-கி.வா.ஜகந்நாதன்

15. சீவக சிந்தாமணிப் பதிப்பு
சேலம் இராமசாமி முதலியார் என்பவர் கும்பகோணத்திற்கு முன்சீப்பாக உத்தியோகம் பெற்றுவந்தார். அவர் தமிழிலும், வடமொழியிலும், இசையிலும் பழக்கம் உள்ளவர். திருவாவடுதுறை ஆதீனகர்த்தராக இருந்த சுப்பிரமணிய தேசிகர், அவரைப் போய்ப் பார்த்து வரும்படியாக ஆசிரியப் பெருமானுக்குச் சொல்லி அனுப்பினார். 21-10-1880 இல் ஆசிரியர் அவரைப் போய்ப் பார்த்தார். மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டதையும், பின்பு தேசிகரிடம் பாடம் கேட்டதையும் இவர் எடுத்துச் சொன்னார். “என்ன என்ன படித்திருக்கிறீர்கள்?” என்று கேட்டபோது தாம் படித்த அந்தாதிகள், பிள்ளைத் தமிழ்கள், கோவைகள் முதலியவற்றை வரிசையாக ஒப்புவித்தார். அதைக் கேட்ட இராமசாமி முதலியார், “இவற்றை எல்லாம் படித்து என்ன பிரயோசனம்?” என்று சொன்னார். அவ்வளவு அலட்சியமாக அவர் பேசியதைக் கண்டு ஆசிரியப் பிரான் ஆச்சரியமுற்றார். மேலும் தாம் படித்த நூல்களை எல்லாம் சொன்னார். கம்ப ராமாயணத்தைப் படித்ததையும் சொன்னார். “இவை எல்லாம் பிற்காலத்து நூல்கள் தாமே? பழங்காலத்து நூல்களான சங்கப் பாடல்களைப் படித்திருக்கிறீர்களா? சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றைப் படித்தது உண்டா?” என்று அவர் கேட்டார். “சுவடிகள் கிடைத்தால் நிச்சயமாகப் படித்துப் பார்ப்பேன்” என்று ஆசிரியப் பெருமான் தைரியமாகச் சொன்னார்.
சில நாட்கள் கழித்து, இராமசாமி முதலியாரிடம் ஆசிரியப் பெருமான் போன போது, அவர் சீவக சிந்தாமணி கடிதப் பிரதி ஒன்றை எடுத்துக் கொடுத்தார். ஆசிரியர் முதலில் அதைப் படித்தபோது சிறிது தடுமாறினார். நச்சினார்க்கினியர் உரையுடன் அந்தப் பிரதி இருந்ததால் ஒருவாறு அதைப் படித்துப் பொருள் செய்து கொண்டார். அதன் பிறகு இராமசாமி முதலியாருக்குப் பாடம் சொல்லத் தொடங்கினார். தமக்கு விளங்காத விஷயங்களை விளங்கவில்லை என்றே சொல்லி வந்தார். இந்த நிலையைக் கண்டு முதலியார் மிகவும் உவகை அடைந்தார். சிந்தாமணி ஜைன நூல் ஆதலால் அதிலுள்ள ஜைன சம்பிரதாயங்களைத் தெரிந்துகொள்ள கும்பகோணத்தில் இருந்த ஜைனர்களிடம் இவர் சென்று அவர்களிடம் ஐயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். ஜைன சமய சம்பந்தமான எல்லாச் செய்திகளையும் நன்றாகத் தெரிந்துகொண்ட பிறகு மீண்டும் படித்துப் பார்க்கவே, பல செய்திகள் நன்றாக விளங்கின. அப்பால் அதைப் பதிப்பிக்க வேண்டுமென்று விரும்பினார். பல ஏட்டுப் பிரதிகளைப் பார்த்துத் திருத்தமான பாடம் இதுதான் என்று திருத்திக்கொண்டார்.
