-உ.வே.சாமிநாதையர்

முதல் பாகம்
22. ரங்கசாமி பிள்ளையைத் திருவாவடுதுறை
மடத்திற்கு வரச் செய்தது
ரங்கசாமி பிள்ளையின் இயல்பு
அக்காலத்தில், மதுரையிலிருந்து தஞ்சாவூருக்குப் பிரின்ஸிபல் ஸதர்மீனாக மாற்றப்பட்டு ரங்கசாமி பிள்ளை யென்பவர் வந்திருந்தார். அவர் மிக்க பரிசுத்தர். யாரையும் சென்று அவர் பார்ப்பதில்லை. அவர் வீட்டிற்கும் யாரும் போவதில்லை. அவரிடம் பழகுவதில் எல்லோருக்கும் பயம் இருந்தது. அவ்வாறு இருந்து வேலை பார்ப்பது தான் ஒழுங்கென்பது அவருடைய கருத்து. ஆனாலும், தெய்வ பக்தியும் தமிழ்ப் பாஷையிற் பயிற்சியும் உள்ளவர்.
அம்பலவாண தேசிகர் ரங்கசாமி பிள்ளையை வருவிக்க விரும்பியது
அவர் தஞ்சாவூரில் இருக்கையில் தை மாதக் குருபூஜைக்குத் திருமுகம் அவருக்கு அனுப்பலாமா வென்று திருவாவடுதுறை அம்பலவாண தேசிகர் யோசித்து விசாரிக்கையில், அங்கே வந்திருந்த சில சைவப் பிரபுக்கள், “அவர் முன்பிருந்தவர்களைப் போன்றவரல்லர். சற்றுக் கடுமையுள்ளவர். அவர் எந்த இடத்திற்கும் போவதில்லை. அவருக்கு அனுப்புவதிற் பயனே இல்லை. அவர் எங்கேயாவது வந்திருக்கிறதாக ஸந்நிதானம் கேட்டதுண்டா? அவரைப் பார்க்கவெண்ணிச் சென்றவர்கள் பாராமலே வந்து விட்டார்கள்” என்று சொன்னார்கள். அம்பலவாண தேசிகர் அதனைக் கேட்டு, “எவ்வாறேனும் அவரை வரவழைக்க வேண்டும்” என்று நினைத்தார்.
‘முன்பிருந்தவர்களெல்லோரும் வருவதுண்டே; இவர் மட்டும் வாராமல் இருக்கலாமா?’ என்று எண்ணினார். பிறர் அவரைப் பற்றிப் பல செய்திகளைச் சொல்லச் சொல்லத் தேசிகருடைய எண்ணம் அதில் வலியுற்றதேயன்றிக் குறையவில்லை. ‘அவரை அழைத்துவரத் தக்கவர்களையனுப்ப முயல வேண்டும். அந்தக் காரியத்தை முடிக்கும் ஆற்றலுடையவர்கள் யார்?’ என்று அடுத்தபடி அவருடைய மனம் யோசனையில் ஆழ்ந்தது. ‘வந்துள்ள பிரபுக்களோ அவர் வரவே மாட்டாரென்று அபசகுனம் போற் சொல்லுகிறார்கள். அவரிடத்தில் எல்லோருக்கும் அச்சம் இருக்கிறது. யாரை அனுப்பலாம்?’ என்று தினமும் எண்ணி எண்ணிக் கவலையுற்றார். அப்பொழுது சுப்பிரமணிய தேசிகர் தம் ஆசிரியருடைய திருவுள்ளம் ஏதோ ஒரு விஷயத்தைக் குறித்துக் கவலையுறுவதாக அறிந்து சென்று, “ஸந்நிதானம் எதைப்பற்றி யோசிக்கிறது?” என்று கேட்டார். அவர் கவலையின் காரணத்தைக் கூறினார்.
சுப்: இது தானா பெரிய விஷயம்! யாராயிருந்தாலென்ன? நமச்சிவாய மூர்த்தியின் திவ்யப் பிரசாதத்தை விரும்பாதவர்களும் இருக்கிறார்களா? இந்தப் பிரபுக்களெல்லாம் அவரைப் பார்க்கவும் பேசவும் முடியா விட்டால் ஒருவராலும் அது முடியாதென்று நினைத்து விடுவது சரியா!
அம்பல: அப்படி இல்லை. அவர் வேறு எந்த இடத்திற்கும் போவதில்லையாமே.
சுப்: இருக்கட்டும். அதற்கேற்றவர்கள் நம்மிடத்தில் இருக்கிறார்கள். அவர்களைக் கொண்டு காரியத்தை முடித்துக் கொள்ளலாம்.
