-சேக்கிழான்

தனது வாழ்நாளெல்லாம் தீண்டாமையால் அவதிப்பட்டு, அதை எதிர்த்துப் போராடி, அதற்குக் காரணமான இந்து மதத்தை விட்டு வெளியேறி பௌத்த மதத்தைத் தழுவியவர் அம்பேத்கர். ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் விடுதலைக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்த பெரியார் அவர்.
இன்று அம்பேத்கரை உரிமை கொண்டாடாதவர்கள் இல்லை. அம்பேத்கரை அவரது வாழ்நாளில் எதிர்த்த காங்கிரஸாரும், கம்யூனிஸ்டுகளும் இன்று அவரது பெயரை உச்சரிப்பதுதான் அம்பேத்கரின் வெற்றி. அதேசமயம், இந்து மதத்தை கடுமையாக நிராகரித்த அம்பேத்கரை இந்துத்துவர்கள் மிகவும் போற்றுவது எப்படி?
அம்பேத்கரியலில் தீவிர ஆராய்ச்சியாளரான ம.வெங்கடேசனின் இந்நூல் இக்கேள்விக்கு விளக்கமளிக்கிறது. புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? என்ற நூலை எழுதி ஏற்கெனவே தமிழுலகில் புதிய சிந்தனை அலைகளை உருவாக்கியவர் இவர்.
இந்து மதம் என்பது மத, வழிபாட்டு சம்பிரதாயங்களை மட்டுமே உள்ளடக்கியது. இந்துத்துவம் என்பது மதம் மட்டுமல்லாமல், இந்த தேசத்துடன் தொடர்புடைய, தோன்றிய எல்லாவற்றையும் உள்ளடக்கியது- என்று தனது முன்னுரையிலேயே நூலாசிரியர் விளக்கிவிடுகிறார்.
அந்த அடிப்படையில், இந்துத்துவர்களும் அம்பேத்கரும் சிந்தனைரீதியாக ஒத்திருக்கும் இடங்களை நூலாசிரியர் இந்நூலில் தொகுத்திருக்கிறார். தலித் என்ற நிலையில் இந்து மதத்தை நிராகரித்தாலும், அவர் இந்து மதத்தை சீர்திருத்த பல ஆண்டுகள் முயன்றதை, அவரது நூல்களிலிருந்தே ஆதாரத்துடன் ம.வெங்கடேசன் சுட்டிக்காட்டுகிறார்.
நாட்டின் தேசிய மொழியாக சமஸ்கிருதமும் இந்தியும் ஏற்கப்பட வேண்டும். ஆரிய- திராவிட வாதம் பொய்யானது; பொது சிவில் சட்டம் தேவை; தேசப்பிரிவினை கூடாது; ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக் கூடாது- என இந்துத்துவர்கள் கூறுவதையே அம்பேத்கரும் கூறியிருப்பதை அவரது கருத்துகளின் அடிப்படையில் நிறுவுகிறார் நூலாசரியர்.
இந்து மகாசபை தலைவர்கள் மூஞ்சே, சாவர்க்கர், ஜெயகர், ஆர்எஸ்எஸ் தலைவர் குருஜி கோல்வல்கர், தந்தோபந்த் டெங்கடி ஆகியோருடன் நெருங்கிய தோழமை கொண்டிருந்தவர் அம்பேத்கர் என்பதும் இந்நூலின் மூலம் தெரியவருகிறது.
22 அத்தியாயங்களில் அம்பேத்கரின் கருத்துகளைக் கொண்டே கட்டி எழுப்பப்பட்ட ஆராய்ச்சி நூலாக இந்நூல் விளங்குகிறது. எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டனின் அறிமுக உரையும் சிறப்பாக உள்ளது. நூலாசிரியரின் கடின உழைப்பு வியக்க வைக்கிறது. இந்துத்துவர்களின் சிந்தனைப் போருக்கு ஒரு கருவியாக இந்நூல் வெளியாகி இருக்கிறது.
$$$
இந்துத்துவ அம்பேத்கர்
–ம.வெங்கடேசன்
208 பக்கங்கள், விலை: ரூ. 150
வெளியீடு:
கிழக்கு பதிப்பகம்,
177/103, முதல் தளம்,
அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் சாலை,
ராயப்பேட்டை, சென்னை- 600 014,
தொலைபேசி: 044- 4200 9603.
$$$