-உ.வே.சாமிநாதையர்

முதல் பாகம்
19. மாயூர வாஸம்
மாயூர நகரத்தை இருப்பிடமாகக் கொண்டது
பின்பு, கலியாணசோழபுரம் சிதம்பரம் பிள்ளை என்னும் செல்வரும் அவர் சகோதரர்களும் இவரை அழைத்துச் சென்று தம் ஊரில் சில நாள் இருக்கச்செய்து உபசரித்து அளவளாவி மகிழ்ந்து வந்தார்கள். அதன் பிறகு மாயூரத்திலிருந்த சில பிரபுக்களின் வேண்டுகோளால் அங்கே சென்று இருந்தார். அப்பொழுது அங்கே இருந்தவர்களும் அயலூர்களில் இருந்த பிரபுக்களும் இத்தகைய அரிய வித்துவானைத் தங்கள் ஊருக்கு அருகிலேயே இருக்கச் செய்ய வேண்டுமென்று எண்ணி இருப்பதற்குரிய விடுதி முதலியவைகளை அமைத்து இவரை மாயூரத்திலேயே இருக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். ‘அடிக்கடி திருவாவடுதுறை சென்று வரலாம்’ என்னும் எண்ணம் இருந்தமையால் இவருக்கும் அது சம்மதமாயிற்று. பிரபுக்களில் தக்கவர்களாகிய *1 12-பேர்கள் மாதம் மாதம் ஒவ்வொருவராகப் பப்பத்து ரூபாய் இவருடைய செலவுக்குக் கொடுத்து வருவதென்று தீர்மானித்தார்கள்.
*2 இவர் மாயூரத்தில் இருக்கத் தொடங்கியது ரௌத்திரி வருஷம் (1860) ஆகும்.
ஒருசமயம் பல்லவராயப்பட்டில் இருந்த சடையப்பபிள்ளை யென்னும் பிரபு இவருக்கு நெல் அனுப்பினார். அதனை உபயோகித்து வருகையில் அசெளக்கியம் உண்டாயிற்று. அது நெல்லால் வந்ததென்பதனைத் தெரிந்து இவர், “தில்லை நாயகன் பித்தனென்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அந்தச் செய்தி உண்மை யென்பதை இப்பொழுது அறிந்து கொண்டேன்” என்ற கருத்தமைந்த செய்யுளொன்றை அவருக்கு எழுதியனுப்பினார். அதனைக்கண்ட அவர், ‘நாம் அனுப்பிய தில்லைநாயகனென்னும் நெல் பித்தத்தை உண்டுபண்ணுகின்றதாயிற்றே; நாம் யோசியாமல் அனுப்பிவிட்டோமே!’ என்று நினைந்து வேறு பழைய ஈர்க்குச் சம்பா நெல்லை அனுப்பிப் புதியதாகிய அதனை வருவித்துக் கொண்டார்.
வேதநாயகம் பிள்ளை மாயூரம் வந்தது
சீகாழியில் முன்பாக இருந்த வேதநாயகம் பிள்ளை 1858-ஆம் வருஷத்தில் மாயூரத்திற்கு மாற்றப்பட்டு வந்து சேர்ந்தார். அவர் மாயூரம் வந்ததனாலும் பிள்ளையவர்களுக்குச் சந்தோஷம் உண்டாயிற்று. வேதநாயகம் பிள்ளையும் இவர் மாயூரத்தை இருப்பிடமாகக் கொண்டதையறிந்து அடிக்கடி பழகி வரலாமென்ற எண்ணத்தினால் அளவில்லாத மகிழ்ச்சியுற்றார். அப்பொழுது பஞ்சமுண்டாயிற்று. பரதேசி ஜனங்களும் ஏழை ஜனங்களும் பசியினால் துன்புறுவதையறிந்து வேதநாயகம் பிள்ளை ஒரு கொட்டகை போடுவித்து அதில் அவர்களுக்கு உணவளித்து வருமாறு செய்துவந்தார். இந்த அறச் செயலால் அவருக்கு மிக்க புகழ் உண்டாயிற்று. ஒருமுறை பிள்ளையவர்கள் அவ்விடத்திற்குச் சென்றார். அப்பொழுது உடனிருந்தவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க வேதநாயகம் பிள்ளையைச் சிறப்பித்து,
“வாயுதவு மினியபத நுகர்ந்தறிவு பெருத்திடலான் வானந் தாங்கா
தாயுதவு கருணையினுங் கையுதவு மினியபத மவாவி யார்ந்து
வேயுதவு முடல்பெருத்த லான்மண்ணுந் தாங்காது மெலியா நிற்கும்
மீயுதவு புகழ்வேத நாயகமா லிளைப்பாற்றும் விதமெற் றாமே”
என்னும் செய்யுளை இவர் பாடினார்.
