வலிமைக்கு மார்க்கம்- 3

-வ.உ.சிதம்பரம் பிள்ளை

8. விரும்பாத நிலைமைகளை விலக்கும் வழி

துன்பம் நித்திய இன்ப சொரூப மெய்ப்பொருளை ஜீவன் மறைப்பதனாலுளதாகும் நிழலென்றும், உலகம் ஒவ்வொருவருக்கும் தம்தம் பிரதிபிம்பத்தைக் காட்டுகின்ற கண்ணாடியென்றும் கண்டோம். இப்பொழுது நாம் உறுதியுள்ளவையும் எளிதில் ஏறத்தக்கவையுமான படிகளின் வழியாக நியாய ஒளியை அபரோட்சமாகக் காணத்தக்க மேல் தட்டுக்கு ஏறுவோம். இந்நியாய ஒளியைக் கண்டபின்னர், பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொன்றும் காரணகாரிய நியதிக்கு உட்பட்டிருக்கிறதென்ற ஞானமும், எஃதும் அந்நியதியிலிருந்து விலக முடியாதென்ற ஞானமும் உண்டாகும். மனிதனுடைய மிக அற்பமான நினைப்பு, சொல், செயல் முதற்கொண்டு வானிலுள்ள நக்ஷத்திரக் கூட்டங்கள் வரையுள்ள அனைத்தையும் அந்நியதி ஆள்கின்றது. ஒரு நிலைமை, காரணமில்லாது ஒருகணமும் இருக்க முடியாது. ஏனெனில், அத்தகைய நிலைமையின் இருப்பு காரணகாரிய நியதியை மறுத்ததாகவும் அழித்ததாகவும் முடியும். ஆதலால், வாழ்க்கையின் நிலைமை ஒவ்வொன்றும் ஒழுங்கும் நேர்மையுமுள்ள காரணகாரிய நியதியில் கட்டுப்பட்டிருக்கிறது; ஒவ்வொரு நிலைமையின் மர்மமும் காரணமும் அதனுள்ளேயே அடங்கியிருக்கின்றன. “வினை விதைத்தவன் வினையறுப்பான்; தினை விதைத்தவன் தினையறுப்பான்” என்னும் உண்மை ஒருபோதும் அழியாது; அதனை ஒருவரும் மறுக்க முடியாது; அதனை ஒருவரும் ஏமாற்ற முடியாது; அதிலிருந்து ஒருவரும் தப்ப முடியாது. எவன் நெருப்பில் கையை விடுகிறானோ அவன் அதன் சுடுகையை அநுபவித்தே தீர வேண்டும்; நிந்தனையாவது பிரார்த்தனையாவது அச்சுடுகையை மாற்றமாட்டாது. இதே நியதிதான் மனோவுலகத்தையும் ஆள்கின்றது. வெறுப்பு, வெகுளி, பொறாமை, காமம், பேராசை இவையெல்லாம் எரிகின்ற நெருப்புக்கள்; இவற்றை யார் தொட்டாலும் எரிதற்றுன்பங்களை அனுபவித்தே தீரவேண்டும். இம்மனோ நிலைமைகளையெல்லாம் ‘தீமை’ என்று பெரியோர் சொல்லியது சரி; ஏனெனில், இவையாவும் ஆன்மா தனது அஞ்ஞான நிலையில் காரண காரிய நியதியைக் கவிழ்ப்பதற்காகச் செய்யும் பிரயத்தனங்கள். ஆதலால், இவை ஒழுங்கின்மையும் குழப்பத்தையும் உண்டுபண்ணி, விரைவில் அல்லது தாழ்ப்பில் நோய், தவறு, கேடு, துன்பம், விசனம், ஏக்கம் என்னும் புறநிலைமைகளின் உருக்களை அடைகின்றன. அன்பும், பொறுமையும், நல்லெண்ணமும், தூய்மையும் தம்மைப் பரிபாலிக்கிற ஆன்மாவின் மீது சாந்தியை வீசுகிற குளிர்ந்த வாயுக்கள். அவை நித்திய நியதிக்கு ஒத்தனவாயிருக்கின்றமையால், ஆரோக்கியம், ஆக்கம், வெற்றி, சாந்தம் என்னும் புறநிலைமைகளின் உருக்களை அடைகின்றன.

பிரபஞ்சமெல்லாம் வியாபித்திருக்கின்ற இப் பெரிய நியதியைப் பூரணமாக அறிதலால் கீழ்ப்படிவு என்னும் மனோ நிலைமை அடையப்படுகின்றது. நியாயமும், ஒற்றுமையும், அன்பும் பிரபஞ்சத்தில் மேலான சக்திகளென்று நாம் அறிவோமானால், பிரதிகூலமான நிலைமைகளும் துன்பகரமான நிலைமைகளும் நாம் அந்நியதிக்குக் கீழ்ப்படிந்து நடவாததனாலுண்டான பலன்களென்று நாம் அறிவோம். அவ்வறிவு நமக்குப் பலத்தையும் வலிமையையும் கொடுக்கின்றது; அவ்வித அறிவினாலேயே மெய்யான வாழ்வையும் நிலையான வெற்றியையும் நித்திய இன்பத்தையும் அடையக் கூடும். சகல சந்தர்ப்பங்களிலும் பொறுமையோடிருத்தலும், உங்கள் அபிவிருத்திக்கு அவசியமான கருவிகளென்று சகல நிலைமைகளையும் ஏற்றுக் கொள்ளுதலும் துன்பகரமான நிலைமைகட்கெல்லாம் மேற்பட்டு நிற்றற்கும், அவை திரும்பவும் வருமென்று பயப்பட வேண்டாத விதத்தில் அவற்றை அடியோடு வெல்வதற்கும் ஏதுக்களாகும்; ஏனெனில், அந்நியதிக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் சக்தி அவற்றை வேராடு நாசம் செய்து விடுகின்றது. அத்தகைய கீழ்ப்படிதலுள்ள மனிதன் நியாயத்திற்கு ஒத்தபடி நடக்கிறான்; உண்மையில் அவன் நியாயத்தோடு ஐக்கியமாய்விட்டான் அவன் அடையும் வெற்றிகளெல்லாம் நித்திய வெற்றிகள்; அவன் உண்டு பண்ணுவனவெல்லாம் என்றென்றும் நிலை நிற்பவை.

சகல பலத்தின் காரணமும் சகல பலஹீனத்தின் காரணமும் அகத்துள் இருக்கின்றன; சகல சுகத்தின் காரணமும் சகல துக்கத்தின் காரணமும் அகத்துள்ளேயே இருக்கின்றன. அகத்திலிருந்து விரிவதைத் தவிர வேறாக எவ்வித அபிவிருத்தியுமில்லை; ஞானத்தில் கிரமமாக அபிவிருத்தியடைவதைத் தவிர, வேறாக ஆக்கத்திற்கும் சாந்தத்திற்கும் எவ்வித மார்க்கமுமில்லை.

நீங்கள் நிலைமைகளால் விலங்கிடப்பட்டிருக்கிறதாகக் கூறுகின்றீர்கள்; நல்ல நிலைமைகளையும் விரிந்த செல்வாக்கையும் ஆரோக்கிய நிலைமைகளையும் நீங்கள் அடைய வேண்டுமென்று கதறுகின்றீர்கள். உங்கள் கைகளையும் கால்களையும் கட்டியிருக்கிற உங்கள் விதியை நீங்கள் நிந்திக்கின்றீர்கள். உங்களுக்காகத்தான் நான் எழுதுகிறேன்; உங்களுக்காகத்தான் நான் சொல்லுகிறேன்.

என் வார்த்தையைக் கேளுங்கள்; என் வார்த்தைகள் உங்கள் அகத்துள் என்றும் பிரகாசித்துக் கொண்டிருக்கட்டும். நான் சொல்வது முற்றிலும் உண்மை:- நீங்கள் உங்கள் அக நிலைமையை அபிவிருத்தி செய்வதற்கு உறுதியாகத் தீர்மானித்துக் கொள்வீர்களாயின், நீங்கள் உங்கள் புற நிலைமையில் அடைய வேண்டுமென்று விரும்புகிற அபிவிருத்திகளை அடைவீர்கள். இவ்வழி தொடக்கத்தில், மனோகரமாகத் தோன்றாதென்பதை நான் அறிவேன். (மெய் எப்பொழுதும் அப்படித்தானிருக்கும். பொய்யும் மாயையும் தொடக்கத்தில் மனோகரமாகத் தோன்றி மனத்தைக் கவரும்.) ஆனால், நீங்கள் அவ்வழியில் செல்வதாகத் தீர்மானித்துக் கொள்வீர்களாயின், நீங்கள் உங்கள் மனத்திலுள்ள பலஹீனத்தை நீக்கி உங்கள் மனோ சக்திகளும் ஆன்ம வலிகளும் விரியும்படி செய்து விடாமுயற்சியால் உங்கள் மனத்தை ஒழுங்குபடுத்தி வருவீர்களாயின், உங்கள் புற வாழ்க்கையில் உண்டாகும் அற்புதமான மாறுதல்களைக் கண்டு நீங்கள் ஆச்சரியம் அடைவீர்கள். நீங்கள் செல்லச் செல்ல உங்கள் வழியில் பொன்போல உதவும் சந்தர்ப்பங்கள் வந்து குறுக்கிடும். அவற்றைச் சரியாக உபயோகிப்பதற்குத் தக்க வலியும் அறிவும் உங்கள் அகத்தில் உற்பத்தியாகும்; நீங்கள் அழையாமலே உங்களிடம் சரசமான சிநேகிதர்கள் வந்து சேர்வார்கள்; காந்தத்தினிடத்து ஊசிகள் போய்ச் சேருவது போல, அநுதாபமுள்ள மனிதர்கள் உங்களிடம் வந்து சேர்வார்கள்; நீங்கள் வேண்டும் புத்தகங்களும் மற்றைய உதவிகளும் நீங்கள் தேடாமலே உங்களுக்குக் கிடைக்கும்.

