மகாவித்துவான் சரித்திரம்- 1(11)

-உ.வே.சாமிநாதையர்

முதல் பாகம்

11. சில பிரபந்தங்களும் தியாகராச லீலையும் இயற்றல்

பூவாளூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி

ஒரு சமயத்தில் தியாகராச செட்டியார் முதலியோர்கள் கேட்டுக்கொள்ள இவர் பூவாளூர் சென்றிருந்தார். அப்பொழுது சிலர் விரும்பியபடி பூவாளூர்ப் பதிற்றுப்பத்தந்தாதியென்ற பிரபந்தம் இவரால் இயற்றி அரங்கேற்றப்பெற்றது. சைவ சாஸ்திரங்களைக் கற்றபின்னர் பாடப்பட்டதாதலின் அப்பிரபந்தத்தில் அவற்றின் கருத்துக்கள் அமைந்திருத்தலைக் காணலாம்:

“பாவிய கரும மின்றியே பசுவும்
பதியும்பா சமுமென வுரைக்கும்
நாவினான் மதமே கொண்டுழ லாம
னாயினேற் கென்றருள் புரிவாய்”

“அவனவ ளதுவென் றுரைத்திடும் புவன
மாகியு மதற்குவே றானாய்
நவவடி வுடையாய் *1 காமர்பூம் பதியாய்
நாயினுங் கடைப்படு வேற்குத்
தவலறு மூல மலச்செருக் கொழிந்து
சத்திநி பாதமென் றுறுமே.”

“பொருந்துசன் மார்க்க நெடுஞ்சக மார்க்கம்
புத்திர மார்க்கமு மில்லேன்
திருந்திய தாத மார்க்கமு மில்லேன்
தீவினை மார்க்கமே யுடையேன்.”

“காலைக் கதிராய்ச் சில்லுயிர்க்குக்
கவினு மதியாய்ச் சில்லுயிர்க்கு
மாலை யிருளாய்ச் சில்லுயிர்க்கு
வைகும் பொருணீ யென்றறியேன்.”

இவற்றையன்றித் திருவாசக முதலியவற்றிலுள்ள கருத்துக்களைத் தம்முட்கொண்ட சில செய்யுட்களும் இதில் உண்டு:-

''ஆலும்விட மமுதாக்குங் காமர்பதித் திருமூலர் வமல னார்க்குச்
சாலுமணிக் குழையொருபாற் றோடொருபான் முத்தொருபாற் சர்ப்ப மோர்பால்
ஏலுநற்குங் குமமொருபா னீறொருபாற் பட்டொருபா லியைதோ லோர்பால்
ஓலிடுபொற் சிலம் பொருபாற் கழலொருபாற் பன்னாளு மொளிரு மன்றே”

எனவரும் அர்த்த நாரீசுவரமூர்த்தியின் செய்தி *2 திருவாசகத்தைத் தழுவியமைத்தது.

“புலையரும் விரும்பாப் புன்புலாற் சுமை” என்பது அரிச்சந்திர புராணத்தைத் தழுவியது.

“ஏலக் குழலியோர் பாகம் போற்றி
    எனக்கு வெளிப்படும் பாதம் போற்றி
மாலைப் பிறைமுடி வேணி போற்றி
    மான்மழு வைத்த கரங்கள் போற்றி
காலைக் கதிர்த்திரு மேனி போற்றி
    காமனைக் காய்ந்தகண் போற்றி யென்றே
ஓலிட் டருமறை தேடும் பூவா "
    ளூரரை யான்சொல்லி யுய்வ தென்றே”

எனவரும் செய்யுட்களின் சந்தம் *3 தேவாரச் சந்தத்தைப் பின்பற்றியது.
அந்நூல் முற்றும் இப்பொழுது கிடைக்கவில்லை; *4 காப்பும் 24 பாடல்களுமே கிடைக்கின்றன.

பெருந்திருப் பிராட்டியார் பிள்ளைத்தமிழ்

இவர் ஒரு முறை திருத்தவத்துறை (லாலுகுடி) சென்றிருந்தபொழுது அங்கே இருந்த அன்பர்களின் விருப்பப்படி அவ்வூரில் எழுந்தருளியுள்ள பெருந்திருப்பிராட்டியார் (ஸ்ரீமதி) மீது ஒரு பிள்ளைத்தமிழ் இயற்றினார்.

அந்தப் பிள்ளைத் தமிழிலும் இக்கவிஞர் முதலில் விநாயகர் முதலியவர்களுக்கு வணக்கம் கூறுகின்றனர். ஆயினும் அகிலாண்டநாயகி பிள்ளைத்தமிழிலுள்ளது போல் அவையடக்கம் இதில் இல்லை. அகிலாண்டநாயகி பிள்ளைத்தமிழைக் காட்டிலும் இந்நூல் எளிதிற் பொருள் விளங்கும் சொற்களையும் சிறந்த கருத்துக்களையும் உடையதாக இருக்கின்றது. இவருடைய கற்பனைத் திறனும் பிறவும் இதன்கண் உயர்வு பெற்று விளங்குகின்றன.

மருதத்திணையுள் தாமரை மலர் நிறைந்திருப்பதை நினைந்து, ‘பிரமதேவர் தம்முடைய தந்தையாகிய திருமாலுக்குக் குடையாக உதவிய மலையின் சிறகுகளை இந்திரன் அரிந்த பகைமையை எண்ணி அவனுக்குரிய மருதத்திணையில் அவன் தங்குவதற்கு இடமில்லாதபடி தமக்கும், தம் தாயாகிய திருமகளுக்கும், தம் மனைவியாகிய கலைமகளுக்கும் இருப்பிடங்களாகவும், தம் தம்பியாகிய மன்மதனுக்கு ஆயுதசாலையாகவும், தம்முடைய வாகனமாகிய அன்னத்துக்கு இருப்பிடமாகவும் பல தாமரைகளை எங்கும் உண்டாக்கி மகிழ்கின்றார்’ என்னும் கருத்தமைய,

*5 “தண்ணந் துழாய்ப்படலை துயல்வரு தடம்புயத்
    தாதைக்கு நீழல்செய்யத்
தந்தவரை யின்பறை யரிந்தபகை கண்டரி
    தங்குதற் கிடமிலாமல்
எண்ணுந் தனக்குமனை யாய்க்குமனை யிற்குமனை
    யிளவலுக் கேதியுறையுள்
எகினுறையு ளாகமரு தத்திணையி லாக்கிமகி
    ழெண்கைப் பிரான்புரக்க '' (காப்புப். 5)

என்று ஒரு கற்பனையை அமைக்கின்றார்.