மாணவர்கள்
இவரிடம் அப்பொழுது பாடங் கேட்டவர்களுள் முக்கியமானவர்கள்:
1. வல்லம் கந்தசாமி பிள்ளை: இவர் சொந்த ஊர் வல்லம்; இவர் திருவழுந்தூரிலிருந்து கொண்டு அடிக்கடி பாடங் கேட்டுச் செல்லுவார்.
2. மாயூரம் தெற்குவீதி முத்துசாமி பிள்ளை: இவர் யாதவ வகுப்பைச் சார்ந்தவர்; இவர் படித்துக்கொண்டு வந்ததன்றி, பிள்ளையவர்கள் சொல்வனவற்றை எழுதிவருதலையும் பிரபந்தம் முதலியவற்றைப் பிரசங்கம் செய்யும்போது ஏடு வாசிப்பதையும் மேற்கொண்டிருந்தார்.
3. சித்தக்காடு நமச்சிவாய பிள்ளை.
4. சிவலிங்க வாத்தியார்.
5. சிங்கவனம் சுப்பு பாரதிகள்.
6. திருப்பாம்புரம் சாமிநாத பிள்ளை.
7. கர்ணம் வைத்தியலிங்கம் பிள்ளை: இவர் மாயூரம் கீழை வீதியில் இருந்தவர்; ராமாபுரமென்னும் கிராமத்துக் கணக்கு வேலை பார்த்து வந்தவர்; எப்பொழுதும் உடனிருந்து பிள்ளையவர்களுடைய குடும்ப காரியங்களைக் கவனித்துக் கொண்டு வந்தவர் ; படிப்பவர்களை ஊக்கிவருவார்.
8. கூறைநாட்டு முத்துக்குமார பிள்ளை.
9. முத்தாம்பாள்புரம் கோபால பிள்ளை.
10. சுந்தரப்பெருமாள்கோயில் அண்ணாசாமி ஐயர்: இவர் எழுதியும் வந்தார்.
11. திருமங்கலக்குடி சேஷையங்கார்: இவர் பிள்ளையவர்கள் இயற்றிய நூல்கள் சிலவற்றைப் பனையேட்டில் எழுதியவர்.
12. திருவாவடுதுறை வெங்குவையர்.
இவர்களில் இசையோடு படித்துக்காட்டும் வன்மையை உடையவர்கள் கந்தசாமி பிள்ளை, முத்துசாமி பிள்ளை, சிவலிங்க வாத்தியார், அண்ணாசாமி ஐயர், சேஷையங்கார், வெங்குவைய ரென்பவர்கள்; எழுதுபவர்கள் கந்தசாமி பிள்ளை, முத்துசாமி பிள்ளை, கோபால பிள்ளை, சேஷையங்கார், அண்ணாசாமி ஐயர், வெங்குவையரென்பவர்கள்.
ஒரு மாதத்தில் ஐந்து ரூபாய்க்குள் தமக்கு வேண்டிய செளகரியங்களை அக்காலத்திற் செய்து கொள்ளக் கூடுமாதலால் முற்கூறியவர்களில் பெரும்பாலோர் மாயூரத்தில் இருந்து தம்முடைய பொருளைக் கொண்டேனும் பிறரிடம் பெற்றேனும் செலவழித்து உண்டு படித்து வந்தார்கள். அதற்கும் சௌகரியம் இல்லாதவர்களும் உடன் உண்ணக் கூடியவர்களும் பிள்ளையவர்கள் வீட்டிலேயே ஆகாரம் செய்துகொண்டு வந்தார்கள்.