அம்பல: அப்படிப்பட்ட ஒருவரும் நம்மிடத்தில் இருப்பதாகத் தெரியவில்லையே. பெரிய பிரபுக்களே போவதற்கு நடுங்கும்பொழுது யார் அவரைப்போய்க் காண்பார்கள்?
சுப்: இந்தப் பிரபுக்களால் ஆகாத காரியங்களை அடியேன் குறிப்பிட்டவர்கள் செய்து விடுவார்கள்.
அம்பல: யார் அவர்?
சுப்: நம் ஆதீன மகா வித்துவான் பிள்ளையவர்களை அனுப்பினால் ரங்கசாமி பிள்ளை அவசியம் தரிசனத்திற்கு வருவார். இவர்களை அறியாதவர்களும் மதியாதவர்களும் இல்லை.
அம்பல: இவர் பரம ஸாதுவாய் இருக்கிறாரே! இவரைக் கண்டால் அந்த அதிகாரி மதிப்பாரா? மதிப்பாரென்று எனக்குத் தோற்றவில்லை.
சுப்: அப்படி நினைக்கக் கூடாது. இவர்களை மதியாதவர் இந்தத் தமிழ்நாட்டில் எங்கும் இல்லை. அந்த ரங்கசாமி பிள்ளையல்ல; அவருக்குமேல் எவ்வளவு பெரியவராயிருந்தாலும் இவர்களை அசட்டை செய்யார். ஸந்நிதானம் அதைப் பற்றி எள்ளளவும் கவலைப்பட வேண்டாம்.
அம்பலவாண தேசிகருக்கு அந்தப் பிரபுக்கள் சொன்னவை நெஞ்சில் ஊன்றிப் போயிருந்தமையின் சுப்பிரமணிய தேசிகருடைய வார்த்தைகள் அவருக்கு முழு நம்பிக்கை கொடுக்கவில்லை. ‘ஆனாலும் பார்ப்போம்’ என்று எண்ணி, “அவ்வாறே செய்க” எனக் கட்டளையிட்டார்.
தஞ்சாவூர் சென்றது
உடனே சுப்பிரமணிய தேசிகர் பிள்ளையவர்களை அழைத்து தஞ்சாவூருக்குச் சென்று எப்படியாவது ரங்கசாமி பிள்ளையைக் குருபூஜா தரிசனத்திற்கு அழைத்துவர வேண்டுமென்று,ம் அவ்வாறு செய்தால் மஹாஸந்நிதானத்தின் திருவுளத்திற்கு உவப்பாயிருக்குமென்றும் சொல்லிப் பிரயாணத்திற்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்வித்து அனுப்பினார்.
இவர் அவ்வாறே தஞ்சைக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே இவருக்குப் பழக்கமானவராகிய இலக்கணம் *1 இராமசாமி பிள்ளை யென்பவரொருவர் இருந்தார். அவர் இவருடைய மாணவர்களுள் ஒருவர்; திருவாவடுதுறைக்கு அடிக்கடி வந்து தமக்கு நூல்களிலுள்ள ஐயங்களைத் தீர்த்துக்கொண்டு செல்வார். அவர் தஞ்சாவூரிலுள்ளவர்களால் நன்கு மதிக்கப்பெற்றவர். அவரைக் கண்டு அவர் மூலமாக எவரையேனும் பார்த்துத் தம்முடைய காரியத்தை முடித்துக் கொள்ளலாமென்று இவர் நினைந்தார். ஆதலினால், வேறு பலர் அவ்வூரிற் பழக்கமுள்ளவர்களாயிருந்தும் அவர்கள் வீட்டிற்குச் செல்லாமல் இராமசாமி பிள்ளை வீட்டிற்குச் சென்று தங்கினார் அப்பொழுது அவர் வீட்டில் இல்லை. சிறிது நேரங் கழித்தபின் அவர் வந்தார். தம் வீட்டில் இவரைக் கண்டவுடன் வியப்புற்று, “என்ன மாதவஞ் செய்ததிச் சிறுகுடில்” என்று கூறி க்ஷேம சமாசாரங்களை விசாரித்துவிட்டு உபசாரங்கள் செய்து வேண்டிய பொருள்களை உதவி உடன் வந்த தவசிப் பிள்ளைகளைக் கொண்டு விருந்தமைக்கச் செய்தனர். இவர் ஆகாரம் செய்து விட்டு நெடுநேரம் பேசிக்கொண்டேயிருந்து சயனித்துக் கொண்டார்.