‘தன் கணவர் செய்வதைப்போன்றே தானும் செய்யவேண்டுமென்றெண்ணிய கலைமகள், அவர் தம் நிறமமைந்த பொற்றாமரையில் வீற்றிருப்பதைப்போலத் தானும் தனது நிறம் பொருந்திய வெண்டாமரையில் வீற்றிருக்கின்றாள்’ என்ற கருத்தையமைத்து,

“தேனா றுவட்டெழப் பாய்தரு மடுக்கிதழ்
    செறிந்தசெம் பொற்றாமரைச்
செழுமலரின் மேற்றனது பொன்மேனி யொப்புமை
    தெரிந்துறையு மகிழ்நனேய்ப்பக்
கானாறு வெண்டா மரைப்போதின் மேற்றனது
    கவின்மேனி யொப்புமைதெரீஇக்
காதலி னமர்ந்தருள் கொழிக்குமறை முதலளவில்
    கலைஞான வல்லிகாக்க” (காப்புப். 8)

என்கின்றார். உமாதேவியார், சிவபெருமான் திருமேனியிற் பாதி கொண்டதற்குக் காரணத்தை, ‘சிவபெருமான் திரிபுரசங்காரம் செய்கையில், வில்லை மட்டும் வளைத்தாரேயன்றி அம்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனையறிந்து, அந்த அம்பாக வந்திருந்த திருமால் இனி இவருக்குப் பயன்பட வேண்டுமென்று கருதி இடபவாகனமானார். அவர் தம்முடைய தமையனாராதலின், அவர் மீது தாம் தனியே ஒரு வடிவத்தோடு இருத்தற்கு உமாதேவியார் நாணினார்; ஆதலின் சிவபிரான் திருமேனியோடு கலந்து ஒரு வடிவாயினார்’ என்னும் கருத்துத் தோன்ற,

“ஒன்னார்த மும்மதி லொருங்கவிய வாங்குபொன்
    னோங்கல்விற் பழமையறிவார்
உற்றதனை யன்றியேத் தொழிலையெஞ் ஞான்று
    முஞற்றவல் லாமைகண்டு
கொன்னார் வளைக்கையுல குண்டமுன் னோனிமிற்
    கொல்லேற தாயதான்மேற்
கொள்பொழுது வேறுறைய நாணியோ ருடல்செய்த
    கொள்கைபோ லம்மகிழ்நனார்
பொன்னாரு மேனியிற் பாதிகொண் டாளும்
    பொருப்பரைய னீன்றபிடியே” (செங்கீரைப். 3)

எனக் குறிப்பிக்கின்றார். இத்தகைய கற்பனைகள் பலவற்றை இந்நூலின்கண்ணே காணலாம்.

கச்சியப்ப முனிவர் நூல்களில் அதிகமாக ஈடுபட்ட இவர் திருவானைக்காப் புராணக் கருத்துக்களை,

“அளவில்பல வலியுடைய வாணவ மகன்றவா
    லறிவன்றி யுருவ மில்லா ஐயன்” (பாயிரம், 3)

“........................................................ பரமனார்
    சிலவுயிர்க் கினனாகியும்
பகற்சில வுயிர்க்குமுன் மதியாகி யுஞ்சில
    படிற்றுமூழ் கியவுயிர்க்குப்
பாயுமிரு ளாகியும் பொலிவது தெரிப்ப” (பொன்னூசற். 5)

என்பன போன்ற இடங்களிலும், விநாயக புராணக் கருத்தை,

“மூத்தமைந் தன்பா லளித்தவற் கார்வமெனு
மூதுரை வழக்குடைமையான்” (பாயிரம், 4)

என்ற இடத்திலும், தணிகைப் புராணச் சொற்றொடராட்சியை,

“சுஃறொலிச் சூரற் படைக்கைப் பிரான்” (பாயிரம், 6)
“நந்தாத கஃறொலிக் கானிற் சரித்த” (வாரானைப். 5 )

என்ற இடங்களிலும் எடுத்தாண்டிருக்கின்றார்.

“குருவார் துகிர்ச்சடை திசைதட வரக்கங்கை
    குழமதியி னோடுதுள்ளக்
குழையசை தரத்திருப் புருவமுரி தரவெழுங்
    குறுமூர னிலவெறிப்ப
மருவார் கடுக்கைவெண் டலையரவு திண்டோள்
    வயிற்றுயல் வரக்கதிர்த்து
மணிநூ புரங்குமு றிடப்படைப் பேற்றதுடி
    வாய்த்ததிதி யபயமாய்த்தல்
உருவார் கொழுந்தழ றிரோதமூன் றியதா
    ளுவப்பரு ளெடுத்ததாளில்
ஓங்கத் தெரித்துமன் றிடையென்று நின்றாட
    வொருவர்தமை யாட்டுமயிலே
திருவார் தவத்துறைக் கருணைப் பிராட்டிநீ
    செங்கீரை யாடியருளே
தேமலர்க் கண்ணிபுனை கோமளப் பெண்ணமுது .
    செங்கீரை யாடியருளே” (செங்கீரைப். 2)

“ஒருமூ வகையா யெண்ணிலவா யுணர்த்த
வுணர்சிற் றறிவினவாய்
    உண்மை யினவாய்ச் சதசத்தா
யுறுகண் ணியல்பா யுழல்பசுக்கள்
அருமா தவசன் மார்க்கநெறி யடைந்த னாதி யாயளவில்
    ஆற்ற லுடைத்தாய்ச் செம்புறுமா
சான மூல மலநீங்கி
உருவோ டருவங் குணங்குறியற் றொளியாய்
நிறைந்த பதியையுணர்
    வுணர்வா னுணரும் பொருளொழியா
தொழிந்து கதிர்மீன் போற்கலந்து
திருவாரின்ப முறவருள்வாய்'' (முத்தப். 1)

என்பன போன்ற இடங்களிற் சைவசித்தாந்த கருத்துக்களை அமைத்திருக்கின்றனர்.

“நற்றவத்துறை வளர் பெருந்திருப்பெண்”
“அளகைப் பெருந்திருவம்மை”
“அளகாபுரிக் கன்னி”
“தடநிரம்பும்வயி ரயிவனங்குடிகொ டகு
பெகுந்திருநன் மங்கையைக் காக்கவே”
“எமையா டரும்பஞ்ச புண்ணியத் தலமென
வியம்பு நான்மறை”

என்பவற்றில் இத்தலப் பெயர்களாகிய திருத்தவத்துறை, அளகை, அளகாபுரி, வயிரவி வனம், *6 பஞ்ச புண்ணியத்தலம் என்பவற்றை எடுத்து ஆள்கின்றார்.

