில் இக்கவிதைகள் நூறும் தினசரி ஒன்றாக வெளியாகும்.
$$$
ஸ்ரீ ஆதிசங்கரரின் பக்தி வெள்ளம்
அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்திருக்கும் ஆண்டவனின் ஏகான்ம வடிவத்தை ஞானமார்க்கத்தால் ஸ்தாபித்தவர் ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர். உன்னுள்ளும், என்னுள்ளும், யாவருள்ளும், யாவற்றுள்ளும் உறைந்திருப்பது ஒரே சக்திதான். அந்த ஒற்றைச் சக்திதான், வானத்துச் சூரியன் பல நீர்நிலைகளில், பாத்திரங்களில் பிரதிபலிப்பதுபோல எல்லாவிடத்தும் தோற்றமளிக்கிறது என்ற ஒப்பற்ற அத்வைத தத்துவத்தை தனது உயரிய விளக்கங்களால் பலருக்கும் விளங்கவைத்தவர் ஸ்ரீஆதிசங்கரர்.
கேள்வி: தன்னுள் இறைவன் வீற்றிருப்பதை ஐயமற அறிந்துகொண்டவனுக்குத் தனியே ஒரு கடவுள் வழிபாடு எதற்கு? பதில்: தன்னுள் கடவுள் இருப்பதை அறிந்து கொண்டால் மட்டும் போதுமா? அதனை ஆராதிக்க வேண்டாமா?
அடுத்த கேள்வி: ஏன் ஆராதிக்க வேண்டும்? இதற்குப் பதில்: கடவுளை அறிந்துகொண்ட அந்த நிலையில் இருந்து வழுவாது இருக்க. பழைய வினைகளின்படி எடுத்த இப்பிறவி நீங்கும்வரை புதிய வினைகள் பற்றாதிருக்க. மீண்டும் பூரணமாம் இறைநிலையுள் புகுவதற்கு தயார் செய்துகொள்ள. அதற்கான ஆத்ம சாதகம்தான் இறை வழிபாடு.
இதனை நிர்குண வழிபாடாக அதாவது உருவமற்ற ஞான வழிபாடாகவும் செய்யலாம். சகுண வழிபாடு எனப்படும் நற்குணங்கள் நிரம்பிய வடிவத்தைப் போற்றும் உருவ வழிபாடாகவும் செய்யலாம் என்பதே ஆதிசங்கரர் கொள்கை.
மாயை என்பது இல்லாமை அன்று. அது ஒரு மயக்கம். ஒருகட்டத்தில் இருப்பதுபோலத் தோற்றமளிக்கக் கூடியது, ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லாதது. கானல்நீர்போல. கனவுபோல. நமது வாழ்க்கையும் அப்படித்தானே? மெல்லப் பழங்கனவாய் கரைந்துபோகிறதே! இதில் சாஸ்வதம் எது? இறைநிலை மட்டுமே.
நமக்குள் இருக்கும் அந்த இறைநிலையை மறைப்பது அவித்தை. அதாவது அஞ்ஞானம். அந்த அஞ்ஞானம்தான் மாயை. அது நீங்கினால் தன்னுள்ளும் இறைவன் என்னும் பரிபூரண நிலை. அழிவில்லா அத்வைத பரமஞானம். ஆயினும் இந்த ஞானம் கைவரப் பெற்ற பின்னும் மாயை காரணமாக அதாவது மயக்கம் காரணமாக இறைநிலையில் இருந்து எந்தவொரு ஜீவனும் நழுவிவிடக் கூடும். அவ்வாறு நழுவிடாமல் இறைநிலையைப் பற்றி நிற்க உதவுவது பக்தி.
‘சுத்த அறிவே சிவம்’ என்று கூறும் சுருதிகள் கேளீரோ!’ என்றும் ‘அறிவொன்றே தெய்வம்’ என்றும் ஓங்கி அறைந்த மகாகவி பாரதி, காளிப் பாட்டு, கண்ணன் பாட்டு, விநாயகர் நான்மணி மாலை, வேலன் பாட்டு, சிவசக்திப் பாட்டு என எண்ணற்ற பக்தி இலக்கியங்களைப் பொழிந்தது இந்த மனோநிலையில்தான். அந்த பக்தி இலக்கியங்களின் ஊடாகப் பார்த்தால்… ‘யாதுமாகி நின்றாய் காளி, தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதையே நந்தலாலா, நோக்கும் இடமெல்லாம் நாமின்றி வேறில்லை’ போன்ற அத்வைத ரத்தினங்கள் பிரகாசிப்பதை தரிசிக்கலாம்.