ஒருகால் உங்கள் வறுமை விலங்கு பளுவாயிருக்கலாம்; நீங்கள் சிநேகிதரில்லாது தனியாயிருக்கலாம்; உங்கள் பளுவு குறைய வேண்டுமென்று நீங்கள் மிகுந்த ஆவலோடு விரும்பலாம்;ஆனால், உங்கள் வறுமை விலங்கின் பளு முன்போலவேயிருக்கின்றது; நாளுக்கு நாள் அதிகமாகிற இருள் உங்களை மூடுகின்றது. நீங்கள் உங்கள் நிலைமையைக் குறை கூறுகின்றீர்கள்; உங்கள் வறுமையை நிந்திக்கின்றீர்கள்; உங்கள் பிறப்பையோ, பெற்றோரையோ, எஜமானையோ, உங்களுக்கு வறுமையையும் கஷ்டத்தையும் மற்றவருக்குச் செல்வத்தையும் சுகத்தையும் கொடுத்த அநியாயமான தெய்வத்தையோ பழிக்கின்றீர்கள். நீங்கள் பழிப்பதையும் கூப்பாடு போடுவதையும் நிறுத்துங்கள்; நீங்கள் பழிக்கின்ற எதுவும் உங்கள் வறுமைக்குக் காரணம் அன்று. காரணம் உங்கள் அகத்துள் இருக்கிறது; அதன் பரிகாரமும் அங்கேயே இருக்கின்றது. நீங்கள் குறை கூறுபவர்களாயிருத்தலே நீங்கள் உங்கள் தற்கால நிலைமையை அடைவதற்குத் தக்கவர்கள் என்பதைக் காட்டுகின்றது; எல்லா முயற்சிகளுக்கும் அபிவிருத்திகளுக்கும் ஆதாரமான நம்பிக்கை உங்களிடத்தில் இல்லையென்பதைக் காட்டுகின்றது. நியாயமான பிரபஞ்சத்தில் குறை கூறுபவனுக்கு இடமேயில்லை; கவலை ஆன்மாவைக் கொலை செய்யத்தக்கது. உங்களுடைய ஒவ்வொரு மனப்போக்கினாலும் நீங்கள் உங்களைப் பந்தப்படுத்தியிருக்கிற விலங்குகளைப் பலப்படுத்துகின்றீர்கள்; உங்களை மூடியிருக்கிற இருளை அதிகப்படுத்துகின்றீர்கள்; உங்கள் அகநிலைமையை மாற்றுங்கள்; உங்கள் புற நிலைமை மாறுதல் அடையும். உங்கள் நம்பிக்கையையும் அறிவையும் வளர்த்து நீங்கள் நல்ல நிலைமைகளையும் விரிந்த செல்வாக்கையும் அடைவதற்குத் தகுதியுள்ளவர்களாகுங்கள். உங்களிடத்தில் இப்பொழுது உள்ளனவற்றை நீங்கள் முற்றிலும் சரியாக உபயோகிக்கிறீர்களா என்பதை முதலில் கவனியுங்கள். சிறிய வசதிகளைக் கவனியாது விட்டுவிட்டுப் பெரிய வசதிகளை அடையலாமென்று நினைத்து நீங்கள் மோசம் போய்விடாதீர்கள். நீங்கள் அவ்வாறு பெரிய வசதிகளை அடைவீர்களாயின், அவை நிலையற்றனவாகி, நீங்கள் கவனியாது விட்ட சிறிய வசதிகளின் பாடங்களைப் படிப்பதற்காக நீங்கள் திரும்பவும் கீழே வந்து சேர்வீர்கள். கலாசாலை மாணவன் ஒரு வகுப்பிலிருந்து மற்றொரு வகுப்பிற்குப் போவதற்கு முன் முந்திய வகுப்புப் பாடங்களைச் சரியாகப் படித்து முடிக்க வேண்டுவதுபோல, நீங்கள் விரும்புகிற பெரிய வசதிகளை நீங்கள் அடைவதற்கு முன் நீங்கள் அடைந்துள்ள சிறிய வசதிகளை நீங்கள் சரியாக உபயோகிக்க வேண்டும். நம்மிடத்திலுள்ள சிறியனவற்றை நாம் சரியான வழியில் உபயோகிக்காது பிசகான வழிகளில் உபயோகிப்போமானால், நம்மிடத்திலுள்ள சிறியனவும் நம்மிடத்திலிருந்து கவரப்படும். ஏனெனில், நமது நடக்கையால் நம்மிடத்திலுள்ள சிறியனவற்றையும் நாம் கொண்டிருப்பதற்குத் தகுதியற்றவரென்று காட்டுகிறோம்.

ஒருகால், நீங்கள் சிறிய குடிசையில் வசித்துக் கொண்டிருக்கலாம்; உங்கள் குடிசையைச் சுற்றி ஆரோக்கியத்தைக் கெடுக்கும் கெட்ட நாற்றங்கள் நிறைந்திருக்கலாம்; நீங்கள் ஆரோக்கியத்திற்கொத்த ஒரு பெரிய வீட்டை அடைவதற்கு விரும்பலாம். அப்படியானால், நீங்கள் முதலில் உங்கள் சிறிய குடிசையை ஒரு சிறிய சுவர்க்கம் போலாக்கிக் கொண்டு, நீங்கள் விரும்பிய பெரிய வீட்டை அடைவதற்கு உங்களைத் தகுதியுள்ளவர்களாக்கிக் கொள்ளவேண்டும்; உங்கள் சிறிய குடிசையை மாசு மறு இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்; உங்கள் கையிலுள்ள பொருளுக்குத் தக்கபடி உங்கள் குடிசையை அழகுள்ளதாகவும் இனிமையுள்ளதாகவும் தோற்றும்படி செய்யுங்கள். உங்கள் சாதாரண சாப்பாட்டை முழுக் கவனத்தோடும் சமையல் செய்யுங்கள்; உங்கள் எளிய சாப்பாட்டை நீங்கள் எவ்வளவு சுவையுள்ளதாகச் செய்யக்கூடுமோ அவ்வளவு சுவையுள்ளதாகச் செய்யுங்கள். உங்கள் குடிசையில் விரித்தற்குப் பாய் உங்களிடத்தில் இல்லையானால், உங்கள் குடிசை அரங்குகளில் சிரிப்பும் வரவேற்புமாகிய பாயை விரித்து, அதன் மீது இனிய வார்த்தைகளாகிய ஆணிகளைப் பொறுமையாகிய சம்மட்டியால் அடித்து இறுக்குங்கள். அத்தகைய ஒரு பாய் சூரிய ஒளியால் நிறம் குன்றாது; அடிக்கடி உபயோகிப்பதால் கிழியமாட்டாது. உங்களுடைய தற்கால வசதிகளை இவ்விதமாக நீங்கள் மேன்மைப்படுத்திக் கொள்வதனால் நீங்கள் அவற்றுக்கு மேற்பட்ட வசதிகளை அடையத் தகுதியுள்ளவர்களாவீர்கள். அவை உங்களுக்கு அவசியமில்லாதனவாய்விடும். உங்கள் வரவிற்காக நீண்ட காலம் காத்துக் கொண்டிருக்கிறதும் உங்கள் தகுதிக்கு ஒத்ததுமான நல்ல வீட்டையும் மற்ற வசதிகளையும் நீங்கள் சரியான காலத்தில் அடைவீர்கள்.

ஒருகால், நீங்கள் ஆலோசனை செய்வதற்கும் முயற்சி செய்வதற்கும் அதிக நேரம் வேண்டுமென்று விரும்பக்கூடும்; நீங்கள் கஷ்டத்தோடு அதிக நேரம் வேலை செய்வதாக உணரக்கூடும். அப்படியானால், உங்களுக்கு இப்பொழுது கிடைத்துள்ள சிறிய அவகாச காலம் முழுவதையும் நீங்கள் சரியாக உபயோகிக்கிறீர்களா என்று கவனியுங்கள். உங்களுக்கு இப்பொழுது கிடைத்துள்ள சிறிய அவகாச காலத்தை வீணாக்குவீர்களாயின், நீங்கள் இன்னும் அதிக அவகாசம் வேண்டுமென விரும்புவதில் யாதொரு பிரயோசனமும் இல்லை. உங்களுக்கு அதிக அவகாசம் கிடைக்குமாயின், நீங்கள் இன்னும் அதிக சோம்பலுள்ளவர்களாயும் உதாசீனமுள்ளவர்களாயும் இருப்பீர்கள். வறுமையும் அவகாசமின்மையும் நீங்கள் நினைக்கிறதுபோல அவ்வளவு தீயன அல்ல. அவை உங்கள் அபிவிருத்தியைத் தடுக்குமாயின், அதற்குக் காரணம் உங்கள் பலஹீனங்களாகிய உடைகளை நீங்கள் அவற்றுக்கு உடுத்தியிருத்தலே; அவற்றில் நீங்கள் காணும் தீமை உண்மையில் உங்கள் அகத்துள் இருக்கிறது. நீங்கள் உங்கள் மனத்தைச் சீர்திருத்தி ஒழுங்கு செய்கிற அளவில் நீங்கள் உங்கள் ஊழை ஆக்குகிறவர்கள் என்பதை அபரோட்சமாக அறிவீர்கள்; நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக உங்களைச் சீர்திருத்தி ஒழுங்கு செய்கின்றீர்களோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக நீங்கள் உங்கள் ஊழை ஆக்குகின்றவர்கள் என்பதை அபரோட்சமாக அறிவீர்கள்; அப்பொழுது நீங்கள் தீயனவென்று கருதியவற்றையெல்லாம் நல்லனவாக மாற்றிக் கொள்ளலாமென்பதைக் காண்பீர்கள்; நீங்கள் அப்பொழுது உங்கள் பொறுமையையும் நம்பிக்கையையும் தைரியத்தையும் வளர்ப்பதற்கு உங்கள் வறுமையை ஒரு கருவியாக உபயோகித்துக் கொள்வீர்கள்; உங்கள் சிறிய அவகாசத்தை நீங்கள் விரைந்து ஆலோசனை செய்தற்கும் காரியம் செய்தற்கும் ஒரு துணையாக உபயோகித்துக் கொள்வீர்கள். மிகக் கெட்ட நிலத்தில் மிக நல்ல மலர்கள் வளர்வதுபோல, வறுமையாகிய மிகக்கெட்ட நிலத்தில் மிக நல்ல மனிதராகிய மலர்கள் வளர்ந்து மலர்ந்திருக்கின்றன. எவ்விடத்தில் நாம் கஷ்டங்களை எதிர்க்க வேண்டியிருக்கிறதோ அவ்விடத்திலும், எவ்விடத்தில் நாம் அதிருப்தியான நிலைமைகளை வெல்ல வேண்டியிருக்கிறதோ அவ்விடத்திலும், ஒழுக்கம் மிக மிக வளர்ந்து அதன் பெருமையைக் காட்டுகின்றது.

நீங்கள் ஒரு கொடுமையான எஜமானுக்கு அல்லது எஜமாட்டிக்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கலாம்; நீங்கள் கொடுமையாக நடத்தப்படுவதாக உணரலாம். இதுவும் உங்கள் அபிவிருத்திக்கு அவசியமென்று கருதுங்கள். உங்கள் எஜமான் அல்லது எஜமாட்டிக்கு உங்களை அன்பில்லாது நடத்தினால் அவர்களிடத்தில் நீங்கள் அன்பையும், பொறுமையையும் காட்டுங்கள். நீங்கள் இடைவிடாது பொறுமையையும் அடக்கத்தையும் அப்பியசியுங்கள். உங்கள் மனோ பலத்தையும் ஆன்ம பலத்தையும் வளர்ப்பதற்கு உங்களுக்குப் பிரதிகூலமாகவுள்ள நிலைமைகளை அநுகூலமாக உபயோகித்துக் கொள்ளுங்கள். உங்கள் மௌன நடத்தையாலும் சக்தியாலும் உங்கள் எஜமான் அல்லது எஜமாட்டிக்குப் புத்தி கற்பிப்பீர்கள்; அவர் தமது நடத்தையைப் பார்த்து நாணமடையும்படி செய்வீர்கள்; அதேசமயத்தில் நீங்கள் உங்கள் ஆன்ம சக்தியை வளர்த்துக் கொண்டும் உங்கள் தற்கால நிலைமைகளைப் பார்க்கினும் உயர்ந்த நிலைமைகள் உங்களை நெருங்குங் காலத்தில் அவற்றைக் கொள்வதற்குத் தகுதியுள்ளவர்களாக நீங்கள் வளர்ந்து ஏற்றுக்கொண்டு இருப்பீர்கள்; நீங்கள் அடிமையாக இருப்பதாகக் குறை கூறாதீர்கள்; நீங்கள் மேன்மையான நடத்தையால் அடிமை நிலைக்கு மேற்பட்டவர்களாகுங்கள்- நீங்கள் வேறொருவனுக்கு அடிமையாயிருப்பதாகக் குறை கூறுவதற்கு முன் நீங்கள் உங்களுக்கு (உங்கள் மனத்திற்கும் சரீரத்திற்கும்) அடிமையாயிருக்கவில்லையா என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் அகத்துள் நோக்குங்கள்; அங்குத் தேடிப் பாருங்கள்; உங்கள் மீது இரக்கம் கொள்ளாதீர்கள்- நீங்கள் அடிமைத்தனமான நினைப்புகளையும் அவாக்களையும் அங்குக் காண்பீர்கள். உங்கள் தினசரி வாழ்க்கையிலும் நடத்தையிலும் அடிமைத்தனமான பழக்கங்களைக் காண்பீர்கள். நீங்கள் இவற்றை வெல்லுங்கள்; நீங்கள் உங்களுக்கு அடிமையாயிருப்பதை விடுங்கள்; அப்போது உங்களை அடிமைப்படுத்தும் சக்தி எவனிடத்திலும் இருக்க மாட்டாது. நீங்கள் உங்களை வெல்லுங்காலையில், நீங்கள் பிரதிகூலமான நிலைமைகளையெல்லாம் வென்று விடுவீர்கள்; ஒவ்வொரு கஷ்டமும் உங்களைக் கண்ட மாத்திரத்தில் நீங்கிவிடும்.