விடியற்காலையில் எழுந்து தனியே இருவரும் வெளியில் உலாவச் சென்றார்கள். அப்பொழுது இவர் இராமசாமி பிள்ளையை நோக்கி, “இந்த ஊருக்குப் புதியவராக வந்திருக்கும் பிரின்ஸிபல் ஸதர்மீனவர்களை திருவாவடுதுறைக் குருபூஜா தரிசனத்திற்காக அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன். யார் மூலமாக முயன்றால் இது கைகூடும்? எப்படியாவது இக்காரியத்தை நிறைவேற்றித் தரவேண்டும்” என்றனர். அவர், “ரங்கசாமி பிள்ளையவர்கள் யாரையுமே பார்க்கிறதில்லை. எவ்விடத்திற்குமே செல்லுகிறதில்லை. ஆனாலும் நான் மட்டும் அவர்களுடைய ஓய்வு நேரத்திற் சென்று திருவிளையாடல், பெரிய புராணம் முதலியவற்றைப் படித்துக்காட்டி வருவதுண்டு. தமிழிலும் தமிழ் வித்துவான்களிடத்திலும் பிரீதியுடையவரே. தாங்களே வந்திருக்கும்போது இக்காரியம் நிறைவேறுவதற்கு என்ன தடை இருக்கின்றது? அடியேன் முந்திச் சென்று அவரிடத்தில் தங்களுடைய நல்வரவைத் தெரிவித்துவிட்டு வருவேன். அடியேன் வரமுடியா விட்டாற் சொல்லியனுப்புவேன். அந்தப்படி வர வேண்டும்” என்று சொல்லிவிட்டுத் தாம் மட்டும் அங்கே சென்றார். இவர், தேடிப்போன மருந்துக் கொடி காலில் அகப்பட்டது போலக் காரியம் முடிவதற்கு ஏற்றவரிடமே வந்து சேர்ந்தோமே. வேறொருவரிடத்தும் செல்லாதிருந்தது நன்மையாய்விட்டது’ என்று காலவிசேடத்தை எண்ணி மகிழ்ந்தார்.
இராமசாமி பிள்ளை சென்று ரங்கசாமி பிள்ளையைக் கண்டார். அவர் வழக்கம்போலவே கையிற் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு பாடங்கேட்கத் தொடங்கினார்.
இராம: ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லப்போகிறேன். அதற்கு அவகாசம் கொடுக்க வேண்டும்.
ரங்க: சொல்லலாமே.
இராம: இக்காலத்துக் கம்பரென்று எல்லோராலும் கொண்டாடப்படும் திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களைப் பற்றித் தாங்கள் கேட்டிருக்கலாமே. கம்பர் செய்த செய்யுள் பதினாயிரமே. பிள்ளையவர்கள் இதற்குள் செய்திருப்பன எத்தனையோ பதினாயிரம்; இனி எவ்வளவு செய்வார்களோ? அளவிட முடியாது; நிமிஷகவி; சிவபெருமான் திருவருளைப் பெற்றவர்கள்; ஸரஸ்வதீதேவி அவர்களுடைய நாவிற் குடிகொண்டிருக்கிறாள். எத்தனையோ பேர்களுக்குக் கைம்மாறு கருதாமற் பாடஞ்சொல்லி அவர்களுக்கு வேண்டிய செளகரியங்களைச் செய்வித்து முன்னுக்குக் கொணர்ந்திருக்கிறார்கள், அவர்களைப் போன்றவர்களை நான் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. நூல்களில் நெடுநாளாக எனக்கு இருந்த பல சந்தேகங்கள் அவர்களாலேதான் தீர்ந்தன. இப்போது அவர்கள் திருவாவடுதுறை மடத்தில் ஆதீன மகாவித்துவானாக இருந்து பலருக்குப் பாடஞ் சொல்லிக்கொண்டு விளங்குகிறார்கள்.
ரங்க: நானும் அவர்களைப்பற்றித் தக்கவர்களாற் கேட்டிருக்கிறேன். பார்க்க வேண்டுமென்ற விருப்பம் எனக்கு மிகுதியாக உண்டு. இந்த உத்தியோக நிர்ப்பந்தத்தால் யாரையும் பார்க்கக் கூடவில்லை; எங்கும் போகக்கூடவில்லை. நான் என்ன செய்வேன்!