மாயூரத்திலிருந்த வித்துவான்கள்
அக்காலத்தில் தமிழ் வித்துவான்களென்று பெயர் பெற்றுப் பிரசங்கம் முதலியன செய்து மாயூரத்திலிருந்து கொண்டு இவர் நூதனமாகச் செய்யுள் செய்வதைக்கேட்டும் பாடஞ் சொல்லுகையில் உடன் இருந்து கேட்டும் மகிழ்ந்து செல்வோர்:
1. தர்மதானபுரம் கண்ணுவையர்: இவர் பாரதப் பிரசங்கம் செய்து புதுச்சேரி முதலிய இடங்களில் மிகுந்த புகழ்பெற்றவர்; நல்ல வாக்கி.
2. மாயூரம் பட்டமங்கலம் சபாபதி ஐயர்: இவர் எழும்பூர்த் திருவேங்கடாசல முதலியாரிடத்திற் பாடங்கேட்டவர்; தம்முடைய இளமை தொடங்கிக் கூறைநாட்டில் சாலியச் செல்வர்களிடத்தில் இராமாயணப் பிரசங்கம் செய்து ஜீவித்தவர்.
3. கூறைநாட்டுச் சாமிநாத வாத்தியார்: இவர் சிலருக்குத் தமிழ் நூல்கள் பாடஞ்சொல்லிக் கொண்டு பாடசாலை வைத்து ஜீவித்தவர்; வீரசைவர்.
கூறைநாட்டில் இருந்த நாட்டுக்கோட்டை நகரத்தார்களில் துறவு பூண்டவர்களும் வேதாந்த சாஸ்திரங்களில் நிபுணர்களுமாகிய இருவர் இவரிடம் அடிக்கடி வந்து ஸல்லாபம் செய்து போவார்கள்.
வடமொழி வித்துவான்கள் பலர் இருந்தார்கள். அக்காலத்தில் அங்கே இருந்த ஸங்கீத வித்துவான்கள்:
1. திருநாளைப்போவார் சரித்திரக் கீர்த்தனை இயற்றிய முடிகொண்டான் கோபாலகிருஷ்ண பாரதிகள், 2. சாத்தனூர்ப் பஞ்சுவையர், 3. திருத்தருப்பூண்டி பாகவதர், 4. பெரிய ராமசாமி ஐயர், 5. சின்ன ராமசாமி ஐயர்: இவர் கோபாலகிருஷ்ண பாரதியாரின் முதன் மாணாக்கர்; தம்முடைய வீட்டிலேயே பாரதியாரை இருக்கச் செய்து அவர் சிவபதம் அடையும் வரையில் உபசரித்தவர்.
முன்ஸீப் கோர்ட்டில் பெரும்பான்மையான உத்தியோகஸ்தர்களுக்குச் சங்கீதப் பயிற்சி இருந்துவந்தது.
மேற்கூறியவர்கள் யாவரும் பிள்ளையவர்களுக்குப் பழக்கம் உடையவர்களே. இவர் வீட்டிற்கு அவர்கள் வருவதும் செல்லக் கூடியவர்கள் வீட்டிற்கு இவர் போவதும் உண்டு.
*3 சச்சிதானந்த தேசிகர்மாலை இயற்றியது
மாயூரத்தில் இருந்தபொழுது திருஞானசம்பந்த தேசிகரது குருபூசைக்கு அழைக்கப்பெற்று இவர் தருமபுர மடத்திற்கு ஒருமுறை போயிருக்கையில் அங்கிருந்த அடியார்கள் ஆதீனத் தலைவராக இருந்த ஸ்ரீ சச்சிதானந்த தேசிகர் மீது ஒரு பிரபந்தம் இயற்ற வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். அவர்கள் வேண்டுகோட்கிணங்கி அந்த மடத்துச் சம்பிரதாயங்கள் புலப்படும்படி ‘சச்சிதானந்த தேசிகர்மாலை’ என்ற நூல் ஒன்றைச் செய்து அவருடைய முன்னிலையில் இவர் அரங்கேற்றினார். கேட்டு மகிழ்ந்த தலைவரால் தக்க ஸம்மானங்கள் செய்யப்பெற்றன.
