தமிழ்த் தாத்தா (26-30)

-கி.வா.ஜகந்நாதன்

26. சென்னையை அடைதல்

1903-ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்த சீனிவாசாசாரியார் ஓய்வு பெற்றார். அப்போது ஆசிரியப் பெருமான் பதிற்றுப்பத்தை ஆராய்ச்சி செய்து வந்தார். ஒரு நாள் கல்லூரி முதல்வராக இருந்த ஜே.எம்.ஹென்ஸ்மென் என்பவர் ஆசிரியரின் இல்லத்திற்கு வந்தார். கல்வித்துறைத் தலைவர் ஆசிரியரை சென்னை மாநிலக் கல்லூரிக்கு மாற்றி இருப்பதாகத் தெரிவித்து, ஆசிரியரின் இடத்தில் கும்பகோணத்தில் யாரை நியமிக்கலாம் என்று தம்மிடம் கேட்டுக் கடிதம் வந்திருப்பதாகச் சொன்னார்.

இறைவன் திருவருள் இவ்வாறு கூட்டுவிக்கிறது என்ற எண்ணத்தால் ஆசிரியருக்குச் சற்று உவகை உண்டாயிற்று. என்றாலும் 23 ஆண்டுகளாக தாம் வசித்த நகரத்தையும், நகரப் பெருமக்களையும் விட்டுப் பிரிய மனம் வரவில்லை. அடிக்கடி திருவாவடுதுறை ஆதீனகர்த்தருடன் சல்லாபம் செய்துவரச் சென்னை சென்றால் சந்தர்ப்பம் இல்லாது போகுமே என்கிற நினைவு வருத்தியது. “சென்னைக்குச் சென்றால் பதிப்பு வேலைகளுக்குப் பல உதவிகள் கிடைக்கும். அடிக்கடி இந்த ஊரிலிருந்து சென்னை சென்று புத்தகங்கள் பதிப்பிப்பதைவிட அங்கிருந்தே நன்றாகப் பதிப்பு வேலைகளைக் கவனிக்கலாம்” எனக் கல்லூரி முதல்வர் ஹென்ஸ் மெனும் வற்புறுத்தினார்.

திருவாவடுதுறையில் அப்போது ஸ்ரீ அம்பலவாண தேசிகர் ஆதீனத் தலைவராக இருந்தார். அவரைப் போய்ப் பார்த்துவரச் சென்றபோது அவரும், ‘நீங்கள் சென்னைக்குப் போவதனால் பல நன்மைகள் உண்டாகும். நம்முடைய ஆதீனப் பெருமையும் அங்கே பரவுவதற்கு வாய்ப்பு அதிகம். எனவே நீங்கள் சென்னைக்குப் போவதே எல்லா வகையிலும் நல்லது’ என்று தம் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

ஆசிரியப் பெருமான் ஒரு நல்ல நாள் பார்த்துக்கொண்டு சென்னைக்கு வந்தார். சென்னையில் திருவேட்டீசுவரன் பேட்டையில் வசித்து வந்த இவருடைய சிறிய தகப்பனார் வீட்டில் தங்கிக்கொண்டு மாநிலக் கல்லூரிக்குச் சென்று வேலையை ஒப்புக் கொண்டார்.

கும்பகோணம் கல்லூரியில் தமிழ் வகுப்பில் உயர்ந்த மேடை, நல்ல மேசை, நாற்காலி ஆகியவை இருந்தன. ஆனால் சென்னை மாநிலக் கல்லூரியில் மற்ற ஆங்கில வகுப்புகளுக்கு இருந்தது போன்ற அமைப்பு இல்லை. ஏதோ ஒரு பழைய மேசை மட்டும் தரைமட்டத்தில் இருந்தது. இதை ஆசிரியர் மிகவும் நயமாக அப்போது மாநிலக் கல்லூரி முதல்வராக இருந்த பில்டர்பெக் துரையிடம் எடுத்துச் சொன்னார். அவர் உடனே மாநிலக் கல்லூரியிலும் தமிழ் வகுப்புக்கு உயர்ந்த மேடை, நல்ல மேசை, நாற்காலி, பீரோ ஆகியவற்றை அமைக்க ஏற்பாடு செய்தார்.