சிந்தாமணியை சென்னையில் பதிப்பித்தால் நன்றாக இருக்குமென்று இவர் சென்னை வந்து இரண்டு வாரங்களுக்கு மேல் தங்கி இருந்தார். அக்காலத்தில் சென்னையில் பல பெரும் புலவர்கள் இருந்தார்கள். அவர்களை எல்லாம் சந்தித்து அவர்களுடைய பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். தேரழுந்தூர், சக்கரவர்த்தி ராஜகோபாலாசாரியார் என்பவரின் உதவியைப் பெற்றுச் சிந்தாமணிப் பதிப்பைத் தொடங்கினார். அவர் ‘ப்ரூப்’ பார்த்துத் தந்தார். ஆசிரியப் பெருமானும் மிகவும் சுறுசுறுப்பாக ‘ப்ரூப்’ பார்த்தார். முதல் முதலாக ஒரு பழைய நூலைப் பதிப்பிக்கும் பேறு கிடைத்தது கண்டு மிகவும் ஊக்கத்துடன் அந்தப் பதிப்பை நிறைவேற்றினார். அப்போது 500 பிரதிகளையே வெளியிட்டார்.
சீவக சிந்தாமணி வெளியான பிறகு தமிழ்நாட்டில் ஒரு புது மலர்ச்சி உண்டாயிற்று. ஆசிரியர் சிந்தாமணி உரையில் காட்டப் பெற்ற மேற்கோள்களுக்குரிய இடங்களையும் பல பழைய நூல்களிலிருந்து ஒப்புமைப் பகுதிகளையும் கொடுத்திருந்தார். அவற்றையெல்லாம் பார்த்து அந்த நூல் பதிப்பு, பழைய நூல்களுக்கெல்லாம் களஞ்சியம் போல இருப்பது கண்டு ஆராய்ச்சியாளர்களும் புலவர்களும் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்.
$$$
16. சுப்பிரமணிய தேசிகர் மறைவு
1888-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ஆம் தேதி திருவாவடு துறை ஆதீன கர்த்தர் சுப்பிரமணிய தேசிகர் பரிபூரணம் அடைந்தார். அப்போது ஆசிரியப் பெருமான் சென்னையில் இருந்தார். இந்தச் செய்தியைக் கடித வாயிலாக அறிந்து துக்கக் கடலில் ஆழ்ந்தார். அப்போது உண்டான உணர்ச்சியைப் பற்றிப் பின் வருமாறு குறித்துள்ளார்:
‘நின்ற இடத்திலே நின்றேன். ஒன்றும் ஓடவில்லை. புத்தகத்தைத் தொடுவதற்குக் கை எழவில்லை. என்னுடைய உடம்பிலே இரத்த ஓட்டமே நின்றுவிட்டது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று. என்னுடைய ஒவ்வொரு முயற்சியையும் பாராட்டி எனக்கு வந்த பெருமையைக் காணும்போது தாய் குழந்தையின் புகழைக் கேட்டு மகிழ்வது போல மகிழ்ந்து என்னைப் பாதுகாத்த அந்தப் பரோபகாரியையும் அவர் எனக்குச் செய்த ஒவ்வொரு நன்மையையும் நினைந்து நினைந்து உருகினேன்.
என் துக்கத்தை ஆற்றிக்கொள்ள வழியில்லை. என் உள்ளத் துயரமே செய்யுளாக வந்தது. அவர் திருவுருவத்தை இனிப் பார்க்க இயலாதென்ற நினைவு வரவே நான் மனத்தில் பதித்து வைத்திருந்த அவ்வுருவம் எதிர் நின்றது.’