அந் நூலிலுள்ள சில செய்யுட்கள் வருமாறு:
“மருந்து பிடகர் சுமப்பதெல் லாம்பிறர் மாட்டடைந்த அருந்து பிணிமுற் றொழிப்பதற் கேபிற வாருயிர்கள் பொருந்து வினையொழிப் பான்றனுத் தாங்குபு போந்தனைமெய் திருந்து புகழ்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.” (5) “பாடிவந் தார்க்கென் பரிசளிப் பாயுட் படுமறையிற் கூடிவந் தார்வ முறப்பேசி மூன்றையுங் கொள்ளைகொள்வாய் நாடிவந் தாருண் மகிழ்வள்ள லேபன் னகரினரும் தேடிவந் தார்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.” (11) “நின்பார்வை யாலிரு ணீங்கிடு மாலிந் நெடுநிலத்திற் கென்பார் கதிர்மதி யாலிரு ணீங்குத லென்வியப்பு வன்பா ரகவிரு ளென்றே யுளத்து மதித்தனன்காண் தென்பா ரணித்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.” (18) “வளிதாழ் விசும்பைப்பைத் தோலிற் சுருட்டிட வல்லவனும் அளிதாழ்நின் பேரரு டீர்ந்தின்ப மார்தற் கமைபவனும் ஒளிதாழ் புவனத்தி லொப்பரன் றோவுண ராதவர்க்குந் தெளிதாழ் புகழ்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.” (27) “எல்லா மறைத்துஞ் சடையொன்று மேபுனைந் திங்கமர்ந்தாய் வல்லா வெமரு முணர்வர்கொ லோவல் லவருணர்வார் வில்லார்நற் றாலிபு லாகத்தின் மற்றும் விளங்குமென்று செல்லார் மதிற்றரு மைச்சச்சி தானந்த தேசிகனே.” (28)
நந்தன் சரித்திரக் கீர்த்தனத்திற்குச் சிறப்புப்பாயிரம் அளித்தது
அக்காலத்தில் திருநாளைப்போவார் சரித்திரத்தைக் கீர்த்தனங்களாகச் செய்த மேற்கூறிய கோபாலகிருஷ்ண பாரதியார் அடிக்கடி இவரை வந்து பார்த்துச் செல்வது வழக்கம். அவர் ‘நந்தன் சரித்திரம்’ செய்து முடித்தபோது அந்தச் சரித்திர அமைப்பையும் ஹிந்துஸ்தானி சம்பந்தமான சங்கீதப்பகுதிகள் பல அதில் நன்றாக அமைந்திருத்தலையும் அதிற் காணப்படும் பக்திச் சுவையையும் அறிந்து பலரும் பாராட்டுவாராயினர். இசைப் பயிற்சியுள்ள ஏழை ஜனங்கள் அதிலுள்ள கீர்த்தனங்களைப் பாடம் பண்ணிப் பிறரிடம் பாடிக் காட்டிப் பொருள் வருவாயடைந்து கவலையின்றி வாழ்ந்து வந்தார்கள். பலர் ஒழுங்காகப் பாடிக் கதை பண்ணிக்கொண்டும் வரலாயினர். கிராமாந்தரங்களில் அதனைக் கேட்டவர்களிற் சிலர் பக்தி மேலீட்டால் திருப்புன்கூர் சென்று நந்தி விலகியதைப் பார்த்துவிட்டுச் சிதம்பரம் சென்று நந்தனார் தீயில் மூழ்கிய குண்டமென்று சொல்லப்படுகிற ஓமக் குளத்தில் நீராடி ஸ்ரீ நடராசப்பெருமானைத் தரிசனம் செய்துகொண்டு வர ஆரம்பித்தனர். அந்தச் சரித்திரத்தைப்பற்றிய பேச்சு தமிழ்நாடு முற்றும் அக்காலத்திற் பரவி இருந்தது.
