தராசு கட்டுரைகள்- 7

-மகாகவி பாரதி

7. சுதேசமித்திரன் 31.07.1916

சில தினங்களாக நமது தராசுக் கடையில் வியாபாரம் சரியாக நடக்கவில்லை. சந்தேக நிவ்ருத்தியே நமது வியாபாரத்தின் நோக்கம். சந்தேகங்களையெல்லாம் தீர்த்து விடுவதென்றால் இது சாமான்யக் காரியமன்று. கீதையிலே பகவான் சம்சயாத்மா விநச்யதி (சந்தேகக்காரன் அழிந்து போகிறான்) என்று சொல்லுகிறார்.

எந்த முயற்சி செய்யப் போனாலும், ஆரம்பத்திலேயே பல வழிகள் தோன்றும். இந்த வழிகள் ஒன்றுக்கொன்று பொருந்தாமலிருக்கும். எந்த வழியை அனுசரிப்போமென்ற சந்தேகம் ஏற்படும். நானிருக்கும் வேதபுரத்திலே ஒரு செட்டிப் பிள்ளை கையிலே சொற்ப முதல் வைத்துக்கொண்டு எந்த வியாபாரத் துறையில் இறங்கலாமென்று சென்ற ஐந்து வருடங்களாக யோசனை செய்துகொண்டு வருகிறான். இன்னும் அவனுக்குத் தெளிவேற்படவில்லை. மணிலாக் கொட்டை வியாபாரம் தொடங்கலாமென்று நினைத்தான். ஆனால் அந்த வியாபாரம் இங்கு பெரிய பெரிய முதலாளிகளையெல்லாம் தூக்கியடித்து விட்டது. நாளுக்குநாள் விலை மாறுகிறது. இன்று ஒரு விலைபேசி முப்பது நாளில் ஆயிரம் மூட்டை அனுப்புகிறேனென்று சீமை வியாபாரியுடன் தந்தி மூலமாக ஒப்பந்தம் செய்து கொண்டோமானால், இடையிலே எதிர்பாராதபடி விலையேறிப் போகிறது. ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாமல், சீமை வியாபாரிக்குத் தண்டம் கொடுக்க நேரிடுகிறது. நாம் இதிலே புகுந்து கையிலிருக்கும் சொற்ப முதலையும் இழக்கும்படி வந்தால் என்ன செய்வோமென்று செட்டிப் பிள்ளை பயப்படலானான். கடைசியாகச் சென்ற வருஷத்தில், ஒரு சமயம், என்ன வந்தாலும் சரி, ஒரு கை பார்ப்போம். மணிலாக் கொட்டையே தொடங்குவோம் என்று யோசித்தான். சண்டையினால் கப்பல்களின் போக்கு வரவு சுருக்கமாய் விட்டது. சில கப்பல்கள் போய் வருகின்றன. இவற்றில் இடக்கூலி தலைக்குமேலே போகிறது. பெரிய முதலாளிகளே இந்த வியாபாரத்தைச் சுருக்கப்படுத்திக்கொண்டு வருகிறார்கள். ஆதலால் செட்டிப் பிள்ளை இந்த யோசனையை அடியோடு நிறுத்திவிட்டான். இப்படியே துணிமணி, பீங்கான், கண்ணாடி, வெங்காயம் முதலிய எந்த வியாபாரத்தை எடுத்தாலும் அவனுக்கு ஏதேனுமொரு தடை ஏதேனுமொரு ஆட்சேபம் வந்து கொண்டேயிருக்கிறது. வருஷம் ஐந்தாகிவிட்டது!

லாபாலாபங்களை யோசித்த பிறகுதான் ஒரு துறையில் இறங்க வேண்டும். ஆனால் வாழ்நாள் முழுதும் வெறுமே யோசனை செய்து கொண்டிருந்து காரியந் தொடங்காமலே காலத்தைக் கழிப்போர் எவ்வித இன்பத்தையுமறியாமல் மாய்ந்து போகிறார்கள். வியாபாரத்தில் மாத்திரமன்று. ஒருவன் யோக சாதனம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறான். ஹடயோகம் நல்லதா, ராஜயோகம் நல்லதா, பக்தியோகம் நல்லதா? என்ற சந்தேகமுண்டாகிறது. யோகசித்தி ஏற்பட வேண்டுமானால் குடும்பத்தாருடன் வீட்டிலிருந்து முயற்சி செய்யலாமா? அல்லது குடும்பத்திலிருந்தே விலகிப்போய் எங்கேனும் தனியிடத்திலிருந்து பாடுபட வேண்டுமா, இப்படி எத்தனையோ கேள்விகள் பிறக்கின்றன. இங்ஙனமாக மணிலாக் கொட்டை வியாபாரம் முதல் ஆத்ம ஞானம் வரை எந்தக் காரியத்திலும் ஆரம்பத்திலே திகைப்புக்களுண்டாகும். இப்படி நான்கு வழிகளைக் காட்டி எது நல்ல வழியென்று கேட்டால் நமது தராசு சரியான வழியைக் காட்டிக் கொடுக்கும். மேலும் பொதுப்படையாக எந்த ஆராய்ச்சிலும், கொள்கைப் பிரிவுகள் தோன்றிப் பல கட்சிகள் ஏற்படுவது இவ்வுலகத்தியற்கை. நமது தராசு எந்தக் கட்சி நியாயமென்பதைத் திட்டமாகக் கண்டுபிடித்துச் சொல்லும். இவ்வளவு நல்ல தராசாக இருந்தும் என்ன காரணத்தாலோ வியாபாரம் ரசமாக நடக்கவில்லை.