இவ்வாறெல்லாம் நினைந்து துயரக் கடலில் மூழ்கிய ஆசிரியர் அன்று இரவே புறப்பட்டுத் திருவாவடுதுறை அடைந்தார். ஆதீனத் தலைவராக ஸ்ரீ அம்பலவாண தேசிகர் வந்தார். குருபூஜை சிறப்பாக நடைபெற்றது. அதில் ஆசிரியப் பெருமானும் கலந்துகொண்டு தைரியமும் ஊக்கமும் பெற்றார்.
1888-ஆம் ஆண்டு ஆரம்பத்தில் சுப்பிரமணிய தேசிகரை இழந்த வருத்தம் ஆசிரியப் பெருமானுக்கு ஆறுவதற்குள், அவரது நன்மையைப் பெரிதும் கருதி வந்த தியாகராச செட்டியார் இறைவன் திருவடியை அடைந்தார். இதனால் அந்த ஆண்டின் முன்னாலும், பின்பும் ஆசிரியருக்கு அதிகத் துன்பம் உண்டா யிற்று.
$$$
17. பத்துப்பாட்டுப் பதிப்பு
சீவக சிந்தாமணியைப் பதிப்பித்த கையோடு இவர் பத்துப் பாட்டை ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். சீவக சிந்தாமணி, காவியம்; பத்துப்பாட்டு, கடைச் சங்க நூல், அதன் இயல்பை நன்கு தெரிந்துகொள்வதற்கு, பல இடங்களுக்கும் சென்று அதன் ஏட்டுச் சுவடிகள் பலவற்றைத் தேடிச் சேகரித்தார்.
பத்துப்பாட்டு ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஆசிரியப் பெருமானிடம் பொறாமை கொண்டிருந்த சிலர் சீவக சிந்தாமணி பற்றி கண்டனக் கடிதங்களை எழுதினார்கள். சைவ மடத்தில் இருந்து வளர்ந்த ஒருவர் ஜைன நூலைப் பதிப்பிக்கலாமா என்று கேட்டிருந்தார்கள். ஆசிரியர் பதிப்பித்த சீவக சிந்தாமணியில் பிழை எனக் கண்டனக்காரர்கள் கூறியதற்கு ஆசிரியர் பதில் எழுதினார். அதை ஆசிரியரோடு கல்லூரியில் பணியாற்றி வந்த பேராசிரியர் சாது சேஷையரிடம் இவர் காட்டினார். அதை வாங்கிப் படித்துப் பார்த்த அவர், அதனை வெளியிடச் சொல்லுவார் என ஆசிரியப் பெருமான் நினைத்தார். ஆனால் சாது சேஷையார் அந்தக் காகிதங்களைக் கிழித்துத் தூக்கி எறிந்துவிட்டு, “இப்படிப்பட்ட கண்டனங்களுக்குப் பதில் எழுதுவதற்கு முயலக் கூடாது. அப்படிச் செய்தால் கண்டனம் எழுதுபவர்கள் பெருமை அதிகமாகிவிடும். உங்கள் வேலைகளுக்குத் தடங்கல் உண்டாகும்” என்று சொன்னார் .
ஒவ்வொரு நாளும் இரவு வெகுநேரம் வரைக்கும் ஆசிரியப் பெருமான் பத்துப்பாட்டைப் படித்தார். பல நண்பர்களுடைய பொருள் உதவியை மேற்கொண்டு அதைப் பதிப்பிக்கத் தொடங்கினார். சென்னைக்கு வந்து ஓர் அச்சுக்கூடத்தில் அதைக் கொடுத்து அச்சிடத் தொடங்கினார். அப்போது பத்துப்பாட்டின் மூலம் கிடைக்கவில்லை. நச்சினார்க்கினியர் உரையை வைத்துக்கொண்டே ஒருவாறு மூலத்தைச் செப்பம் செய்து உருவாக்கி அச்சிடக் கொடுத்தார். 1889-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பத்துப்பாட்டு அச்சிட்டு நிறைவேறியது. ஆறு மாதங்கள் அந்த வேலை நடைபெற்றது.