இராம: அவர்கள் நேற்று பிற்பகலில் இவ்வூருக்கு வந்து என்னுடைய வீட்டில் தங்கியிருக்கிறார்கள். அவர்களுக்குப் பழக்கமுள்ளவர்கள் எத்தனையோ பேர்கள் இந்த ஊரில் இருந்தும் எனது வீட்டிற்கு வந்தது என்னுடைய பாக்கியமே. அவர்களுடன் நான் தனியே பேசிக்கொண்டிருந்தபொழுது, தங்களைப் பற்றி விசாரித்ததோடு தங்களைப் பார்க்க வேண்டுமென்றும் குறிப்பித்தார்கள். அவர்களிடத்தில் படித்த அநேகர் பெரிய உத்தியோகங்களில் இருக்கின்றனர். மாயூரம் முன்ஸீப் வேதநாயகம் பிள்ளையைத் தங்களுக்குத் தெரிந்திருக்கலாமே. அவரும் அவர்களுடைய மாணாக்கரே. இன்னும் அவர்களிடத்தில் ஒரு விசேஷம் இருக்கிறது. சிலகாலம் அவர்களிடத்தில் படித்தாலே பல வருஷங்கள் படித்து அறிய வேண்டியவற்றை அறிந்து கொள்ளலாம். அதனை நான் என் சொந்த அனுபவத்தில் அறிந்திருக்கிறேன். அப்படிப்பட்ட பெரியவர்கள் தங்களைப் பார்க்க விரும்புவது தங்களுடைய புண்ணியமே.
ரங்க: அவர்கள் தங்களுடைய வீட்டில் தானே வந்திருக்கிறார்கள்! நான் அங்கே வந்து பார்க்கலாமா? எப்பொழுது பார்க்கலாம்?
இராம: அவ்வாறு செய்தால் அவர்களுக்கு மிக்க வருத்தமாகவிருக்கும். அவர்கள் தங்கள் கௌரவத்தை நன்கு அறிந்தவர்களாதலால் என்னைக் கோபித்துக் கொள்வார்கள். தாங்கள் பார்க்கலாமென்று சொன்னால் நான் போய் அழைத்து வருகிறேன்; அல்லது தங்கள் மனிதர்களையாவது அனுப்பலாம்.
ரங்க: அப்படிச் செய்வது மரியாதையாகத் தோற்றவில்லை. நானே தான் போய்த் தரிசிக்க வேண்டும்.
இராமசாமி பிள்ளை, “அது தாங்கள் இதுவரையில் வைத்துக் கொள்ளாத வழக்கமாதலால் அவ்விதம் செய்ய வேண்டாம். நானே போய் வருகிறேன்” என்று சொல்லிப் புறப்பட்டார். ரங்கசாமி பிள்ளை தம்முடைய வண்டியிலாவது அவர்களை அழைத்து வரலாமேயென்று தமது வண்டியை அனுப்பினார். அதில் ஏறிக் கொண்டு இராமசாமி பிள்ளை தம் வீட்டிற்குச் சென்றார்.
ரங்கசாமி பிள்ளையைக் கண்டது
இராமசாமி பிள்ளை போன காரியத்தை அனுகூலமாக முடித்துக்கொண்டு வர வேண்டுமென்று பிள்ளையவர்கள் தம்முடைய இஷ்ட தெய்வத்தைப் பிரார்த்தித்து அவர் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இராமசாமி பிள்ளையைக் கண்டவுடன், ”காயோ? பழமோ?” என்றார். இராமசாமி பிள்ளை, ”பழந்தான்” என்று சொல்லி, “அவர் தங்களை இயல்பாகவே யறிந்ருக்கிறார்; தாமே இங்கு வருவதாகச் சொன்னார். அடியேன் தான் அதைத் தடுத்துத் தங்களை அழைத்து வருவதாகச் சொல்லி வந்தேன். இதோ அவர் வண்டி வந்திருக்கிறது. புறப்படலாம்” என்றார். இவர் மகிழ்ந்து அவ்வாறே புறப்பட்டுச் சென்றார். போகும்போது இராமசாமி பிள்ளை இவரைப் பார்த்து, “அவர் தங்களிடத்தில் மிகப் பிரீதியாகவே இருக்கிறார். அவருடைய அன்பை அதிகப்படுத்துவதற்குத் தங்களுடைய கவித்வம் வெளிப்பட வேண்டும். எந்தச் சமயத்தில் நான் எதைச் சொல்வேனோ அதற்குத் தாங்கள் சித்தமாக இருக்க வேண்டும்” என்று குறிப்பித்து வைத்தார்.