செல்வந்தர்கள் உங்களை இம்சிக்கிறதாகக் குறை கூறாதீர்கள். நீங்கள் செல்வந்தர்களானால் நீங்கள் எளியவர்களை இம்சிக்க மாட்டீர்கள் என்பது நிச்சயமா? முற்றிலும் நியாயமான ஒரு நித்திய சட்டம் இருக்கிறதென்பதையும், இன்று இம்சிக்கிறவன் நாளை இம்சிக்கப்படுவானென்பதையும், இச் சட்டத்திலிருந்து எவனும் தப்ப முடியாதென்பதையும் நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஒருகால், நீங்கள் நேற்று (உங்கள் முந்தைய ஜென்மம் ஒன்றில்) செல்வந்தர்களாகவும் இம்சிக்கிறவர்களாகவும் இருந்திருக்கலாம்; நீங்கள் அப்பெரிய சட்டத்திற்குச் செலுத்த வேண்டிய உங்கள் கடனை இன்று செலுத்திக் கொண்டிருக்கலாம். ஆதலால், நீங்கள் நம்பிக்கையையும் தைரியத்தையும் கைக்கொள்ளுங்கள்; நித்திய நீதியாயும், நித்திய நன்மையாயும் இருக்கிற கடவுளை அடிக்கடி சிந்தித்துக் கொண்டிருங்கள். நீங்கள் கண்ட பொருள்களையும் அநித்தியமாயுள்ள பொருள்களையும் விட்டு அகண்டமாயும் நித்தியமாயுள்ள பொருளிடத்துச் செல்ல முயலுங்கள். பிறர் உங்களுக்குத் துன்பம் செய்கின்றனர் அல்லது உங்களை இம்சிக்கின்றனர் என்ற மயக்கத்தை விட்டுவிடுங்கள். உங்கள் அக வாழ்க்கையையும் அதனை ஆளும் நியதிகளையும் பற்றிய ஞானத்தால் உங்கள் அகத்தில் உள்ளதே உங்கள் புறத்தில் வந்து உங்களை உண்மையில் துன்பப்படுத்துகிறதென்று நீங்கள் அபரோட்சமாக அறிய முயலுங்கள். தன்மீது தான் இரக்கம் கொள்ளுதலைப் பார்க்கினும் தாழ்ந்ததும் அவமதிப்பைத் தரத்தக்கதும் ஆன்மாவைக் கெடுக்கத்தக்கதும் வேறொன்றுமில்லை. அத்தகைய புழு ஒன்று உங்கள் இருதயத்தைத் தின்று கொண்டிருக்கும்பொழுது நீங்கள் பூரண வாழ்வையே ஒருபோதும் அடைய முடியாது. நீங்கள் பிறர் மீது குறை கூறுகிறதை விட்டு, நீங்கள் உங்களையே குறை கூறத் தொடங்குங்கள் மாசற்ற தூய்மையும் குற்றமற்ற நன்மையும் பொருந்தியிராத உங்கள் செயல்களையும் அவாக்களையும் நினைப்புக்களையும் கவனியாது விடாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்வதால் நித்திய வஸ்துவாகிய மலையின் மீது உங்கள் வீட்டைக் கட்டுகின்றீர்கள். உங்கள்  ஷேமத்திற்கும் இன்பத்திற்கும் வேண்டியவையெல்லாம் தக்க காலத்தில் உங்களிடம் வந்து சேரும்.

அகத்திலுள்ள சுயநல நிலைமைகளை ஒழிப்பதைத் தவிர, வறுமையினின்றோ, விரும்பத்தகாத மற்றைய நிலைமையினின்றோ, ஸ்திரமாக நீங்கிக் கொள்வதற்கு வேறு வழியில்லை; ஏனெனில், வறுமையும் விரும்பத்தகாத மற்றைய நிலைமைகளும் அகத்தின் சுயநல நிலைமைகளின் பிரதிபிம்பங்களே. உண்மையான செல்வங்களை அடைவதற்கு மார்க்கம், ஒழுக்கத்தைக் கைக்கொண்டு ஆன்மா செல்வமுறுமாறு செய்தலே. உண்மையான அக ஒழுக்கத்திற்கு வேறாகச் செல்வமாவது வலிமையாவது இல்லை; அவற்றின் தோற்றங்கள் மாத்திரமே உண்டு. ஒழுக்கம் ஒரு சிறிதும் இல்லாமலும், ஒழுக்கத்தைக் கொள்ள வேண்டுமென்ற விருப்பம் ஒரு சிறிதும் இல்லாமலும் இருக்கிற மனிதர்கள் மிகுதியாகப் பணம் சம்பாதிப்பதை நான் அறிவேன். ஆனால், அத்தகைய பணம் உண்மையான செல்வமாக மாட்டாது. அதனுடைமை அழிவையும் நோவையும் தரத்தக்கது. அதற்குத் தாவீது சான்று கூறியிருக்கின்றனர். அவர் “துர்நடத்தைக்காரர் செல்வந்தரானதை நான் பார்த்தபொழுது அம்மனிதர் செல்வ நிலைமையில் பொறாமை அடைந்தேன். அவரது விழிகள் கொழுத்துப் பருத்திருந்தன. அச்செல்வந்தர் தமது விருப்பத்திற்கு மேற்பட்ட செல்வமுடையவராயிருந்தனர். நான் எனது அகத்தைச் சுத்தம் செய்ததும் நான் யாதொரு குற்றமும் செய்யாதிருந்ததும் வீண் என்று தோன்றின. நான் இதனை நினைத்தபோதெல்லாம் எனக்கு வருத்தமாயிருந்தது. நான் கடவுளின் ஆலயத்துள் பிரவேசித்தபொழுது அச்செல்வத்தின் முடிவைக் கண்டேன்” என்று கூறியிருக்கின்றனர்; துர்நடத்தைக்காரருடைய செல்வம் தாவீதுக்கு மிக வருத்தத்தைக் கொடுத்தது. அவர் கடவுள் ஆலயத்திற்குள் சென்ற பின்னர் அச் செல்வத்தின் முடிவைக் கண்டனர். அவரைப் போல, நீங்களும் கடவுளாலயத்துள் செல்லலாம். அஃது உங்கள் அகத்துள்ளே இருக்கிறது. இது தாழ்வாயும் கண்டமாயும் அநித்தியமாயுமுள்ள எல்லாவற்றையும் விட்டு, உயர்வாயும் அகண்டமாயும் நித்தியமாயுமுள்ள தத்துவங்களை அபரோட்சமாக அறிந்தபோது எஞ்சி நிற்கும் ஞானமே. அதுதான் அறிவின் தெய்வத்தன்மை. அதுதான் பரம்பொருளின் ஆலயம். நீங்கள் நீண்ட காலம் முயற்சிசெய்து உங்களை ஒழுங்குபடுத்தி, நீங்கள் அப்பரிசுத்த ஆலயத்துள் பிரவேசித்தபொழுது மனிதரது சகல நல்ல நினைப்புகளின் பலன்களையும் முடிவுகளையும், நல்ல முயற்சிகளின் பலன்களையும், முடிவுகளையும், மனிதரது சகல தீய நினைப்புகளின் பலன்களையும் முடிவுகளையும், தீய முயற்சிகளின் பலன்களையும், முடிவுகளையும் உள்ளங்கை நெல்லிக்கனி போலக் காண்பீர்கள். அப்பொழுது ஒழுக்கமில்லாத மனிதன் பணம் சம்பாதிப்பதைப் பார்த்தால் உங்கள் தெய்வ நம்பிக்கையை இழக்க மாட்டீர்கள். ஏனெனில், அவன் மறுபடியும் வறுமையையும் தாழ்மையையும் அடைந்தே தீர வேண்டுமென்பதை நீங்கள் அறிவீர்கள். ஒழுக்கமில்லாத செல்வந்தன் உண்மையில் தரித்திரனே. நதியின் ஜலம் சமுத்திரத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது எச்வவளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமே அவன் சகல செல்வங்களையும் உடையவனாயிருக்கும்பொழுதே வறுமைக்கும் கேட்டிற்கும் சென்று கொண்டிருக்கிறான் என்பது. அவன் செல்வந்தனாக இறந்தபோதிலும், அவனது தீய ஒழுக்கத்தின் தீய பலன்களை அறுப்பதற்கு அவன் திரும்பப் பிறந்தே தீர வேண்டும். அவன் அநேக தடவை செல்வத்தை அடைந்தபோதிலும், அவன் நீண்ட கால இன்ப துன்ப அனுபவங்களால் அவனுடைய அகத்தின் வறுமையை வெல்லும் வரையில் அநேக தடவை வறுமையை அடைந்தே தீரவேண்டும். ஆனால், புறத்தில் செல்வமின்றியும் அகத்தில் ஒழுக்கத்தைக் கொண்டுமிருக்கிற மனிதன் உண்மையில் செல்வந்தனே. அவனது சகல வறுமைகளோடும் அவன் செல்வத்திற்கும் சேவுமத்திற்கும் சென்று கொண்டிருக்கிறான். அவனது வரவிற்காக நித்திய இன்பமும் சுகமும் காத்துக் கொண்டிருக்கின்றன.

நீங்கள் உண்மையாகவும், நிலையாகவும், செல்வந்தர்களாயிருக்க விரும்புவீர்களாயின், நீங்கள் முதலில் ஒழுக்கமுடையவர்களாதல் வேண்டும். நீங்கள் செல்வத்தை நேராக (ஒழுக்கத்தின் மூலமாக) அல்லாது அடைவதற்குக் கருதுதலும், செல்வம் சம்பாதித்தலொன்றையே உங்கள் வாழ்க்கையின் நோக்கமாகக் கொள்ளுதலும், செல்வத்தை அடைவதற்கு நீங்கள் பேராசையோடு முயலுதலும் அறிவீனமாகும். இச்செயல்கள் முடிவில் உங்களுக்குத் தோல்வியையே கொடுக்கும். உங்களை ஒழுக்கத்தில் நிறையுடையவர்களாகச் செய்து கொள்வதையும் பிரயோஜனமும் பரோபகாரமுமான செயல்களைச் செய்வதையும் உங்கள் வாழ்வின் நோக்கமாகக் கொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் மேற்பட்டதாயும் மாறுதலில்லாததாயும் இருக்கிற நன்மையினிடத்து நம்பிக்கையுடையவர்களாயிருங்கள்.

