-காம்கேர். கே.புவனேஸ்வரி
முன்னோடி பெண் தொழில் முனைவோரும், நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள எழுத்தாளருமான செல்வி காம்கேர் கே.புவனேஸ்வரி, சென்னையில் உள்ள, மென்பொருள் தயாரிக்கும் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் இயக்குநருமாவார். சுவாமி விவேகானந்தர் குறித்த இவரது கட்டுரை இங்கே…

நாம் ஒரு விஷயத்தை ஆழமாக விரும்பினால், உண்மையாக நேசித்தால் அந்த விஷயம் தானாகவே நடைபெற வேண்டிய சூழல் ஏற்படும் என்பதற்கு சுவாமிஜி விரும்பிய ஸ்ரீ ராமகிருஷ்ணர் இயக்கம் ஓர் எடுத்துக்காட்டு. அவரது நேர்மறையான எண்ணம் ஒரு இயக்கத்துகே வழிகாட்டியது. இன்றுவரை அந்த இயக்கம் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
எழுந்திரு! விழித்திரு! இலக்கை அடையும் வரை போராடு! என்று எழுச்சியுரை அளித்து இந்திய இளைஞர்களுக்கு ஊக்கமளித்த சுவாமி விவேகானந்தர், அமெரிக்கா சென்று சிகாகோவில் நிகழ்த்திய உரை, மத நல்லிணக்கத்திற்கு காரணமானது. இந்தியாவில் பிறந்து இந்துமதத் துறவியான சுவாமி விவேகானந்தர் உலக மத ஒற்றுமைக்கு பரந்துபட்ட கண்ணோட்டத்தோடு பாடுபட்ட செயல், உலகையே திரும்பிப் பார்க்க வைத்த செயலாகும்.
1893, செப்டம்பர் 11-ம் நாள் அமெரிக்காவில் சிகாகோ நகரில் சர்வசமயப் பேரவை கூடியது. அப்பேரவை மனிதகுலத்தின் பண்பாட்டு வரலாற்றில் மிக உயரிய நிகழ்ச்சியாகும். வெவ்வேறு மதத்தவர்களின் சிறப்பம்சங்களையும் அவற்றின் வேற்றுமைகளையும் புரிந்து கொள்வதும், மத ஒற்றுமையை ஏற்படுத்துவதுமே அப்பேரவையின் முக்கிய நோக்கமாக இருந்தது. அந்நிகழ்ச்சியில் சுவாமிஜி பங்கேற்று உரையாற்றிய நிகழ்வு பெரும்பாலானோருக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் விதமாக இருக்கும் என்பதால் அந்நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
எந்த மதத்தையும் விலக்காமல் நட்பாக்கிக் கொள்கின்ற இந்து மதத்தின் சார்பில், இந்தியாவில் இருந்து சுவாமிஜி கலந்து கொண்டதோடு, அவரே அப்பேரவையின் முதன்மையாகத் திகழ்ந்தார். மேலும் பேரவையின் முடிவில் இந்து மதத்தின் பெருமையை உணர்த்தி, அதன்மூலம் எல்லா மதங்களின் ஒற்றுமைக்கும் அற்புதமான, அழகான வழியைக் காட்டினார். இன்று உலகெங்கும் பிரபலமாக சுவாமிஜி என்று போற்றப்படும் விவேகானந்தர், அன்று சாதாரண இந்தியராகவே அப்பேரவையில் கலந்து கொண்டார்.
1890-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தொடர்ச்சியாக 4 ஆண்டுகள் இந்தியா முழுவதும் பரிவ்ராஜகராக பயணம் மேற்கொண்டார் சுவாமிஜி. உண்மையான பாரதம் எது? அது ஏன் இழிநிலைக்கு ஆளானது? மீண்டும் அதை உயர்த்துவது எப்படி? இதுபோன்ற பல கேள்விகளுக்கு பதில் கண்டுபிடிப்பதே சுவாமிஜியின் பயணத்துக்கு முக்கிய காரணமாக இருந்தது.
அப்போது எல்லாத் தரப்பு மக்களையும் நேரடியாகச் சந்திக்கின்ற வாய்ப்பினைப் பெற்றார். பாரதத்தின் பொருளாதார நிலை, அதை ஆட்டிப் படைக்கும் கலாச்சார, பண்பாட்டு சக்திகள் போன்றவற்றை கண்கூடாக பார்த்து புரிந்துகொண்டார். நாட்டின் வறுமையையும், அதன் காரணமாய் உண்டான இழிநிலையையும் கண்டு வருந்திய சுவாமிஜி, பாரதத்தின் நிலையை உயர்த்த தீவிரமாகச் சிந்தித்தார்.
