அர்ஜுன சந்தேகம்

-மகாகவி பாரதி

ஒரே கேள்விதான். ஆனால் ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு பதில்கள். ஆனால் அனைத்திலும் லோக நன்மை தான் பிரதானம். இது சிறிய கதை தான். ஆனால், இந்த சிரு வித்துக்குள் ஒளிந்திருக்கும் விருட்சம் பிரமாண்டமானது.

ஹஸ்தினாபுரத்தில் துரோணாசாரியாரின் பள்ளிக்கூடத்தில் பாண்டு மகாராஜாவின் பிள்ளைகளும் துரியோதனாதிகளும் படித்து வருகையில், ஒரு நாள் சாயங்கால வேளையில் காற்று வாங்கிக்கொண்டு வரும்போது, அர்ஜுனன் கர்ணனைப் பார்த்து:- ஏ, கர்ணா சண்டை நல்லதா? சமாதானம் நல்லதா? என்று கேட்டான். (இது மஹாபாரதத்திலே ஒரு உபகதை; சாஸ்திர ப்ரமாணமுடையது; வெறும் கற்பனையன்று).

சமாதானம் நல்லது என்று கர்ணன் சொன்னான்.

காரணமென்ன? என்று கிரீடி கேட்டான்.

கர்ணன் சொல்லுகிறான்:- அடே, அர்ஜுனா, சண்டை வந்தால் நான் உன்னை அடிப்பேன். அது உனக்குக் கஷ்டம். நானோ இரக்கச் சித்தமுடையவன். நீ கஷ்டப்படுவதைப் பார்த்தால் என் மனம் தாங்காது. ஆகவே இரண்டு பேருக்கும் கஷ்டம். ஆதலால் சமாதானம் சிறந்தது என்றான்.

அர்ஜுனன்:-அடே கர்ணா, நம் இருவரைக் குறித்து நான் கேட்கவில்லை. பொதுப்படையாக உலகத்தில் சண்டை நல்லதா? சமாதானம் நல்லதா? என்று கேட்டேன் என்றான்.

அதற்குக் கர்ணன்:-பொது விஷய ஆராய்ச்சிகளில் எனக்கு ருசியில்லை என்றான்.

இந்தப் பயலைக் கொன்று போடவேண்டும் என்று அர்ஜுனன் தன் மனதுக்குள்ளே தீர்மானம் செய்து கொண்டான். பிறகு அர்ஜுனன் துரோணாச்சாரியாரிடம் போய் அதே கேள்வியைக் கேட்டான்.

சண்டை நல்லது என்று துரோணாசார்யர் சொன்னார்.

எதனாலே? என்று பார்த்த்ன் கேட்டான்.

அப்போது துரோணாசார்யர் சொல்லுகிறார்:- அடே விஜயா, சண்டையில் பணம் கிடைக்கும்; கீர்த்தி கிடைக்கும், இல்லாவிட்டால் மரணம் கிடைக்கும். சமாதானத்தில் சகலமும் சந்தேகம்-ஸ-ஸ-ஸ- என்றார்.

பிறகு அர்ஜுனன் பீஷ்மாசார்யரிடம் போனான். சண்டை நல்லதா, தாத்தா, சமாதானம் நல்லதா? என்று கேட்டான். அப்போது கங்கா புத்திரனாகிய அந்தக் கிழவனார் சொல்லுகிறார்:-குழந்தாய், அர்ஜுனா, சமாதானமே நல்லது. சண்டையில் நம்முடைய ஷத்திரிய குலத்திற்கு மகிமையுண்டு. ஸமாதானத்தில் லோகத்துக்கே மகிமை என்றார்.

நீர் சொல்லுவது நியாயமில்லை என்று அர்ஜுனன் சொன்னான்.

காரணத்தை முதலாவது சொல்ல வேண்டும். அர்ஜுனா, தீர்மானத்தை அதன்பிறகு சொல்ல வேண்டும் என்றார் கிழவர்.

அர்ஜுனன் சொல்லுகிறான்:- தாத்தாஜீ, சமாதானத்தில் கர்ணன் மேலாகவும் நான் தாழ்வாகவும் இருக்கிறோம். சண்டை நடந்தால் உண்மை வெளிப்படும் என்றான்.

அதற்கு பீஷ்மாசார்யர்:- குழந்தாய், தர்மம் மேன்மையடையவும், சண்டையாலேனும், சமாதானத்தாலேனும், தர்மம் வெல்லத்தான் செய்யும். ஆதலால் உன் மனதில் கோபங்களை நீக்கி சமாதானத்தை நாடு. மனுஷ்ய ஜீவரெல்லாம் உடன் பிறந்தாரைப் போலே, மனுஷ்யர் பரஸ்பரம் அன்போடிருக்க வேண்டும். அன்பே தாரகம், முக்காலும் சொன்னேன். அன்பே தாரகம் என்று சொல்லிக் கண்ணீர் ஒரு திவலை உதிர்த்தார்.

சில தினங்களுக்குப்பால் அஸ்தினாபுரத்துக்கு வேதவியாஸர் வந்தார். அர்ஜுனன் அவரிடம் போய் சண்டை நல்லதா, சமாதானம் நல்லதா என்று கேட்டான்.

அப்போது வேதவியாஸர் சொல்லுகிறார்:- இரண்டும் நல்லன, சமயத்துக்குத் தக்கபடி செய்ய வேண்டும் என்றார்.

பல வருஷங்களுக்கப்பால் காட்டில் இருந்து கொண்டு துரியோதனாதிகளுக்கு விடுக்கு முன்பு, அர்ஜுனன் கிருஷ்ணனை அழைத்து கிருஷ்ணா, சண்டை நல்லதா சமாதானம் நல்லதா? என்று கேட்டான்.

அதற்குக் கிருஷ்ணன்:- இப்போதைக்கு சமாதானம் நல்லது. அதனாலே சமாதானம் வேண்டி ஹஸ்தினாபுரத்திற்குப் புறப்படப் போகிறேன் என்றாராம்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s