-எஸ்.எஸ்.மகாதேவன்

21. ஆன்மாவின் பயணத்திற்கான ராஜபாட்டை
ஆண்டு 2001. ‘தமிழ் இந்தியா டுடே’யில் 11 ஆண்டுகள் பணிபுரிந்து விட்டு அவர்களிடமிருந்து விடைபெற்று வீட்டில் அமர்ந்திருந்தேன். பெங்களூர்காரர்கள் இரண்டு பேர் வந்தார்கள். அவர்களுக்கு என் முகவரி எப்படி தெரிந்தது என்பது இன்றுவரை எனக்குத் தெரியாது. ‘ராமரக்ஷா ஸ்தோத்திரம்’ என்ற சின்னஞ்சிறு புத்தகம் கொடுத்தார்கள். தேவநாகரியில் ஸ்தோத்திரமும் ஆங்கிலத்தில் அர்த்தமும் கொண்டதாக இருந்தது அந்த நூல்.
தொன்மையான ‘ராமரக்ஷா ஸ்தோத்திரம்’ கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் மிகவும் பாப்புலர்- கங்கைக் கரையோரம் நெடுக ‘ஹனுமான் சாலிசா’ பிரபலம் என்பது போல. அதைத் தமிழாக்கம் செய்துதர வேண்டினார்கள்; புறப்பட்டுப் போய்விட்டார்கள்.
மொழிபெயர்க்க உட்கார்ந்தபோதுதான், ஒரு விஷயம் கவனத்தைக் கவர்ந்தது. அதற்கு ஆங்கிலத்தில் விளக்கம் எழுதியவர் டாக்டர் சந்திரசேகர் உடுப்பா. கர்நாடகத்தின் உடுப்பியை அடுத்த சாலிகிராமா என்ற சிற்றூரைச் சேர்ந்தவர். அவ்வப்போது விவேகானந்தர் தனக்கு தியானத்தில் டிக்டேட் செய்வதாக, அந்த நூலின் அறிமுகத்தில் அவர் குறிப்பு இருந்தது. மொழிபெயர்த்து அனுப்பினேன்.
“நான் சரீரத்துடன் இருந்தபோது செய்த பணியை விட பல்லாயிரம் மடங்கு பணியை சரீரம் இல்லாமல் இருக்கும்போது செய்வேன்“”” என்று சொல்லிவிட்டு சென்றவர்தான் விவேகானந்தர். இந்த கர்நாடகா டாக்டர் பெறும் அனுபவம் அதற்கு நிரூபணமோ?



இப்படி எனக்கு தோன்றுவதற்கு ஒரு காரணம் உண்டு. 1970களின் மத்தியில் நான் ‘தியாகபூமி’ ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்தபோது சென்னைக்கு ஒரு சிறுமி வந்தாள். வயது எட்டு இருக்கும். சரியான வால். பயங்கரக் குறும்பு. ஆனால் சென்னை, சௌகார்பேட்டையில் நூற்றுக்கணக்கான ஹிந்தி பேசுவோர் கூடியிருந்த கூட்டத்தில் மேடையேறி அந்தச் சிறுமி பேசத் தொடங்கியதும், உலகத்தில் உள்ள அத்தனை சமயங்களின் கிரந்தங்களுடைய மேற்கோள்களும் சரம் சரமாக அவளிடமிருந்து பாய்ந்து வந்தன. சொற்பொழிவு ஹிந்தியில். சில நாட்கள் சென்னையில் இருந்து பல பகுதிகளில் ஆன்மிக அருவி பெருகச் செய்தாள்.
ஒருநாள் அவளிடம் பேச்சுக் கொடுத்தேன். ஆறு வயது முதல் இதுபோல சமயச் சொற்பொழிவு நிகழ்த்துவதாகவும், மேடை ஏறியதும் சுவாமி விவேகானந்தர் தனது அருள் சக்தியை தனக்குள் நிறைத்து விடுவதாகவும் சொன்னாள். மத்திய பிரதேசத்தின் தொலைதூர ‘டிகம்கர்’ என்ற மலைவாசி மக்கள் பகுதியைச் சேர்ந்த அந்தச் சிறுமி வேறு யாருமில்லை, பின்னாளில் மத்தியப் பிரதேச முதல்வரான உமாபாரதி தான்; மத்திய அமைச்சராகவும் இருந்து கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தை முன்னெடுத்த அதே உமாபாரதி தான்.
