-மகாகவி பாரதி

21. கிராமதானத்தை மறுத்தது
ஆசிரியர் பதிப்பித்த மணிமேகலை, புறப்பொருள் வெண்பா மாலை ஆகியவற்றுக்கு உதவி செய்தவர் இராமநாதபுரம் பொ.பாண்டித்துரைத் தேவர் ஆவர். அவர் மதுரையில் தமிழ்ச் சங்கத்தை உண்டாக்கிப் பல நூல்களை வெளியிட்டார். அதோடு ‘செந்தமிழ்’ என்ற இலக்கியப் பத்திரிகையையும் வெளியிட்டு வந்தார். அவருடைய தாயார் 1898-ஆம் ஆண்டு இறைவன் திருவடியை அடைந்தார். அது காரணமாக இராமநாதபுரம் சென்று துக்கம் விசாரித்து வரவேண்டுமென்று ஆசிரியர் எண்ணினார். அப்போது இராமநாதபுரத்திற்குப் புகைவண்டி இல்லை; மதுரைபோய் அங்கிருந்து வண்டி வைத்துக்கொண்டு போக வேண்டும்.
ஆசிரியரும், அவருடைய குமாரரும் சென்னையிலிருந்து புறப்பட்டு மதுரையை அடைந்து அங்குள்ள திருவாவடுதுறை மடத்தில் தங்கினார்கள். அங்கிருந்து புறப்பட்டு பரமக்குடி போனார்கள். வைகையில் வெள்ளம் வந்த காரணத்தினால் 3 நாள் அங்கேயே தங்க வேண்டி வந்தது. பின்னர் தான் இராமநாதபுரம் போய்ச் சேர முடிந்தது.
இராமநாதபுரத்தில் பாண்டித்துரைத் தேவர் தங்கியிருந்த அரண்மனைக்குச் ‘சோமசுந்தர விலாசம்’ என்று பெயர். ஆசிரியர் அங்கே ஒரு மாத காலம் தங்கியிருந்தார். காலையிலும், மாலையிலும் ஆசிரியர் பாண்டித்துரைத் தேவரைச் சந்தித்து உரையாடினார். “என்னுடைய தாயார் இறந்து போன துக்கத்தைச் சம்பிரதாயமாக விசாரிக்க வந்தீர்கள். உங்களோடு சல்லாபம் செய்து கொண்டிருப்பதில் என் அன்னை இறந்துபோன துக்கமே மாறிவிட்டது. என்னுடைய தாயார் மிகச் சிறந்தவர். அவர் வாழ்ந்திருந்த காலத்திலும் எனக்கு எத்தனையோ நன்மைகளைச் செய்தார்கள். இறந்த பிறகும் உங்களை எல்லாம் வரும்படி செய்து எனக்குத் தமிழின்பம் உண்டாகச் செய்தார்கள்” என்று அவர் நயமாகப் பேசினார்.
ஒரு நாள் பாண்டித்துரைத் தேவர் அரசராகிய பாஸ்கர சேதுபதியைப் பார்க்கப் போனார். அவரிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வீட்டுக்குப் புறப்படும்போது சேதுபதி ஒரு முக்கியமான சமாசாரம் சொல்ல வேண்டுமென்று அவரிடம் ஒரு கருத்தைத் தெரிவித்தார்.
“அது மிகவும் பொருத்தம்” என்று பாண்டித்துரைத் தேவர் சொல்லிவிட்டு, ஆசிரியர் தங்கியிருந்த விடுதிக்கு வந்து சேர்ந்தார். ஆசிரியர் அவரை வரவேற்று உட்காரச் செய்தார். “உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றைச் சொல்ல வந்திருக்கிறேன்” என்று பாண்டித்துரைத் தேவர் சொன்னவுடன், “ஏதாவது புதிய நூலைப் பதிப்பிக்க வேண்டுமென்று சொல்லப் போகிறீர்களா?” என்று கேட்டார் இவர்.
“ஒரு நூல் அல்ல, பல நூல்களை நீங்கள் பதிப்பிக்கலாம். அந்த அளவுக்குச் செல்வம் அளிக்குமாறு ஒரு கிராமத்தையே உங்கள் பெயரில் எழுதிவைக்க மகாராஜா நினைக்கிறார்” என்றார் பாண்டித்துரைத் தேவர். “நான் இன்று அரண்மனை போயிருந்தேன். பாஸ்கர சேதுபதி அவர்கள் இந்தச் செய்தியைத் தெரிவித்தார்கள்” என்று சொன்னார். இந்நாள் வரை தங்களுக்கு எந்தவிதமான உதவியும் அவர் செய்யாமல் இருந்தது பெரிய தவறு என்று நினைக்கிறார்கள். ஆகவே தம் ஜமீனிலுள்ள ஒரு கிராமத்தையே தங்களுக்கு வழங்க எண்ணுகிறார். இந்தச் செய்தியைத் தங்களிடம் தெரிவிக்கும்படி என்னிடம் சொன்னார்’ என்றார்.