கடவுளுக்குக் கட்சி கட்டாமல், அனைத்து வடிவங்களில் அவரவர்க்குக் காட்சி தரும் ஆண்டவனின் அத்தனை பிம்பங்களையுமே அத்வைதம் ஏற்றிப் போற்றுகிறது. அதனால்தான் ஸ்ரீஆதிசங்கரர், ஞானப் பொக்கிஷங்களான ‘தசஸ்லோகி, நிர்வாண ஷட்கம்’ ஆகியவற்றை மட்டுமின்றி ‘கனகதாரா ஸ்தோத்திரம், பஜகோவிந்தம், சௌந்தர்ய லஹரீ, சிவானந்த லஹரீ’ போன்ற பக்திப் புதையல்களையும் நமக்கு வழங்கியிருக்கிறார்.
எத்தனையோ வடிவங்களில் இறைவனைப் போற்றிப் புகழ்ந்தாலும், அருவம், உருவம், அருவுருவம் என மூன்று நிலைகளிலும் வணங்கக்கூடிய அந்த முக்கண்ணன் சிவனாரின் மீதான ஸ்ரீ ஆதிசங்கரரின் பக்தி அலாதியானது. அனைத்து தெய்வங்களின் அம்சமாக அல்லவா அவரது லிங்கரூபம் இருக்கிறது. மனிதன் கடவுள்தன்மையை உணர்ந்து வணங்கத் தொடங்கியதில் மிகப் பழமையான ரூபம் அல்லவா சிவரூபம்?
மகாவிஷ்ணுவின் அவதார மகிமைகளைக் கூறும் ராமாயணம், மகாபாரதத்திலும்கூட சிவபெருமானின் பெருமை புகழப்படுகிறதே? இதுபோன்ற பல புராணச் செய்திகளிலும், கதைக் கருத்துகளிலும் உள்ளீடாக விளங்கும் சிவ பரம்பொருளின் பெருமையை ஸ்ரீ ஆதிசங்கரர் அருமையாக 100 ஸ்லோகங்களில் விண்டுரைத்த நூல்தான் சிவானந்த லஹரீ. சிவம் என்றால் மங்களம் என்று பொருள். லஹரீ என்றால் பேரலை என்று பொருள். எங்கும் மங்களத்தையும் ஆனந்தத்தையும் ஏற்படுத்துகின்ற சிவ பக்திப் பிரவாகம்தான் சிவானந்த லஹரீ.
இந்த சிவானந்த லஹரீயிலே மகாகவியாகப் பொழிந்திருக்கிறார் மகான் ஸ்ரீ ஆதிசங்கரர். உவமை, உருவகம், சிலேடை, வஞ்சப்புகழ்ச்சி என பல அணிகலன்கள் இதனை அலங்கரிக்கின்றன. சொல்நயமும், பொருள்நயமும் படிப்போர் மனங்களைப் பரசவப்படுத்தி பரமானந்த நிலையை எய்தச் செய்கின்றன. பக்தியில்லாத மனத்திற்கும், பக்தி ஏற்பட்டு இறைநிலையை அடையத் துடிக்கும் மனத்திற்கும் அவர் கொடுத்துள்ள விளக்கங்களும் வார்த்தைப் பிரயோகங்களும் வர்ணனைகளும், அப்பப்பா!
பக்தி மயத்திற்கு மட்டுமல்ல, பா நயத்திற்கும் மிகச் சிறந்த நூல் சிவானந்த லஹரீ. தேவாரம், திருவாசகம், திருமந்திரம் போன்ற சைவத் தமிழ் இலக்கியங்களில் உள்ள சொல்லாட்சிகளுக்கும், கருத்துக்கோவைகளுக்கும் ஒப்பான செய்யுள்கள் சிவானந்த லஹரீயில் உள்ளன.
இந்த மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கவுரையை இயற்ற எனக்குப் பெரிதும் உதவியது, ஸ்ரீராமகிருஷ்ண மடத்து ‘அண்ணா’ உரையில் மலர்ந்த சிவானந்தலஹரீ பாஷ்யம். அன்னாருக்கு எனது சிரந்தாழ்ந்த வணக்கங்கள். என்னைத் தூண்டி இந்தச் செயல்களை செய்ய வைப்பது ஈசன் திருவுளம். நிறை இருப்பின் ஈசன் செயல். குறை இருப்பின் எனது பிழைகளைப் பொறுத்தருள்க!
$$$
காப்புச் செய்யுள்
ஆதியிலே சங்கரரும் ஆத்தும ஞானத்தால்
சோதியவன் உள்ளுணர்ந்து போதித்தார் ஆனந்தம்
நீதியதில் நின்றேதான் ஆக்கினேன் தாய்மொழியில்
மீதியவன் பாதபத்மம் காப்பு.