நீங்கள் உங்கள் சொந்தத்திற்காகச் செல்வத்தை விரும்பவில்லையென்றும், ஆனால் அதனைக் கொண்டு நன்மை செய்வதற்கும் மற்றவர்களைச் சுகப்படுத்தற்குமே அதனை விரும்புகிறீர்களென்றும் கூறுகின்றீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்புவதன் உண்மையான நோக்கம் இஃதாயிருக்கும் பட்சத்தில், உங்களுக்குச் செல்வம் வந்து சேரும்; நீங்கள் செல்வமுடையவர்களாயிருக்கும்பொழுது நீங்கள் உங்களை அச்செல்வத்தின் சொந்தக்காரர்களாகக் கருதாது, அதனை நல்ல வழிகளில் செலவு செய்து காப்பாற்றுவதற்காக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளென்று கருதும் பட்சத்தில் நீங்கள் உண்மையில் பலமும் பரநலமும் உள்ளவர்களே. ஆனால், நீங்கள் உங்கள் நோக்கத்தை நன்றாகச் சோதித்துப் பாருங்கள். ஏனெனில், மற்றவர்களைச் சுகப்படுத்தும் நோக்கத்தோடு செல்வத்தை விரும்பியவர்களில் பெரும்பாலோர், ஜனங்களால் நேசிக்கப்பட வேண்டுமென்ற நோக்கத்தையும் பரோபகாரி அல்லது சீர்திருத்தக்காரன் என்ற பெயரை அடையவேண்டுமென்ற விருப்பத்தையும் கொண்டவராயிருந்திருக்கின்றனர். உங்களிடத்திலுள்ள சிறிய செல்வத்தைக் கொண்டு நீங்கள் நன்மை செய்யவில்லையானால், நீங்கள் பெரிய செல்வத்தை அடைந்தபோது நீங்கள் அதிக சுயநலமுடையவர்களாவீர்களென்றும், நீங்கள் உங்கள் செல்வத்தைக் கொண்டு செய்வதுபோல் தோன்றிய நன்மைகளெல்லாம் உங்களது தற்புகழ்ச்சி நிமித்தமே செய்யப்பட்டனவென்றும் நம்புங்கள். நன்மை செய்தல் உங்களுடைய உண்மையான விருப்பமாயிருப்பின் நீங்கள் அதனைச் செய்யச் செல்வத்திற்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமேயில்லை. நீங்கள் அதனை இப்பொழுதே, இந்த நிமிஷத்திலேயே, நீங்கள் இருக்கிற இடத்திலிருந்தே செய்யக்கூடும். நீங்கள் உங்களை மதிக்கிறபடி நீங்கள் உண்மையில் அவ்வளவு பரநலமுடையவர்களாயின் நீங்கள் மற்றவர்கள் நிமித்தம் இப்பொழுதே உங்கள் சொந்த சௌகரியங்களிற் சிலவற்றைக் குறைக்கலாம். நீங்கள் எவ்வளவு எளியவர்களாயிருந்தாலும் பெரிய காரியமில்லை. உங்கள் சுயநலத்தைப் பரித்தியாகம் செய்வதற்கு இடமுண்டு. ஏனெனில், அன்னவஸ்திரப் பணம் மாத்திரம் வாங்கிக் கொண்டிருக்கிற விதவை கூடத் தன் பணம் முழுவதையும் வட்டிக்குக் கொடுக்கிறாள். நன்மை செய்வதற்கு உண்மையில் விரும்புகின்ற ஹிருதயம் செல்வம் வரும் வரையில் காத்திருக்க மாட்டாது. அது பரித்தியாகம் என்னும் பலிபீடத்தின் முன்வந்து, “யான்” என்னும் தகுதியற்ற அபிமானத்தை அவ்விடத்தில் விட்டுவிட்டு, அயலானுக்கும் அந்நியனுக்கும், சிநேகிதனுக்கும் பகைவனுக்கும் ஒரே தன்மையாக உபகாரம் செய்யச் செல்கின்றது.

காரியம் காரணத்தோடு சம்பந்தப்பட்டிருப்பது போல, செல்வமும் பலமும் அக நன்மையோடும், வறுமையும் பலஹீனமும் அகத் தீமையோடும் சம்பந்தப்பட்டிருக்கின்றன. பணம் உண்மையான செல்வமுமன்று, அந்தஸ்துமன்று, பலமுமன்று. பணத்தை மாத்திரம் நம்பியிருத்தல் ஒரு வழுக்கிடத்தில் நிற்றலையொக்கும். உங்கள் உண்மையான செல்வம் உங்கள் ஒழுக்கமே. உங்கள் உண்மையான பலம் உங்கள் ஒழுக்கத்தைப் பலம் தரும் வழிகளில் உபயோகித்தலே. நீங்கள் உங்கள் அகத்தைச் சீர்படுத்துவீர்களாயின், உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்துவோராவீர்கள். காமம், வெறுப்பு, வெகுளி, வீண்பெருமை, தற்பெருமை, பேராசை, பொறியின்பம், சுயநலம், மூர்க்கத்தனம் இவையெல்லாம் வறுமையும் பலஹீனமுமாகும். அன்பு, தூய்மை, அமைதி, பணிவு, பொறுமை, இரக்கம், தயாளம், சுயநலம் மறத்தல், சுயநலத் துறத்தல் இவையெல்லாம் செல்வமும் பலமுமாகும். வறுமையின் தத்துவங்களையும் பலஹீனத்தின் தத்துவங்களையும் வென்றபொழுது, எஃதாலும் வெல்லப்பட முடியாததும் எல்லாவற்றையும் வெல்வதுமான ஒரு சக்தி அகத்தினின்று வெளிப்படுகின்றது. மிக உயர்ந்த ஒழுக்கத்தைக் கைக்கொண்டிருக்கிறவன் உலகம் முழுவதும் தன் முன் கீழ்ப்படியச் செய்கிறான்.

ஆனால், செல்வந்தர்களும் தரித்திரர்களும் தங்கள் விரும்பாத நிலைமைகளைக் கொண்டிருக்கிறார்கள். செல்வந்தர்களுக்குள்ள துக்கம் பெரும்பாலும் தரித்திரர்களுக்கில்லை. தரித்திரர்களுக்குள்ள சுகம் பெரும்பாலும் செல்வந்தர்களுக்கில்லை! இதனால் சுகமானது புறப்பொருள்களையாவது புறவுடைமைகளையாவது பொறுத்தமையைப் பொறுத்ததென்றும் அறிகிறோம். ஒருகால், தன்றென்றும், ஆனால் அக நிலை நீங்கள் வேலைக்காரர்களை வைத்து வேலை வாங்கும் எஜமானர்களாயிருக்கலாம்; உங்கள் வேலைக்காரர்களால் நீங்கள் ஓயாத தொந்தரவுகளை அடைந்து கொண்டிருக்கலாம். உங்களுக்கு நம்பிக்கையுள்ள நல்ல வேலைக்காரர்கள் கிடைத்தால் அவர்கள் உங்களைவிட்டு விரைவில் நீங்கிவிடுவார்கள். இதனால் நீங்கள் மனித சுபாவத்தைப் பற்றிய உங்கள் நம்பிக்கையை இழக்க ஆரம்பிக்கிறீர்கள், அல்லது முற்றிலும் இழந்து விடுகிறீர்கள். நீங்கள் உங்கள் வேலைக்காரர்களுக்கு அதிகச் சம்பளங்கள் கொடுத்தும் அதிகச் சுதந்திரங்கள் கொடுத்தும் உங்கள் காரியங்களை சீர்படுத்த முயல்கிறீர்கள். ஆனால், உங்கள் காரியங்கள் முன்போலவே இருக்கின்றன. நான் உங்களுக்கு ஒன்று சொல்லுகிறேன். உங்கள் தொந்தரவுகளின் மர்மம் உங்கள் வேலைக்காரர்களிடத்தில் இல்லை. அஃது உங்களிடத்திலேயே இருக்கின்றது. நீங்கள் உங்கள் குற்றத்தைக் கண்டு நீக்கவேண்டுமென்ற உண்மையான அவாவுடன் உங்கள் அகத்துள் நோக்குவீர்களாயின், நீங்கள் விரைவிலோ தாழ்ப்பிலோ, உங்கள் சகல சந்தோஷங்களுக்குமுரிய மூலத்தை அங்கே காண்பீர்கள். அஃது ஒரு சுயநல அவாவாக அல்லது பிறர்மீது சந்தேகம் கொள்கின்ற, அல்லது அன்பில்லாதிருக்கின்ற ஒரு மனப்போக்காக இருக்கலாம். அதனை நீங்கள் உங்கள் பேச்சிலும் நடத்தையிலும் காட்டாவிட்டாலும், அது தனது விஷக்காற்றை உங்களைச் சுற்றியுள்ளவர்கள் மீது வீசி, திரும்ப உங்களிடம் வந்து உங்களைப் பாதிக்கின்றது. நீங்கள் உங்கள் வேலைக்காரர்களிடத்தில் அன்புடையவர்களாயிருங்கள். நீங்கள் அவர்களுடைய சந்தோஷத்தையும் சௌகர்யத்தையும் கவனியுங்கள். நீங்கள் ஒருவருக்கு வேலைக்காரராயிருந்தால் நீங்கள் செய்ய விரும்பாத அளவுக்கு மிஞ்சிய வேலையை உங்கள் வேலைக்காரர்கள் செய்யவேண்டுமென்று விரும்பாதீர்கள். தனது எஜமானுடைய நன்மையின் நிமித்தம் தன்னை முற்றிலும் மறந்துவிடுகிற ஒரு வேலைக்காரனது ஆன்ம அடக்கத்தைக் காண்பது அருமையாயும் அழகாயுமிருக்கின்றது. ஆனால், தனது சுகத்தை மறந்து தனக்குக் கீழ்ப்பட்ட வேலைக்காரர்களது சுகத்தை நாடுகிற ஒரு எஜமானுடைய ஆன்ம உணர்ச்சியைக் காண்பது அதனினும் அருமையாயும் திவ்வியமாயும் இருக்கின்றது. அத்தகைய மனிதனது சுகம் ஒன்றுக்குப் பத்து மடங்காகப் பெருகுகின்றது; தனது வேலைக்காரர்களைப் பற்றிக் குறை கூறும் ஆவசியகம் அவனுக்கு ஏற்படுவது இல்லை. எண்ணிறந்த வேலைக்காரர்களை வைத்து வேலை வாங்குகிறவரும், ஒருபோதும் ஒரு வேலைக்காரனையும் தம் வேலையினின்று நீக்காதவருமான ஒரு பெயர் பெற்ற மனிதர், “நான் எனது வேலையாட்களுடன் எப்பொழுதும் மிக சந்தோஷகரமான சம்பந்தங்களையுடையவனாயிருக்கிறேன். அதற்குக் காரணம் என்னவென்று நீங்கள் என்னைக் கேட்பீர்களாயின், எப்படி அவர்கள் என்னிடத்தில் நடக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேனோ, அப்படியே நான் அவர்களிடத்தில் நடக்க வேண்டுமென்ற நோக்கத்தை நான் ஆரம்ப முதல் கொண்டிருக்கிறேனென்று மாத்திரம் சொல்வேன்” என்று கூறினார். விரும்பத்தக்காத சகல நிலைமைகளையும் நீக்குவதற்கும், விரும்பத்தக்க சகல நிலைமைகளையும் அடைவதற்கும் உரிய மர்மம் இதில் அடங்கியிருக்கிறது; உங்களுக்கு உலகத்தில் சிநேகிதர் ஒருவருமில்லையென்றும், உங்களை ஒருவரும் நேகிக்கிறதில்லையென்றும், நீங்கள் தனிமையாயிருக்கிறதாகவும் நீங்கள் கூறுகின்றீர்களா? அப்படியானால், உங்கள் சொந்த நன்மைக்காக, உங்களைத் தவிர வேறு ஒருவரையும் குறை கூறாதீர்களென்று உங்களைப் பிரார்த்திக்கிறேன். நீங்கள் மற்றவர்களிடத்தில் சிநேகம் பாராட்டுங்கள். சிநேகிதர்கள் உங்களைச் சுற்றி மொய்த்துக் கொண்டிருப்பார்கள். நீங்கள் உங்களைத் தூயர்களாகவும் நேசிக்கப்படத் தக்கவர்களாகவும் செய்யுங்கள். எல்லாரும் உங்களை நேசிப்பார்கள்.