இதைக் கேட்டவுடன் பாண்டித்துரைத் தேவர் எதிர்பார்த்தபடி ஆசிரியருக்கு மகிழ்ச்சி அதிகமாக உண்டாகவில்லை. அவரிடம், “மகாராஜா அவர்களுடைய எல்லையற்ற அன்பை நான் இதனால் உணர்ந்து கொள்கிறேன். என்னுடைய கருத்தை நான் அவர்களிடமே நேரில் சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டார்.
ஆசிரியர் பாஸ்கர சேதுபதியைப் பார்க்கச் சென்றபோது, தம்முடைய விருப்பத்தை ஏற்று, தமக்கு நன்றி சொல்ல வந்திருக்கிறார் என்றே மன்னர் எண்ணினார். ஆசிரியரும், தம் பேச்சில், எடுத்தவுடன் இதைச் சொல்லவில்லை. சிறிதுநேரம் வேறு விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்துவிட்டு, முடிவில் சொன்னார்.
“பாண்டித்துரைத் தேவர் அவர்கள் மகாராஜா சொல்லி அனுப்பிய செய்தியைத் தெரிவித்தார். அதன் மூலம் மகாராஜா அவர்களுக்கு என்பால் எவ்வளவு அன்பும் நம்பிக்கையும் இருக்கின்றன என்பதை உணர்ந்து கொண்டேன். எனக்கு இப்போது ஒன்றும் குறை இல்லை. ஆண்டவன் திருவருளால் கல்லூரியில் சம்பளம் வருகிறது. நான் செட்டாக வாழத் தெரிந்தவன். தாங்கள் வழங்குவதை ஏற்க மறுக்கிறேன் என்று எண்ணக் கூடாது. சமஸ்தானத்தின் நிலைமையும் எனக்கு நன்கு தெரியும். இந்த நிலையில் இப்போது அவ்வளவு பெரிய கொடையைத் தங்களிடமிருந்து ஏற்பதற்கு என் மனம் உடன்படவில்லை” என்று சொன்னார். அப்போது அந்தச் சமஸ்தானம் பலவிதக் கடன் தொல்லைகளுக்கு உள்ளாகியிருந்தது. எனவே, ஆசிரியர் கருத்தை உணர்ந்துகொண்டு ஒரு பதிலும் சொல்லாமல் சிறிது நேரம் மௌனமாக இருந்தார் மன்னர். பின்னர், “தங்கள் விருப்பம்” என்று சொல்லி விடை கொடுத்தனுப்பினார். தமக்குக் கிடைக்க இருந்த ஒரு கிராமத்தையே தாம் இழந்துவிட்டோமே என்ற எண்ணம் ஆசிரியருக்கு எந்தக் காலத்திலும் எழுந்தது இல்லை.
கும்பகோணம் கல்லூரியில் அந்தக் காலத்தில் ராவ்பகதூர் வி.நாகோஜி ராவ் என்பவர் முதல்வராக இருந்தார். அவர் இசையில் நல்ல ஞானம் உள்ளவர். இசை சம்பந்தமான புத்தகங்களை அவர் வெளியிட இருந்தார். அவற்றைத் திருத்தமாக வெளியிட வேண்டும் என்று விரும்பியதால் அவற்றைத் திருத்திக்கொள்ள ஆசிரியப் பெருமானை நாடினார். அப்படியே ஆசிரியரும் திருத்தித் தந்தார். ஏதாவதொரு வகையில் ஆசிரியருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென்ற விருப்பம் நாகோஜி ராவுக்கு உண்டாயிற்று.