இவருடைய வரவை எதிர்பார்த்துக்கொண்டு வீட்டின் முன்புறத்தில் நின்ற ரங்கசாமி பிள்ளை இவரைக் கண்டவுடன் அஞ்சலி செய்து உள்ளே அழைத்துச் சென்று தக்க ஆ;னத்தில் இருத்தி, புஷ்பமாலை சூட்டி, சிறந்த பழவர்க்கங்களை முன்வைத்து வந்தனம் செய்தார். செய்து, ”ஐயா, பெரிய அரசர்களெல்லாம் மதித்துப் பாராட்டுதற்குரிய பெரும்புலமை வாய்ந்த கவிஞர் பெருமானாகிய தாங்கள் எளியேனை ஒரு பொருட்படுத்தி இந்த வீட்டிற்கு எழுந்தருளியதற்கு அடியேன் பழம்பிறப்பில் என்ன புண்ணியஞ் செய்தேனோ தெரியவில்லை. தங்களுடைய வரவையறிந்து தாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து தரிசிக்க எண்ணிய அடியேனை இவர்கள் தடுத்துவிட்டார்கள். அந்தக் குற்றத்தைப் பொறுத்தருள வேண்டும்” என்றார்.
அப்பொழுது இராமசாமி பிள்ளை இக்கவிநாயகருடைய பெருமையையும் அன்புடைமையையும் பின்னும் சொல்லத் தொடங்கிப் பலவகைச் செயல்களை எடுத்துரைத்தார். பின்பு, ”இவர்களால் பாடப்பெற்ற பாக்கியசாலிகள் பலர்; அந்த விசேடத்தால் அவர்களிற் சிலர் உயர்வடைந்திருக்கிறார்கள். இவர்கள் எந்தச் சமயத்தில் எப்படிக் கேட்டுக் கொண்டாலும் பாடுவார்கள். இப்பொழுது தங்கள் விஷயமாக ஒரு செய்யுள் சொல்லும்படி விண்ணப்பித்துக்கொண்டாலும் உடனே சொல்லிவிடுவார்கள்” என்றார்.
ரங்க: அவர்களுடைய திருவாக்கினால் அடியேனையா பாட வேண்டும்? வேறு எந்த விஷயத்தைக் குறித்தாவது பாடலாமே. பாண்டிநாட்டைச் சிறப்பித்து ஒரு செய்யுள் சொன்னால் போதும்.
இராமசாமி பிள்ளை, ” தங்களையும் பாண்டி நாட்டையும் இணைத்துப் பாடினால் நம் இருவருடைய விருப்பமும் பூர்த்தியாகும்” என்று சொல்லிவிட்டு, ”எளியேங்கள் விண்ணப்பத்திற்கு இணங்கிப் பாண்டி நாட்டின் சிறப்பும் இவர்கள் சிறப்பும் அமையும்படி ஒரு செய்யுள் இப்பொழுது பாடியருள வேண்டும்” என்று மிக்க பயபக்தியோடு இவரை நோக்கிக் கேட்டுக்கொண்டார்.
அப்பொழுது தான் இக்கவிஞர் பிரானுக்கு இராமசாமி பிள்ளை எந்தச் சமயத்தில் எது சொன்னாலும் அதனைச் செய்தற்குச் சித்தமாக இருக்க வேண்டுமென்று சொன்னதன் கருத்து விளங்கியது. இராமசாமி பிள்ளை கேட்டுக்கொண்டவுடனே தாமதியாமல் இவர் பின்வரும் செய்யுளைச் சொன்னார் :
விருத்தம் “பாமினா ளோடு பூமினாள் விளங்கும் பாக்கியம் படைத்தது நெஞ்சில் தோமிலா வடியார்க் கருள்புரி யுமையாள் சுந்தர நாயகன் கந்தன் தாமினா தகற்றி யரசுசெய் பெருமை தாங்கிய திணையிலா வரங்க சாமியாம் நீதி பதிமுறை நிறுத்தத் தழைத்தது பாண்டிநன் னாடு.''
அதனைக் கேட்ட இராமசாமி பிள்ளைக்கே வியப்பு மிக்கது. அதனை இரண்டாமுறையும் சொல்லும்படி விண்ணப்பித்துக் கொண்டார். இவர் அவ்வாறே சொன்னார். ரங்கசாமி பிள்ளை ஸ்தம்பித்து ஓவியம் போல் நின்றுவிட்டார்; மன உருக்கத்தால் அவர் கண்களிலிருந்து ஆனந்தபாஷ்பம் உண்டாயிற்று; சற்றுநேரம் வியப்பில் மூழ்கியவராய்ப் பேச இயலாமல் நின்றார். பின்பு, “ஒன்றுக்கும் பற்றாத சிறியேனைப் பொருட்படுத்திப் பழக்கமில்லாதவனாக இருந்தும் இவ்வளவு பாராட்டிய தங்கள் பெருங்கருணைக்கு அடியேன் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? எப்பொழுதும் தங்களை நினைந்து கொண்டேயிருப்பதுதான் என்னுடைய கடமையாகும்” என்று சொல்லிக்கொண்டே இருக்கும்பொழுது, “ஸ்நானத்திற்கும் பூசைக்கும் நேரமாய்விட்டது” என்று இராமசாமி பிள்ளை சொன்னார்.