$$$
18. சிலப்பதிகார வெளியீடு
அதன் பிறகு சிலப்பதிகாரத்தை ஆராய்ந்து வெளியிட வேண்டுமென்ற எண்ணம் ஆசிரியருக்கு உண்டாயிற்று. தம்முடைய கையிலிருந்த ஏடுகளை எல்லாம் ஒப்பு நோக்கி ஆராய்ச்சி பண்ணினார். அடியார்க்குநல்லார் உரை அந்த நூலுக்கு உண்டு. அவர் உரை எல்லாக் காதைகளுக்கும் இல்லை. அரும்பத உரை என்பது ஒன்று கிடைத்தது. அதை வைத்துக்கொண்டும், அங்கங்கே பலவற்றுக்குப் பொருள் செய்துகொண்டார். மேலும் சில ஏடுகள் கிடைக்கலாமோ என்ற எண்ணத்தில் 1891-ஆம் வருடம் கோடை விடுமுறை யில் திருநெல்வேலி மாவட்டத்தை அடைந்து ஆங்காங்குள்ள பல சைவர்களுடைய வீடுகளில் தேடினார். இந்தப் பெரும் முயற்சியில் ஒன்றிரண்டு சிதிலமான ஏட்டுச் சுவடிகள் கிடைத்தன. கிடைத்தவற்றை யெல்லாம் வைத்துக்கொண்டு மேலும் சிலப்பதிகாரத்தை நன்றாக ஆராய்ந்து அச்சிடத் தொடங்கினார்.
$$$
19. புறநானூறு வெளியீடு
சிலப்பதிகாரத்தை வெளியிட்டவுடன் மணிமேகலையையும் ஆராய்ந்து வெளியிட வேண்டுமென்ற ஆசை எழுந்தது. அடுத்தபடியாக புறநானூறு என்ற சங்க நூலைப் பதிப்பிக்க வேண்டுமென்ற விருப்பமும் உண்டாயிற்று. புறநானூற்றுக்கு ஒரு பழைய உரை உண்டு. முதல் 260 பாடல்களுக்கே உரை இருந்தது. அதற்குமேல் இல்லை. ஆகவே அந்தப் பகுதியைப் பதிப்பிக்கும் போது இடையூறு ஏற்பட்டது. பல காலம் பயின்ற பழக்கத்தால் ஒருவாறு பொருள் செய்துகொண்டார். புறநானூற்றை 1893-ஆம் வருடம் ஜனவரி மாதம் சென்னையில் அச்சிடத் தொடங்கினார். அவ்வாண்டு செப்டெம்பர் மாதம் ஆசிரியப் பெருமானுடைய தந்தையார் இறைவன் திருவடியை அடைந்தார். அதனால் ஆசிரியப் பெருமானுக்கு மிகவும் துயரம் உண்டாயிற்று. 10-12-1893-இல் பூண்டி அரங்கநாத முதலியார் காலமானார். தம் தந்தையாரை இழந்த துக்கமும், அரங்கநாத முதலியார் காலமான வருத்தமும் ஆசிரியரின் மனவுறுதியைக் குலைத்தன என்றாலும் 1894-ஆம் வருடம் செப்டெம்பர் மாதம் புறநானூற்றுப் பதிப்பு நிறைவேறியது. பல அருமையான வரலாற்றுச் செய்திகள், பழங்கால மன்னர்கள். வள்ளல்கள், பல உபகாரிகள் ஆகியோரைப் பற்றிய செய்திகள் எல்லாம் அதனால் தெரியவந்தன. பிற்காலத்திலே அருமையான வரலாறுகளையும் ஆராய்ச்சிகளையும் பல புலவர்கள் எழுதி இருக்கிறார்கள். இவற்றுக்கெல்லாம் கருவியானது புறநானூறு என்னும் சங்க நூலே.