ஆயினும், அச்சரித்திரம் பெரிய புராணத்திலுள்ள திருநாளைப்போவார் புராணப்படி அமையாமலும் தமிழ் இலக்கண வழுக்கள் பொருந்தியும் இருந்தது பற்றித் தமிழ் வித்துவான்களிற் சிலர் அதைக் குறை கூறுவாராயினர். பிள்ளையவர்களுடைய கருத்தும் அவ்விதமே இருந்தது. இவருடைய நோக்கத்தை யறியாத கோபாலகிருஷ்ண பாரதியார் இவரிடம் அந்த நூலுக்கு எப்படியேனும் ஒரு சிறப்புப்பாயிரம் பெற வேண்டுமென்று பல முறை அலைந்தார். அப்படி அலையுந்தோறும், யார் வந்தாலும் தடையின்றிச் சிறப்புப்பாயிரம் கொடுத்தனுப்பும் இவர், “மற்றொரு சமயம் பார்த்துக் கொள்ளலாம்” என்றே சொல்லிவந்தார். அப்படிச் சொன்னதன் நோக்கம் பின்பு கொடுப்பதற்கன்று; அலைவதை அஞ்சி, வருவதை அவர் நிறுத்திவிட வேண்டுமென்பதே. ஆயினும் பாரதியார் அடுத்தடுத்து முயல்வதைச் சிறிதும் நிறுத்தவேயில்லை.
ஒருநாள் அவர் வந்தபோது இவர் பகற்போசனத்திற்குப் பின் வழக்கம்போல் நித்திரை செய்து கொண்டிருந்தார். அதனையறிந்த பாரதியார் திண்ணையில் அமர்ந்து “கனவோ நினைவோ”, “வாராமலிருப்பாரோ”, “சிந்தனை செய்து கொண்டிருந்தால்”, “தீயினில் மூழ்கினார்” என்னும் கீர்த்தனங்களை மெல்லப் பாடித் தாமே *4 இன்புற்றுக் கொண்டிருந்தார். இவர் விழித்துக்கொண்டார். அப்போது,
“கனகபாபதி தரிசன மொருநாள் கண்டால் கலி தீரும்”
என்ற கீர்த்தனத்தைப் பாடத் தொடங்குகையில் இவர் அங்கிருந்தபடியே எழுந்து பாயலிலிருந்து அந்தக் கீர்த்தனத்தைக் கேட்கலாயினார். கேட்கக் கேட்க அவ்விசைப்பாட்டு இவரது மனத்தை உருக்கி அதில் இவரை ஈடுபடச் செய்தது. பாரதியார் பின்னும் சில கீர்த்தனங்களைப் பாடினார். இவருடைய மனம் கனிந்துவிட்டது; இவரையறியாமலே பக்தி மிகுதியினாற் கண்ணீர் வெளிப்பட்டது. உடனே எழுந்து புறம் போந்து பாரதியாரைக் கண்டு நல்வரவு கூறினார். பின்பு,
“கோமேவு திருத்தில்லை நடராசப் பெருமான்றாள் கூடி யுய்ந்த
பூமேவு பேரன்பர் திருநாளைப் போவார்தம் புனிதச் சீரைப்
பாமேவு பலவகைய விசைப்பாட்டா லினிமையுறப் பாடி யீந்தான்
ஏமேவு கோபால கிருட்டினபா ரதியென்னு மிசைவல் லோனே”
என்னும் பாடலை இயற்றி அவர்பாற் கொடுத்து, “இதை உபயோகப் படுத்திக்கொள்ள வேண்டும். சாம்பவர்களாகிய உங்களை இதுவரையில் அலைக்கழித்ததைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்” என்று முகமன் கூறினர். அவர் மிக்க களிப்படைந்து, அதனைப் பெற்றுக்கொண்டு சென்றார்.