முறையாக, நல்லபடியாகப் படித்து வாழ்க்கையில் உயர வேண்டும் என்று, அப்போது சென்னையில் இருந்த விவேகானந்த கேந்திரா நிறுவனர் ஏகநாத் ரானடே அந்த சிறுமிக்கு அறிவுரை கூறிவிட்டு சென்றார்.
அதற்கெல்லாம் முன்னதாக இன்னொரு சம்பவமும் இங்கே நினைவு கூரத்தக்கது. மராட்டி மொழி சிறிதளவு கற்றுக்கொள்ள ஆசைப்பட்டு, மராட்டி நாளிதழ் செய்தித் தலைப்புகளை எழுத்துக்கூட்டிப் படிக்க ஆரம்பித்தேன். ஹிந்தி போல மராட்டிக்கும் தேவநாகரி லிபிதான். அதனால் எழுத்தைக் கற்றுக்கொள்ளும் சிரமமில்லை. ஓரளவு மராட்டி புரியத் தொடங்கியதும் ஒரு மராட்டி நாளிதழின் ஞாயிற்றுக்கிழமை இணைப்பில் வெளியாகியிருந்த மாபெரும் சமுதாய சீர்திருத்தவாதி ஜோதிபா புலே வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தை தமிழாக்க முடிந்தது.
அந்தக் காலகட்டத்தில் கோபால் என்ற பொறியாளர் பெற்ற ஒரு அமானுஷ்ய அனுபவம் பற்றி அந்த மராட்டி நாளிதழில் தொடர்ந்து செய்தி வந்து கொண்டிருந்தது. தன்னை பல்வேறு பெரிய பெரிய விபத்துக்களில் இருந்து யாரோ காப்பாற்றி வருகிறார்கள் என்று அவர் கூறியிருந்தார். அது, ஒன்பது பிறவிகளுக்கு முன் தன் மனைவியாய் இருந்த அவந்தி என்று தனக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்த செய்தியை அந்தத் தொடரில் படித்தேன். தற்செயலாகக் கண்ணில் பட்ட அந்தத் தொடர், தற்செயலாக கவனத்தில் இருந்தும் விலகியது.
மனித அனுபவ வரம்பிற்கு அப்பாற்பட்ட தளங்களில் இருந்தும் தகவல் புறப்படும் சாத்தியம் இருப்பது புரிந்தது. ஏதோ அனுக்கிரஹத்தால் அந்தத் தளங்களுடன் தொடர்பு ஏற்படும் சம்பவங்கள் ஒருபுறம். பதஞ்சலி முனிவர் வழங்கிய யோக சூத்திரத்தின் படி, முறையான யோகம் சார்ந்த வாழ்க்கை வாழ்ந்தால் அத்தகைய அமானுஷ்யமான தொடர்பு உள்பட பல சித்திகளை மானுடன் அடையலாம் என்பது உறுதி. மானுட வாழ்வின் முடிவாய் விளங்குவது இங்கு இறைவன் திருவடி நிழல். அதை அல்லாமல் சித்திகளை ஆன்மிக சாதகர்களான மகான்கள் நாடுவதில்லை.
சுயநலமே இல்லாமல் மற்றவர்களின் துயர் துடைக்கும் சேவையில் தொடர்ந்து ஈடுபட்டால் சித்த சுத்தி வாய்க்கும் என்பார் காஞ்சி மஹாசுவாமிகள். சித்த சுத்தியால் தெய்வ தரிசனம் கைகூடும் என்றும் மகான்கள் வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். அனைவருக்குமான ஆன்மிக ராஜபாட்டை இதுதான். அதில் பயணித்துக் கொண்டிருப்பவர்கள் அவரவர் கர்மவினைப் பலனுக்கு ஏற்ப உயரங்களை அடைகிறார்கள் என்பது அனுபவபூர்வமான ஹிந்துத்துவ ஞானம்.
$$$