-சேக்கிழான்
நமக்கு ஒவ்வொரு நாளும் புதிய வாழ்நாளே. உறங்கி விழிப்பதே புதிய பிறவி தான். எனில் புத்தாண்டு என்பது என்ன? இக் கவிதைகள் செயற்கையான மின்சிசிறிக் காற்றை மறுதலித்து இயற்கைத் தென்றலை நாடுமாறு சொல்கின்றன... எனி ஹவ், ஹேப்பி இங்கிலிஷ் நியூ இயர்!

1. எது நமக்குப் புத்தாண்டு?
ஜனவரி – 1
புத்தாண்டா?
‘நியூ இயரா?’
இரண்டுக்கும் இடையில்
என்ன வித்தியாசம்?
இங்கிலாந்து சென்று
சித்திரை முதல் தேதி
‘ஹேப்பி நியூ இயர்’
சொல்லிப் பாருங்கள்-
வித்தியாசம்
புரியவைக்கப்படும்.
காலண்டர் மாற்றுவதாலும்
டைரி மாற்றுவதாலும்
ஜனவரி -1
புதிய ஆண்டு தான்.
விசேஷ நாட்களில் கூட ஒன்று.
விடுமுறை நாட்களில் கூட ஒன்று.
ஜனவரி -1 ஐ
கொண்டாட வேண்டியது தான்.
ஆனால்-
எது நமக்கு புத்தாண்டு?
புத்தாண்டைப் புரியாமல்
பூரித்துப் பயனென்ன?
செப்புமொழி பதினெட்டோடு
பத்தொன்பதாய்
ஆங்கிலமும் பயில்வதில்
பெருமை தான்.
ஜனவரி -1 ஐ
மகிழ்ச்சியாய் வரவேற்போம்.
எனினும்
புத்தாண்டை வரவேற்க
சித்திரைக்கே காத்திருப்போம்!
$$$
2. அவலச்சுமை
இன்னும்
104 நாட்கள்* இருக்கிறது
புத்தாண்டு பிறக்க.
ஒரு நாளுக்கு
24 மணி நேரம்.
ஆக மொத்தம்
2596 மணி நேரம்
கழிந்தாக வேண்டும்.
ஒரு மணி நேரத்துக்கு
3600 வினாடிகள்.
104 நாட்களுக்கு
நீங்களே
கணக்கு போட்டுக்
கொள்ளுங்கள்.
அதற்குள் இப்படி
அவசரப்பட்டால்
எப்படி?
காலண்டரை
மாற்றிவிடுவதால்
புத்தாண்டு பிறந்து விடுமா?
கிழிந்துபோன
தாள்களில்
கழிந்துபோன
நாள்கள்
இருந்தன.
நாளுக்கு
அவ்வளவு தானா
மரியாதை?
இறந்தகாலத்தை
போகியிட்டு
புத்தாண்டில்
பொங்கலிட முடியாது.
இறந்த காலம் தான்
அனுபவம்.
காலச்சக்கரத்தின்
சரித்திரம்.
அடிமைத் தளையை
அறுப்பதற்காக
ஆருயிர்த் தியாகியர்
ஆகுதியானது
நமது சரித்திரம்.
ஆயினும் அழுத்துகிறது-
அவலச்சுமையாய்
ஆங்கிலப் புத்தாண்டு.
பழைய தாள்களை
பறக்க விட்டதால்
வந்த வினை இது.
பஞ்சாங்கம் போல்
பாதுகாத்திருந்தால்
பரிதாபச்சூழல்
நேர்ந்திருக்காது.
வீட்டுப்பரணில்
தாத்தா காலப் பெட்டியில்
செல்லரித்துக் கிடக்கிறது –
60 வருடப்
பஞ்சாங்கம்.
அதனைக் கொஞ்சம்
தூசு தட்டுங்கள்.
பாதுகாப்பாக
பத்திரப் படுத்துங்கள்..
இன்னும்*
104 நாட்கள் இருக்கிறது
புத்தாண்டு பிறக்க.
அதற்கு இப்போதே
தயாராகுங்கள்!
உட்குறிப்பு: * புத்தாண்டான சித்திரை முதல் நாளுக்கு இன்னமும் 104 நாட்கள் மீதம் இருக்கின்றன...
$$$