முற்காலத்தில் ஆதிசங்கர பகவத்பாதர், சோதிரூபத்தில் தமக்குள் வீற்றிருக்கக்கூடிய பரமாத்ம வடிவமான சிவபெருமானை ஞானத்தாலும், பக்தியாலும் முழுதுணர்ந்துகொண்டு ஆனந்தத்தை அள்ளித் தருகின்ற சிவானந்தலஹரீ என்ற செய்யுட்கோவையை போதித்தார். அவர், எந்த வழிமுறையில், நோக்கத்தில் இந்நூலைத் தந்தருளினாரோ அந்த நெறிப்படி நின்று எனது (நமது) தாய்மொழியாகிய தமிழில் சிவகளிப்பேரலை என்ற இந்நூலை ஆக்கியுள்ளேன். இனி, இந்நூலைக் காக்க வேண்டிய பொறுப்பை, அந்த பகவானின் திருவடித்தாமரைக்கே விட்டுவிடுகிறேன்.
$$$
குரு திருவடி வணக்கம்
ஐங்கார ரீங்கார ரஹஸ்யயுக்த
ஸ்ரீங்கார கூடார்த்த மஹாவிபூத்யா/
ஓங்கார மர்ம ப்ரதிபாதினீப்யாம்
நமோ நம: ஸ்ரீகுருபாதுகாப்யாம்//
.
ஐங்கார ரீங்கார ரகசியத் துடனே
ஸ்ரீங்கார உட்பொருள் பேரருள் செல்வத்தால்
ஓங்கார மர்மத்தை உணரவே வைத்திடும்
பேராசான் திருவடிக்குப் பல்கோடி வணக்கம்.
சிவானந்த லஹரீயை சொல்லத் தொடங்குவதற்கு அல்லது பாராயணம் செய்யத் தொடங்குவதற்கு முன்பு, குருநாதரின் திருவடி வணக்கமாக, ‘ஸ்ரீ குருபாதுகாவந்தனம்’ எனப்படும் இந்த ஸ்லோகத்தைச் சொல்வது வழக்கம். ஐம், ஹ்ரீம், ஸ்ரீம் ஆகியவை உயர்வை அளிக்கும் பீஜ மந்திரங்கள். உட்பொருள் நிறைந்த சக்தி வாய்ந்த மந்திரங்கள். பரம்பொருளின் ஓங்கார ஸ்வரூபத்தை அறிந்துகொள்ள இந்த மந்திரங்கள் பயன்படுகின்றன. ஆக, ரகசியமாக விளங்கும் ஐம், ஹ்ரீம் ஆகியவற்றின் பொருளையும் புரியவைத்து, ஸ்ரீங்காரத்தின் (இறைவனது ஐஸ்வர்யத்தின்) உட்பொருளையும் உணரவைத்து, அதன்மூலமாக இறுதி உண்மையாகிய ஓங்காரத்தின் பொருளையும் அறியவைக்கும் ஸ்ரீகுருநாதரின் திருவடிகளை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.
(குறிப்பு: 1. க,ச,ட,த,ப ஆகிய வல்லின எழுத்துகளில் சம்ஸ்கிருதத்தில் 4 வகை உண்டு. அவற்றில், அடிவயிற்றில் இருந்து ஓங்கிச் சொல்ல வேண்டிய 3ஆவது 4ஆவது வகைகளைச் சுட்ட போல்டு செய்யப்பட்டுள்ளது. எனினும் ச-வில் இந்த வகைப்பாட்டுக்கு ஜ என்ற சொல் உண்டு. 2. தொண்டையில் சற்று அழுத்திச் சொல்ல வேண்டிய 2ஆவது வகையைக் குறிக்க ஸ்லாண்டிங் (சாய்வெழுத்து) செய்யப்பட்டுள்ளது. 3. ‘ச’ என்ற ஒலிப்பு சிவம், சங்கர் போன்றவற்றில் வரும் ச ஒலியைக் குறிக்கிறது. இது ஷ, ஸ ஆகியவற்றுக்கு இடைப்பட்டது. 4. ’S’ என்ற குறியீடு அ என்ற எழுத்து தொக்கி நிற்பதைக் குறிக்கிறது. 5. ‘:’ என்ற குறியீடு, ஹ, ஹி, ஹை போன்ற ஒலியைக் குறிக்கும் விஸர்க்கம்.)
இனி, சிவகளிப் பேரலை, தினசரி ஒரு பாடலாகத் தொடர்கிறது…
(அலைகள் தொடரும்)
$$$