“மின்னிய பெரும்புகழ்க் கொள்ளிடத் திருநதியின்
வெள்ளநீ ராடியருளே”
“மறையா யிரமுந் தொடர்வரும் பெண்
 *7 வடகா விரிநீ ராடுகவே”
என்பவற்றிற் கொள்ளிட நதியும்,
“மக்கட் புரோகிதன் மனைக்கற் பழித்துமழ
    வன்பெற்ற வெண்குட்டநோய்
மாற்றவுல கெங்குந் திரிந்தித் தலத்துவர
    மாற்றிச் சிறப்புமுதவிச்
செக்கர்ச் சடாமகுடர் தாண்மலர்க் கன்புந்
    திருந்தக் கொடுத்ததீர்த்தம்” (அம்புலிப். 9)

என்பதில் அத்தலத்திலுள்ள சிவகங்கைத் தீர்த்தமும் இதிற் கூறப்படுகின்றன. காப்புப் பருவத்தில் இத்தலத்து விநாயகராகிய திருவாளப் பிள்ளையாருக்குரிய செய்யுளொன்றுள்ளது. இத் தலத்துச் சிவபெருமான் திருநாமம் அழைத்து வாழ்வித்த பெருமானென்பது. அத்திருநாமத்தைச் சந்தத்தில் அமைத்துக் காப்புப் பருவத்தில் ஒரு செய்யுள் கூறப்பட்டிருக்கிறது. “அழைத்து வாழ்வித்தவர் திருப்புகழு மெஞ்ஞான்றும் வாழ” எனப் பொன்னூசற் பருவத்திறுதிச் செய்யுளிலும் அத் திருநாமம் கூறப்படுகிறது.

முனிவரர் குழுவிய வளகையில் வளர்பவள் முத்தமளித் தருளே” (முத்தப். 9)
“செய்தவத் தருமுனிவர் மொய்தவத் துறையில்வளர்
தெய்வதக் கொடிவருகவே” (வாரானைப். 1)

என்பவற்றில் இத்தலத்தில், எழுமுனிவர் பூசித்தமை குறிப்பாகப் புலப்படுத்தப்பட்டிருக்கின்றது. அம்புலிப் பருவத்தில் வரும்

“இமையாத பவளச் சரோருகக் கண்ணனும்
    இருநிதிக் குரியகோவும்
இருடியர்க ளெழுவரும் வயிரவியு நன்புக
    ழிலக்குமியு மின்னுமளவில்
கமையார் தவத்தினரு மாகமப் படிபூசை
    கடவுளை யியற்றியுள்ளம்
கருதரும் பேறெண்ணி யாங்குறப் பெற்றவிக்
    கரிசருந் தெய்வத்தலம்”

என்னும் செய்யுளில் திருமால், குபேரன், எழுமுனிவர், வயிரவி, இலக்குமி என்பவர்கள் பூசித்த வரலாறு கூறப்பட்டிருக்கின்றது. இப்பிள்ளைத் தமிழின் ஈற்றுச் செய்யுளில் இக் கவிநாயகர், வாழ்த்தை உடம்படுபுணர்த்தி,

“மறைமுதற் பலகலைகள் வாழவந் தணர் வாழ மாமகத் தழலும்வாழ
    மன்னுமா னிரைவாழ் மழைபொழியு முகில்வாழ மற்றுமெவ் வுயிரும் வாழ
நிறைதரு பெரும்புகழ் விளங்குசை வமும்வாழ நீடுவை திகமும்வாழ
    நெக்குருகி நின்னன்பர் துதிசெய்த சொற்பொரு ணிலாவுபா மாலைவாழ
இறையவ ரழைத்துவாழ் வித்தவர் திருப்புகழு மெஞ்ஞான்று நன்குவாழ
    யார்க்குமினி தாம்பெருந் திருவென்று நின்பெய ரிலங்கிநனி வாழவுலகிற்
பொறையரு டவந்தானம் வாழவெம் பெருமாட்டி பொன்னூச லாடியருளே
    பொன்னகர நிகரான தென்னளகை நகர்மாது பொன்னூச லாடியருளே”

என அமைக்கின்றார். இம்முறை அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ் முதலிய நூல்களைப் பின்பற்றியது. அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழில் இத்தகைய அமைப்பு இல்லை. இதிலுள்ள சுவைமிக்க சில பாடல்கள் வருமாறு:

''பவத்துயர் பாற வெனக்கரு ளைச்செ யருட்பாவாய்
    பனிக்குல மால்வரை பெற்று வளர்த்த சுவைப்பாகே
சிவத்திரு வாள னிடத்தி லிருக்கு மியற்றோகாய்
    திருப்பெணி லாவு கலைப்பெ ணிவர்க்கிர சத்தேனே
நவத்தளிர் வேர்மலர் மொய்த்தவிர் மைத்த குழற்றாயே
    நயப்ப வெணாலற முற்றும் வளர்த்த கரத்தாலே
தவத்துயர் வார்க ளுளத்தவள் கொட்டுக சப்பாணி
    தவத்துறை வாழு மடப்பிடி கொட்டுக சப்பாணி” (சப்பாணிப். 9)

பேதம்.

“ஏற்றநின் வாயினில வமுதஞ் சகோரமெனு மிருகாற்பு ளுண்டுமகிழும்
    இவள்வாயி னிலவமுத நரமடங் கலைவென்ற வெண்காற்பு ளுண்டுமகிழும்
போற்றநீ மாலவ னெனச்சொல்லு மொருமுகப் புலவனைப் பெற்றெடுத்தாய்
    புலவர்க்கு மேலவ னெனச்சொல்லு மறுமுகப் புலவனைப் பெற்றாளிவள்
தேற்றமீன் மாதரிரு பானெழுவ ருளைநீ சிறக்குமிவ ளோங்குகல்வி
    செல்வமீன் மாதர்முத லளவிலா மாதர்பணி செய்யவுள் ளாளாதலால்
ஆற்றவு நினக்கதிக மென்றெவரு மறிவர்கா ணம்புலீ யாடவாவே
    அமரா வதிக்குநிக ரளகா புரிப்பெணுட னம்புலீ யாடவாவே.'' (அம்புலிப். 3)

*8  தியாராசலீலை இயற்றத் தொடங்கியது

தியாகராச செட்டியாருடைய குடும்பத்திற்கு வழிபடு தெய்வமாகிய திருவாரூர்த் தியாகராசப்பெருமானைத் தரிசிப்பதற்காக அவருடைய சிறிய தந்தையார் முதலியவர்கள் அடிக்கடி திருவாரூர் செல்வதுண்டு. செல்லும்பொழுது இவரையும் உடன் அழைத்துப் போவார்கள்; தாமே தனித்தும் இவர் சில முறை சென்று வருவார். அப்படிச் செல்லுங்காலங்களில் அத்தலத்திற் சில நாட்கள் தங்கி அவ்வூரிலிருந்த வித்துவான்களுடன் ஸல்லாபம் செய்து மகிழ்ந்தும் மகிழ்வித்தும் வருவார். தக்கவர்கள் இவருடைய கல்வி மேம்பாட்டையும் இவருடைய செய்யுளின் சுவையையும் அறிந்து இவர்பால் நன்மதிப்பு வைத்துப் பாராட்டி வருவாராயினார்.