1904-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருவேட்டீசுவரன் பேட்டை, பிள்ளையார் கோவில் தெருவில் மாதம் 20 ரூபாய் வாடகைக்கு ஒரு வீட்டிற்குக் குடி வந்தார். அந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பதிற்றுப்பத்து வெளியிடப்பெற்றது.

1905-ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஆசிரியப் பெருமானுடைய அன்னையார் சரஸ்வதி அம்மாள் காலமானார்கள். திரு. சீனிவாச ஐயங்கார் ஆசிரியருடைய வீட்டிற்குத் துக்கம் கேட்க வந்தார். அச்சமயம் பேச்சோடு பேச்சாக, மணிமேகலைக் கதைச் சுருக்கத்தை எப்.ஏ. வகுப்புக்குப் பாடமாக வைக்க ஏற்பாடு செய்துள்ளதாகச் சொன்னார். “இதனால் வருகிற பணம் மாதா கைங்கர்யத்திற்கு இருக்கட்டும்” என்று சொன்னார்.

ஆசிரியப் பெருமானின் வகுப்பிலிருந்த மாணவர்களைச் சில பொறாமைக்காரர்கள் தூண்டிவிட்டு, ஆசிரியர் பாடம் சொல்லும்போது சில இடையூறுகளை ஏற்படுத்தச் செய்தார்கள். ஒரு சமயம் ஒரு துண்டுப் பத்திரிகை வெளியிடப்பெற்றது. அதில், ‘நச்சினார்க்கினியர் தவறு செய்தார்; சங்கராச்சாரியார் தவறு செய்தார்; உ.வே.சாமிநாதையரும் பிழைகளைச் செய்திருக்கிறார்’ என அச்சிடப் பெற்றிருந்தது. ஒரு மாணவன் மிகவும் வருத்தத்தோடு ஆசிரியரிடம் அந்தத் துண்டுப் பத்திரிகையைக் கொண்டு வந்து காட்டினான். அதைப் பார்த்து ஆசிரியப் பெருமானுக்குக் கோபம் வரவில்லை; வருத்தம் ஏற்படவில்லை; புன்னகை பூத்த முகத்துடன், “இந்த எளியேனை அவ்வளவு உயரத்திற்கா ஏற்றிவிட்டார்கள்? சங்கராசாரியாருடனும் நச்சினார்க்கினியருடனும் சமமாக என்னை வைத்தல்லவா சொல்லியிருக்கிறார்கள்?” என்றவுடன் மிகவும் வருத்தத்துடன் அந்தத் துண்டுப் பத்திரிகையைக் கொண்டு வந்த மாணவனே வருத்தம் மாறிச் சிரித்துவிட்டான்.

$$$

27. போலீஸ் அதிகாரியின் மனமாற்றம்

திருவேட்டீசுவரன் பேட்டையில் ஜயசிங் என்ற போலீஸ் அதிகாரி ஒருவர் இருந்தார். அவர் கொஞ்சம் முரட்டுச் சுபாவம் உடையவர். ஆசிரியப் பெருமான் வாழ்ந்து வந்த தெருவில் தான் அவர் இருந்தார். யாரோ ஒருவர் அவரிடம் காவடிச் சிந்தையும், திருப்புகழையும் பாடியிருக்கிறார். அவற்றிலுள்ள பெண்களின் வருணனைகளைக் கேட்டு அவருக்குக் கோபம் கோபமாக வந்தது.

 “இவற்றை எல்லாம் பாடி குழந்தைகளின் மனத்தைக் கெடுத்து விடுகிறார்கள். இனிமேல் இத்தகைய புத்தகங்கள் வெளிவராமல் தடுத்துவிட வேண்டும்” என்று பேசிக் கொண்டிருந்தார். இந்தச் செய்தியைச் சில அன்பர்கள் ஆசிரியரிடம் வந்து சொன்னார்கள். ஒருநாள் அந்த போலீஸ் அதிகாரியைப் பார்க்க இவர் சென்றார்.