தன்னைத் தூய்மையாக்குதலும் தன்னை அடக்கியாள்தலுமாகிய சிருஷ்டி சக்தியை உங்கள் அகத்துள் வளர்ப்பீர்களாயின், உங்கள் உயிருக்குப் பாரமாயிருக்கிற சகல நிலைமைகளினின்றும் நீங்கள் நீங்கிவிடுவீர்கள். உங்களுக்குத் துன்பத்தைக்கொடுக்கிற வறுமை (நான் செல்கிற வறுமை துன்பத்திற்கு மூலமாயிருக்கிற வறுமையேயன்றி, முத்தரும் தவத்தரும் மனதார வேண்டுமென்று உண்டு பண்ணிக் கொள்கிற வறுமையன்று.)யாக இருந்தாலுஞ் சரி, அல்லது உங்களுக்குப் பாரமாகத் தோன்றுகிற செல்வமாக இருந்தாலுஞ் சரி, அல்லது உங்கள் வாழ்க்கையில் நேரும் கேடுகளும் துன்பங்களும் துக்கங்களுமாக இருந்தாலுஞ் சரி, அவற்றையெல்லாம், அவற்றிற்கு ஆதாரமாயிருக்கிற உங்கள் அகத்திலுள்ள சுயநலத் தத்துவங்களை ஒழிப்பதனால் நீங்கள் ஒழித்து விடலாம்.

சென்ற கால நினைப்புக்களும் செயல்களும் பிழையாத நியதிப்படி தமது பலன்களைக் கொடுக்க வேண்டியவைகளாயும் அவற்றை நாம் அனுபவிக்க வேண்டியவர்களாயுமிருந்தாலும் பெரிய காரியமில்லை. ஏனெனில், நாம் நமது வாழ்நாளின் ஒவ்வொரு நிமிஷத்திலும் புதிய புதிய நினைப்புக்களை நினைத்துக் கொண்டும், புதிய புதிய செயல்களைச் செய்து கொண்டும் இருக்கிறபடியால், நாம் அவற்றையெல்லாம் நல்லனவாக அல்லது தீயனவாகச் செய்து கொள்ளும் சக்தியை உடையவர்களாயிருக்கிறோம். அன்றியும், ஒரு மனிதன் தனது பணத்தை இழக்கும்படி அல்லது தனது நிலையை விடும்படி நேரிட்டால், அவன் தனது தைரியத்தை இழப்பதும் ஒழுக்கத்தை விடுவதும் ஆவசியகமில்லை. இவற்றில்தான் அவனுடைய செல்வமும் பலமும் சந்தோஷமும் இருக்கின்றன.

“யான்” என்பதைப் பற்றிக் கொண்டிருக்கிறவன் தன்னை அழிக்கும் விரோதியாகிறான். அவனை அழிப்பதற்காக அவனைச் சுற்றி விரோதிகள் சூழ்கின்றார்கள். ‘யான்’, என்பதைத் துறக்கிறவன் தன்னை இரட்சிக்கும் கர்த்தனாகிறான். அவனைக் காப்பதற்காக அவனைச் சுற்றிச் சிநேகிதர்கள் சூழ்கின்றார்கள். பற்றற்ற ஹிருதயமாகிய தெய்வ கிரணத்தின் முன்னர் சகல இருள்களும் நீங்கிவிடுகின்றன. எவன், ‘யான், என்பதை வென்றானோ அவன் பிரபஞ்சத்தையே வென்றவனாகிறான். நீங்கள் ‘யான்’ என்பதை விட்டு வெளியே வாருங்கள்; நீங்கள் உங்கள் வறுமையை விட்டு வெளியே வந்தவர்களாவீர்கள்; நீங்கள் உங்கள் துன்பத்தை விட்டு வெளியே வந்தவர்களாவீர்கள். நீங்கள் உங்கள் தொந்தரவுகளையும், ஏக்கங்களையும், மனவருத்தங்களையும், குறைகூறல்களையும், தனிமையையும் விட்டு வெளிவந்தவர்களாவீர்கள். உங்கள் அற்ப சுயநலமாகிய கிழிந்த உடையை எறிந்துவிட்டுப் பூரண அன்பாகிய புதிய உடையை உடுத்திக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் அகத்திலுள்ள சுவர்க்கத்தை அபரோட்சமாகக் காண்பீர்கள். அஃது உங்கள் புற வாழ்க்கையிலெல்லாம் பிரதிபிம்பித்துக் கொண்டிருக்கும்.

‘யான்’ என்பதை வெல்லும் மார்க்கத்தில் தனது பாதங்களைப் பலமாக வைத்து, தெய்வ நம்பிக்கையாகிய ஊன்றுகோலின் உதவியால், துறவு (‘யான்’ என்பதை விடுதல்) என்னும் பெரும் பாதை வழியாக நடக்கிற மனிதன் மிகமிக மேலான செல்வத்தை அடைவான். நாள்தோறும் வளர்கின்ற நித்திய இன்பத்தையும் சுகத்தையும் அனுபவிப்பான்-

வெண்பா

நன்மைஉரு வானமெய்யை நண்ணமுயல் வார்க்கிங்கு
மன்னுகின்ற பல்பொருளும் மாண்துணையாம்;- திண்மையென
ஒன்றும் உறுவதில்லை; உற்றாலும் அஃதெல்லாம்
சென்றொழியும் மெய்யறிவால் தேய்ந்து

(மெய்- கடவுள்; மாண்- நல்ல.)

வான்மீனை மேகம் மறைத்தல்போல் துன்பம்தான்
தேன்மானும் இன்பத்தைத் தேய்க்குமால்;-ஈன
நரகம் சுவர்க்கமுன் நண்ணும் இராத்தான்
இரவிமுன் நண்ணல்போல் இங்கு

(மீனை- நக்ஷத்திரத்தை)

தவறல்கள் மேன்மைத் தலைசேர்க்கும் ஏணிக்
குவவார் படிகளெனக் கொள்வாய்;-கவலைதரும்
நட்டம் இலாபத்தை நல்கும்; பருவத்தில்
கட்டம் சுகம்நல்கும் காண்.

(குவவு ஆர்- பெருமை நிறைந்த)
துன்பம் கடவுளியல் தூயசெயல் சொல்நினைப்போ
டின்பம் தரும்நெறிகள் எய்துவிக்கும்;-மன்பதைகள்
மேம்பா டுறுநெறியில் மேகஇருள் எல்லொளிகள்
தாம்பா டுறமன்னும் சார்ந்து.

(எல்-பிரகாசமுள்ள; பாடு உற- பெருமையுற)

தேடிநாம் காண்டற்கும் செய்துநாம் கொள்ளற்கும்
நாடியிருக் கின்றபொருள் நன்றின்பம்-வீடிவற்றின்
மார்க்கத்தில் சார்ந்து மறைக்கும் இருட்குழுவைச்
சேர்க்குங்காண் போகூழ் தெரி.

(நன்று- அறம்; போகு ஊழ்-தீய ஊழ்)

நாமடைய உன்னுகின்ற நன்னிலையின் மார்க்கத்தில்
நாமடையும் ஐயஇருள் நாமஇருள்-சேம
உயிரை யடுகின்ற ஊழ்நிலைமை யெல்லாம்
செயிரை யடும்படிகள் தேர்.

(ஐயம்- சந்தேகம்; நாமம்- அச்சம்)

நம்முடைய சுற்றத்தார் நம்மைவிட்டு நீங்குதலால்
தம்முடைய காரியத்தே தம்கருத்தைச்- சும்மா
செலுத்துதலால் ஆம்துக்கம் சீர்ஞான வீட்டுள்
செலுத்துநெறி யென்றே தெரி.

(ஆம்-நமக்கு உண்டாகும்)

விதியால் உழந்து மெலிந்துவரு வோனைப்
பதிபால் உறச்செய்யும் பால-மதியால்
உளத்தைப் புரத்தலும் ஒள்ளறிவும் அன்பும்
வளத்தைப் பெருக்கருளும் மற்று.

(பதி-கடவுள்;பால-தன்மையன)

$$$

9. நினைப்பின் மௌன வலிமை

(சக்திகளை ஆளுதலும் செலுத்தலும்)

பிரபஞ்சத்திலுள்ள சக்திகளிலெல்லாம் மிக வலிமையுள்ள சக்தி மௌன சக்தி. “மௌனம் மலையைச் சாதிக்கும்.” சரியாகச் செலுத்துங்காலையில், ஒரு சக்தி எவ்வளவுக்கெவ்வளவு வலிமையுள்ளதோ, அவ்வளவுக்கவ்வளவு இலாபத்தையும், பிசகாகச் செலுத்துங்காலையில், அவ்வளவுக்கவ்வளவு கஷ்டத்தையும் தரும். நீராவி, மின்சாரம் முதலிய யந்திர சக்திகள் சம்பந்தப்பட்டமட்டில் இவ்வுண்மையைப் பலரும் அறிவித்திருக்கின்றனர். ஆனால், சக்திகளிலெல்லாம் மிகமிக வலியதாகிய நினைப்புச் சக்தியை, சிருஷ்டிக்கும் பிரவாகமாகவும் சம்ஹரிக்கும் பிரவாகமாகவும் அனுப்பிக் கொண்டிருக்கிற மனோவுலகம் சம்பந்தபட்டமட்டில் இவ்வுண்மையை அறிந்து உபயோகிப்பவர் மிகச் சிலரே.