ஒருநாள் ஆசிரியரைப் பார்த்துச் சொன்னார்: “நீங்கள் தமிழிலுள்ள பழைய நூல்களைப் பதிப்பித்து வருகிறீர்கள். அதனால் உங்களுக்கு லாபம் எதுவும் இல்லை என்று எனக்குத் தெரியும். வேறு வகையில் உங்களுக்கு வருவாய் அதிகமானால் இந்தப் பதிப்பு வேலைகளுக்கும் உதவியாக இருக்கும் என்று தோன்றியது. பள்ளிக்கூடப் பாட நூல்கள் இப்போது தரமாக வருவதில்லை. நீங்கள் எழுதிக் கொடுத்தால் நன்றாக இருக்கும். மூன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் பாரம் வரைக்கான பாட நூல்களை நீங்களே எழுதிக் கொடுத்தால் அவற்றை லாங்மன்ஸ் அச்சகத்தார் வெளியிடுவார்கள். அவர்கள் உங்களுக்குத் தக்க சன்மானம் கொடுப்பார்கள். அதைக்கொண்டு தமிழ்த் தொண்டு செய்து வரலாம்” என்றார். ஆசிரியர் சிறிது யோசனை செய்தார்.
“நான் உங்கள் அன்பைப் பாராட்டுகிறேன். என் தொல்லை உங்களுக்குத் தெரிந்திருப்பது எனக்கு ஆறுதலாக உள்ளது. உங்களைப் போன்று வேறு சில அன்பர்களும் நான் பாடப் புத்தகங்களை எழுத வேண்டுமென்று சொன்னார்கள். எனக்குப் பணம் முக்கியமல்ல. என்னுடைய நேரம் முழுவதும் கல்லூரியில் பாடம் சொல்வதிலும் மற்றச் சமயங்களில் தமிழ் நூல்களை ஆராய்வதிலுமே கழிந்து கொண்டிருக்கிறது. பணம் வரத் தொடங்கினால் ஆசை வேறு வழிகளில் ஏற்பட்டுவிடும். பிறகு எனக்கு ஆராய்ச்சி செய்வதற்கு நேரம் இருக்காது. பழைய நூல்களைப் பதிப்பிக்கவும் தோன்றாது. நான் தங்கள் யோசனையை மறுப்பதாக எண்ணக் கூடாது. என் போக்கிலே என்னை விட்டு விடுங்கள்” என்று நயமாகச் சொன்னார். நாகோஜி ராவ், ‘வலிய வருவாய் கிடைத்தாலும் கூட இவர் வேண்டாம் என்கிறாரே! இவருக்குப் பழைய தமிழ் நூல்களில் இருக்கிற ஆசைதான் எத்தனை!’ என்று எண்ணி வியந்தார்.
$$$
22. ஹாவ்லக் பிரபு விஜயம்
1898-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கல்லூரிக்கு ஆளுநர் ஹாவ்லக் பிரபு விஜயம் செய்தார். அக்காலத்தில் ஆங்கிலத்திற்கு மதிப்பு அதிகம். ஆங்கிலத்தில் வரவேற்றுப் பேசுவதே நாகரிகம் என்று பலரும் நினைத்த காலம். ஆனால் ஆசிரியப் பெருமானை நன்கு உணர்ந்த கல்லூரி முதல்வர் நாகோஜி ராவ் தமிழிலும் ஒரு வரவேற்பு எழுதி வாசித்தளிக்க ஆசிரியருக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று நினைத்தார். கவர்னர் கல்லூரிக்கு விஜயம் செய்தபோது பல பெருமக்கள் வந்திருந்தார்கள். ஆசிரியப் பெருமான் தாம் இயற்றிய வரவேற்புத் தமிழ்ச் செய்யுளை அளித்தார். ஆளுநரின் பெருமைக்கேற்றபடி அது அமைந்திருந்ததாக எல்லோரும் பாராட்டினார்கள். ஆசிரியரைத் தம் அருகில் வைத்துக்கொண்டு ஆளுநர் ஒரு படம் எடுத்துக் கொண்டார்.
ஆசிரியப் பெருமான் ஏட்டுச்சுவடிகளைத் தேடிச் சேகரித்துப் பதிப்பித்ததை அறிந்த பலர் தம்மிடம் இன்ன இன்ன சுவடிகள் இருக்கின்றன என்று எழுதுவார்கள்; பணம் அனுப்பினால் அவற்றை அனுப்பி வைப்பதாகவும் தெரிவிப்பார்கள். ஆசிரியரும் எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என்ற எண்ணத்தில் அவர்கள் கேட்ட பணத்தை அனுப்புவார். பல சமயங்களில் அனுப்பிய பணத்திற்கு ஒரு பயனும் கிடைத்ததில்லை.