ரங்கசாமி பிள்ளை உடனே வண்டியில் இவர்களை ஏறச் செய்துவிட்டு இராமசாமி பிள்ளையைத் தனியே அழைத்து, ”அவர்களுக்கு ஆகாராதிகள் சரியாக நடக்கின்றனவா? வேண்டிய செளகரியங்கள் செய்வித்திருக்கக் கூடுமே! அவற்றை நன்றாகக் கவனிக்க வேண்டும். பரமசிவமே இங்கே எழுந்தருளியதாக நான் நம்புகிறேன். நான் அவர்களுக்கு ஏதேனும் தக்க மரியாதை செய்ய வேண்டுமென்று எண்ணுகிறேன். என்னுடைய சில மாதச் சம்பளங்களை அவர்களுக்கு அர்ப்பணம் செய்யலாமென்பது என் கருத்து. வேறு என்ன செய்யச் சொன்னாலும் செய்யக் காத்திருக்கிறேன். உங்களையன்றி எனக்கு உற்ற துணை வேறு யாருள்ளார்? அவர்களையும் என்னையும் அறிந்தவர்கள் நீங்களே” என்று கூறினார்.
இராமசாமி பிள்ளை, ”திரவியத்தில் அவர்களுக்குச் சிறிதேனும் விருப்பமில்லை. கொடுத்தாலும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனாலும் அவர்களுடைய குறிப்பையறிந்து நான் சாயங்காலம் வந்து தெரிவிக்கிறேன். அதைப்பற்றிச் சிறிதும் நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்று சொல்லிவிட்டுப் பிள்ளையவர்களோடு வீட்டிற்கு வந்தனர்.
பூசையும் போசனமும் ஆன பின்பு இராமசாமி பிள்ளை தக்க பொருளளிக்க வேண்டுமென்று ரங்கசாமி பிள்ளை எண்ணியிருப்பதாக இவரிடம் கூறினார். இவர், ”அவர் திருவாவடுதுறைக்கு வருதலொன்றே எனக்கு எல்லாம் தருதற்குச் சமானம்” என்று சொன்னார். பின்பு ரங்கசாமி பிள்ளை வீட்டிற்கு இராமசாமி பிள்ளை சென்றார். அவர் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரங்கசாமி பிள்ளை, “ஏதாவது தெரிந்ததா?” என்று கேட்டனர்.
இராம: அவர்களுக்குப் பொருளில் விருப்பமில்லை. அது விஷயத்தில் யாதொரு குறைவுமில்லை. அவர்களுக்குள்ள விருப்பம் ஒன்று தான். அதாவது அவர்களுடைய ஞானாசிரியர்கள் எழுந்தருளியிருக்கும் திருவாவடுதுறை மடத்தில் தை மாதத்தில் நிகழும் குருபூஜா விசேஷத்திற்குத் தாங்கள் வந்து சிறப்பிக்க வேண்டுமென்பதுதான். அங்ஙனம் செய்வதைக்காட்டிலும் திருப்தியளிக்கும் காரியம் அவர்களுக்கு வேறே இல்லை.
ரங்கசாமி பிள்ளை, ” அவர்களுக்கும் குருஸ்தானம் இருக்கிறதா? திருவாவடுதுறைக்கு நான் வரவேண்டுமென்று அவர்களுக்கு விருப்பமிருந்தால் அவ்வாறு செய்வதற்கு என்ன தடை இருக்கிறது? அவர்கள் இருக்கிற இடத்திற்கு நான் செல்வதில் யாதோர் அச்சமும் இல்லை. ஆனாலும் குருபூஜா காலத்தில் ஜனக் கூட்டம் அதிகமாக இருக்கக்கூடுமே! அப்போது போய் வருவதைக்காட்டிலும் சாதாரணமான காலத்திற்போய் அவர்களையும் அவர்கள் முகமாக அவர்களுடைய ஆசிரியர்களையும் தரிசித்து வரச் சித்தனாக இருக்கிறேன். தாங்களும் உடன்வர வேண்டும். இந்தச் சமாசாரத்தை அவர்களிடம் தெரிவிக்கலாம். ஆனாலும் இதனால் அவர்களுக்கு என்ன பயன்? என் விஷயத்தில் அவர்கள் செலுத்திய கருணைக்கு நான் கடனாளியாக வல்லவோ இருக்கிறேன்! அதுதான் எனக்கு வருத்தம். நான் வேண்டுமாயின் இப்பொழுதே பிள்ளையவர்களைப் பார்ப்பதற்கு உங்கள் பின்னே வருகிறேன்” என்றார்.