தனுக்கோடி முதலியார்
காரைக்காலில் தபேரியோமென்னும் வேலையில் இருந்த தனுக்கோடி முதலியார் என்னும் கிறிஸ்தவ கனவான் ஒருவர் அடிக்கடி மாயூரம் வந்து வேதநாயகம் பிள்ளையுடன் சிலநாள் இருந்து செல்வார். அவர் தமிழில் விருப்பமும் தமிழ் வித்துவான்களையும் ஸங்கீத வித்துவான்களையும் ஆதரிக்கும் இயல்பும் உடையவராகையால் அவருக்கும் பிள்ளையவர்களுக்கும் வேதநாயகம் பிள்ளை மூலம் மிக்க பழக்கம் உண்டாயிற்று. அதனாற் சில சமயங்களில் நாகபட்டினம் முதலிய இடங்களுக்கு இவர் போகும்பொழுது காரைக்காலுக்கும் சென்று வருவது வழக்கம். அப்பொழுது தனுக்கோடி முதலியார் இவரைத் தமது பங்களாவில் இருக்கச்செய்து இராசோபசாரம் செய்வார். இவர் திருவாவடுதுறை முதலிய இடங்களில் இருக்கும்பொழுது பூசைக்காகச் சந்தனக்கட்டை, பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ முதலியன அனுப்புவதன்றி இவருக்குப் பிரியமான நல்ல மாம்பழங்களையும் அனுப்பி வருவார். மாம்பழத்திற் காரைக்கால் பெயர் பெற்றதன்றோ? அவர் மூலமாகக் காரைக்காலிலுள்ள சிவநேசச் செல்வர்களிற் பலர் இவர்பாற் பிரீதி வைப்பாராயினர்.
வேதநாயகம் பிள்ளையின் பதத்தைச் சிறப்பித்துப் பாடியது
வேதநாயகம் பிள்ளை அக்காலத்திற் பல சங்கீத வித்துவான்களோடு மாயூரத்திற் பழகி வந்தனர். அவர்கள் சொல்லும் தியாகராசையர் கீர்த்தனம் முதலிய பலவகையான கீர்த்தனங்களைக் கேட்டு மகிழ்வடைவார். அக்கீர்த்தனங்களுள் தமக்குப் பிரீதியான மெட்டில் தாமும் தமிழ்மொழியிற் பல கீர்த்தனங்களைச் செய்தார். அவற்றை இசையில் வல்லவர்களைக் கொண்டு பாடுவித்துக் கேட்டும் கேட்பித்தும் பொழுது போக்குவது அவருக்கு வழக்கமாக இருந்தது. அவருக்குக் கீழ் இருந்த உத்தியோகஸ்தர்களிலும் வக்கீல்களிலும் பாடக்கூடியவர்கள் அவருடைய பாடல்களைப் பாடியும் தம் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுத்துப் பாடச்செய்தும் வந்தனர். பிள்ளையவர்களுக்கும் அப்பொழுதப்பொழுது தாம் செய்த கீர்த்தனங்களை வேதநாயகம் பிள்ளை பாடிக்காட்டச் செய்வதுண்டு.
ஒருநாள் அவர் தாம் இயற்றிய சில கீர்த்தனங்களை இராமசாமி ஐயங்காரென்னும் வக்கீல் ஒருவரைக் கொண்டு இவரிடம் பாடிக்காட்டச் செய்தார். அவர் சில கீர்த்தனங்களைப் பாடிவிட்டுக் கடைசியில் பின்னுள்ள கீர்த்தனத்தைப் பாடினர்:
இராகம் - காம்போதி; ஆதி தாளம். பல்லவி எவ்வகை யிலும் நானே - நல்வழிபற்றி உய்வகை அருள்கோனே. அனுபல்லவி செவ்வழி நிற்போர்மனத் தேன்கள் வளரும்பூவே பெளவமாகப் பேரின்பம் பழுக்குங்கற் பகக்காவே (எவ்வகை) சரணங்கள் 1. வறியர்க் கிடவென்றாலென் குறியகை களிற்சூலை வாங்க நீட்டின் உலகும் வானமும் எந்த மூலை பிறர்நோய்செய் யிலெனக்குப் பெருங்கோபாக் கினிச்சுவாலை பேதையென் பிழையெழுதின் வேண்டுங் கோடியோலை (எவ்வகை) 2. நல்வழி நடக்கவென் றாலிருகாற் குந்தளை நாளுந்துர் வழிநடப் பதில்எனக் குண்டோகளை புல்வினை யேன்செவி பொய்கள் நுழையும்வளை புண்ணியோப தேசமென்றாற் புகஅதி லேத துளை (எவ்வகை) 3. உன்னைத் துதிக்கவென்றா லுலகிலென் வாய்க்குநோயே ஊர்வம்பு பேசஎனக் குடம்புமுழு வதும்வாயே மின்னை நிகர்பிரபஞ்ச வேதனை நீக்குவாயே வேதநா யகனுக்குச் சாதக மானதாயே. (எவ்வகை)