ஒரு சமயம் ‘சாப புராணம்’ தம்மிடம் இருப்பதாக ஒரு புலவர் எழுதியிருந்தார். ஆசிரியரும் சிறிது பணம் அனுப்பி, அந்த நூலை அனுப்பிவைத்தால் தாம் பார்த்துவிட்டுத் திருப்பி அனுப்பி வைப்பதாக அவருக்கு எழுதினார். அந்த நூல் வந்தது. அது எந்தச் சாபத்தையும் பற்றிய புராணம் அன்று; அது ‘சரப் புராணம்’; சிவபெருமான் சரப மூர்த்தியாக எழுந்தருளி அருள் பாவித்த வரலாறு. அது சாப புராணமாக இல்லாவிட்டாலும் ‘சரப புராணமாக’ இருந்ததனால் ஆசிரியர் ஒருவாறு திருப்தி அடைந்தார்.
மதுரையில் 1901-ஆம் ஆண்டு மே மாதம் தமிழ்ச் சங்கம் தொடங்கியது. அது முதல் ஒவ்வோர் ஆண்டும் அதன் ஆண்டு விழா நடக்கும். பாண்டித்துரைத் தேவரின் அழைப்புக் கிணங்க ஆசிரியப் பெருமானும் ஒவ்வோர் ஆண்டும் அங்குச் சென்று அதனைச் சிறப்பிப்பார். விழாவின் இரண்டாம் நாள் நடக்கும் புலவர் பேரவைக்குத் தலைமை தாங்கி ஆசிரியர் நடத்திக் கொடுப்பார். இவ்வாறு பல ஆண்டுகள் நடந்து வந்தது.
1900-ஆம் ஆண்டு சென்னையில் பல அன்பர்கள் கூடி, ‘திராவிட பாஷா சங்கம்’ என்ற ஒரு சங்கத்தை ஏற்படுத்தினார்கள். கல்வித் துறையில் பணியாற்றிய சேஷாத்திரி ஆச்சார் என்பவரும், ஜே.லாரஸ் என்ற பாதிரியாரும் அந்தச் சங்கத்தின் செயலாளர்களாக இருந்தார்கள். ஆசிரியப் பெருமான் அதன் கௌரவ அங்கத்தினராக இருந்தார்.
$$$
23. சென்னைக்குப் போவதை மறுத்தது
ஒருநாள் சேஷாத்திரி ஆச்சார் கும்பகோணத்திற்கு வந்து ஆசிரியப் பெருமானைப் பார்த்தார். “நீங்கள் சென்னைக்கே வந்து விட்டால் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
“நான் எப்படி சென்னைக்கு வருவது? இங்கேதானே எனக்கு உத்தியோகம் இருக்கிறது?” என்றார் ஆசிரியர்.
“நீங்கள் சென்னைக்கு வருவதாக இருந்தால் அங்கே உள்ள மாநிலக் கல்லூரிக்கு உங்களை மாற்றும்படி நானே ஏற்பாடு செய்கிறேன். கல்வித் துறையில் எல்லோரையும் எனக்குத் தெரியும். நீங்கள் சென்னை வரச் சம்மதம் கொடுங்கள், போதும்” என்றார் ஆச்சார்.
அப்போது சென்னை மாநிலக் கல்லூரியில் முதிர்ந்த பிராயமுள்ள ஒருவர் தமிழாசிரியராக இருந்தார். அவருக்குச் சென்னை சொந்த ஊராக இருந்தது. சென்னைக்கு வந்தால் பதிப்பு வேலைகளை எளிதில் கவனித்துக்கொள்ள வசதி ஏற்படும் என்ற எண்ணம் ஆசிரியருக்கு இருந்தாலும், அந்த முதியவருக்கு முதிர்ந்த காலத்தில் இடையூறு ஏற்படுத்துவதை விரும்பவில்லை. எனவே சென்னைக்கு வர இயலாது என்று தெரிவித்துவிட்டார்.
$$$
24. பாராட்டுத் தாள்
1902-ஆம் ஆண்டு கோடை விடுமுறையின் போது பாரிஸில் இருந்த பேராசிரியர் ஜூலியன் வின்சனின் மாணாக்கர் ஒருவர் சென்னைக்கு வந்தார். ஜூலியன் வின்சனுக்கும் ஆசிரியருக்கும் நெடுநாள் பழக்கம் உண்டு. அவர் அடிக்கடி ஆசிரியருக்குக் கடிதம் எழுதி வருவார்.