இவர் தம்முடைய 30-ஆம் பிராயமாகிய குரோதிவருஷம் பங்குனி மாதத் திருவிழாவிற்குத் திருவாரூர் சென்றிருந்தார். ஒருநாள் ஆயிரக்கால் மண்டபத்தில் இருந்து ஆண்டுள்ள அன்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் இவருடைய அரிய சம்பாஷணையையும் இவரியற்றிய செய்யுட்களையும் கேட்டு மகிழ்ந்த சில பெரியோர்களாகிய திருக்கூட்டத்தார் பலர் இவரைக்கொண்டு தியாகராசலீலையைச் செய்யுள் நடையிற் செய்விக்க வேண்டுமென்று நெடுநாளாகத் தமக்கிருந்த விருப்பத்தை வெளிப்படச் சொல்லி, செய்யத் தொடங்கும்படி வற்புறுத்தினார்கள். இவர் அவர்களுடைய விருப்பத்திற்கு இணங்கி அவ்வாறே தியாகராச லீலையைப் பாடத் தொடங்கினார். இவ்வரலாறு அந்நூலில் வரும்,

“காரெலாந் தவழுஞ் சென்னிக் கதிர்மணி மாடந் தோறும்
    நீரெலா மமைந்தார் மேவும் நிறைசெல்வத் திருவா ரூரிற்
பாரெலாம் புகழ்ந்து போற்றும் பங்குனித் திருவி ழாவிற்
    சீரெலாந் திருந்து தேவா சிரயனாங் காவ ணத்தில்”
    “தண்ணிய குணத்தர் சுத்த சைவசித் தாந்த ராய
    புண்ணியர் பலருங் கூடிப் புகழ்மிகு தியாக ராசர்
பண்ணிய வாடன் முற்றும் பாடுக தமிழா லென்று
    மண்ணிய மணியே நேரும் வாய்மலர்ந் தருளி னாரால்”
    “பொற்றுண ரிதழி வேய்ந்த புற்றிடங் கொண்ட பெம்மான்
    நற்றுணர் மலர்மென் றாளே நாடுமன் புடைய ராய
முற்றுணர் பெருமை சான்றோர் மொழிந்தசொற் றலைமேற் கொண்டு
    சிற்றுணர் வுடைய யானுஞ் செப்பிட லுற்றேன் மாதோ”

    என்னும் செய்யுட்களால் விளங்கும்.

இதன் வட நூலைப் பெறுவதற்கு இவர் முயன்ற காலத்தில் முதலிற் பதின்மூன்று பகுதிகளும் பதினான்காவது பகுதியிற் பாதியுமே கிடைத்தமையால் அவற்றைத் தமிழ் வசன நடையாகப் பெயர்த்து எழுதுவித்து அவற்றை ஆதாரமாகக் கொண்டு அக் காப்பியத்தை இயற்றத் தொடங்கினார். அப்பால் எத்தனையோ வகையாகப் பலரைக் கொண்டு முயன்றும் அந்நூலின் மற்றைப் பாகம் கிடைக்கவேயில்லை. ஆதலால் மேற்பட்ட பகுதி செய்யப்படவில்லை.

இதன் திருவிருத்தத்தொகை 699.  லீலைகள் முந்நூற்றறுபதென்று கேள்வியுற்றமையால் அவற்றிற்குத் தக்கபடி காப்பிய உறுப்புக்கள் விரிவாக இருக்க வேண்டுமென்று நினைந்து கடவுள் வாழ்த்து முதலியன மிக விரிவாகவும் அலங்காரமாகவும் அன்பர்கள் விரும்பியபடி செய்யப்பெற்றன. ‘மேற்பட்டுள்ள பாகம் கிடைக்கவில்லையே; இந் நூலைப் பூர்த்தி செய்யும் பாக்கியம் நமக்கில்லையே’ என்ற வருத்தம் இக்கவிஞர்கோமானுக்கு ஆயுள் பரியந்தம் இருந்துவந்ததுண்டு. இந்நூலைப் பூர்த்திசெய்ய வேண்டுமென்று யாரேனும் சொன்னால் அப்பொழுது, “ஸ்ரீ தியாகராசப் பெருமான் திருவருள் இது விஷயத்தில் எனக்கு இவ்வளவுதான்!” என்று சொல்லுவார்.

இப்புலவர் சிகாமணி இயற்றிய பெருங்காப்பியங்கள் பலவற்றுள் தியாகராசலீலையே முதலிற் செய்யத் தொடங்கியதாதலால் இவரே பாடல்களை நெடுநேரம் யோசித்துத் தனித்தனியான ஏடுகளிலெழுதிச் சிலமுறை பார்த்துத் திருத்திவந்தார். அவ் வொற்றை யேட்டிலிருந்த பாடல்களை வேறு பிரதியிற் செவ்வனே எழுதிவந்ததன்றி இவர் அவ்வப்பொழுது சொல்லிவந்த அந் நூற் பாடல்களைப் பின்பு எழுதிவந்தவர் சி.தியாகராச செட்டியாரே. அங்ஙனம் இவர் எழுதித் திருத்திய ஒற்றையேடுகள் திரிசிரபுரத்தைச் சார்ந்த வரகனேரியிலிருந்தவரும், இவருடைய மாணாக்கர்களுள் ஒருவரும், செல்வரும், இவரை அன்புடன் ஆதரித்தவருமாகிய சவரிமுத்தா பிள்ளை யென்பவரிடமிருந்து பல வருடங்களுக்கு முன் எனக்குக் கிடைத்தன.