இதைக்கேட்டு இவர் குற்றமொன்றுமில்லாத வேதநாயகம் பிள்ளை தம்மைத் தாமே இகழ்ந்துகொண்டு பாடியதை நினைந்து பாராட்டி ஒரு விருத்தமும் ஒரு கீர்த்தனமும் பாடி அவரிடம் கொடுத்தார். அவை வருமாறு:
விருத்தம் “மன்னரரு ளதிகார மானம்வழு வாமலற வழிந டாத்திப் பின்னரெனா தறமியற்றும் வேதநா யகசுகுணப் பெரியோய் நாளும் நன்னரறங் கொள்ளைகொண்டும் இலனெனப்பொய் அனுதினமும் நவிலு வாய்நின் முன்னரஃ துரைப்பவரை முனிவாயோ முனியாயோ மொழிவாய் நீயே.” கீர்த்தனம் ராகம் - தோடி; தாளம் - சாபு. பல்லவி பொழிந்தானே பதமாரி வேதநாயக பூபதி யருள்வாரி. அனுபல்லவி வழிந்துபல் லுயிருள வளவயல் புகுந்து மருவலி னறிவெனு மாண்பயிர் மிகுந்து மொழிந்த பரசுக விளைவு நீட முனிந்த கொடுமையால் குடிய தோட (பொழிந்) சரணங்கள் 1. என்னகற் றானாதி சேடனே - இவற்கு எதிருரு வானெனின் மூடனே பன்னு மிவனிடைக் காடனே – மிகு பல்கலை யோர்ந்தவி சேடனே (பொழிந்) 2. மன்னுங் கழனி வளக்குளத் தூரன் வையம் புகழுங்கோ னாட்டுக்கு பேரன் மின்னுங் கருணைமுன் ஸீபதி காரன் மெய்ப்பொரு டேர்ந்து விளங்குமு தாரன் (பொழிந்) 3. இன்னும் புகலென யாவருந் துதிக்க எண்டி சாமுகத் தாரு மதிக்க முன்னும்யா வர்க்கு ஞான முதிக்க மூடும்பா சமப்பாற் போய்க் குதிக்க (பொழிந்)
அடிக்குறிப்பு மேற்கோள்கள்:
1. அவர்களாவார்: 1. திருப்பனந்தாள் இராமலிங்கத் தம்பிரானவர்கள், 2. கலியாண சோழபுரம் சிதம்பரம் பிள்ளை, 3. பல்லவராயப் பட்டு சடையப்ப பிள்ளை, 4. மாயூரம் ஆற்றங்கரை முதலியார், 5. அம்பர் வேலுப் பிள்ளை, 6. வள்ளலார் கோயில் அகோர சாஸ்திரிகள், 7. பூங்காவூர்ச் சாமி ஐயர், 8. குற்றாலம் சிங்காரவேலு முதலியார், 9. கூறை நாட்டுச் சாலியச் செல்வர்களுள் ஒருவர், 10. நெய்ப்பற்றூர்ச் சாமி ஐயர், 11. திருவெண்காட்டு நடராச பிள்ளை, 12. வல்லம் பரமசிவம் பிள்ளை.
2. முதலில் தெற்குரத வீதியின் தென்பாலுள்ள செட்டிகுளத்தின் கீழ்கரையிலிருந்த ராமபிள்ளை யென்பவர் வீட்டில் ஆறு வருஷம் இருந்தார். அந்த வீடு இப்பொழுது இடிந்து போய்விட்டது. அப்பால் தெற்கு வீதியில் வடசிறகில் குப்பபிள்ளை யென்பவர் வீட்டில் நான்கு வருஷம் இருந்தார். அதன்பிறகு அவ்வீதியிலே தென்சிறகில் நாராயண பிள்ளை யென்பவருடைய வீட்டை விலைக்கு வாங்கிக்கொண்டு இருந்தார்.
3. ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டு, 3221-3321.
4. இவ்வாறு தாங்களே பாடி இன்புறுதல் சங்கீத வித்துவான்கள் இயல்பு.
$$$