அம்பேத்கர் பார்வையில் சமுதாயம்

-பேரா. ப.கனகசபாபதி

அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு, சட்டமேதை, சமூக சீர்திருத்தவாதி, அரசியல் தலைவர் உள்ளிட்ட வெவ்வேறு விதமான பரிணாமங்கள் இருந்தபோதும், அடிப்படையில் அவர் ஒரு பொருளாதார நிபுணர்.

இளங்கலை, முதுகலைப் படிப்புகளைப் பொருளாதாரத் துறையில் முடித்தார். அதன்பின்னர், புகழ்பெற்ற இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களில், பொருளாதாரத்துறையில், இரு முனைவர் பட்டங்களைப் பெற்றார். அவை அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகம், இங்கிலாந்திலுள்ள லண்டன் பொருளாதார நிறுவனம் ஆகியவை. அதைத்தவிர, சட்டத் துறையில் அவர் தேர்ச்சி பெற்றது தனிச்சிறப்பு வாய்ந்தது.

அவரது பெரும்பாலான பட்டங்கள், ஆய்வுகள் பொருளாதாரத் துறையிலேயே அமைந்திருந்தன. 1930-களின் ஆரம்பத்தில், அப்போதைய பம்பாயிலுள்ள சிடென்ஹாம் கல்லூரியில், பொருளாதாரத் துறையில் பேராசிரியாகப் பணியாற்றினார். அதனால் அவருக்குப் பொருளாதாரம் குறித்து ஆழ்ந்த அறிவு இருந்தது.

பொருளாதார முறைகள் என்றாலே மேற்கத்திய கோட்பாடுகளான கம்யூனிசம், முதலாளித்துவம் ஆகிய இரண்டு மட்டுமே முன் வைக்கப்படுகின்றன. அண்ணல், அவை இரண்டையும் ஏற்றுக் கொள்ளவில்லை. இப்போது அவர் மறைந்து சுமார் அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்டுள்ள உலக மாற்றங்கள், அவரது தீர்க்க தரிசனத்தை எடுத்துக்காட்டுகின்றன.

1980-களின் இறுதியில் சோவியத் ருஷ்யாவில் கம்யூனிசம் தோற்றுப்போனது. அதற்கு முன்னரே மற்றொரு முக்கிய கம்யூனிச நாடான சீனா தனது பொருளாதாரக் கொள்கைகளிலிருந்து விலகி விட்டிருந்தது. முதலாளித்துவம், சந்தைப் பொருளாதார முறையாகப் பரிணமித்து, உலகமயமாக்கல் என்ற மாயையில் பயணித்து இன்று தோல்வியைத் தழுவிக்கொண்டு, குழப்பத்தில் தவிக்கின்றது.

குறிப்பிட்ட இரண்டு சித்தாந்தங்களிலுமே முழுமை இல்லை; மனிதகுலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான அடிப்படை இல்லை. எனவே, ஒவ்வோரு நாட்டுக்கும் அதற்கெனப் பொருத்தமான வழிமுறையே சரியானதாக இருக்கும் என்பதை நிபுணர்கள் இப்போது ஒப்புக்கொள்கின்றனர்.

அண்ணலின் பொருளாதாரச் சிந்தனைகள் பலவும் சாமானிய மக்களின் முன்னேற்றம் பற்றியே அமைந்திருந்தன. நாடு சுதந்திரம் பெற்ற சமயத்தில் நமது பொருளாதாரம் மிகவும் மோசமாக இருந்தது. உலகின் முதல்நிலைப் பொருளாதாரமாகப் பல நூற்றாண்டுகள் தொடர்ந்து விளங்கி வந்த நமது தேசம், ஐரோப்பியர்களின் ஆட்சிக் காலத்தில் மிகவும் சிரமமான நிலைக்குத் தள்ளப்பட்டது. அதனால் தொழில்கள், உற்பத்தித் துறை, வணிகம் ஆகியவையெல்லாம் நசுங்கிப்போயின. எனவே, சுமார் எண்பது விழுக்காடு மக்கள், விவசாயம், கிராமம் சார்ந்த தொழில்களையே நம்பியிருந்தனர். சுதந்திரம் பெற்ற காலத்தில் சுமார் நாற்பத்தைந்து விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்க்கையை நடத்தி வந்தனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் விவசாயத் துறையும் பெரும் அழிவைச் சந்தித்தது. தவறான கொள்கைகளால், 1800 முதல் 1850 வரையிலான ஐம்பது வருட காலத்தில் மட்டும் அன்றைய மெட்ராஸ் பிரசிடென்சியில், சுமார் மூன்றில் ஒரு பங்கு விவசாயிகள், விவசாயத்தை விட்டு வெளியேறினர் என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். எனவே, விவசாயத்தை மேம்படுத்த அவர் தனது கருத்துகளை முன்வைத்தார்.