சில செய்யுட்கள் இயற்றப்பட்ட வரலாறுகள்

தியாகராச செட்டியாரும் நானும் சற்றேறக்குறைய 50 வருஷத்திற்கு முன் பூவாளூருக்குப் போயிருந்தபொழுது அங்கே ஊரின் பக்கத்தில் ஓடும் பங்குனியாற்றின் தென்பாலுள்ள படித்துறையொன்றில் பெரிதாயிருந்த கருங்கற் பாறையொன்றைக் காட்டிச் செட்டியார், “இவ்வாற்றில் ஸ்நானம் செய்துவிட்டு இப் பாறையிற் பார்த்திவ பூசை செய்வதற்கு ஐயா அவர்கள் இருந்தபொழுது பத்திரபுஷ்பம் கொணர்ந்து சேர்ப்பித்துவிட்டு நான் வேறோரிடத்தில் இருந்தேன். அவர்கள் நெடுநேரம் தியானித்த வண்ணமாகப் பூசையில் இருந்தார்கள். அவர்கள் அவ்வாறு இருத்தல் வழக்கமன்றாதலால் நான் அருகிற்சென்று, ‘ஐயா! நேரமாயிற்றே’ என்றேன். உடனே அவர்கள், கண்ணைத் திறந்து என்னைப் பார்த்து, ‘தியாகராசு, ஏட்டைக் கொண்டுவா’ என்றார்கள். அப்படியே நான் கொண்டுவந்து நின்றேன். உடனே அவர்கள்,

“இந்துதவ ழித்தளிமே வெங்கடியா கப்பொருளை
வந்துவழி படலன்றி வானவர்காள் கவரமனம்
முந்துவிரே லுடன்முறிய முட்டுவமென் றுறைவனபோல்
நந்துமுயர் மணிமதின்மே னன்குறையும் விடைகள்பல’ 

                             (திருநகரப் படலம், 159)

என்று திருமதில் மேலுள்ள நந்திகளைப் பற்றிய கற்பனைப் பாடலைச் சொன்னார்கள்; நான் எழுதினேன்” என்று சொல்லி இவருடைய கவித்துவ முதலிய உயர்குணங்களை எடுத்துப் பாராட்டினார். அப்பொழுது அவருடைய கண்களிலிருந்து நீர் பெருகிக்கொண்டேயிருந்தது. அந்நிலை இந்த நிமிஷத்தில் நினைத்தாலும் மனத்தை உருக்குகின்றது. தம்பால் வந்தவர்களிடத்தும் பாடங்கேட்பவர்களிடத்தும் ஸமயோசிதமாக இந் நூலிலுள்ள பாடல்களைச் சொல்லி ஊக்கத்துடன் பிரசங்கிப்பதே செட்டியாருக்குப் பெருவழக்கமாக இருந்தது. இந்நூல் முழுவதும் அவருக்கு மனப்பாடம்.

பிள்ளையவர்களுடைய சரித்திர சம்பந்தமான செய்திகள் பலவற்றைச் சொன்னவரும் இவருடைய மாணாக்கர்களுள் ஒருவருமாகிய உறையூரைச் சார்ந்த திருத்தாந்தோன்றியிலிருந்த மதுரைநாயக முதலியாரென்பவரைப் பல வருடங்களுக்கு முன்பு நான் கண்டு கேட்டபொழுது இந்த லீலையின் சம்பந்தமாக அவர் அன்புடன் சொல்லிய செய்தி வருமாறு:-

”தியாகராசலீலை செய்து கொண்டிருக்கும் நாட்களுள் ஒரு நாள் சூரியோதயத்தில் திரிசிரபுரத்திலிருந்து உறையூருக்குச் சிலருடன் சென்ற பிள்ளையவர்கள் இடையேயுள்ள ஒரு வாய்க்காலின் கரையிலிருந்து பற்கொம்பினால் தந்தசுத்தி செய்யத் தொடங்கினார்கள். அப்பொழுது அவர்களுடைய தலையிற் கட்டியிருந்த வஸ்திரத்திற் பல ஒற்றையேடுகளும் எழுத்தாணியும் செருகப்பட்டிருந்தன. அந்த இடம் பலர் சென்றுவரக் கூடிய சாலையின் பக்கத்திலுள்ளதாதலால் அநேகர் அவர்களைப் பார்த்துக் கொண்டே போனார்கள். பகல் பத்து நாழிகைக்கு மேற்பட்டும் தம்முடைய சரீரத்தில் வெயில் மிகுதியாகத் தாக்கியும் அவர்கள் அவ்விடம் விட்டு எழவேயில்லை; வேறு பக்கம் திரும்பவுமில்லை; தந்த சுத்தி செய்தலும் நிற்கவில்லை. காலையில் அவர்களை அங்கே பார்த்துவிட்டு உறையூர் சென்று வந்தவர்களிற் சிலர் மீட்டும் அவர்களை அதே நிலையிற்கண்டு, ‘இன்று காலை தொடங்கி இந்நேரம் வரையில் இவர்கள் தந்த சுத்தி செய்துகொண்டேயிருப்பதற்குக் காரணமென்ன?’ என்று நினைந்து கவலையுற்றுத் தங்களுள் மெல்லப் பேசிக்கொண்டே அருகில் வந்து, ‘உதயகால முதல் இவ்விடத்திலேயேயிருந்து பல் விளக்கிக் கொண்டிருப்பதற்குக் காரணம் என்ன?’ என்று கேட்டபொழுது பிள்ளையவர்கள் திடீரென்றெழுந்து கையையும் வாயையும் சுத்திசெய்து கொண்டு தலை வஸ்திரத்திலிருந்த ஏடு எழுத்தாணிகளை யெடுத்து அந்நேரம் வரையில் யோசித்து முடித்து வைத்திருந்த சில செய்யுட்களை முடிந்த வண்ணமே எழுதிக்கொண்டு அவர்களோடு திரிசிரபுரம் வந்துவிட்டார்கள். அச் செய்யுட்கள் நைமிசப்படலத்தில் உள்ளவை.”

இச்செய்தியைப் பலராற் கேள்வியுற்றே இந்த லீலையின் ஒற்றையேடுகளைத் தாம் வாங்கிவைத்திருந்ததாக வரகனேரிச் சவரிமுத்தா பிள்ளையும் சொன்னார்.

இவற்றால் இந்நூலை இயற்றுங்காலத்துப் பிள்ளையவர்களுக்கு மனவொருமையிருந்து வந்ததென்பதும், மிக ஆராய்ந்தே ஒவ்வொரு பாடலையும் செய்தாரென்பதும் வெளியாகின்றன.

இவர் நாட்டுப் படலத்தைப் பாடிக்கொண்டு வருகையிற் சில செய்யுட்கள் பாடி முடித்த பின்பு சில அன்பர்களும் புலவர்களும் இருக்கும்பொழுது அவற்றைப் படித்துக் காட்டினார். சோழ வள நாட்டைப் பலவிதமாகச் சிறப்பித்து இவர் பாடியிருத்தலைக் கேட்ட அக்கூட்டத்திலிருந்த பாண்டி நாட்டாரொருவர், “நீங்கள் சோழவள நாட்டை எவ்வாறு சிறப்பித்தாலும் பாண்டிவள நாட்டின் பெருமை சோழநாட்டிற்கு வாராது” என்று சொல்லிப் பல நியாயங்களைக் கூறிச் சேது புராணத்தில் திருநாட்டுச் சிறப்பிலுள்ள,

“பன்னுசீர்க் கிள்ளி நாடும் பைந்தமிழ் நாட தேனும்
இன்னிசைத் தமிழி னாசா னிருப்பது மலய வெற்பிற்
பொன்னிபோற் பொருநை தானும் பூம்பணை வளங்க ளீனும்
கன்னிநாட் டிதுபோன் முத்தங் காவிரி கான்றி டாதே” (107)

என்ற செய்யுளை எடுத்துச் சொன்னார்.

