-மகாகவி பாரதி

2. சுதேச மித்திரன் 6.12.1915
ஒரு கிராமத்திலே ஒரு ஏழைக் குடியானவன் சுரைக்காய்த் தோட்டம் போட்டிருந்தான். ஒரு நாள் பொழுது விடியுமுன்பு இருட்டிலே, ஒரு திருடன் அந்தத் தோட்டத்துக்குள்ளே புகுந்து சுரைக்காய் திருடிக் கொண்டிருக்கையிலே, குடியானவன் வந்து விட்டான். திருடனுக்கு பயமேற்பட்டது. ஆனாலும் குடியானவன் புத்தி நுட்பமில்லாதவனாக இருக்கலாமென்று நினைத்து அவனை எளிதாக ஏமாற்றிவிடக் கருதி திருடன் ஒரு யுக்தி யெடுத்தான்.
இதற்குள்ளே குடியானவன்:- “யாரடா அங்கே?” என்று கூவினான். திருடன், கம்பீரமான குரலிலே- “ஆஹா! பக்தா, இது பூலோகமா? மானிடர் நீங்கள்தானா?” என்றான்.
தோட்டக்காரனும்:- “ஓஹோ, இவர் யாரோ, பெரியவர். தேவலோகத்திலிருந்து இப்போதுதான் நமது சுரைத் தோட்டத்தில் இறங்கியிருக்கிறார் போலும்” என்று நினைத்து, “ஆம். ஸ்வாமி. இதுதான் பூலோகம். நாங்கள் மானிட ஜாதி” என்று சொல்லித் திருடனுக்குப் பல நமஸ்காரங்கள் செய்து ஏழெட்டுச் சுரைக்காய்களையும் நைவேத்தியமாகக் கொடுத்தனுப்பினான். திருடன் அவற்றை வாங்கிக் கொண்டு வீடு போய்ச் சேர்ந்தான்.
மேற் கூறிய கதை எனக்கு ஒரு நண்பர் நேற்று தான் சொல்லிக் காட்டினார். அது இன்று காலையில் மிகவும் பிரயோஜனப்பட்டது. போன முறை ஒரு தொப்பைச் சாமியார் நம்முடைய கடை கட்டப் போகிற சமயத்தில் ஒரு விஷயம் கேட்க வந்ததாகச் சொல்லியிருந்தேன். ஞாபகம் இருக்கிறதா! அவர் மறுபடி இன்று காலையில் வந்தார்.
“பெற்றோர், உற்றோர், மனைவி மக்கள், பொன், வீடு, காணி முதலிய தீய விஷயாதிகளிலே கட்டுண்டு, பிறவிப் பிணிக்கு மருந்து தேடாமல் உழலும் பாமருக்குச் சார்பாக நீரும்..” என்று ஏதோ நீளமாகச் சொல்லத் தொடங்கினார். நான் மேற்படி சுரைத் தோட்டத்துக் கதையைச் சொல்லிக் காட்டினேன். சாமியார் புன்சிரிப்புடன் எழுந்து போய்விட்டார்.
நானிருக்கும் தெருவுக்குப் பக்கத்துத் தெருவிலே ஒரு சாஸ்திரியார் இருக்கிறார். நல்ல வைதீகர்; அத்தியயனத்திலே புலி; கிராத்தம் பண்ணி வைப்பதிலே ஸாட்சாத் வியாழக்கிழமைக்கு (பிருஹஸ்பதி பகவானுக்கு) நிகரானவர். அவர் வீட்டிலே அவரொரு கட்சி, இளையாள் ஒரு கட்சி, மூத்தாள் பிள்ளை முத்துசாமியும், அவன் மனைவியும் ஒரு கட்சி ஆக மூன்று கட்சிகளாக இருந்து பல வருடங்களாக இடைவிடாமல் சண்டை நடந்து வருகிறது. அவர் இன்று காலை என்னிடம் வந்து, என்ன வாசித்துக் கொண்டிருக்கிறீர்? என்று கேட்டார்.
சுதேசமித்திரன் பத்திரிகை என்றேன்.
இந்தச் சண்டை எப்போது முடியும்? என்று கேட்டார். நான் ஏதோ ஞாபகத் வறாக, நீங்கள் வேறு குடும்பம், உங்கள் பிள்ளை முத்துசாமி வேறு குடும்பமாகக் குடியிருக்க வேண்டும். உங்கள் பத்தினியும், அவன் மனைவியும் சந்திக்க இடமில்லாதபடி ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போது ஒரு வேளை முடியலாம் என்றேன். சரி! நான் போய்வருகிறேன் என்று கோபத்துடன் எழுந்து போய்விட்டார். அவர் கேட்டது ஐரோப்பா புயத்தத்தைப் பற்றியது என்ற விஷயம், அவர் எழுந்து போன பிறகு எனக்குத் தோன்றியது. நாளை அவரைக் கூப்பிட்ட க்ஷமை கேட்க வேண்டும்.
- சுதேசமித்திரன் (6.12.1915)
$$$