ஆதலால் நேற்றுத் தராசினிடம் நானே கேள்விகள் போடத் தொடங்கினேன்.

“தராசே, நம்முடைய சொந்த வியாபாரம் நன்றாக நடப்பதற்கு வழியென்ன?” என்று கேட்டேன்.

தராசு கலகலவென்று நகைத்துப் பின்வருமாறு சொல்லலாயிற்று:-

ஆஹா, காளிதாசா, நல்ல கேள்வி கேட்டாய். நீ இதை எப்போது கேட்கப் போகிறாயென்று நான் பல தினங்களாக ஆவலுடன் எதிர்பாத்திருந்தேன். உன் வசத்திலே குறுங்குறு மஹரிஷி என்னை ஒப்புவிக்கும்போது என்ன வார்த்தை சொன்னார். ஞாபகமிருக்கிறதா?

காளிதாசன்:- ஆம், தராசே, நன்றாக ஞாபகமிருக்கிறது. ‘கேளாய் காளிதாசா, தெய்வ ஆராய்ச்சி ஒன்றையே உனது வாழ்க்கையின் முதற்காரியமாக வைத்துக் கொள்ள வேண்டும். லௌகிகத் தொழிலொன்று சேர்ந்தால் தான் யோக சித்தி விரைவாகக் கைகூடுமாதலால், உனக்கு லௌகிகத் தொழிலாக இந்தத் தராசு வியாபாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறேன். இதன் மூலமாக உன்னுடைய இஹலோக தர்மங்கள் நேரே நிறைவேறும். உனக்கு சக்தி துணை; உன்னைச் சார்ந்த உலகத்திற்கு இந்தத் தராசு நல்ல உதவி; இவை இரண்டையுந் தவிர, மூன்றாவது காரியத்தில் புத்தி செலுத்தக்கூடாது. உனக்கு நன்மையுண்டாகும்’ என்று சொன்னார்.

தராசு:- நீ அந்தப்படி செய்து வருகிறாயா?

காளிதாசன்:- ஏதோ, என்னால் இயன்றவரை செய்து வருகிறேன்.

தராசு:- ஞாபகமில்லாமல் பேசுகிறாய், இரண்டு மாதத்திற்கு முன் ஒருமுறை பட்டு வியாபாரம் தொடங்கலாமென்று யோசனை செய்தாய். மனிதன் செல்வந்தேடுவதற்குப் பல உபாயங்கள் செய்வது நியாயந்தான். ஆனால் அவனவன் தகுதிக்குரிய வழிகளிலே செல்ல வேண்டும். ஒரு முயற்சியைச் கைகொண்டால் பிறகு வெற்றியுண்டாகும் வரை எப்போதும் அதிலேயே கண்ணும் கருத்தாகப் பாடுபட வேண்டும். பல மரங்கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்ட மாட்டான்.

காளிதாசன்:- நீ சொல்வது சரிதான். ஏதோ மறதியினால் வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும்படி நேரிட்டது. மறுபடி தராசு வியாபாரத்தையே ஒரே உறுதியுடன் நடத்த வேண்டுமென்று மனோ நிச்சயம் செய்துவிட்டேன். அதை ஓங்கச் செய்வதற்கு வழி சொல்லு.

தராசு:- இந்த வியாபாரத்தின் மஹிமையை நீயே சில சமயங்களில் மறந்து விடுகிறாய். ‘எட்டும் இரண்டும் என்ன?’ நீலப் போர்வை வாங்கலாமா, பச்சைப் போர்வை வாங்கலாமா?’ என்பவை போன்ற அற்பக் கேள்விகள் கேட்போரை சில சமயங்களில் அழைத்துக் கொண்டு வருகிறாய். இப்படி அற்ப விசாரணைக்கெல்லாம் இடங்கொடுத்தால், நமது கடையின் பெயர் கெட்டுப் போகாதா? மேலும் அறிவுத் தராசு போட்டு, உலக வாழ்க்கையின் விதிகளையும், சிரமங்களையும், நிறுத்துப் பார்ப்பதே உனது தொழிலென்பதை மறந்து, வேறு முயற்சிகளிலே சிந்தை செலுத்துகிறாய். புலி பசித்தால் புல்லைத் தின்னுமா? வயிர வியாபாரி ஒரு மாதம் நல்ல வியாபார மில்லாவிட்டால் மொச்சைக் கொட்டைச் சுண்டல் விற்கப் போவானோ? காளிதாசா, கவனத்துடன் கேள். நம்முடைய வியாபாரம் அருமையானது. இதிலே ஜயம் பெற வேண்டுமானால் சாமான்ய உபாயமெதுவும் போதாது. செய்கைக்குத் தகுந்தபடி உபாயம்; இதை மறந்து விடலாகாது. உனக்கு வேண்டியதெல்லாம் இரண்டே நெறி. தெய்வ பக்தி. பொறுமை. குறுங்குறு மஹரிஷி வாக்யத்தைத் தவற விடாதே. லௌகிகச் செய்கை நேரும்போது அதை முழுத் திறமையுடன் செய். மற்ற நேரங்களில் பராசக்தியை தியானம் செய்து கொண்டிரு. நமது வியாபரம் மேலான நிலைமைக்கு வரும்.”

காளிதாசன்:- “எப்போது?”

தராசு:- “பொறு. விரைவிலே நன்மை காண்பாய்.”

  • சுதேசமித்திரன் (31.07.1916)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s