இராமசாமி பிள்ளை, “தாங்கள் வரவேண்டாம். அவர்களையே அழைத்து வருகிறேன்” என்று சொல்லிச் சென்று வண்டியில் பிள்ளையவர்களை அழைத்து வந்தார். ரங்கசாமி பிள்ளை மிக்க மரியாதையோடு இவரை வரவேற்று இருக்கச் செய்து பல உபசார வார்த்தைகளைச் சொல்லிப் பின்பு, “என்னுடைய கடமையை நான் செலுத்தக் கூடாதபடி இராமசாமி பிள்ளையவர்கள் தடுத்துவிட்டார்கள். ஆனாலும் தங்களுடைய கருத்தைப் பூர்த்திசெய்யக் காத்திருக்கிறேன். தங்கள் விஷயத்தில் ஏதேனும் அபசாரம் செய்திருந்தால் பொறுத்தருள வேண்டும். கிருபையிருக்க வேண்டும். மற்றப்படி நான் சொல்லியவற்றை இவர்கள் தெரிவித்திருப்பார்கள்” என்று சொன்னார்.
அப்போது பிள்ளையவர்கள், “குருபூஜா காலத்தில் தாங்கள் வர வேண்டுமென்பதில்லை. தங்களுடைய இஷ்டப்படியே சாதாரணமான காலத்தில் திருவாவடுதுறைக்கு விஜயம் செய்தாலே போதும்” என்று சொல்லி விடைபெற்றுக்கொண்டு ஜாகைக்கு வந்து திருவாவடுதுறைக்குப் புறப்பட்டார்; புறப்பட்டவர் இராமசாமி பிள்ளையைப் பார்த்து, ”தம்பிக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன் ? எப்படியாவது இவர்களை அழைத்துக்கொண்டு வரவேண்டும். வரும் சமயத்தை முன்னதாகவே தெரிவிக்க வேண்டும்” என்று சொல்ல, அவர் அவ்வாறே செய்வதாக ஒப்புக் கொண்டார்.
பின்பு திருவாவடுதுறைக்கு இவர் வந்து நிகழ்ந்த செய்திகளையும் ரங்கசாமி பிள்ளை விரைவில் வரக்கூடுமென்பதையும் சுப்பிரமணிய தேசிகரிடம் தெரிவித்தார். கேட்ட அவர் அம்பலவாண தேசிகருக்கு இதனை விண்ணப்பஞ் செய்தார். அவர், ”ரங்கசாமி பிள்ளை எப்போது வேண்டுமானாலும் வரட்டும்; குருபூஜைக்கு வரவேண்டுமென்பது இல்லை. அவர் மடத்துக்கு வந்து போவதே நமக்குக் கெளரவம். ஆனால் அவர் வந்தபிறகுதான் இது நிச்சயம்; நான் முற்றும் நம்பவில்லை” என்று கூறினர்.
ரங்கசாமி பிள்ளை மடத்திற்கு வந்து சென்றது
சிலநாள் சென்ற பின்பு விடுமுறைக்காலம் வந்தமையின், ”அந்தப் பிரபுவை அழைத்துக்கொண்டு இன்ன காலத்தில் தரிசனத்துக்கு வருகின்றேன்” என்று இராமசாமி பிள்ளையிடமிருந்து இவருக்கு ஒரு கடிதம் வந்தது. இவர் சுப்பிரமணிய தேசிகரிடம். அதைத் தெரிவிக்கவே திருவாவடுதுறையில் அவர் வரவை முன்னிட்டுத் தக்க வசதிகள் அமைக்கப்பட்டன. குறிப்பிட்ட காலத்தில் ரங்கசாமி பிள்ளை வந்தார்; பிள்ளையவர்களை முன்னிட்டுக் கொண்டு பாதகாணிக்கைகளோடும் கையுறைகளோடும் சென்று அம்பலவாண தேசிகரையும் சுப்பிரமணிய தேசிகரையும் முறையே தரிசித்தார்; அவ்விருவருடைய தோற்றத்தையும், அங்கே பலர் படித்துக் கொண்டிருப்பதையும், அன்னதானம் குறைவின்றி நடந்து வருதலையும், பிற சிறப்புக்களையும் கண்டு மகிழ்ந்தார். ”இவ்வளவு காலம் இங்கு வராமல் இருந்துவிட்டோமே!” என்ற வருத்தம் அப்பொழுது அவருக்கு உண்டாயிற்று; ஆயினும், ”இங்கே வந்ததனால் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டோம்” என்ற திருப்தியை அடைந்தார். தலைவர் கொடுக்கும் எதிர்மரியாதையொன்றும் பெறாமல் திருநீற்றுப் பிரசாதத்தை மட்டும் பெற்று, பிள்ளையவர்களிடமும் விடைபெற்றுக்கொண்டு இராமசாமி பிள்ளையுடன் தஞ்சை வந்து சேர்ந்தார்.