பாரதத்தின் இழிநிலைக்கு மிக முக்கியக் காரணமாக மதம் ஒன்றையே அன்றைய சீர்த்திருத்தவாதிகள் சொல்லி வந்தார்கள். ஆனால் சுவாமிஜி ‘மதம் காரணமல்ல…வேதாந்தத்தின் உயரிய கருத்துக்களும், உண்மைகளும் சாதாரண மக்களுக்குப் புரியும் விதத்தில் சென்றடையவில்லை’ என்று உறுதியாகக் கூறினார்.
‘வேதாந்தத்தின் உயரிய கருத்துக்கள் செயல்முறை விளக்கத்தோடு சாதாரண மக்களுக்கு புரியும்படி சென்றடைந்தால், அவை மக்களுக்குள் இருக்கின்ற ஆற்றலை வெளிக்கொண்டு வரும். அந்த மாபெரும் ஆற்றல் அவர்கள் தங்கள் பிரச்னைகளை தாங்களே தீர்த்துக் கொள்ள வழிவகை செய்யும்’ என்று நம்பினார்.
ஆனால் அன்று நம் பாரத மக்கள் அறியாமையினாலும், வறுமையினாலும் சிக்கித் திணறிக் கொண்டிருந்தனர். இந்தச் சூழலில் வேதாந்த உண்மைகளை அவர்களுக்கு போதிப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை. முதலில் வறுமையைப் போக்க வேண்டும். அடுத்து அறியாமையைப் போக்க கல்வி கொடுக்க வேண்டும். அதற்கு அடுத்தகட்ட நடவடிக்கையாகத் தான் வேதாந்த உண்மைகள் அவர்களுக்கு மனதுக்குள் ஆழமாக சென்றடையும் என்பதைத் தெரிந்து கொண்டார் சுவாமிஜி.
வயிறு பசியால் காயும்போது, அறிவு எப்படி முழுத் திறனுடன் செயல்படும்? ஆகவே பசி, பட்டினி, அறியாமை இவற்றில் இருந்து மக்களுக்கு விடுதலை கொடுக்க என்ன வழி என ஆராய்ந்தார் சுவாமிஜி. வறுமை ஒழிய பணம் வேண்டும், அறியாமை ஒழிய கல்வி வேண்டும். ஆக, வறுமையும், அறியாமையும் ஒழிய பணம் வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டார் சுவாமிஜி.
பணம்…பொருட்செல்வத்தைப் பெற மேலைநாடுகளையே நம்பியிருக்க வேண்டிய சூழல் அன்று. ஆனால் யாசகம் பெற விரும்பாத சுவாமிஜி, பண்டமாற்று முறையின் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டார். நம்மிடம் இருக்கும் ஒன்றைக் கொடுத்து, அதற்குப் பதிலாக அவர்களிடம் உள்ள ஒன்றைப் பெற்றுக் கொள்வது என்பது தான் அவரது யோசனை.
வறுமை, பசி, பட்டினி, அறியாமை இவற்றால் நம் நாடு கட்டுண்டு கிடந்தாலும், நம்முடைய நாட்டின் முனிவர்களும், யோகிகளும் அளித்துச் சென்ற ஆன்மிகச் செல்வங்களும், வேதாந்த உண்மைகளும் மிகப் பெரிய சொத்தாக இருந்தன.
பொருட்செல்வத்திலும், கல்வியிலும் மேம்பட்டிருந்த மேலைநாட்டவர்கள் வேதாந்த உண்மைகளை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருந்தனர். அவர்களுக்கு வேதாந்தத்தைக் கற்பித்து, அவர்களிடம் இருந்து செல்வத்தைப் பெறுவது என முடிவு செய்தார் சுவாமிஜி. அந்தப் பொருட்செல்வத்தை வைத்து நம் நாட்டவரின் வறுமையைப் போக்கி, கல்வி அளித்து, அறியாமையை நீக்கிவிட முடியும் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்கான தருணத்தை நோக்கிக் காத்திருந்தார்.
1893-ம் ஆண்டு அமெரிக்காவில் சிகாகோவில் நடைபெற இருக்கும் சர்வ சமயப் பேரவை பற்றி கேள்விபட்டார் சுவாமிஜி. அப்போது அவர் குஜராத்தில் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்பேரவையில் கலந்துகொள்ள அறிஞர் பெருமக்கள் பலரும் சுவாமிஜியை வற்புறுத்தினர். ஆனால் சுவாமிஜி தன் குருநாதர் ஸ்ரீ ராமகிருஷ்ணர் மற்றும் அன்னை சாரதாதேவியின் ஆசிகளை நாடிக் காத்திருந்தார். 1893, ஜனவரி மாதம் சென்னை வந்தபோது, அவர்களின் ஆசி கிடைத்தது. சில மன்னர்கள் மற்றும் செல்வந்தர்களின் பொருளாதரவுடன் 1893, மே மாதம் 31-ஆம் நாள் மும்பையில் இருந்து கப்பலில் அமெரிக்காவுக்குப் பயணமானார் சுவாமிஜி.
அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்ட 400-ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் மாபெரும் கண்காட்சி ஒன்று அமெரிக்காவிலுள்ள சிகாகோவில் ஏற்பாடு செய்யப்பட்டிரிந்தது. இலக்கியம், அறிவியல், பொருளாதாரம் இப்படி ஏராளமான பேரவைகள் கூடிய அந்த மிகப் பெரிய கண்காட்சியின் ஓர் அங்கம் சர்வ சமயப் பேரவை. 1893, செப்டம்பர் 11-ம் தேதி, 4,000 நபர்கள் அமர்ந்திருக்கும் மாபெரும் திடலில் சர்வ சமயப் பேரவை காலை 10 மணிக்குத் தொடங்கியது. உலகெங்கிலும் இருந்து 10 மதங்களின் பிரதிநிதிகள் அதில் பங்கேற்றனர். இந்துமதத்தின் பிரதிநிதியாக சுவாமிஜியும் அமர்ந்திருந்தார்.
அன்று உரை நிகழ்த்த சுவாமிஜியின் பெயரை அழைத்த போதெல்லாம், அவர் ‘பிறகு பேசுகிறேன்…பிறகு பேசுகிறேன்…’ என்று மறுத்து வந்தார். இறுதியில் இது தான் கடைசி முறை என்று பேரவை உறுப்பினர்கள் ஒலிபெருக்கியில் அறிவித்த போது, அதுவரை இருந்த தயக்கத்தைத் துடைத்தெறிந்து விட்டு, சரஸ்வதி தேவியை மனதில் நிறுத்தி…மனதார வணங்கி நமஸ்கரித்த பின் ‘அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!’ என்று கனிவு பொங்கும் தன் குரலில் பேசத் தொடங்கினார்.

அந்தக் குரலின் கனிவில் அரங்கில் இருந்த அனைவரும் கட்டுண்டனர்; கைகளைத் தட்டத் தொடங்கினர். கரவொலி அடங்கவே 2-3 நிமிடங்கள் ஆனது. அந்த நிமிடம் சுவாமிஜி அமெரிக்காவையே வென்று விட்டார். மொத்தம் 17 நாட்கள் நடைபெற்ற சைவ சமய பேரவையில், சுவாமிஜி 6 முறை பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிகாகோவில் தன் பேச்சால் அமெரிக்க மக்களைக் கவர்ந்த பிறகு, சுவாமிஜி அம்மக்களின் இதயங்களில் நிறைந்து விட்டதோடு, அமெரிக்காவின் மூலை முடுக்கெல்லாம் அவரது படங்களாலும், வாசகங்களாலும் நிரப்பப்பட்டன என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் அமெரிக்கத் தெருக்களில் நடந்து சென்றால் கூட்டத்தைச் சமாளிக்க காவல் துறையினர் வரவேண்டிய அளவிற்கு அவரது செல்வாக்கு கோலோச்சி இருந்தது என்று சொல்லலாம்.
சுமார் 4 வருடங்கள் அமெரிக்காவில் வேதாந்தக் கருத்துக்களைப் பரப்பிவிட்டு 1897, ஜனவரி மாதம் இந்தியா திரும்பினார் சுவாமிஜி. தான் எண்ணியபடி இந்தியாவின் சொத்தான வேதாந்த அருட்செல்வத்தை மேலைநாடுகளுக்குக் கொடுத்து, அவர்களிடம் இருந்து பொருட்செல்வத்தைப் பெற்று தன் லட்சியத்தை நிறைவேற்ற சுவாமிஜி உருவாக்கிய அமைப்பு தான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் இயக்கம்.
இன்று உலகெங்கும் பரந்து விரிந்து மக்களின் வறுமை, அறியாமை போன்றவற்றைப் போக்கவும் ஆன்மிக ஞானத்தைப் பரப்பவும் அவர் உருவாக்கிய பாதையில் பாடுபட்டு வருகிறது ராமகிருஷ்ணர் இயக்கம்.
மீண்டும் முதல் பத்தியை ஒரு முறை வாசிக்கவும். கட்டுரை முழுமையடையும்.
குறிப்பு: செல்வி காம்கேர் கே.புவனேஸ்வரி, கணிப்பொறியியல், மேலாண்மையியலில் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர்; கடந்த 30 ஆண்டுகளாக, ‘காம்கேர் சாப்ட்வேர் பிரைவேட் லிமிடட்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வருகிறார். இணையதளங்களை வடிவமைத்தல், சாஃப்ட்வேர், மல்டி மீடியா அனிமேஷன் குறுந்தகடுகள் தயாரிப்பு, மின் நூல்களை உருவாக்குதல், குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் தயாரித்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ளார். கம்ப்யூட்டர் துறை உள்பட 100-க்கு மேற்பட்ட நூல்களை தமிழில் எழுதியுள்ளார். தான் ஈட்டும் பொருளை நல்வழியில் சமூகத்திற்கு செலவிட ‘ஸ்ரீ பத்மகிருஷ்’ என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.
$$$