அவற்றைக் கேட்ட இப்புலவர்பிரான் அவர் கூறியவற்றைத் தக்க ஆதாரங்களைக்கொண்டு மறுத்துக் கூறினார். அந்த நிகழ்ச்சியின் நினைவோடு மேலே நாட்டுப் படலத்தைத் தொடர்ந்து பாடுகையில்,

“பழுதி லபயன் றிருநாடு பரவு பொன்னி யுடையதென
வழுதி நாடும் பொருநையுடைத் தெனினவ் வழுதி வளநாடு
செழுநீர் நாடன் றிதுபோலச் சென்று சென்று பலநதியாய்
ஒழுகா வளங்கள் பலவாக்கும் உயர்வு முளதோ வதற்குணர்வீர்”

                                   (திருநாட்டுப். 84)

என்னும் செய்யுளொன்றை அமைத்தார்.

பிற்காலத்தில் இவர் சேது புராணத்தை எங்களுக்குப் பாடஞ் சொல்லி வருகையில் மேற்காட்டிய செய்யுளுக்குப் பொருள் சொல்லும்பொழுது இவ்வரலாற்றையும் கூறினார்.

தியாகராசலீலையின் அமைப்பு

ஸ்தல புராணங்கள் வடமொழியில் சரித்திரத்தை மட்டும் புலப்படுத்திக் கொண்டிருக்குமேயன்றி அவற்றிற் கற்பனைகள் அமைந்திரா. அவற்றை வடமொழியில் உள்ளவாறே பண்டைக் காலத்திற் பலர் தமிழில் மொழிபெயர்த்து வந்தார்கள். பின்பு சிலர் சில வேறுபாடுகளை அமைத்தார்கள். சிலர் சொல்லணி, பொருளணி முதலியவற்றை மட்டும் அமைத்துப் பாடிவந்தார்கள். பின்பு சில தமிழ்க்கவிஞர் *9 ஸ்தல புராணங்களை, “பெருங்காப்பிய நிலை” என்னும் தண்டியலங்காரச் சூத்திரத்தின்படி காவிய இலக்கணங்களை அமைத்துப் பாடினார்கள். பெரியபுராணம், கந்த புராணம் முதலியவற்றைப் பின்பற்றி நாடுநகரச் சிறப்புக்களுடன் விரிவாகப் பழைய நூற் கருத்துக்களையும் சாஸ்திரக் கருத்துக்களையும் அமைத்துப் பலர் செய்ய ஆரம்பித்தனர். அவ்வாறு செய்தவர்கள் அந்தகக்கவி வீரராகவ முதலியார், எல்லப்ப நாவலர், மேலகரம் திரிகூடராசப்பக் கவிராயர், பரஞ்சோதி முனிவர், துறைமங்கலம் சிவப்பிரகாச ஸ்வாமிகள், திருவாவடுதுறையாதீன வித்துவான் சிவஞான ஸ்வாமிகள், கச்சியப்ப ஸ்வாமிகள், திருக்குருகைப் பெருமாள் கவிராயர் முதலியோர். அப்புலவர் பெருமக்கள் இயற்றிய நூல்களைப் பின்பற்றிப் பெருங்காப்பிய இலக்கண அமைதிகளோடு தியாகராசலீலையைச் செய்யத் தொடங்கின பிள்ளையவர்களுக்கு காப்பியத் தலைவராகத் ‘தேவிற்சிறந்த கிண்கிணித் தாட் சிங்காதன சிந்தாமணி’ ஆகிய தியாகராசப் பெருமானும், நாட்டுவளம் கூறுதற்குச் சோழவளநாடும், நகரவளம் கூறுதற்கு நிறைசெல்வத் திருவாரூரும் கிடைத்தமையின் இவர் தமது நாவீறு முழுவதையும் இம்முதற் காப்பியத்திலே காட்டியுள்ளார்.

இந் நூலில் இக்கவியரசர் தாம் அங்கங்கே கண்டும் கேட்டும் கற்றும் தொகுத்த பலவகைச் செய்திகளைப் பலவகை யமைப்புக்களில் இணைத்து அழகுபடுத்தியிருக்கின்றார்.

“முகத்தினுக் குரிய வங்க முழுமையு மிலாத வொன்றைத்
தகத்திரு முகமென் றாள்வார் தழைகவிக் குரிய வங்க
மகத்துவ ஞான வாய்மை மருவிலாச் சிறியேன் பாடல்
அகத்திலை யெனினு நல்ல பாடலென் றெடுத்தாள் வாரால்”

என்பது போன்றுள்ள அவையடக்கச் செய்யுட்களிலேயே இவர் தமது கற்பனையைக் காட்டத் தொடங்குகின்றார். *10  ‘உலகிற் கெட்டதைப் பெருகிற்றென்று கூறுவதைப்போல என்னுடைய கவிகள் நயமில்லாதனவாயினும் நயமுள்ளன வாகுமென்பர் பெரியார்’ என *11 அவைக்கு அடங்கிக் கூறிய இவர்,

“ஞானமார் தருதென் னாரூர் நாயக னாடல் வாரி
மானமா ரதனை நாடும் வளத்தவென் பாடன் மாரி
தானமா ருணர்ச்சி மிக்க தன்மையார் மயில்க ணாளும்
ஈனமார் பொறாமை மிக்க யாவருங் குயில்கண் மாதோ”

என அவையை அடக்கியும் பாடுகிறார். ‘ஈன மார் பொறாமை மிக்க’ பலர் செயல்களால் வந்த துன்பத்தை அநுபவித்த இவர் அச்செயல்களை நினைந்தே இச்செய்யுளை இயற்றினார் போலும்!

*12 இந்நூலுள் ஒரு சொல்லே பலமுறை பின்வரப் பாடிய பாடல்களும், ஒரு பொருட் பெயருக்கு இயல்பாக உள்ள காரணத்தோடு வேறு பல காரணங்களையும் கூறும் கவிகளும், ஒரு நிகழ்ச்சிக்கு உரிய காரணத்தைக் கூறாமல் வேறொரு காரணத்தைக் கற்பித்தமைத்த பாடல்களும், தற்குறிப்பேற்ற அணிகள் அமைந்த கவிகளும், முன்வைத்துள்ள கருத்தொன்றை வேறு ஒரு கருத்தைப் பின்வைத்து முடிக்கும் வேற்றுப் பொருள்வைப்பமைதியுள்ள செய்யுட்களும் பல; அவற்றிற் சிலேடைப்பொருளை யமைத்த பாடல்கள் பல:

“தலைவ ரைத்தணந் திரங்குறு தாழ்குழன் மடவார்
அலைது யர்க்கெதி ராற்றுறா தரற்றுதன் மான
நலமு டைக்கடல் பெருமுழக் கஞ்செயு *13 நாவாய்
பலப டைத்திடிற் பெருமுழக் கஞ்செயப் படாதோ.” 

