-பேரா. டி.ஏ.ஜோசப்
பேராசிரியர் திரு. டி.ஏ.ஜோசப், ‘ஸ்ரீ வைஷ்ணவச்சுடராழி’ என்ற சிறப்புப் பட்டம் பெற்றவர்; பாண்டிச்சேரியில் வசிக்கிறார். பன்மொழித் தேர்ச்சி மிக்கவர்; கல்வியாளர்; ஆன்மிகச் சொற்பொழிவாளர்; எழுத்தாளர். சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தியின்போது அன்னார் எழுதிய கட்டுரை இது….

விவேகானந்தர் என்ற உடனே நம் நினைவுக்கு வருவது ‘எழுமின், விழுமின், உழைமின்’ என்ற வீர வேத வசனங்கள் தான்.
சோர்வை விலக்கி, அயர்வை நீக்கி, அறிவின் உயர்வைத் தேடி உழைத்து, உயர்ந்த இலக்கை அடையுங்கள் என்பது அவருடைய தேசிய வீர முழக்கம்!
இதைத் தான் ‘தமஸோமா ஜோதிர்கமய’ என்று ரிஷிகள் முழங்கினார்கள்.
நம்மாழ்வாரும் சாமவேத சாரமான தம் திருவாய்மொழியில் முதல் பாடலிலேயே ‘மயர்வறு ‘ என்றும் ‘உயர்வறு’ என்றும் ‘அயர்வறு’ என்றும் ‘எழு என் மனனே’என்றும் சொன்னார்.
உயர்வற உயர்நலம் உடையவன் எவன்? அவன்
மயர்வற மதிநலம் அருளினன் எவன்? அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன்? அவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே!
-என்பது அந்தப் பாசுரம்.
இறைவன் மற்றும் அவன் உலகைச் சேர்ந்தவர்களுடைய குணங்களாகச் சொல்லப்பட்டிருந்தாலும், உயர்வற உயர்ந்த நலமும், அயர்வறும் அமரர்கள் நிலையும், நம்போன்ற மனிதர்களுக்கும் அடைவது சாத்தியம் என்பதனால் தான் நம்மாழ்வார் ‘தொழுது எழு!’ என்று தம் மனதை நோக்கிக் கட்டளையிடுகிறார். தாமும் அப்படி அக இருள் நீங்கப் பெற்றவர் என்பதை ‘மயர்வற மதிநலம் அருளினன்’ என்று குறிப்பிடுகிறார்.
மயர்வு – அதுதான் அஞ்ஞானம்; இருள், சோம்பல், அயர்வு; தமஸ் என்று பெரியோர் அதைக் குறிப்பிடுவர். இதிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்று தான் ரிஷிகள் விரும்பினார்கள்.
‘தமஸோமா ஜோதிர்கம’ – இருளிலிருந்து ஒளியின் பாதைக்குச் செல் – இதுதான் அவர்கள் உத்தரவு.
விவேகானந்தரும் இதையே தான் செல்லுமிடமெல்லாம் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.
ஒளியாய்ப் பிரகாசித்துக் கொண்டு உலகுக்கெல்லாம் வழிகாட்டியாய்த் திகழ்ந்த நம் நாடு, இன்று இருள் வீட்டில் வீழ்ந்து கொண்டிருக்கிறது.
பா+ரதம்= பாரதம். அதாவது ஒளியில் ஞானவெளிச்சத்தில் ஈடுபாடு உள்ள நாடு இது என்பது அந்தச் சொல்லுக்கு அர்த்தம். உலகத்திலேயே வேறு எந்த நாட்டுக்கும் இந்தப் பெயரில்லை.