தாம் அபிவிருத்தியாகிக் கொண்டிருக்கிற இக்காலத்தில் மனிதர் அச்சக்திகளை ஆளுவதற்குத் தொடங்கியிருக்கின்றனர். அவர்களுடைய தற்கால முக்கிய நோக்கமெல்லாம் அச்சக்திகளை அடக்கியாளுதலே. இந்த ஸ்தூல உலகத்தில் மனிதர் அடையக் கூடிய ஞானமெல்லாம் தன்னை அடக்கியாள்தலிலேயே அடங்கியிருக்கிறது. “உங்கள் விரோதிகள்பால் அன்பு பாராட்டுங்கள்” என்னும் கட்டளையானது, இப்பொழுது மனிதர்களை அடிமையாக்கிச் சுயநலப் பிரவாகங்களில் அடித்துக் கொண்டுபோகிற மனோசக்திகளை வசப்படுத்தி அடக்கியாளுதற்குரிய ஞானத்தை அடைவதற்கு நீங்கள் இப்பொழுதே, இங்கேயே தொடங்குங்கள் என்று உபதேசிக்கின்றது.

பரம்பொருட் சட்டத்தைப் பூரணமாக அறிந்திருந்த எபிரேய தேசத்துத் தீர்க்கதரிசிகள், புறச்சம்பவங்கள் அக நினைப்போடு சம்பந்தப்பட்டவையென்றும். ஒரு தேசத்தின் அழிவோ ஆக்கமோ அக்காலத்தில் அத்தேசகத்தாரை ஆண்டு கொண்டிருக்கும் நினைப்புகளையும் அவாக்களையும் பொறுத்ததென்றும் எப்பொழுதும் சொல்லி வந்தார்கள். அனைத்திற்கும் காரணமாகிய நினைப்பின் வலிமையைப் பற்றிய அறிவு, உண்மையான சகல ஞானத்திற்கு பலத்திற்கும் ஆதமாரமாயிருப்பதுபோல அவருடைய தீர்க்க தரிசனத்திற்கும் ஆதாரமாயிருந்தது. தேச சம்பவங்கள் தேசத்தாரது மனோசக்திகளின் வேலைகளேயன்றி வேறல்ல. யுத்தங்களும், தொத்து நோய்களும் பஞ்சங்களும் பிசகாகக் செலுத்தப்பட்ட மனோ சக்திகள் ஒன்றோடொன்று சந்திப்பதாலும் மோதுவதாலும் உண்டாகின்றன. அவைதாம் பரம்பொருட் சட்டத்தின் காரியஸ்தரென்ற அறிவு வெளிப்படும் ஸ்தானங்களாம். யுத்தத்திற்கும் ஒரு மனிதனது அல்லது ஒரு கூட்டத்தாரது செல்வாக்கே காரணமென்று கூறுதல் அறிவீனம். அஃது ஒருதேசத்தாரது சுயநலத்தின் மிகக் குரூரமான கோரச் செயல்.

எல்லாப் பொருள்களையும் காட்சிக்குக் கொண்டு வருவன மௌனமும் வெற்றியும் பொருந்திய நினைப்புச் சக்திகளே. பிரபஞ்சம் நினைப்பிலிருந்தே வெளிப்பட்டது. ஜடப் பொருள்களைப் பகுத்துக்கொண்டு போகப்போகக் கடைசியாக மீதமாவது திரிசியமான நினைப்பென்றே தத்துவ சாஸ்திரிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். மனிதரால் செய்யப்பட்ட காரியங்களெல்லாம் முதலில் நினைப்பில் செய்யப்பட்டுப் பின்னரே காட்சிக்கு வந்தன. நூலாசிரியரும் உண்மை காண்போரும் சிற்பிகளும் தமது வேலைகளை முதலில் நினைப்பால் செய்து முடிக்கின்றனர்; நினைப்புலகத்தில் தமது வேலைகளைச் சரியாகவும் பூரணமாகவும் செய்து முடித்த பின்னரே, அவற்றைக் காட்சியுலகத்திற்குக் கொண்டு வருவதற்காக ஸ்தூலப்படுத்தத் தொடங்குகின்றனர்.

எல்லாவற்றையும் ஆள்கின்ற பரம்பொருட் சட்டத்திற்கு ஒற்றுமையாக நினைப்புச் சக்திகளைச் செலுத்தும்போது, அவை சிருஷ்டிக்கும் சக்திகளும் இரட்சிக்கும் சக்திகளுமாகின்றன; அவை அச்சட்டத்திற்கு மாறாகச் செலுத்தப்படுங்காலையில் பிரிக்கும் சக்திகளும் அழிக்கும் சக்திகளுமாகின்றன. உங்கள் நினைப்புகள் நன்மை வடிவாயிரா நின்ற கடவுளின் சர்வசக்தியிலும் ஆள்கையிலும் அசையாத பூரண நம்பிக்கையைக் கொள்ளுதல், நீங்கள் அக்கடவுளோடு ஐக்கியமாகும்படிக்கும் நீங்கள் உங்கள் அகத்துள்ள சகல தீமைகளின் காரணத்தையும் பரிகாரத்தையும் காணும்படிக்கும் செய்யும். நீங்கள் கடவுளை நம்புவீர்களாயின், நீங்கள் நீடூழி வாழ்வீர்கள்; இந்நம்பிக்கையே உங்கள் ரட்சிப்புக்கு வழி; நித்திய நன்மையாயிருக்கின்ற கடவுளின் மெய்யொளியில் பிரவேசித்தலே இருளினின்று நீங்குதலும் துன்பத்தினின்று இரட்சிக்கப்படுதலுமாம்.

எவ்விடத்தில் அச்சமும் தொல்லையும் கவலையும் ஐயமும் எரிச்சலும் ஆசாபங்கமும் இருக்கின்றனவோ அவ்விடத்தில் நம்பிக்கையின்மையும் அஞ்ஞானமும் இருக்கின்றன. இம் மனோநிலைமைகளெல்லாம் சுயநலத்தின் நேரான பலன்கள்; அவை தீமையின் வலிமையிலும் தலைமையிலும் உள்ளூரக் கொண்டுள்ள நம்பிக்கையை ஆதரவாகக் கொண்டுள்ளன; ஆதலால் அவை அநுபவ நாஸ்திகமாம்; ஆன்மாவைக் கெடுக்கும் இம் மனோநிலைமைகளுக்கு இடம் கொடுத்தலும் ஆளாகுதலுமே மெய்யான நாஸ்திகம். மனித சமூகம் வேண்டுவது இந்நிலைமைகளிலிருந்து இரட்சிக்கப்படுதலே; இந்நிலைமைகளின் ஆளாகவும் அடிமையாகவும் இருக்கிற எந்த மனிதனும் தான் இரட்சிப்பை அடைந்து விட்டதாக வீண்பெருமை பாராட்ட வேண்டாம். அஞ்சுதலும் கவலுதலும் கடவுளை நிந்தித்தலையொத்த ஒரு பாவமாகும்; ஒருவன் நித்திய நியாயத்தில், சர்வ வல்லமையுள்ள நன்மையில், அகண்டாகாரமான அன்பில், உள்ளுறுத்திய நம்பிக்கை கொண்டிருப்பானாயின், அவன் அச்சத்தையாவது கவலையையாவது எப்படி அடைதல் கூடும்? தான் அஞ்சுதலும் கவலுதலும் ஐயுறுதலும் அப்பொருளை மறுத்தலையும் நம்பாதிருத்தலையும் ஒக்கும். இத்தகைய மனோநிலைமைகளிலிருந்துதான் சகல பலஹீனங்களும் தவறுதல்களும் உண்டாகின்றன; ஏனெனில் அவை உண்மையான நினைப்புச் சக்திகளைப் பிரித்து அழிகின்றன; அவை அவ்வாறு அழிக்கப்படாவிட்டால், அவை மிகுந்து வலிமையோடு தமது காரியத்தை விரைந்துசெய்து, தமது இலாபகரமான பலன்களைக் கொடுக்கும். இந்நிலைமைகளை ஒழித்தல், பலமுள்ள ஒரு வாழ்வை அடையும்படிக்கும் அடிமையாயிருத்தலை விட்டு அரசனாக்கும்படிக்கும் செய்யும்; இந்நிலைமைகளை ஒழிப்பதற்கு ஒரே ஒரு மார்க்கம்தான் உண்டு. அஃது அகஞானத்தில் நிலையாக மேன்மேலும் வளர்ந்து கொண்டிருத்தலே. மனத்தினால் தீமையை மறுப்பது மட்டும் போதாது; ஒவ்வொரு நாளும் தீமையை விலக்கி, அதனை அறிதல் வேண்டும், நன்மையை மனத்தினால் அங்கீகரித்தல் மட்டும் போதாது; விடாத முயற்சியால் ஒவ்வொரு நாளும் நன்மையைச் செய்து, அதனை அறிதல் வேண்டும்.

மனத்தை அடக்குவதற்காக விவேகத்தோடு செய்யும் அப்பியாசம், ஒருவனது அகத்தின் நினைப்புச் சக்திகளைப் பற்றிய ஞானத்தை விரைவில் அடையுமாறு செய்து, பின்னர் அவற்றைச் சரியாகச் செலுத்துவதற்கும் உபயோகித்தற்கும் வேண்டும் பலத்தை அடையுமாறும் செய்கின்றது, நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு உங்களை ஆளுகின்றீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு உங்கள் மனோ சக்திகளை நீங்கள் ஆண்டு உங்கள் காரியங்களையும் புற நிலைமைகளையும் ஆள்வீர்கள். எந்த மனிதன் கைபட்டால் எல்லாம் அழிந்து போகின்றனவோ, எந்த மனிதன் தன் கையில் கொடுக்கப்பட்ட வெற்றிகளை வைத்துக் கொள்ளாமல் விட்டுவிடுகிறானோ அந்த மனிதனை எனக்குக் காட்டுங்கள். அவன் வலிமைக்கு நேர் மாறுதலையான மனோநிலைமைகளில் இடைவிடாது வசித்துக் கொண்டிருக்கிறானென்பதை நான் உங்களுக்குக் காட்டுகிறேன். ஐயமாகிய சேற்று நிலத்தில் எப்பொழுதும் உழன்று கொண்டிருத்தலும், அச்சமாகிய உதிர் மணல்களை எப்பொழுதும் சேர்த்துக் கொண்டிருத்தலும், கவலையாகிய காற்றுக்களால் இடைவிடாது அலைக்கப்படுதலும், ஓர் அடிமையின் வாழ்வை அடையும்படி செய்யும். அத்தகைய மனிதன் கடவுளிடத்து நம்பிக்கை வையாததாலும், தன்னைச் சரியாக ஆளாததாலும் தனது காரியங்களைச் சரியாக ஆள்வதற்குத் திறமையில்லாதவனாயும் தனது நிலைமைகளுக்கு ஓர் அடிமையாயும் இருக்கிறான்; உண்மையில் அவன் தனக்கே அடிமையாயிருக்கிறான்; அத்தகைய மனிதர்க்குத் துன்பமே ஆசான்; அவர் சகிக்க முடியாத கொடிய துன்ப அநுபவத்தால் பலஹீனம் நீங்கிக் கடைசியாகப் பலம் பெறுகின்றனர்.

