-கி.வா.ஜகந்நாதன்

36. அச்சகம் வாங்க விரும்பாமை
ஆசிரியர் புத்தகங்களை அச்சிடுவதற்குப் பல அச்சகங்களை நம்பித் தொல்லைப்பட்டு வருவதை அறிந்து திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர் அந்த வகையில் ஆசிரியருக்கு ஏதாவது உதவி புரிய வேண்டுமென்று நினைத்தார். ஆசிரியப் பெருமானே சொந்தத்தில் ஓர் அச்சகத்தை வைத்துக் கொண்டால் நலமாக இருக்கும் என்று எண்ணினார்.
ஒருமுறை திருவாவடுதுறைக்கு ஆசிரியர் சென்றிருந்தார். “பிற அச்சகங்களை நம்பிப் புத்தகங்களைக் கொடுத்துத் தொல்லைப் படுகிறீர்கள். நீங்களே ஓர் அச்சகத்தை வைத்துக்கொண்டால் புத்தகங்களை வெளியிடுவதற்கு உதவியாக இருக்கும். ஐயாயிரம் ரூபாயை நாம் உங்களுக்குத் தருகிறோம். அதை வைத்துக்கொண்டு அச்சகத்தை ஆரம்பித்தால் விரைவில் பல நூல்களை நீங்கள் வெளியிடலாம்” என்றார்.
ஆசிரியர் உடனே பதில் சொல்லவில்லை. “நாளைக்குப் பதில் சொல்கிறேன்” என்று வந்துவிட்டார். மறுநாள் சென்றபோது, “சந்நிதானத்திற்கு என்னிடம் இருக்கும் பேரன்பை நான் உணர்கிறேன். வெளி அச்சகத்தை நம்பி நூல்களை வெளியிடுவதில் பல தொல்லைகளுக்கு நான் ஆளாகிறேன் என்பது உண்மைதான். ஆனால் இப்போது புத்தகத்திற்கு வேண்டிய காகிதம், பைண்டுச் சாதனங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு மட்டும் கவலைப்பட வேண்டியிருக்கிறது. அச்சகத்தை வைத்து நடத்த ஆரம்பித்தால் ஆட்களை வைத்து, சம்பளம் கொடுத்து நிர்வாகம் செய்தாக வேண்டிய பெருந் தொல்லைகளும் சேர்ந்து கொள்ளும். நூல் ஆராய்ச்சிக்கு நேரம் கிடைக்குமா என்பது சந்தேகம். ஆகையால் சந்நிதானத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதற்கு மன்னிக்க வேண்டும்” என்று சொன்னார். அதன்மேல் ஆதீனகர்த்தர் அந்தக் கருத்தை வற்புறுத்தவில்லை.
ஆசிரியப் பெருமானுக்கு எட்டுத்தொகையில் ஒன்றாகிய அகநானூற்றைப் பதிப்பிக்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. அதை ஆராய்ந்து கொண்டிருந்தார். அப்போது வேறு சிலர் அதைப் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெரிந்தது. பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் அதைப் பதிப்பிக்க முயன்றார். ஆனால் கடைசியில் ரா.இராகவையங்காருடைய உதவியினால் வேறு ஒருவர் அதைப் பதிப்பித்துவிட்டார். மற்றவர் பதிப்பித்த நூலைப் பதிப்பிப்பது ஆசிரியர் வழக்கமன்று. ஆதலால் அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டார்.
$$$
37. கார்மைகேல் சந்திப்பு
ஒரு சமயம் சிலா சாசன அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் ஆளுநர் தம்பதிகளைத் தம்முடைய அலுவலகத்திற்கு அழைத்தார்கள். அப்போது கவர்னராக இருந்தவர் கார்மைகேல் பிரபு. அந்தக் காரியாலயத்தில் பழைய விக்கிரகங்கள் பல இருந்தன. அந்த விக்கிரகங்களைப் பற்றிக் கவர்னர் ஏதாவது கேட்டால் தக்கபடி பதில் சொல்ல வேண்டுமே என்ற எண்ணம் அலுவலகத் தலைவருக்கு எழுந்தது. எனவே, அந்த நேரம் ஆசிரியப் பெருமான் அங்கு இருந்தால் அவர் எல்லா விவரங்களையும் தெரிவிப்பார் என்று எண்ணி ஆசிரியரிடம் வந்து தம் கருத்தைத் தெரிவித்தார். ஆசிரியப் பெருமான் வருவதாக ஒப்புக்கொண்டார். அதேபோல் ஆளுநர் தம்பதிகள் சிலா சாசன அலுவலத்திற்கு விஜயம் செய்த நாள் அன்று ஆசிரியப் பெருமானும் அவர்களுடனே இருந்து அங்குள்ள விக்கிரகங்களைப் பற்றிய செய்திகளை எடுத்துச் சொன்னார். ஒருவர் அவர்களுக்கு அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொன்னார். இந்த விவரங்களை எல்லாம் கேட்டு ஆளுநர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அப்போது ஆளுநர் தம்பதிகளைப் படம் எடுக்க வேண்டுமென்று எண்ணினார்கள். பங்களாவின் முன்புறத்தில் படம் எடுக்க முயற்சி நடந்தது. ஆளுநர் தம்பதிகள் அமர்வதற்கு இரண்டு நாற்காலிகள், மற்றும் இரண்டு நாற்காலிகள் இருந்தன. அப்போது ஆளுநர் சுற்றுமுற்றும் பார்த்தார். “எனக்கு விவரங்களைச் சொன்ன பண்டிதர் எங்கே? அவரையும் அழைத்துவந்து இங்கே உட்கார வையுங்கள். நான் அவருடன் சேர்ந்து படம் எடுத்துக் கொள்ளவேண்டும்” என்று சொன்னார். வேறு ஒரு நாற்காலி கொண்டுவந்து போடப்பெற்று. ஆசிரியர் வந்து உட் கார்ந்தவுடன் போட்டோ எடுத்தார்கள்.