அப்பால் அம்பலவாண தேசிகருக்குப் பிள்ளையவர்களிடத்து மிக்க மதிப்பும் கருணையும் உண்டாயின. ”இவர் இருப்பது மடத்திற்குக் கெளரவமென்று சின்னப் பண்டாரம் சொன்னது சரியே. இவருக்கு என்னதான் செய்விக்கக் கூடாது!” என்று எண்ணிக் காறுபாறு முதலிய மடத்து உத்தியோகஸ்தர்கள் பலரையும் அழைத்து, ”இவருக்கு எந்தச்சமயத்தில் எது வேண்டுமாயினும் குறிப்பறிந்து கொடுக்கவேண்டும்; யாதொரு குறையுமின்றி இவரைப் பாதுகாத்து வரவேண்டும்” என்று கட்டளையிட்டார். *2
சுப்பிரமணிய தேசிகர் இவருடைய கெளரவத்தை நன்றாக அறிந்தவராதலின் அதனை அம்பலவாண தேசிகருக்கும் மடத்திலுள்ள பிறருக்கும் எப்படியாவது அறிவிக்க வேண்டுமென்னும் விருப்பமுடையவராக இருந்தார். யாரேனும் தக்க பிரபுக்கள் தரிசனத்தின் பொருட்டு மடத்திற்கு வந்தால் அவர்கள் பிள்ளையவர்களையும் பார்த்துச் செல்வது வழக்கம். அவ்வாறு பிரபுக்களெல்லாம் இவர்பால் மதிப்பு வைத்திருப்பதை அவ்வப்போது சுப்பிரமணிய தேசிகர் அம்பலவாண தேசிகருக்கு அறிவித்து வருவார். அன்றியும் வந்த பிரபுக்களும், “இத்தகைய மகாவித்துவானை ஆதரித்து வருதலும் இவர்களைக் கொண்டு மாணவர்களுக்குப் பாடம் சொல்வித்து வருதலும் மடத்திற்கு ஏற்ற தருமங்களேயாகும். இந்த வித்துவானால் மடத்தின் புகழ் மிகுதிப்படும்” என்று தலைவரிடம் சொல்லிப் போவார்கள். இவற்றாலும் அம்பலவாண தேசிகருக்குப் பிள்ளையவர்கள்பால் மதிப்பு அதிகரித்து வந்தது.
*3 பாலைவனப் பதிற்றுப்பத்தந்தாதி
அப்பால் ஒரு சமயம், வழுவூருக்கு அருகில் தென்கிழக்கிலுள்ள பாலையூரென்னும் ஸ்தலத்தில் எழுந்தருளியிருக்கிற சிவபெருமான் விஷயமாக அவ்வூர் வைத்தியலிங்க உடையாரென்னும் ஓரன்பர் கேட்டுக்கொள்ள இவரால் ஒரு பதிற்றுப்பத்தந்தாதி இயற்றப்பெற்றது. அது, ‘பாலைவனப் பதிற்றுப்பத்தந்தாதி’ என வழங்கும்.
அந்நூற் செய்யுட்களிற் சில வருமாறு:-
கலிநிலைத்துறை “சொல்லத் தக்கது நின்புகழ் அடிமையிற் றுனைந்து புல்லத் தக்கது நின்கழல் புண்ணிய மிகையால் வெல்லத் தக்கது மலந்திருப் பாலையூர் விமலா கொல்லத் தக்கது கூற்றினை நலங்குறிப் பவரே.'' (58) விருத்தம் “அடையானை யுரிபோர்த்த பெருமானை யொருமானை அங்கை யேந்தும் சடையானை வெஞ்சூலப் படையானை யுலகமெனத் தக்க யாவும் உடையானை நெடும்பாலை வனத்தானை யெழுவிடையும் ஒருங்கு சாய்த்த விடையானைப் பூசிக்கப் பெற்றவரே நற்றவர்மேன் மேலுந் தானே.'' (93)
அடிக்குறிப்பு மேற்கோள்கள்:
1. இவர் பின்பு கொழும்பு ஸர். பி.இராமநாத முதலியாருக்கு ஞானாசிரியராக விளங்கினவர்; இஃது அம்முதலியாருடைய சரித்திரத்தால் விளங்கும்.
2. இச்செய்திகள் தஞ்சை இராமசாமி பிள்ளையாலும் பிள்ளையவர்களாலும் தெரிந்தன.
3. ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு, 2339-2440.
$$$