-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
100. தனிப்பெருந் தெய்வம்
.
ஸ்தோத்ரேணால- மஹம் ப்ரவச்மி ந ம்ருஷா தேவா விரிஞ்சாதய:
ஸ்துத்யானாம் கணனாப்ரஸங்க ஸமயே த்வாமக்ரகண்யம் விது
மாஹாத்ம்யாக்ர விசாரண ப்ரகரணே தானாதுஷஸ்தோமவத்–
தூதாஸ்த்வாம் விதுருத்தமோத்தம பலம் ச’ம்போபவத்ஸேவகா://
.
துதிநிறைக! இல்லாதன மொழியவில்லை சம்புவே!
மதிக்கின்றார் உமைமுதலாய் பிரும்மாதி தேவர்களும்
உயர்தெய்வம் அடியார்கள் ஆராய்ந்து பார்க்கையிலே
உமிபோலே பிறரொதுக்கி உமைமணியாய் உணர்ந்தாரே!
.
எல்லாம் வல்ல இறைவனாகிய சிவபெருமானின் பெருமையைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், அதனை முழுமையாகச் சொல்வதற்கு ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனாலும் இயலாது என்பது ஆன்றோர் வாக்கு. ஆகையினால், எம்மால் முழுமையாகக்கூற இயலாது காரணத்தால், இந்த நூலுக்கு ஒரு நிறைவு வேண்டி, சிவபெருமானே, இதனோடு உம்மைப் பற்றிய துதிகளை நிறைவு செய்து கொள்கிறேன் என்று கூறுகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.
“சிவானந்தலஹரீ என்ற இந்த இலக்கியத்திலே இல்லாதவொரு விஷயம் எதனையும் நான் சொல்லவில்லை. எனக்கு முன்னே பல பெரியோர்கள் சொல்லிய, எனது ஞானத்தால் உணர்ந்த உண்மையைத் தான் உரைத்திருக்கிறேன். படைப்புக் கடவுள் என்று போற்றப்படும் பிரும்மன் உள்ளிட்ட அனைத்து தேவர்களும், தங்களால் போற்றுதலுக்குரியவர்களைத் தீர்மானம் செய்கையிலே, ஆதிநாதராகிய சிவபிரானே, உம்மைத்தான் முதலில் வணங்க வேண்டிய பரம்பொருளாக மதிக்கின்றார்கள். எண்ணற்ற அடியார்கள், யாவினும் மேலான உயர்தெய்வம் எதுவென்று ஆராய்ந்து பார்க்கையிலே, ஆத்மவிசாரம் செய்து, ஞானத்தால் தேடித் தேடித் துருவிப் பார்க்கையிலே, மற்ற தெய்வ வடிவங்களை எல்லாம் உமியைப்போல் ஒதுக்கித் தள்ளவிட்டு, சிவபரம்பொருளே, தங்களைத்தான் மதிக்கத்தக்க தானியமாக, சிறந்த மணியாகத் தேர்ந்து அறிகிறார்கள்” என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.
இதிலே ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எந்தவொரு விஷயத்தையும் எழுதுவதற்கு முன்பு நாம் முதலில் எழுதுகின்ற பிள்ளையார்சுழி உண்மையில் சிவலிங்க உருவமாகும். உ எழுத்து போன்ற பி்ள்ளையார் சுழியின் மேல் உருண்டைப் பகுதி சிவலிங்கத்தின் பாணப் பகுதியையும், கீழே உள்ள நேர்க்கோட்டுப் பகுதி ஆவுடையார் பகுதியையும் குறிக்கிறது. அதேபோல் மஞ்சளிலே பிள்ளையார் பிடித்து எந்தவொரு செயலைத் தொடங்குவதும்கூட, அடிப்படையில் லிங்கத்தைப் பிடித்து வைத்து பரம்பொருளாகிய சிவபெருமானை வேண்டுவதையே குறிக்கிறது.
$$$