நம்பிக்கையும் காரியமுமே வாழ்க்கையின் பலமும் நோக்கமும் ஆகும். உறுதியான தெய்வ நம்பிக்கையும் அசையாத காரிய சிந்தனையும் எக்காரியத்தையும் முடிக்கும். தெய்வ நம்பிக்கையை ஒவ்வொரு நாளும் உட்கொள்ளுதலால், நினைப்புச்சக்திகள் ஒன்று சேர்கின்றன. நல்ல காரிய சிந்தனையை ஒவ்வொரு நாளும் உறுதிப்படுத்துவதனால், செய்து முடிக்க வேண்டிய காரியத்தை நோக்கி நினைப்புச் சக்திகள் செல்லுகின்றன. நீங்கள் எந்த நிலையிலிருந்தாலும் சரி, நீங்கள் வெற்றியையாவது பிரயோஜனத்தையாவது வலிமையையாவது எள்ளளவேனும் அடைய வேண்டுமானால். நீங்கள் அமைதியையும் நம்பிக்கையையும் வளர்த்து உங்கள் நினைப்புச் சக்திகளை ஒருமுகப்படுத்துவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் வியாபாரிகளென்று வைத்துக் கொள்வோம்; நீக்கமுடியாத ஒரு கஷ்டமோ நஷ்டமோ திடீரென உங்கள்பால் வருகின்றது. உடனே நீங்கள் அச்சத்தையும் கவலையையும் கொள்ளுகின்றீர்கள்; நீங்கள் உங்கள் புத்தியை இழக்கும் நிலைமைக்கு வந்துவிடுகின்றீர்கள். அத்தகைய ஒரு மனோநிலைமையைக் கொண்டிருத்தல் அழிவையே கொடுக்கும்; ஏனெனில், அகத்துட் பிரவேசிக்கும்பொழுது, காரியத்தைச் சரியாகத் தீர்மானிக்கும் சக்தி நீங்கிவிடுகின்றது. அச்சமயத்தில், நீங்கள் அதிகாலையிலாவது இராத்திரியிலாவது அமரிக்கையாயிருக்கும் ஒரு நேரத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்; அந்நேரத்தில் நீங்கள் ஓர் தனித்த இடத்திற்காவது, உங்கள் வீட்டில் உங்களுக்கு எவ்வித இடைஞ்சலும் நேரிடாத ஓர் அரங்கிற்காவது செல்லுங்கள்; அவ்விடத்தில் நீங்கள் சௌகரியமாக உட்கார்ந்து கொண்டு, உங்கள் வாழ்க்கையில் உங்களுக்குச் சந்தோஷத்தையும் இன்பத்தையும் கொடுக்கிற ஒரு விஷயத்தைப் பற்றி நீங்கள் சிந்தித்துக் கொண்டு, உங்களுக்குக் கவலையைக் கொடுக்கிற விஷயத்தினின்றும் உங்கள் மனத்தைப் பலவந்தமாக நீக்கிவிடுங்கள்; சிறிது நேரத்துள் அமைதியும் உறுதியுமுள்ள ஒரு பலம் உங்கள் மனத்திற்குள் உங்களுக்குத் தெரியாமல் பிரவேசிக்கும்; உடனே உங்கள் கவலை நீங்கிப் போய்விடும். எந்த நிமிஷத்தில் உங்கள் மனம் கவலையாகிய தாழ்ந்த ஸ்தானத்திற்குத் திரும்புகின்றதோ, அந்த நிமிஷத்திலேயே உங்கள் மனத்தை அதனின்று திருப்பி, அமைதியையும் பலத்தையும் கொடுக்கின்ற ஸ்தானத்திற்குக் கொண்டுபோய் மறுபடியும் அங்கு நிறுத்துங்கள். இதனை நீங்கள் பூரணமாகச் செய்து முடித்தபொழுது உங்கள் கஷ்டத்தை நிவர்த்திப்பதற்குரிய வழிகளைச் சிந்திப்பதில் உங்கள் மனத்தை ஏகாக்கிரப்படுத்துங்கள்; நீங்கள் கவலையாயிருந்தபோது உங்களுக்குச் சிக்கலாகவும் நீக்க முடியாததாகவும் தோன்றிய விஷயம் இப்பொழுது சிக்கலற்றதாகவும் நீக்கக்கூடியதாகவும் தோன்றும்; இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டிய காரியத்தையும் அதனைச் செய்வதற்குரிய மார்க்கத்தையும் கவலையும் சஞ்சலமுமில்லாத மனத்திற்கு மாத்திரம் சொந்தமான தெளிவோடும் அறிவோடும் நீங்கள் காண்பீர்கள். நீங்கள் உங்கள் மனத்தைப் பூரண அமைதிக்குக் கொண்டுவரச் சக்தியுள்ளவர்களாவதற்கு நீங்கள் பல நாள் முயல்வது ஆவசியகம்; ஆனால், இடைவிடாது முயன்றால் நீங்கள் நிச்சயமாக அதனைச் செய்து முடிப்பீர்கள். நீங்கள் அமைதியாயிருக்கும் நேரத்தில் நீங்கள் எதனைச் செய்து முடிக்க வேண்டுமென்று நினைக்கிறீர்களோ, அதனை நீங்கள் செய்து முடிக்க வேண்டும். நீங்கள் மறுபடியும் பகற்காலத்தில் உங்கள் வியாபாரத்தில் பிரவேசித்தபொழுது உங்கள் கவலைகள் மறுபடியும் உங்கள் அகத்தில் பிரவேசித்து உங்களை ஆளத் தொடங்கும்; அப்பொழுது முன் அமைதியான நேரத்தில் நீங்கள் குறித்த காரியமும் மார்க்கமும் பிசகானவையென்றும் அறிவில்லாதவையென்றும் நீங்கள் நினைக்கத் தொடங்குவீர்கள். ஆனால். அவ்வித நினைப்புக்களுக்கு நீங்கள் இடங்கொடுத்தல் கூடாது. அமைதியான நேரத்தில் தோன்றிய காரியத்தையோ மார்க்கத்தையோ நீங்கள் சிறிதும் விடாது பின்பற்றுங்கள். நீங்கள் உங்கள் கவலையின் நிழல்களைப் பின்பற்றாதீர்கள். அமைதியான நேரமே சரியான அறிவையும் தெளிவையும் கொடுக்கிற நேரம். மனத்தை அவ்விதமாகப் பயிற்றுவதால் சிதறுண்ட நினைப்புச் சக்திகள் திரும்ப ஒன்றுசேர்ந்து குறித்த காரியத்தில் சென்று அதனைச் செய்து முடிக்கும். அமைதியும் பலமுமுள்ள ஒரு நினைப்பின் ஏகாக்கிரத்தின் முன் எத்தகைய கஷ்டமும் நிலைநிற்க மாட்டாது. ஒருவனது மனோசக்திகளை விவேகத்துடன் செலுத்துவதாலும் உபயோகிப்பதாலும் முடிக்கக் கூடாத காரியம் ஒன்றுமில்லை.

நீங்கள் உங்கள் அகத்துள் ஆழ்ந்து சென்று ஆராய்ந்து தேடி, அங்கு ஒளிந்து கொண்டிருக்கிற உங்கள் விரோதிகளையெல்லாம் ஒழிக்கும் வரையில் நீங்கள் நினைப்பின் கூரிய வலியையாவது, புறத்திலுள்ள ஸ்தூலப் பொருள்களுக்கும் உங்கள் நினைப்புக்கும் உள்ள பிரிக்க முடியாத சம்பந்தத்தையாவது, உங்கள் நினைப்பு சமநிலையில் வைக்கப்பட்டுச் சரியாக செலுத்தப்படுங்காலையில் உங்கள் வாழ்க்கை நிலைமைகளைச் சரிப்படுத்திச் சீர்திருத்தும் அதன் சக்தியையாவது நீங்கள் சிறிதும் அறிய முடியாது. நீங்கள் நினைக்கிற ஒவ்வொரு நினைப்பும் நீங்கள் வெளியில் அனுப்புகிற ஒவ்வொரு சக்தியாகும். அதன் இயற்கைக்கும் வலிமைக்கும் ஒத்தவாறு அது வெளியே சென்று அதனைப் பெறத்தக்க மனங்களுட் பிரவேசித்துத் தங்கும்; அது திரும்ப நன்மையாகவோ தீமையாகவோ உங்கள்பால் வந்து சேரும். ஒரு மனத்திற்கும் மற்றைய மனங்களுக்கும் இடைவிடாத சம்பந்தமும் இடைவிடாத கொடுக்கல் வாங்கல்களும் இருக்கின்றன. சுயநல நினைப்புக்களும் கலக்க நினைப்புக்களும் கேட்டையும் அழிவையும் கொடுக்கும் தீமையாகிய பேயின் தூதர்; அவை வெளியிற் சென்று மற்றை மனங்களிலுள்ள தீமையை உயிர்ப்பித்து வளர்க்கின்றன. அவை திரும்ப உங்கள்பால் அதிக பலத்தோடு வந்து சேர்கின்றன. ஆனால் அமைதியும், தூய்மையும், பரநலமுமுள்ள நினைப்புக்கள் உங்கள் அகத்தினின்று வெளிப்பட்டு உலகத்திலுள்ள தீயசக்திகளைக் கெடுத்து, உலகத்திற்கு ஆரோக்கியத்தையும், ஷேமத்தையும் இன்பத்தையும் கொடுக்கும் நன்மையாகிய தெய்வத்தின் தூதர்கள்; அவை கவலையாலும் துக்கத்தாலும் வருந்துகின்ற மனத்திற்கு அமைதியையும் சுகத்தையும் கொடுத்து அழிந்துபோன உள்ளங்களுக்கு அழியாத் தன்மையைத் திரும்பக் கொடுக்கின்றன.

நீங்கள் நல்ல நினைப்புக்களை நினையுங்கள். அவை உங்கள் புறவாழ்க்கையில் நல்ல நிலைமைகளில் உருக்களோடு விரைவில் வந்து பொருந்தும். நீங்கள் உங்கள் மனோ சக்திகளை அடக்கி ஆளுங்கள். நீங்கள் உங்கள் புறவாழ்க்கையை உங்கள் இஷ்டப்படி திருத்திக் கொள்ளத்தக்க சக்தியுள்ளவர்களாவீர்கள். ஒரு புண்ணியவான் தனது அகத்திலுள்ள சகல சக்திகளையும் பூரணமாக ஆள்கிறான். ஒரு பாவி தனது அகத்திலுள்ள சகல சக்திகளாலும் பூரணமாக ஆளப்படுகிறான். இதுதான் இவ்விருவருக்குமுள்ள வித்தியாசம்.