உலகுக்கு ஒளி காட்டும் கலங்கரை விளக்கமாக, கலங்கியவர்களின் அறிவை ஒளி விளங்கிய அறிவாகச் செய்யும் ஞானப் பிரதேசமாகத் திகழ்ந்த இந்த இந்தியா, அனைத்து நாடுகளை விட முந்திய தேசமாக அறிவு முத்துக்களை சிந்திய தேசமாக இருந்த இந்த பரத கண்டம், உழைப்பில் உயர்வில் பிந்திய தேசமாக மாறியது பிற்காலத்தில்தான்!
தேசியமும் தெய்வீகமும் தன் இரு கண்கள் என்று நினைத்த விவேகானந்தருக்கு இந்த இழிநிலையைக் காணச் சகிக்கவில்லை. தங்கள் கடமை தவறி சோம்பிக் கிடப்பதும் சுருண்டு படுப்பதும் பொழுதுபோக்கு என்று மக்களின் வாழ்க்கை மாறினால், அதைக் காணும் விவேகானந்தருக்கு குருதி கொதிக்காதா?
தம் மேல்நாட்டுப் பயணத்தை முடித்து அவர் இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்த போது, கொழும்பிலிருந்து அல்மோரா வரை அவர் ஆற்றிய உரைகள் இதைத் தான் பறை சாற்றுகின்றன.
உள்ளத்தில் இருள் சூழும்போது தான் உலகத்தில் ஒளி நீங்குகிறது. ஒளி நீங்கினால் இருள்தானே! இருள் சூழ்ந்தால் துயர் தானே? ‘துயரறு சுடரடி’ என்கிறார் நம்மாழ்வார். இறைவழிபாடு துயர் போக்கும்; நம்மை உயர்வாக்கும்.
நாத்திகம் ஒழியவேண்டும், நல்லவை பரவ வேண்டும். ஆத்திகக் கருத்துக்களும், ஆன்மிக போதனைகளும் நாடெங்கும் பரவ வேண்டும். அப்பொழுது தான் நமக்கு வாழ்வு! அன்று தான் நம் துன்பங்களுக்குத் தீர்வு!
இதைத் தான் நம்மாழ்வார் சொன்னார்; நம் விவேகானந்தரும் சொன்னார்.
“அஞ்சி அஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே” என்றார் பாரதி. அச்சம் இன்று நம் அன்றாட உணர்வாகிவிட்டது. அச்சம் என்பது அஞ்ஞானத்தின் விளைவு. அஞ்ஞானம் என்பது பாமரத்தனம்; படிப்பை வெறுக்கும் நிலைமை.
நாமும் படிப்போம், மற்றவரையும் படிக்க வைப்போம். எடுக்க எடுக்கக் குறையாத கருவூலமான எண்ணற்ற ஏட்டுச் செல்வங்களை நம் முன்னோர் நமக்கு வழங்கியிருக்கிறார்கள். அவற்றைப் பயன்படுத்தாது இருப்பது, யாருடைய குற்றம்? நம் குற்றம் அல்லவா?
சுவாமி விவேகானந்தரின் 150 -வது ஜெயந்தி கொண்டாட்ட காலகட்டத்தில் இந்தக் கேள்வியுடன் நமது ஞானச் செல்வங்களை படிப்போம்; பயிற்றுவிப்போம்.
$$$
குறிப்பு: திரு. டி.ஏ.ஜோசப் குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் அண்மையில் வெளியான செய்தி கீழே...
கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து 10,000 ஆன்மிக சொற்பொழிவுகள் ஆற்றிய ஜோசப்:
வாழ்வுக்கான அர்த்தம் இந்து மதத்தில் உள்ளதாக நெகிழ்ச்சி
-ம.மகராஜன்

சென்னை: இந்து மதத்தின்பால் ஈர்க்கப்பட்டு, ஆன்மிகச் சொற்பொழிவாற்றலில் சிறந்து விளங்குகிறார் புதுச்சேரியை சேர்ந்த ஸ்ரீவைஷ்ணவச் சுடராழி டி.ஏ.ஜோசப் (71).
கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த ஜோசப், தனது 15 வயதில் இந்து மதத்தின் மீது காதல் வயப்பட்டார். அந்த தேடலின் தொடர்ச்சியாக, இந்து மத கொள்கைகளையும், சிறப்புகளையும் போதிக்கும் நற்பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். தற்போது இந்துக்களுக்கான ஆன்மிக சொற்பொழிவுகளை தமிழகமெங்கும் வழங்கி வருகிறார். இதுவரை இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை நடத்தியுள்ளார். குறிப்பாக 3 ஆயிரம் வேதாந்த குறுந்தகடுகளையும் வெளியிட்டு, பேரார்வத்துடன் ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
பாராட்டு பெற்ற நூல்கள்
தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதத்தில் இலக்கிய பட்டப் படிப்பை முடித்தவர் ஜோசப். இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றவர். முதலில், மதுரையில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றி வந்தார். முதன்முதலாக 1991-ல் இவர் எழுதிய ‘கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டியா’ என்ற புத்தகம், காஞ்சி சங்கராச்சாரியார் உட்பட தமிழகத்தின் பல மடாதிபதிகளால் பாராட்டப்பட்டது. தொடர்ந்து, 12 ஆழ்வார்களை பற்றி இவர் எழுதிய ‘கடவுளை காட்டும் கண்ணாடிகள்’ புத்தகமும் அமெரிக்கா வாழ் இந்தியர்களிடம் வரவேற்பை பெற்றது.
2017-ல் இளைஞர்களுக்கு ஆன்மிகத்தை போதிக்கும் வகையில் ரிஷிதர்மா பவுண்டேஷனை நிறுவினார். இந்த அமைப்பில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். இவரது ஆன்மிக சேவையை கௌரவித்து, ‘சொற்செல்வன்’ உட்பட 50-க்கும் மேற்பட்ட பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து டி.ஏ.ஜோசப் கூறியதாவது:
மோட்ச நிலையை அடைவது தொடர்பாக எனது 10 வயதில் பல்வேறு கேள்விகள் எழுந்தன. அதற்கான விடையை பல்வேறு மதங்களில் தேடியும், திருப்திகரமான விளக்கம் கிடைக்கவில்லை. நிறைவாக, ஸ்ரீமான் வீரராகவ ஐயங்கார் மூலம் இந்து மதத்தில் என் அனைத்து கேள்விகளுக்கும் முழுமையான விளக்கம் கிடைத்தது. அதனால், இந்து மதத்துக்கு மாறி என்னை அர்ப்பணித்துக் கொள்ள முடிவெடுத்தேன்.
இந்த சூழலில், கோயில்களில் ராமாயண, மகாபாரதக் கதைகளை கூறும் வாய்ப்பு கிடைத்தது. எனது 28 வயது முதல், இந்து மதத்தின் நற்கருத்துகளை ஆன்மிகச் சொற்பொழிவு வாயிலாக மக்களிடம் கொண்டுசெல்லும் பணிகளை முன்னெடுத்து வருகிறேன்.
வாழ்வுக்கான அர்த்தங்கள் இந்து மதத்தில் உள்ளது. எனவே, நான் திருப்தியடைந்த ஆன்மிகத்தை மக்களிடம் கொண்டுசெல்ல மனம் விரும்புகிறது.
இளைஞர்களுக்கும் ஆன்மிகம் சென்றடையும் வகையில் சமூகநீதியுடன் கதைகளை நான் விவரிப்பதால், எனது சொற்பொழிவு சற்று வித்தியாசமாக இருக்கும்.
நான் மதம் மாறிவிட்டாலும்கூட, ஸ்ரீ வைகுண்டவாசி ஸ்ரீ வரத யதிராஜ ஜீயர் சுவாமி அறிவுறுத்தலின்படி ஜோசப் எனும் பெயரிலேயே சொற்பொழிவுகளை ஆற்றி வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நன்றி: இந்து தமிழ் திசை (02.01.2023)
$$$