“எங்கே இவ்வளவு தூரம் வந்தீர்கள்?” என்று அந்த அதிகாரி வியப்புடன் கேட்டார். நீங்கள் மிகவும் நல்லவர்கள் என்று கேள்விப்பட்டேன். ஆபாசமான விஷயங்களை எல்லாம் நாம் அதிகமாகப் பரவவிடக் கூடாது என்ற எண்ணம் தங்களுக்கு இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். நம்முடைய நாகரிகம் தெரிந்தவர்களுக்குத்தான் இந்த விஷயம் தெரியும். ஆனால் இலக்கியங்களின் திறத்தில் நாம் பார்க்க வேண்டிய முறையே வேறு. சங்க காலத்திலிருந்து அவற்றைப் புலவர்கள் பாடி வருகிறார்கள். செய்யுளாக இருப்பதால் அவற்றைப் படிப்பவர்களுக்கு இலக்கிய இன்பம் தோன்றுமே தவிர, ஆபாசம் தோன்றாது” என்று ஆசிரியர் பேசத் தொடங்கினார்.

“சில பைத்தியக்காரப் புலவர்கள் கன்னா பின்னா என்று பாடி குழந்தைகளின் உள்ளத்தைக் கெடுத்து விடுகிறார்கள். அத்தகைய ஆபாசப் பாடல்களைத் தடுத்துவிடத் தாங்கள் எனக்கு யோசனை சொன்னால் உபகாரமாக இருக்கும்” என்று அந்த அதிகாரி சொன்னார். “அதைப்பற்றித்தான் உங்களிடம் பேச வந்திருக்கிறேன். நிதானமாகப் பேசலாம் அல்லவா?” என்றார் ஆசிரியர்.

“பெரியவர்களாகிய நீங்களே வந்திருக்கிறீர்கள். உங்களோடு பேசுவதைவிட வேறு வேலை என்ன இருக்கிறது?” என்றார் ஜயசிங்.

“என்னிடம் சில புலவர்கள் வந்து தங்களைத் தமிழுக்கு விரோதி என்று சொன்னார்கள். நீங்கள் அப்படி இருக்க மாட்டீர்கள் என்று நான் அவர்களிடம் சொன்னேன். பழைய இலக்கியங்களைக் கொளுத்திவிட வேண்டுமென்று நீங்கள் சொன்னதாகச் சொன்னார்கள். உங்களைத் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டார்கள் என்று நான் எண்ணினேன். அதனால் தான் உங்களை நேரே பார்த்துப் பேசலாம் என்று வந்தேன்” என்று சொன்னார் இவர்.

“எல்லாப் புலவர்களுக்கும் என் மேல் கோபம் இருக்கலாம். பெண்களை ஆபாசமாக வருணிக்கிற காவடிச் சிந்து, திருப்புகழ் ஆகிய பாடல்கள் பரவக் கூடாது என்பது என் எண்ணம்” என்றார் அந்த அதிகாரி.

“காவடிச் சிந்து, திருப்புகழ் ஆகியவற்றில் பெண்களின் வருணனைகள் இருப்பது உண்மைதான். அவற்றை மட்டும் படிப்பதோடு நிறுத்திவிடக் கூடாது. பாட்டு முழுவதையும் படித்தால், அவ்வாறு ஈடுபடுவது தவறு என்று சொல்லியிருப்பதைக் காணலாம். ஒன்பது சுவைகளில் சிருங்காரம் என்பது ஒன்று. வடமொழி நூல்களிலும் அந்தச் சுவை உண்டு. பெண்களின் வருணனை கூடாது என்றால் எத்தகைய இலக்கியங்களும் இருக்க முடியாது. நான் மிகப் பழைய இலக்கியங்களாகிய சங்க நூல்களை முதல் முதலாக வெளியிட்டிருக்கிறேன். அதனால் தான் தமிழ்நாடு என்னிடத்தில் கொஞ்சம் மதிப்பு வைத்திருக்கிறது. அவற்றில் கூடப் பெண்களின் வருணனை வருகிறது. அவற்றைப் படிக்கும் போது இலக்கியச் சுவையே தெரிகிறது. நீங்கள் அவற்றை எல்லாம் பொசுக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். வடமொழியில் உள்ள நூல்களும் அப்படித் தான். இவ்வாறு பார்த்தால் தமிழிலும், வடமொழியிலும் படிப்பதற்கு வேறு ஒன்றும் கிடைக்காது” என்றார்.