ஏட்டுச் சுவடியிலிருந்து பதிப்பிப்பது பெரிய காரியம் அன்று என்று சிலர் நினைக்கலாம். ஒரு நூலைப் பாடிய புலவர் தம்மிடம் பாடம் கேட்கும் மாணவர்களுக்கு அதைச் சொல்லிக்கொண்டே வருவார். அவர்கள் அதை ஏட்டுச் சுவடியில் எழுதுவார்கள். இடையிடையே ஆசிரியர் கூறும் மற்ற விஷயங்களையும் அவர்கள் இரண்டு இரண்டு வரிகளுக்கிடையே எழுதி வைத்துக்கொள்வதும் உண்டு. மற்றவர்கள் அதைப் பார்த்துப் பிரதி செய்து கொள்ளும் போது அந்தக் குறிப்புகளையும் பழைய மூலத்தோடும் உரையோடும் சேர்த்து எழுதிவிடுவார்கள். இதுபோன்று எழுதுவதில் ஏற்பட்ட பிழைகள் அதிகம். சுவடிகளில் மேற்கோள் செய்யுட்களைக் கண்டுபிடிப்பதும் கடினம்.
உரை இல்லாத மூலங்கள், எழுத்தும் சொல்லும் மிகுந்தும் குறைந்தும் பிறழ்ந்தும் திரிந்தும் பலவாறு வேறுபட்டிருந்ததன்றி, சில பாடல்களின் பின் திணை எழுதப்படாமலும் இருக்கும். சிலவற்றில் துறை எழுதப்படாமல் இருக்கும். சிலவற்றில் இரண்டுமே இரா. பாடினோர் பெயர் இருக்காது. சிலவற்றில் சிதைந்து இருக்கும். சிலவற்றில் இரண்டு பெயர்களுமே இரா. ஒரே எண்ணில் இரண்டு பாடல்கள் வரும். ஒரே பாடல் இரண்டு இடங்களில் வரும். சில முதற்பாகம் குறைந்தும், சில இடைப்பாகம் குறைந்தும், சில கடைப்பாகம் குறைந்தும் இருக்கும். ‘ஏட்டுச் சுவடி என்றால் திருத்தமாக இருக்கும். அப்படியே அச்சுக்குக் கொடுத்துவிடலாம்’ என்று சிலர் நினைக்கிறார்கள். அதைப் பார்த்துத் தலைசுற்றி அவற்றைப் பதிப்பிக்க முடியாது என்று போனவர்கள் பலர் உண்டு. யாராலும் இந்தப் பழைய நூலை வெளியிட முடியவில்லை. பொருள் செய்வதற்கே தடுமாற்றம் இருந்தது. ஆண்டவன் திருவருளினால் ஆசிரியப் பெருமான் தம் நிறைந்த தமிழ் அறிவைக் கொண்டு மிகவும் பொறுமையுடன் தொண்டாற்றியதால் தமிழகத்திற்கு அந்தப் பழங்காலப் புதையல்கள் கிடைத்தன. அவற்றை வெளியிட இவர் பட்ட சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அவை யாவும் இப்போது மறந்து போயின. பத்துமாதம் குழந்தையைச் சுமந்து, பல்வேறு துன்பங்களுக்கிடையே பிரசவ வேதனையுற்றுக் குழந்தையை ஈன்ற தாய், தன் அருகில் குழந்தையைக் கொண்டுவந்து போட்டவுடன் தான் பட்ட சிரமங்களை எல்லாம் மறந்துபோய்ப் பேரானந்தம் கொள்வது போல, பதிப்பிக்கப்பெற்ற புறநானூற்றுப் புத்தகத்தைப் பார்த்தவுடன் ஆசிரியப் பெருமானுக்குப் பெருமகிழ்ச்சி உண்டாயிற்று.