விவசாயிகளுக்குத் தேவையான நிதிஉதவி, நீர், விதைகள், உரம் போன்றவற்றை அரசாங்கமே கொடுத்து உதவவேண்டும் எனக் கூறினார். அதிக வட்டியில் விவசாயிகளுக்குக் கடன் கொடுப்பவர்களை அரசு கட்டுப்படுத்தி, நெறிப்படுத்தவேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்; நிலவரியை எதிர்த்தார்.

விவசாயத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச கூலி கொடுக்கவேண்டும் என வலியுறுத்தினார். தரிசு நிலங்களை நிலமற்றவர்களுக்குக் கொடுத்து விவசாயம் செய்யவைத்தல், நிலத்தைப் பகிர்ந்தளித்தல், கூட்டு விவசாயம் உள்ளிட்ட கருத்துக்களை முன்வைத்தார்.

ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய நிதிமுறைகளைக் கடுமையாக எதிர்த்தார். அவை சுரண்டலுக்கு வழிவகுக்கிறது என்பதை எடுத்துச் சொன்னார். மேலும் அவை கடந்த காலங்களில் எவ்வாறு தோல்வியில் முடிந்தன என்று நிரூபித்தார்.

நாட்டினைத் தொழில் மயமாக்காமல், வேகமான பொருளாதார வளர்ச்சியை அடைய முடியாது எனக் கூறினார். எனவே பெரிய தொழில்களை அரசாங்கமும், சிறிய தொழில்களைத் தனியார்களும் எனச் சொன்னார். ஏனெனில், அந்தக் காலகட்டத்தில் பெரிய தொழில்களை நடத்துவதற்குத் தேவையான அதிக முதலீடுகளைப் போடுவதற்கு, தனியார் துறையில் போதிய நிதி ஆதாரம் இல்லை எனக் கருதினார்.

இந்தியாவின் நாணயமுறை பற்றி அண்ணலுக்கு ஆழ்ந்தஅறிவு இருந்தது. அந்த சமயத்தில் வீழ்ச்சியடைந்து வந்த ரூபாயைச் சமாளிக்க பிரிட்டிஷ் அரசு திணறிவந்த காலத்தில், அதுபற்றி ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டார். நாணய மாற்றுமுறை மூலம் ஸ்திரத்தன்மை உருவாகாது எனக் கூறினார்.

ஆகையால் நாணயமுறை குறித்த ஸ்திரத்தன்மையைவிட, விலைபற்றிய ஸ்திரத்தன்மை குறித்து அரசு அதிக கவனம் செலுத்தவேண்டும் என எடுத்துக் கூறினார். அவரது கருத்துக்கள் பின்னர் மத்திய ரிசர்வ் வங்கி உருவாவதற்குக் காரணமாக அமைந்தது என்பது அதிகம் பேருக்குத் தெரியாத விஷயம்.

வரிகளைப் பொருத்த வரையில் பணக்காரர்களுக்கு அதிகமாகவும் ஏழைகளுக்குக் குறைவாகவும் விதிக்கப்படவேண்டும்; குறிப்பிட்ட அளவு வரை வருமானத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கருத்துக்களைக் கூறினார். வரி என்பது மக்களின் வாழ்க்கைத்தரத்தைக் குறைக்கும் வகையில் அமையக்கூடாது என எடுத்துச் சொன்னார்.

பொதுச் சொத்துக்கள், மக்கள் அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். உற்பத்தி சம்பந்தமான பொதுவளங்களை, அரசாங்கமே நிர்வகிக்க வேண்டும், பொது உற்பத்திகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனக் கூறினார். அடிப்படைத் தொழில்கள், விவசாயம், காப்பீடு ஆகியவற்றை அரசே நடத்த வேண்டும் என விரும்பினார்.

காரல் மார்க்ஸின் சித்தாந்தம், வழிமுறைகள் வன்முறையாக இருப்பதாக அவர் கருதினார். அதனால் அவற்றை நிராகரித்தார். தொழிலாளர் நலன்குறித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியும் தொழிலாளர்களுக்கு நிர்வாகத்தில் பங்களிக்க வேண்டியும் கேட்டுக் கொண்டார்.

வறுமையை ஒழிக்க வேண்டும், ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதைப் பொருளாதாரத்தின் முக்கியமான நோக்கங்களாகக் கருதினார். அவரது சிந்தனைகள் சாமானிய மக்களின் சிரமங்களைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கையை முன்னேற்றுவது பற்றியதாகவுமே இருந்தது.

குறிப்பு:

பேராசிரியர் திரு. ப.கனகசபாபதி, இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ICSSR) தலைவர்; தமிழக பாஜகவின் துணைத் தலைவர்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s