பாஞ்சாலி சபதம் – 2.2.8

-மகாகவி பாரதி

துரியனின் ஆணையை ஏற்று மீண்டும் தன்னிடம் வந்த பாகனிடம், ”சூதில் தருமன் தோற்ற பின்னர் என்னை மனைவி என்ற முறையில் சூதில் பணயம் வைக்க அவருக்கு உரிமை இல்லை. நான் மன்ன துருபதனின் மகள். இந்த நியாயத்தைச் சொல்ல அரசவையில் ஒருவரும் இல்லையா?” என்று வினவுகிறாள் பாஞ்சாலி. “மன்னர் சௌரியம் வீழ்ந்திடும் முன்னரே- அங்கு சாத்திரஞ் செத்துக் கிடக்குமோ?” என்று பாஞ்சாலி கேட்பதாக கவிதை புனைகிறார் மகாகவி பாரதி. இதனை மீண்டும் அரசவைக்குச் சென்று அவையினரிடம் முன்வைக்கிறான் பாகன்...

இரண்டாம் பாகம்

2.2. துகிலுரிதற் சருக்கம்

2.2.8. திரௌபதி சொல்லுதல்

“நாயகர் தாந்தம்மைத் தோற்றபின் – என்னை
      நல்கும் உரிமை அவர்க்கில்லை. – புலைத்
தாயத்தி லேவிலைப் பட்டபின், – என்ன
      சாத்திரத் தாலெனைத் தோற்றிட்டார்? அவர்
தாயத்தி லேவிலைப் பட்டவர்; – புவி
      தாங்குந் துருபதன் கன்னிநான். – நிலை
சாயப் புலைத்தொண்டு சார்ந்திட்டால், – பின்பு
      தார முடைமை அவர்க்குண்டோ! 52

‘கௌரவ வேந்தர் சபைதன்னில் – அறங்
      கண்டவர் யாவரும் இல்லையோ? – மன்னர்
சௌரியம் வீழ்ந்திடும் முன்னரே – அங்கு
      சாத்திரஞ் செத்துக் கிடக்குமோ? – புகழ்
ஒவ்வுற வாய்ந்த குருக்களும் – கல்வி
      ஓங்கிய மன்னருஞ் சூதிலே – செல்வம்
வவ்வுறத் தாங்கண் டிருந்தனர்; என்றன்
      மான மழிவதும் காண்பரோ? 53

‘இன்பமுந் துன்பமும் பூமியின் – மிசை
      யார்க்கும் வருவது கண்டனம்; – எனில்
மன்பதை காக்கும் அரசர்தாம் – அற
      மாட்சியைக் கொன்று களிப்பரோ? – அதை
அன்புந் தவமுஞ் சிறந்துளார் – தலை
      யந்தணர் கண்டு களிப்பரோ? – அவர்
முன்பென் வினாவினை மீட்டும்போய்ச் – சொல்லி
      முற்றுந் தெளிவுறக் கேட்டுவா?” 54

என்றந்தப் பாண்டவர் தேவியும் – சொல்ல,
      என்செய்வன் ஏழையப் பாகனே? – ‘என்னைக்
கொன்றுவிட் டாலும் பெரிதில்லை – இவள்
      கூறும் வினாவிற் கவர்விடை – தரி
னன்றி இவளை மறுமுறை – வந்து
      அழைத்திட நானங் கிசைந்திடேன்? – (என)
நன்று மனத்திடைக் கொண்டவன் – சபை
      நண்ணி நிகழ்ந்தது கூறினான். 55

மாத விடாயி லிருக்கிறாள் – அந்த
.மாதர சென்பதுங் கூறினான். – கெட்ட
பாதகன் நெஞ்சம் இளகிடான் – நின்ற
.பாண்டவர் தம் முகம் நோக்கினான்; – அவர்

பேதுற்று நிற்பது கண்டனன் – மற்றும்
.பேரவை தன்னில் ஒருவரும் – இவன்
தீதுற்ற சிந்தை தடுக்கவே – உள்ளத்
.திண்மை யிலாதங் கிருந்தனர். 56

பாகனை மீட்டுஞ் சினத்துடன் – அவன்
      பார்த்திடி போலுரை செய்கின்றான்: – ‘பின்னும்
ஏகி நமதுளங் கூறடா! – அவள்
      ஏழு கணத்தில் வரச்செய்வாய்! – உன்னைச்
சாக மிதித்திடு வேனடா! – என்று
      தார்மன்னன் சொல்லிடப் பாகனும் – மன்னன்
வேகந் தனைப்பொருள் செய்திடான் – அங்கு
      வீற்றிருந் தோர்தமை நோக்கியே, 57

‘சீறும் அரசனுக் கேழையேன் – பிழை
      செய்ததுண்டோ? அங்குத் தேவியார் – தமை
நூறு தரஞ்சென் றழைப்பினும், – அவர்
      நுங்களைக் கேட்கத் திருப்புவார்; – அவர்
ஆறுதல் கொள்ள ஒருமொழி – சொல்லில்,
      அக்கண மேசென் றழைக்கிறேன்; – மன்னன்
கூறும் பணிசெய வல்லன்யான்; – அந்தக்
      கோதை வராவிடில் என்செய்வேன்?’ 58

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s