                           (திருநாட்டுப், 143)

அகப்பொருட் செய்திகளைக் குறிக்கும் கவிகளும் இலக்கண விஷ யங்களைப் பலவகையில் எடுத்தமைத்த செய்யுட்களும் பலவகை உவமைகளும் இதிற் காணப்படும். நாயன்மார்களுடைய அருமைச் செயல்களை உவமை கூறும் செய்யுட்கள் பல:

இழிதக விறைச்சி யெச்சி லெம்பிரா னுண்ண நல்கி
அழிவில்பே ரின்பந் துய்த்த வன்பர்கண் ணப்ப ரேபோல்
இழிதக வுவர்நீ ரெச்சி லெழிலிக ளுண்ண நல்கி
அழிவிலின் சுவைய நன்னீ ரருந்திய தாழி மாதோ.” 

                              (திருநாட்டுப், 28)

இயற்கைப் பொருள்களை உவமை கூறுவதும் உண்டு:

“சுரும்புசெறி கோகனக மலர்நடுவ ணறனின்றுந் துள்ளி வீழ்ந்த
பருங்கயல்பைந் தருக்கிளையிற் குருகெடுத்துத் தாதகலப் படர்நீர் தோய்த்தல்
இருந்தைசெறி யழனடுவ ணியைத்தவிர சதக்கட்டி யினைப்பொற் கொல்லன்
திருந்தியகைக் குறட்டெடுத்து வெப்பமற நீர்தோய்க்குந் திறமே மானும்.” 

                                 (திருநாட்டுப். 75)

சைவ சித்தாந்த சாஸ்திரக் கருத்துக்களை உவமையாக எடுத்தாண்ட பாடல்கள் பல: பலா, மா.

“சிறந்த தீஞ்சுளை யகம்புறஞ் சிறவாச்
செறிமுள் கொண்டபா கற்கனி நாளும்
சிறந்த சத்துவ மகம்புறஞ் சிறவாத்
திறத்த தாமத முடையதே நிகரும்
சிறந்த தீஞ்சுவை புறமகஞ் சுவைகொள்
சிறப்பு றாதவித் துடையமாங் கனிகள்
சிறந்த சத்துவம் புறமகஞ் சிறவாத்
திறத்த தாமத முடையமா னிகரும்.” 

                              (நைமிசப். 4)

மடக்குவகைகளும், திரிபும், எதுகை நயங்களும், உலக வழக்குக்களும், பழமொழிகளும் அமைந்துள்ள செய்யுட்கள் பல இடங்களிற் காணப்படும்.

அங்கங்கேயுள்ள சிவஸ்துதிகள், சிறந்த கருத்துக்கள் தம் பால் அமையப்பெற்று விளங்கும்:

“வானாடு வெறுத்துநெடு மண்ணாடு குடிபுகுந்த வள்ளால் போற்றி
தேனாடு செங்கழுநீர்த் தேமாலை செறிந்தபுயத் தேவா போற்றி
ஆனாடு கொடியுயர்த்த வம்மானே கம்பிக்கா தழகா போற்றி
பானாடு பூங்கோயி லிடமேய கிண்கிணிப்பொற் பாதா போற்றி.” 

                                 (முதலாவது, 36)

திருநாட்டுப் படலத்தில் ஐந்திணைகளை வருணிக்கும் பகுதியும், திணை மயக்கம் கூறும் பகுதியும், திருநகரப் படலத்திற் பொது வர்ணனையும், புறநகர் இடைநகர் அகநகர் எனப் பிரித்துப் புனைந்து கூறுவதும், ஒவ்வொரு சாதியார்க்குமுரிய வீதிகளைக் கூறுகையில் அவரவர் இயல்புக்கேற்றபடி புனைவதும், பிறவும் சுவை நிரம்பி விளங்கும்.

“பழுதின் மாணவர்க் கிலக்கண முணர்த்துநர் பலரால்”
“படாத காப்பியப் பாடஞ்சொல் வார்களும் பலரால்”
“பாய சாத்திர பாடமோ துநர்களும் பலரால்”
“ஆகமஞ் சாற்றுநர் பலரால்” 

                          (திருநகரப். 141-4)
“சடையர் நீற்றொளி மேனியர் கண்மணி ததைந்த
தொடைய ரைந்தெழுத் தழுத்திடு மனத்தினர் தூய
நடையர் வாய்மையர் நற்றவர் நகுநறுங் காவி
உடையர் வாழ்திரு மடங்களும் பற்பல வுளவால்” 
                  
                             (திருநகரப்.146)

என்பன முதலிய செய்யுட்கள் பிள்ளையவர்கள் திருவாவடுதுறை யாதீனத்திற் கண்டு இன்புற்ற காட்சிகளை நினைந்து பாடப்பெற்றனவாகத் தோற்றுகின்றன. திருக்கோயிலை வருணிக்கும் பகுதி பலவகைக் கற்பனைகளோடு விளங்குகின்றது. பலவகை மரங்களைப்பற்றிய உவமை முதலியனவும், முனிவரர்களது இயல்பும், சூதமுனிவர் பெருமையும், அவர்பால் முனிவர்கள் பணிந்து கேட்கும் பண்பும் நைமிசப் படலத்திற் காணப்படும்.

பின்பு லீலைகள் தொடங்கப்படுகின்றன. அவற்றில் நரசிங்கச் சோழனென்பவன் வேட்டைமேற் சேறலும், சங்கரசேவகச் சோழன் சிவபெருமானைப் பணிந்து வரம் பெறுதலும், தியாகராசப் பெருமான் அரசத் திருக்கோலங் கொள்ளுதலும், அவரோடு வந்த சேனைகளின் சிறப்பும், அவர் மந்திரிகளுக்கு இடும் கட்டளை வகைகளும், பல நதிக்கரையிலுள்ள மறையோர்களின் பெருமையும், பல நாட்டு மன்னர்கள் சீரும், அவர்கள் நாட்டு வளங்களும், பிறவும் இனிய சொற்பொருளமைதியுடன் கூறப்படுகின்றன.