“நீங்கள் சொல்வதைப் பார்த்தால் எல்லாப் புத்தகங்களும் ஆபாசமானவை என்றல்லவா தோன்றுகிறது?” என்றார் அதிகாரி.

“ஆபாசம் என்பது வேறு. ரச உணர்ச்சி வேறு. மனித வாழ்க்கையில் காதல் மிக முக்கியமான உணர்ச்சி. காவியங்களும், புராணங்களும் காதல் உணர்ச்சியைப் பற்றிச் சொல்கின்றன. ஆண்டவனைக் காதலனாக வைத்து, தங்களைக் காதலிகளாக வைத்து ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாடியிருக்கிறார்கள். அங்கெல்லாம் சிருங்கார ரசம் இருக்கும்.”

“அப்படியா? தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களிலும் சிருங்கார ரசம் இருக்கிறதா?” என்று கேட்டார் ஜயசிங்.

“தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம் ஆகிய எல்லாவற்றிலும் இருக்கின்றன. ஆண்டவனிடத்தில் உள்ள பக்தியைக் காதலாக மாற்றி அவற்றைப் பாடியிருக்கிறார்கள். எல்லாவற்றையும் ஆபாசம் என்று தள்ள முடியாது” என்றார் இவர். “இதெல்லாம் எனக்குப் புதிதாக இருக்கிறது” என்று போலீஸ் அதிகாரி சொன்னார்.

“நீங்கள் இவற்றை எல்லாம் நன்றாக ஆராய்ந்திருக்க மாட்டீர்கள். கிராமங்களில் பலர் கச்சு அணிவதில்லை. காய்கறி விற்கிறவர்கள், பால் தயிர் விற்கிறவர்கள், இன்னமும் பலர் அப்படி வருகிறார்கள். அவர்கள் தோற்றத்திலே ஆபாசம் இல்லை. பார்க்கிறவர்களின் கண்களில்தான் ஆபாசம் இருக்கிறது.”

‘நீங்கள் சொல்வது உண்மைதான்” என்று ஒருவாறு இறங்கிவந்தார் அந்த அதிகாரி .

“மற்றொரு விஷயம். நீங்கள் கோவிலுக்குப் போகிறீர்கள் அல்லவா?” என்று கேட்டார் ஆசிரியர். போவது உண்டு என்றார் ஜயசிங். “அங்குள்ள மூர்த்திகளை, கோபுரங்களிலுள்ள சிற்பங்களைப் பார்த்தது உண்டா? அந்தச் சிற்பங்களில் பெண்மையைக் காட்டுகின்ற அங்கங்கள் பெரியனவாக இருந்தாலும் யாரும் விகார உணர்ச்சி கொள்வதில்லை. படுத்திருக்கும் தாயின் மார்பில் குதித்து விளையாடுகிற குழந்தைக்குத் தவறான உணர்ச்சி உண்டாவதில்லை. இது இன்று நேற்று வந்தது அல்ல. நீங்கள் சொல்லுகிறபடி திருப்புகழையும், காவடிச் சிந்தையும் அதில் வரும் பெண்களின் வருணனைக்காக நீக்கத் தொடங்கினால் தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும், வடமொழி இலக்கியங்கள் அனைத்தையும் கடலில் கொண்டு போய்ப் போட வேண்டும். கோவில்களில் உள்ள விக்கிரகங்களை உடைத்தெறிய வேண்டும்.”

