-மகாகவி பாரதி
இரண்டாம் பாகம்
2.3. சபதச் சருக்கம்
2.3.9. கர்ணன் பதில்
விகர்ணனின் நல்லுரை கேட்டுச் சினந்த கர்ணன், அவனை ஏசுகிறான். பாஞ்சாலியின் அழகால் மயங்கி இவ்வாறு சிறுவன் பிதற்றுவதாகக் கூறி கண்டிக்கும் கர்ணன், “மார்பிலே துணியைத் தாங்கும் வழக்கங் கீழடியார்க் கில்லை” என்று கூறி,பாண்டவர்களின் மேலாடைகளையும் பாஞ்சாலியின் சீலையையும் களையுமாறு சேவகனுக்கு உத்தரவிடுகிறான். இதைக் கேட்டு திகைத்த பாஞ்சாலி என்ன செய்வதென்று அறியாமல், இரு கரங்களையும் இணைத்து இறுகப் பற்றிக் கொண்டாள் என்கிறார் மகாகவி பாரதி…

வேறு
விகருணன் சொல்லைக் கேட்டு
வில்லிசைக் கர்ணன் சொல்வான்:-
‘தகுமடா, சிறியாய், நின்சொல்.
தாரணி வேந்தர் யாரும்
புகுவது நன்றன் றெண்ணி
வாய்புதைத் திருந்தார், நீதான்
மிகுமுரை சொல்லி விட்டாய்.
விரகிலாய்! புலனு மில்லாய்! 84
பெண்ணிவள் தூண்ட லெண்ணிப்
பசுமையால் பிதற்றுகின்றாய்;
எண்ணிலா துரைக்க லுற்றாய்;
இவளைநாம் வென்ற தாலே
நண்ணிடும் பாவ மென்றாய்,
நாணிலாய்! பொறையு மில்லாய்!
கண்ணிய நிலைமை யோராய்;
நீதிநீ காண்ப துண்டோ? 85
மார்பிலே துணியைத் தாங்கும்
வழக்கங்கீ ழடியார்க் கில்லை.
சீரிய மகளு மல்லள்;
ஐவரைக் கலந்த தேவி.
யாரடா, பணியாள்! வாராய்;
பாண்டவர் மார்பி லேந்தும்
சீரையுங் களைவாய்; தையல்
சேலையுங் களைவாய்’ என்றான். 86
இவ்வுரை கேட்டா ரைவர்;
பணிமக்க ளேவா முன்னந்
தெவ்வர்கண் டஞ்சு மார்பைத்
திறந்தனர், துணியைப் போட்டார்.
நவ்வியைப் போன்ற கண்ணாள்,
ஞானசுந்தரிபாஞ்சாலி
‘எவ்வழி உய்வோ’ மென்றே
தியங்கினாள், இணைக்கை கோத்தாள். 87
$$$