$$$
20. மணிமேகலையை வெளியிட்டது
புறநானூற்றுக்குப் பிறகு மணிமேகலையை ஆராயத் தொடங்கினார். மணிமேகலை பெளத்த காவியம், ஜைன காவியமாகிய சீவக சிந்தாமணியில் ஏற்பட்ட சந்தேகங்களைப் போக்குவதற்கு ஜைனர்கள் பலர் இருந்தார்கள். ஆனால் பெளத்தர்கள் தமிழ்நாட்டில் யாரும் இல்லை. மணிமேகலை பெளத்த சமயக்கொள்கை நிரம்பின நூல். ஆகவே அதைப் படித்தபோது பல செய்திகள் தெரியவில்லை. ‘வீரசோழியம்’ என்ற இலக்கண நூல் ஒரு பௌத்தரால் இயற்றப்பட்டது. அதில் பௌத்த சமயக் கருத்துக்கள் காணப்பட்டன. அவற்றைப் படித்தும் பல செய்திகளை அறிந்துகொண்டார். சென்னையில் மளூர் ரங்காசாரியார் என்ற பேராசிரியர் இருந்தார். அவர் பெளத்த நூல்களை நன்றாகக் கற்றவர். அவர் வாயிலாகப் பல செய்திகளை இவர் அறிந்து கொண்டார். பெளத்த சமய சம்பந்தமான நூல்கள் பல ஆங்கிலத்தில் இருந்தன. அவற்றையெல்லாம் தருவித்து ரங்காசாரியாரிடம் கொடுத்தார். அவர் அவற்றைப் படித்து, பௌத்த மதக் கருத்துக்களை எல்லாம் சொன்னார். அவற்றையெல்லாம் மிக்க ஆர்வத்தோடு ஒரு மாணாக்கனைப் போலத் தொகுத்துக்கொண்டார். இடையே ‘புறப்பொருள் வெண்பா மாலை’யை ஆசிரியர் பதிப்பித்தார்.
1896-ஆம் வருடம் ஜூன் மாதம் மணிமேகலையை சென்னையில் கொண்டுவந்து அச்சிடக் கொடுத்தார். பெளத்த சமய சம்பந்தமாகத் தாம் தெரிந்து கொண்டவற்றை எல்லாம் புத்தர், பெளத்த தருமம், பெளத்த சங்கம் என்னும் தலைப்பில் எழுதி அவற்றை மணிமேகலைப் பதிப்பின் முன் அமைத்தார். அகராதி, அரும்பதவுரை ஆகியவை எல்லாம் இணைக்கப் பெற்றன. 1898-ஆம் வருடம் ஜூலை மாதத்தில் மணிமேகலை நிறைவேறியது. அதில் 59 தமிழ் நூல்களிலிருந்தும், 29 வடமொழி நூல்களிலிருந்தும் மேற்கோள் காட்டியிருந்தார். அரும்பதவுரையில் கண்ட சொற்களுக்கு விளக்கங்களையும் கொடுத்திருந்தார். மணிமேகலை கதைச் சுருக்கத்தையும் சேர்த்திருந்தார்.
மேலே ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, அகநானூறு, பெருங் கதை ஆகிய நூல்களில் ஆசிரியர் தம் கருத்தைச் செலுத்தலானார். ஐங்குறுநூறு என்பது எட்டுத்தொகையில் ஒன்று. ஒரு திணைக்கு நூறு பாட்டாக ஐந்து திணைகளுக்கு ஐந்நூறு பாடல்களையுடையது. பதிற்றுப்பத்து, சேரமன்னர்களுடைய பெருமையைச் சொல்வது. அகநானூறு அகப்பொருள் அமைதியுடையது. உதயணன் சரித்திரத்தைச் சொல்வதே பெருங்கதை. ஒன்றன் பின் ஒன்றாக அவற்றையெல்லாம் வெளியிடலாம் என்ற எண்ணத்தினால் அவற்றில் தம்முடைய உள்ளத்தைச் செலுத்தினார் ஆசிரியப் பெருமான்.
(தொடர்கிறது)
$$$