வின்சனின் மாணாக்கர் தமிழகம் வந்தபோது தஞ்சாவூரில் லைனல் பைபர்ட் என்பவர் சப் கலெக்டராக இருந்தார். அந்தப் பிரெஞ்சுக்காரர் அவருடைய விருந்தாளியாகத் தங்கி இருந்தார். அவர் கும்பகோணம் வந்து ஆசிரியரைச் சந்தித்தார். ஜூலியன் வின்சன், ஆசிரியரைப் பற்றி அடிக்கடி சொல்வது உண்டு என்றும், தமிழுக்கு இவர் செய்துள்ள தொண்டைப் பற்றிச் சில நூல்களில் எழுதியிருப்பதாகவும் சொன்னார்.
தாம் புதுச்சேரி, காரைக்கால் போன்ற சில இடங்களுக்குச் செல்ல இருப்பதாகவும், ஆசிரியர் ஏதாவது ஒரு நூலைக் கொடுத்தால் போகுமிடங்களில் அதைப் படித்துவிட்டு, திரும்ப அதை அனுப்பிவிடுவதாகவும் அவர் சொன்னார்.
ஆசிரியர் பழைய காஞ்சிப்புராணக் கடிதப் பிரதி ஒன்றை அவரிடம் வழங்கினார். ஏதோ புதையல் கிடைத்ததைப்போல அதைப் பெற்றுக்கொண்ட பிரெஞ்சுக்காரர் ஆசிரியரிடம் விடைபெற்றுச் சென்றார். தாம் சொன்னது போலவே இரண்டு வாரத்தில் அதை ரிஜிஸ்தர் தபாலில் திரும்ப அனுப்பி வைத்தார்.
அந்தப் பிரெஞ்சுக்காரர் தஞ்சையில் இருந்தபோது அங்கிருந்த சப் கலெக்டரிடம் ஆசிரியப் பெருமானின் உழைப்பையும், அவரது விரிந்த புலமையையும், அவர் பதிப்பித்த நூல்களால் தமிழுக்கு உண்டான ஏற்றத்தையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஏட்டுச் சுவடியில் உள்ளதை ஆராய்ந்து பதிப்பிப்பது என்பது மிகவும் அருமையான காரியம் என்பதையும் அவர் நன்றாக விளக்கியிருக்கிறார். அதன் பயனாக ஆசிரியப் பெருமானுக்கு ஒரு நன்மை கிடைத்தது. 1903-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதி அன்று ஏழாவது எட்வர்டு மன்னர் பட்டாபிஷேகக் கொண்டாட்டம் நடந்தது. தஞ்சை மாநகரில் ஒரு மகாசபையைக் கூட்டி ஒரு விழா நடத்தினார்கள். அந்த விழாவுக்கு ஆசிரியரை வர வேண்டுமென்று அழைத்தார்கள். அவர்களது வேண்டுகோளின்படி ஆசிரியர் அங்குப் போய் வந்தார். அப்போது ஆசிரியப் பெருமானின் தமிழ்த் தொண்டைப் பாராட்டி சப்கலெக்டர் ஒரு பாராட்டுத் தாளை அளித்தார்.
$$$
25. ஐங்குறுநூறு வெளிவரல்
சங்க நூல்களில் ஒன்றாகிய ஐங்குறுநூற்றை ஆராய்ந்து அதற்கு வேண்டிய குறிப்புகளை ஆசிரியர் தொகுத்துக் கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. ‘நூலை மிகவும் பெருக்காமல், சுருக்கமாக வெளியிட்டால் பல நூல்களைத் தாங்கள் சீக்கிரத்தில் வெளியிடலாம்’ என்று ஓர் அன்பர் எழுதியிருந்தார். அதை நினைவில் வைத்துக்கொண்டு ஐங்குறுநூற்றைச் சுருக்கமான முறையில் 1902-ஆம் வருஷம் செப்டெம்பர் மாதம் ஆசிரியர் வெளியிட்டார்.
அது வெளிவந்த பிறகு அந்த யாழ்ப்பாணத்து அன்பர் , “இப்படி எல்லாவற்றையும் சுருக்கிக் கொள்வீர்கள் என்று நான் நினைக்கவில்லை. தங்களிடமிருந்து பெற்றிருக்க வேண்டிய பெரும் பயனைத் தமிழ்நாடு இழந்துவிட்டது. அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்” என்று ஒரு கடிதம் எழுதினார்.
1903-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐங்குறுநூற்றின் முதல் பதிப்பு வெளியாயிற்று. அதைத் தமக்கு வேலை வாங்கித் தந்த தியாகராஜ செட்டியாருக்கு உரிமையாக்கினார் இவர்.
(தொடர்கிறது)
$$$