$$$
38. திருக்காளத்திப் புராணம்
1912-ஆம் வருடம் மெ.அரு.நா.இராமநாதன் செட்டியார் சகோதரர்கள் காளஹஸ்தியில் கும்பாபிஷேகத்தை மிகவும் சிறப்பாக நடத்தினார்கள். சிவப்பிரகாசர் எழுதிய சீகாளத்திப் புராணம் மாத்திரம் முன்பு இருந்தது. ஆசிரியர் திருக்காளத்திப் புராணம் என்ற நூலை ஆராய்ந்து வைத்திருந்தார். கும்பாபிஷேகம் செய்த செட்டியார் அந்தத் தல சம்பந்தமான ஏதாவது புதியதொரு நூலை வெளியிடலாம் என்று நினைத்தார். ஆசிரியப் பெருமானும் திருக்காளத்திப் புராணம் தம்மிடம் இருப்பதாகவும் அதை வெளியிட்டால் நலம் என்றும் சொன்னார். அவ்வாறு செய்யலாம் என்று செட்டியார் இசைந்தார். ஆசிரியர் கண்ணப்ப நாயனாரைப் பற்றித் தமிழ் நூல்களில் என்ன என்ன கருத்துக்கள் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் தொகுத்தார். எல்லாவற்றையும் சேர்த்துத் திருக்காளத்திப் புராணப் பதிப்பில் சேர்த்தார். 1912-ஆம் வருடம் ஏப்ரல் மாதம் அந்த நூல் அச்சாயிற்று. கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. ஆசிரியர் அந்த நூலை அந்தத் தலத்தில் அரங்கேற்றினார்.
1915-ஆம் வருடம் பிப்ரவரி மாதம் ஆசிரியப் பெருமானுக்கு 60-ஆவது ஆண்டு நிறைவேறியது. சஷ்டியப்த பூர்த்தியை நல்ல முறையில் நடத்த வேண்டுமென்று பல அன்பர்கள் விரும்பினார்கள். ஆனால் ஆசிரியருக்கு அதில் விருப்பம் இல்லை. திருக்காளத்தி சென்று இரண்டு மூன்று நாட்கள் அங்கே தங்கி இறைவனைத் தரிசித்துக் கொண்டு வந்தார்.
1917-ஆம் ஆண்டு மே மாதம் ஆசிரியருடைய மனைவியார் இறைவன் திருவடியை அடைந்தார்.
காசியிலுள்ள ‘பாரத தர்ம மகா மண்டலம்’ என்ற சபையினர் ஆசிரியர் செய்து வரும் தமிழ்த் தொண்டை அறிந்து அவருக்கு ஏதாவதொரு விருது கொடுக்க வேண்டுமென்று எண்ணினார்கள். ‘திராவிட வித்யா பூஷணம்’ என்ற பட்டத்தை வழங்கினார்கள்.
$$$
39. பரிபாடல் வெளியீடு
சங்க நூல்களில் ‘பரிபாடல்’ என்ற தொகை நூல் ஒன்று உண்டு. உரையாசிரியர் கொடுத்துள்ள விவரங்களிலிருந்து அதில் 70 பாடல்கள் இருந்தனவாகத் தெரிய வருகிறது. அந்த 70 பாடல்களும் கிடைக்கவில்லை. அதற்குப் பரிமேலழகர் உரை இருந்தது. பல இடங்களில் தேடியும் எல்லாப் பரிபாடல்களும் அடங்கிய சுவடியே கிடைக்கவில்லை. கிடைத்த ஒன்றை வைத்துக்கொண்டு ஆராய்ந்து, ஒருவகையாகச் செப்பம் செய்து 1918-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அந்த நூலை வெளியிட்டார்.
$$$
40. வேலையிலிருந்து ஓய்வு பெறுதல்
1919-ஆம் ஆண்டு ஆசிரியர் சென்னை மாநிலக் கல்லூரியிலிருந்து ஓய்வு பெற்றார். இவர் தொடர்ந்து இன்னும் சில ஆண்டுகள் இருக்க வேண்டுமென்று பலரும் விரும்பினாலும் ஆசிரியர் அதற்கு இடம் கொடுக்கவில்லை. எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டார். கல்லூரி முதல்வரிடம் விடைபெற்றுக்கொள்ளும் போது, “இதுவரை இந்தக் கல்லூரியில் சிறந்த தமிழாசிரியர்கள் இருந்து வந்ததுபோலப் பின்னும் திறமை வாய்ந்த நல்லவர் ஒருவர் நியமிக்கப் பெறுதல் வேண்டும்” என்று தெரிவித்துக் கொண்டார். உடனே முதல்வர், “தாங்களே அப்படி ஒருவரைத் தேர்ந்தெடுத்துத் தரவேண்டும்” என்று சொல்ல, ஆசிரியர் இ.வை.அனந்தராமையர் பெயரைத் தெரிவித்தார். ஆசிரியர் விருப்பப்படி அவரையே சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ் ஆசிரியராக ஆக்கினார்கள்.
(தொடர்கிறது)
$$$