உண்மையான பலத்தையும் நிலையான சாந்தியையும் அடைய வேண்டினால், தன்னை அடக்குதலையும் தன்னை ஆள்தலையும், தன்னைச் சுத்தப்படுத்துதலையும் தவிர வேறு மார்க்கமே இல்லை. நீங்கள் உங்கள் மனம் போன போக்கில் செல்லுதலானது உலகத்தில் உங்களை ஆண்மையற்றவர்களாகவும், சந்தோஷமற்றவர்களாகவும், பிரயோஜனமற்றவர்களாகவும் செய்துவிடும். உங்கள் அற்ப விருப்பு வெறுப்புகளையும், உங்கள் கோபமும் சந்தேகமும் பொறாமையுமாகிய வெறிகளையும், உங்களை அடிமைகளாக்கி ஆளாநின்ற நிலையற்ற மற்றைய குணா குணங்களையும் நீங்கள் வெல்ல வேண்டும். உங்கள் வாழ்க்கையாகிய வஸ்திரத்தைச் செல்வமும் இன்பமுமாகிய பீதாம்பரமாக்கிக் கொள்ள நீங்கள் விரும்புவீர்களாயின், மேற்சொல்லிய வேலையை நீங்கள் செய்து முடிக்க வேண்டும். உங்கள் அகத்திலுள்ள நிலையற்ற குணா குணங்களுக்கு நீங்கள் எவ்வளவு காலம் அடிமைகளாயிருக்கிறீர்களோ அவ்வளவு காலமும் நீங்கள் உங்கள் ஜீவ யாத்திரையில் மற்றைய மனிதர்களையும் வெளித் துணைகளையும் சார்ந்திருக்க வேண்டிய ஆவசியகம் ஏற்படும். நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உறுதியாகவும் பத்திரமாகவும் செல்லவும் ஒரு பெரிய காரியத்தைச் செய்து முடிக்கவும் விரும்புவீர்களாயின், நீங்கள் கலக்கத்தையும் தோல்வியையும் உண்டுபண்ணும் சகல சஞ்சலங்களையும் ஒழித்துவிட வேண்டும். நீங்கள்  ‘மௌனநிலை’களை அடைவதற்கு, அஃதாவது உங்கள் மனத்தை அமைதியாக்குவதற்கு நாள்தோறும் பழக வேண்டும். இது கவலையுள்ள நினைப்பிற்குப் பதில் அமைதியுள்ள நினைப்பையும், பலஹீன நினைப்புக்குப் பதில் பலமுள்ள நினைப்பையும் கொள்வதற்கு ஒரு வழி. இதனை நீங்கள் செய்து முடிக்கும் வரையில் நீங்கள் உங்கள் வாழ்க்கையைச் சம்பாதித்த காரியங்களிலும் வேலைகளிலும் வெற்றியைடையத்தக்க விதத்தில் உங்கள் மனோசக்திகளைச் செலுத்த முடியாது. இஃது ஒருவனுடைய சிதறுண்ட சக்திகளை ஒரு நல்ல மார்க்கத்தில் செலுத்துவதற்கு உபாயமாகும். சிதறுண்ட பல நீரோட்டங்களையும் கேட்டை விளைவிக்கும் பல நீரோட்டங்களையும் நன்றாக வெட்டியுள்ள ஒரு வாய்க்காலில் செலுத்துவதால், அதன் பக்கத்திலுள்ள பிரயோஜனமற்ற ஒரு நிலத்தைப் பொன் போன்ற கதிர்களைக் கொடுக்கும் ஒரு நன்செய்யாகவோ அல்லது நல்ல கனிகளைக் கொடுக்கும் ஒரு தோட்டமாகவோ செய்துவிடலாம்; அதுபோல எவன் அமைதியை அடைந்து தனது அகத்திலுள்ள நினைப்போட்டங்களை அடக்கி அவற்றை நல்ல நெறிகளில் செலுத்துகிறானோ அவன், தனது ஆன்மாவை இரட்சிப்பதோடு தனது அகத்தையும் வாழ்வையும் பயன் தருவனவாகச் செய்கிறான்.

நீங்கள் உங்கள் மனோ எழுச்சிகளையும் நினைப்புக்களையும் ஆளும் திறமையை அடைந்த காலையில், உங்கள் அகத்துள் ஒரு புதிய மௌனசக்தி வளர்வதையும், அமைதியும் பலமுமுள்ள ஒரு நிலையான உணர்ச்சி உங்களிடத்தில் தங்குவதையும் நீங்கள் அறியத் தொடங்குவீர்கள். அப்பொழுது, உங்கள் அந்தரங்க சக்திகள் வெளிப்படத் தொடங்கும்; அப்பொழுது நீங்கள் வெற்றியைக் கொடுக்கும் அமைதியோடும் நம்பிக்கையோடும் உங்கள் வேலைகளைச் செய்து முடிக்கும் சக்தியுள்ளவர்களாவீர்கள். நீங்கள் இப்புதிய சக்தியையும் பலத்தையும் அடைகிற சமயத்திலே உங்கள் அகத்துள்  ‘ஆன்ம தரிசனம்’ என்று சொல்லா நின்ற அகவிளக்குப் பிரகாசிக்கும். அதன் பின்னர் நீங்கள் இருளில் வழி தெரியாமல் நடக்க மாட்டீர்கள்; வெளிச்சத்தில் வழி தெரிந்து நடப்பீர்கள். அவ்வான்ம விளக்கம் வளர வளரப் பகுத்தறிவும் நுண்ணுணர்வும் அளவு கடந்து அதிகரித்துக் கொண்டிருக்கும். அப்பொழுது எதிர்காலச் சம்பவங்களையும் உங்கள் முயற்சிகளின் பலன்களையும் முன்கூட்டிச் சரியாக அறியத்தக்க ஞான திருஷ்டி உங்கள் அகத்துள் வளரும். உங்கள் அகத்துள் எவ்வளவுக்கெவ்வளவு நீங்கள் மாறுகின்றீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு உங்கள் புறவாழ்வு மாறுதலடையும். மற்றவர்கள் சம்பந்தமாக உங்கள் மனப்போக்கை நீங்கள் மாற்றுங்காலையில் உங்கள் சம்பந்தமாக அவர்கள் கொண்டுள்ள மனப்போக்கையும் நடக்கையையும் மாற்றுவார்கள். நீங்கள் தாழ்வையும் பலஹீனத்தையும் அழிவையும் கொடுக்கும் நினைப்புக்களை ஒழித்த காலையில், பலமும் சுத்தமும் உயர்வும் பொருந்திய மனங்களால் சிருஷ்டிக்கப்படும் உண்மையும் வலிமையும் ஆக்கமும் பொருந்திய நினைப்போட்டங்களை அடைவீர்கள்; உங்கள் சந்தோஷம் அளவு கடந்து அதிகப்படும்; தன்னை ஆள்வதால் உளதாகும் இன்பத்தையும் பலத்தையும் செல்வாக்கையும் நீங்கள் அடையத் தொடங்குவீர்கள். இவ்வின்பமும் பலமும் செல்வாக்கும் இடைவிடாது உங்களிடத்திலிருந்து வெளியில் சென்று கொண்டிருக்கும்; உங்கள் முயற்சி ஒன்றுமில்லாமலும், உங்களுக்குத் தெரியாமலும் வலிய மனிதர்கள் உங்கள்பால் வந்து சேர்வார்கள்; செல்வாக்கு உங்கள் கையில் கொடுக்கப்படும்; உங்கள் நினைப்புக்களின் மாறுதலுக்குத் தக்கபடி உங்கள் புறநிலைமைகளும் மாறுதலடையும்.

“ஒரு மனிதரது விரோதிகள் அவன் சொந்த வீட்டுக்காரர்களே.” எவன் பயனும் பலமும் சுகமும் அடைய விரும்புகிறானோ, அவன் இன்மையும் இரவும் மலமும் பொருந்திய நினைப்போட்டங்களைக் கொள்ளும் ஒரு கலனாயிருத்தல் கூடாது. அறிவுள்ள கிருகஸ்தன் ஒருவன் தனது வேலைக்காரர்களையெல்லாம் சரியாக ஆண்டு நல்ல விருந்தினரைத் தன் வீட்டிற்கு அழைப்பதுபோல், மனிதன் தனது அவாக்களையெல்லாம் சரியாக ஆண்டு நல்ல நினைப்புக்களைத் தனது ஆன்மாவின் அரண்மனைக்குள் விடுவதற்குக் கற்றுக் கொள்ளவேண்டும். தன்னை அடக்கியாள்வதில் சிறிய வெற்றியை அடைந்தாலும் அது பெரிய வலிமையை அவனுக்குக் கொடுக்கும். எவன் இந்த மேலான காரியத்தைப் பூரணமாகச் செய்து முடித்தானோ, அவன் அதற்குமுன் சொப்பனத்திலும் காணாத ஞானத்தையும், மனோபலத்தையும், சாந்தத்தையும் அடைகிறான். தன்னைச் சரியாக ஆளுகிறவன் பிரபஞ்சத்திலுள்ள சகல சக்திகளும் தனக்கு உதவி புரிவதையும் ஊழியம் செய்வதையும் அபரோட்சகமாகக் காண்பான்.

வெண்பா

மிகவுயர்ந்த வான்சுவர்க்கம் வேண்டுவையேல் என்றும்
தகவுயர்ந்த நன்னினைவே தாங்கு;- மிகவிழிந்த
கீழ்நிரயம் வேண்டுவையேல், கேடெல்லாம் நல்குமொரு
தாழ்நினைவே யெஞ்ஞான்றுந் தாங்கு.

(தகவு- ஒழுக்கம்)

நின்னினைப்பே நின்மேல் நிலவும் சுவர்க்கமாம்;
நின்னினைப்பே நின்கீழ் நிரயமாம்;- நின்னினைப்பை
யன்றியிவண் இன்பம் அணுவுமில்லை; நின்னினைப்பை
யன்றியிவண் துன்பமிலை யாங்கு.

(ஆங்கு- அவ்வாறு)

நினைப்பதனை நீத்தக்கால் நீழுலகம் நீங்கும்;
நினைப்பதனை நீத்தக்கால் நீங்கும்-வினைப்பயன்கள்;
நித்தியமா யுள்ள நினைப்பினின்றே காலமுதல்
தத்துவமெல் லாம்நிகழுஞ் சார்ந்து.

(சார்ந்து- பொருந்தி)

மதிப்பும் அவமதிப்பும் மாண்அன்பும் வன்பும்
துதிப்பு மிழிப்புமின்பும் துன்புங்- கதிப்புடனே
ஊழையாள் கின்ற உரஞ்சால் நினைப்பினது
கோழைவே டங்களெனக் கொள்.

(வன்பு-பகை)

விழையும் இரவியது வெள்ளொளியே யீங்கு
மழைவில்லின் பன்னிறமா மாறும்;-தழைவோ
டிலகுமொரு மெய்ப்பொருளே எல்லோருங் காணும்
உலகினது பல்பொருளாம் ஓர்.

(விழையும்- (எல்லோரும்) விரும்பும்)

மெய்ப்பொருளோ நின்மனத்துள் வீற்றுளது;நின்னான்மா
மெய்ப்பொருளை யெய்திநிற்க வேண்டுவையேல்-கைப்பொருளை
நின்மனமெஞ் ஞான்றும் நினைக்கும்படி செயல்நின்
கன்மமென நன்றாகக் காண்.

(கைப்பொருளை- ஒழுக்கமாகிய பொருளை)

அந்நினைவு நின்கொள்கை யாவையுமே மெய்யாக்கும்;
புன்னிரயச் சொற்பனத்தைப் போக்கடிக்கும்; – நன்னடையுந்
தூயதவ மும்பூண்டார் தொன்றுதொட்டு வாழின்பம்
ஏயசுவர்க் கத்துள் இடும்.

(மெய்யாக்கும்- உண்மையாக்கும்)

இன்பத்தை யாக்குவ தின்பநினைப் பெஞ்ஞான்றுந்
துன்பத்தை யாக்குவது துன்பநினைப்- பென்புடல்செய்
புண்ணியபா வங்களுடன் பொய்யிருளும் மெய்யொளியும்
நணணுநினைப் பாக்கிநிற்கும் நன்கு.

(என்பு உடல்- எலும்புடைய சரீரம்)

சீர்சான்ற மெய்யைத் தினமுநினைப் பாயேல்நீ,
சீர்சான்ற மெய்யைத் தெரிவாய்நீ;-ஏர்சால்
மகத்தான மெய்யை மனத்துட்கொள் வாயேல்,
மகத்தான மெய்யாவாய் மற்று.

(மெய்யை- மெய்ப்பொருளை)

(தொடர்கிறது)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s