“ஐயா, ஐயா! அப்படிச் சொல்லக் கூடாது. இந்த விஷயங்கள் எல்லாம் தெரியாமல் ஏமாந்து போனேன். நல்ல சமயத்தில் இந்த உண்மையைச் சொன்னீர்கள். உங்களுக்கு மிகவும் நன்றி என்றார் ஜயசிங். அதன் பின்பு அந்த போலீஸ் அதிகாரிக்கு இருந்த தவறான எண்ணம் போய்விட்டது.

$$$

28. தியாகராச லீலை

திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் தியாகராசப் பெருமானின் திருவிளையாடல் 360 என்று சொல்லுவார்கள். அவற்றைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டுமென்று மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை எண்ணினார். ஆனால் மூல நூலின் ஒரு பகுதியே கிடைத்தது. கிடைத்த 14 லீலைகளை மொழிபெயர்த்துத் தமிழ்ச் செய்யுளாக இயற்றினார். அந்த நூலை அச்சிட வேண்டுமென்று எண்ணி ஆராய்ந்து இவர் 1905 ஆம் ஆண்டு அதைப் பதிப்பித்தார்.

$$$

29. மகாமகோபாத்தியாயப் பட்டம்

1906-ஆம் ஆண்டு முதல் தேதி பிறந்தது. அரசினர் இந்த நாட்டில் சிறப்பான பணி புரிபவர்களுக்குப் பல பட்டங்களை வழங்கி ஊக்கம் அளித்துவந்தனர். கங்காதர சாஸ்திரிகள் என்பவர் அன்று காலையில் ஆசிரியரைப் பார்க்க வந்தார். “எங்களுக்கெல்லாம் அளவில்லாத மகிழ்ச்சி. நாங்கள் எல்லோரும் ஆனந்தத்தால் குதிக்கிறோம்” என்றார். ஆசிரியப் பெருமானுக்கு ஒன்றும் விளங்கவில்லை. “உங்களுக்கு மகா மகோபாத்தியாயப் பட்டம் கிடைத்திருக்கிறது. இந்தச் செய்தி இன்னமும் உங்களுக்குத் தெரியாதா?” என்றார். ஆசிரியருக்கு அந்தச் செய்தி அப்போதுதான் தெரிந்தது .

அதுமுதல் தமிழ் நாட்டிலுள்ள பலர் ஆசிரியரைப் பாராட்டினர். கடிதங்கள் மூலம் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த மணி ஐயர், “மகாமகோபாத்தியாயப் பட்டம் தங்களுக்கு வழங்கப்பட்டதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுக்கு அது கிடைக்கும் என்பது எனக்குத் தெரியும்” என்று ஒரு கடிதம் அனுப்பினார். அதுவரை வடமொழிப் புலவர்களுக்கே அளிக்கப் பெற்று வந்த அந்தப் பட்டம், ஆசிரியப் பெருமானுக்கு முதல் முறையாக வழங்கப் பெற்றதனால் அரசினருக்குப் பெரும் புகழ் உண்டாயிற்று.

$$$

30. தோடாப் பெறுதல்

1906-ஆம் ஆண்டு வேல்ஸ் இளவரசரும், அவருடைய தேவியாரும் சென்னைக்கு விஜயம் செய்தார்கள். அப்போது சென்னை நகரமே விழாக்கோலம் கொண்டிருந்தது. வெளியூர்களிலிருந்து ஜமீன்தார்களும், பிரபுக்களும் வந்திருந்தார்கள். ஆளுநர் மாளிகையில் தர்பார் ஒன்று நடந்தது. அதற்கு முன்பு சென்னை நகரில் இந்தியர்கள் வசித்து வந்த பகுதியை ‘ப்ளாக் டவுன்’ என்று ஆங்கிலேயர்கள் வழங்கி வந்தார்கள். அது பலருடைய உள்ளத்தை உறுத்திக்கொண்டிருந்தது. ஜார்ஜ் இளவரசர் வந்ததையொட்டி அதன் பெயரை ‘ஜார்ஜ் டவுன்’ என்று மாற்றி வழங்கலாயினர்.

அப்போது அறிஞர் பெருமக்களுக்குப் பலவகையான பட்டங்களும், சன்மானமும் அளிக்கப்பெற்றன. ஆசிரியப் பெருமானுக்குத் தங்கத் தோடா அணிவித்து மதிப்புச் செய்தனர்.

(தொடர்கிறது)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s