அவ்வக்காலத்திற் பிள்ளையவர்கள் தம் உள்ளத்தில் ஆராய்ந்து தொகுத்து வைத்திருந்த அரிய கருத்துக்களும் இனிய கற்பனைகளும் நிறைந்து விளங்கும் இத் தியாகராசலீலை தேனீக்கள் பல மலர்களில் உள்ள தேனைப் பலநாள் தொகுத்து அமைத்த தேனிறாலைப்போல உள்ளது. இவராற் செய்யப்பெற்ற முதற் காப்பியமாதலின் இதில் ஒரு தனியான அழகு அமைந்திருக்கின்றது. அக்காலத்திலே இவரோடு பழகிய பலர் இத் தியாகராசலீலைப் பாடல்களை அடிக்கடி அங்கங்கே எடுத்தெடுத்துப் பாராட்டி மகிழ்வதுண்டு.

பிற்காலத்திற் பிள்ளையவர்கள் திருவாவடுதுறையாதீனத்து வித்துவானாக விளங்கிய பொழுது மேலகரம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரவர்கள் பல வித்துவான்களும் செல்வர்களும் நிறைந்த சபையில் இந்நூற் செய்யுட்களைச் சொல்லச் செய்து கேட்டும் கேட்பித்தும் இன்புற்று வருவதுண்டு. ஒருமுறை அங்ஙனம் பலர் கூடியுள்ள சபையில் ஸம்ஸ்கிருத வித்துவான்கள் பலர் பல காவியங்களிலுள்ள நயமான பகுதிகளை எடுத்துக் கூறிப் பிரசங்கஞ் செய்தார்கள். அப்பொழுது தமிழிலும் அத்தகைய சுவையுள்ள கவிகள் உண்டென்பதை அறிவிக்கக் கருதிய தேசிகரவர்கள் அங்கிருந்த பிள்ளையவர்களைப் பார்த்து, “தியாகராசலீலையில் நைமிசப்படலத்தில் விளாமரம் முதலியவற்றைப் பற்றித் தாங்கள் சொல்லியிருப்பதைச் சொல்ல வேண்டும்” என்று கட்டளையிட, இவர் பின்வரும் மூன்று பாடல்களைச் சொல்லிக் காட்டினார்:

விளாமரம்

“தடிசி னத்தமென் சாதுநீர் மையர்க்குத்
தன்ன மாயினும் பயன்படார் சினந்து
கொடிறு டைத்திடு கூன்கையர் கொள்ளை
கொள்ள வுள்ளன வெலாங்கொடுப் பார்போற்
படியின் மென்பற வைக்கணுத் தனையும்
பயன்ப டாதுமும் மதக்கொடுங் களிறு
கடித லைத்திடக் குலைகுலைந் துள்ள
கனியெ லாமுகுத் திடும்விளப் பலவால்.”

அசோக மரம்

“அருக னார்க்குநன் னிழல்புரி தருவென்
றறைதல் போக்கவோ வணியிழை மடவார்
பெருக வந்துதைத் திடறவிர்ந் திடவோ
பெற்ற தம்பெயர்ப் பொருட்குமா றாக
ஒருக யற்பதா கையன்கரங் கொண்டே
உலகி னுக்கஞ ருறுத்தறீர்த் திடவோ
முருக சோகமற் றவருறாச் சைவ
முனிவர் வாழிடங் குடிபுகுந் தலரும்.”

தராமரம், ஏழிலைப்பாலை

“வீர மாதவிர் நீவிர்வா ழிடம்யாம்
மேவி நீள்வரி விழிமட மாதர்
ஆர வந்துவந் தணைப்பது தவிர்ந்தேம்
அரிய நும்மையொத் தனமென நிற்கும்
ஈர மார்குர வங்களு மவர்நட்
பிரித்த தன்மையா னும்மைமற் றியாமும்
சார வொத்தன மாலென நிற்குந்
தழைத்த வேழிலைப் பாலையும் பலவால்.”

இவற்றைக் கேட்டு அங்குள்ள வித்துவான்களும் பிறரும் மிக மகிழ்ந்தனர். அவர்களுள் ஸ்ரீ காளஹஸ்தி ஸமஸ்தானத்திலிருந்து வந்திருந்தவரும் சதாவதானம் செய்யும் ஆற்றலுடையவரும் ஸ்ரீ வைஷ்ணவருமாகிய வடமொழி வித்துவானொருவர் பிள்ளையவர்களது கவித்திறமையில் ஈடுபட்டு மனமுருகி உடனே இவரைப் புகழ்ந்து பொருட்பொலிவையுடைய ஐந்து சுலோகங்களை இயற்றிச் சொன்னார்.

அடிக்குறிப்பு மேற்கோள்கள்:

1. காமர்பூம்பதி – பூவாளூர்.

2.  “தோலுந் துகிலுங் குழையுஞ் சுருடோடும், பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியுஞ், சூலமுந் தொக்க வளையு முடைத்தொன்மைக், கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பி” திருவா.

3.  “மைம்மரு பூங்குழல்” என்னும் திருப்பதிகம் முதலியவற்றைப் பார்க்க.

4.  ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு, 2645-69.

5.  வரை – கோவர்த்தனகிரி. பறை – சிறகு. அரி – இந்திரன். யாய்க்கு – திருமகளுக்கு. இற்கு – மனைவிக்கு; கலைமகளுக்கு. இளவல் – மன்மதன். ஏதி – ஆயுதம். எகின் – அன்னம்.

6.  பஞ்ச புண்ணியத் தலமாவது நதி, வனம், புரம், புஷ்கரிணி, க்ஷேத்திரமென்னும் ஐந்தும் அமைந்தது; திருத்தவத் துறைப் புராணம், பஞ்ச புண்ணியத்.

7.  வடகாவிரி – கொள்ளிடம்.

8.  இந்நூல் குறிப்புரையுடன் என்னாற் பதிப்பிக்கப் பெற்றுள்ளது.

9.  ஸ்தல புராணங்களும் காப்பியமாக அமைக்கப்பட்டனவென்பது “தன்னிக ருயர்ச்சி யில்லான் காப்பியத் தலைவனாக, முன்னவர் மொழிந்த தேனோர் தமக்கெலா முகம னன்றோ, அன்னது தனதே யாகு மண்ணலே பாண்டி வேந்தாய், இந்நகர்க் கரச னாவா னிக்கவிக் கிறைவ னாவான்” (திருவிளை. நகரப். 108) என்பதனாற் புலப்படும்.

10.  தியாகராசலீலை, அவையடக்கம், 4.

11.  அவையடக்கம் அவைக்கு அடங்குதலென்றும், அவையை அடக்குதலென்றும் இருவகைப்படும்.

12.  பின் எடுத்துக் காட்டப்பெறும் நயங்களுள் விரிவஞ்சிச் சிலவற்றிற்கே உதாரணங்கள் காட்டப்பெற்றுள்ளன.

13.  நாவாய் – கப்பல், நாவும் வாயும்; சிலேடை.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s