விடுதலைப் போரில் அரவிந்தர் -3

-திருநின்றவூர் ரவிகுமார்

அத்தியாயம் – 3

தாயகத்தின் அழைப்பு

இளநிலை பட்டப்படிப்பிற்காக கல்லூரியில் சேர்ந்தபோது ஹாஸ்டலில் தங்க அறைகள் கொடுக்கப்பட்டன. பருவ விடுமுறையைத் தவிர்த்து அடுத்த இரண்டு ஆண்டுகளும் அரவிந்தர் கேம்பிரிட்ஜில் தங்கினார். கிரேக்கமும் லத்தீனும் முதன்மைப் பாடங்களாக இருந்தன. அதைத் தவிர ஐசிஎஸ்.ஸுக்காக அவர் இதர பாடங்களையும் படிக்க வேண்டியிருந்தது. அதில் சட்டமும் நீதியும், பொருளாதார அரசியல், இந்திய வரலாறு, சிறிது சமஸ்கிருதம் ஆகியவை இருந்தன. அதைத் தவிர தன் தாய்மொழியான வங்காளம் (அவருக்கு கொஞ்சமும் தெரியாது), ஹிந்துஸ்தானி ஆகியவையும் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது.

ஐசிஎஸ்-ஸுக்கு அவர் தேர்வானது தெரிந்தவுடன் அவரது தந்தை டாக்டர் கிருஷ்ணதன கோஷ் தன் நண்பரான சர் ஹென்றி காட்டனிடம் சொல்லி, படிப்பு முடிந்தவுடன் பிஹார் மாநிலத்தில் ஆரா மாவட்டத்தில் ஐசிஎஸ் அதிகாரியாக நியமிக்க ஏற்பாடுகளைச் செய்து விட்டார். வேலை உறுதியாகிவிட்டது. தேர்வில் வெற்றி பெறுவதுதான் பாக்கி. அதற்காக கட்டப்பட்டுப் படிக்க வேண்டியதில்லை. அதுவும் அரவிந்திருக்கு. ஆனாலும் அவர் எல்லாப் பாடங்களையும் ஆழ்ந்து படித்தார்.

அரவிந்தர் கல்லூரியில் சேர்வதற்கு முன்னமேஅவரது மொழிப்புலமை பற்றிய புகழ் அங்கு பரவி இருந்தது. அதனால் அங்கிருந்த மூத்த ஆசிரியர் ஜி.டபிள்யூ. பிராத்திரோ அரவிந்தரை அழைத்துக்கொண்டு ஆஸ்கார் பிரௌனிங்கை சந்திக்கச் சென்றார். ஓ.பி. என்று சுருக்கமாக அழைக்கப்படும் அவர் அந்த பல்கலைக்கழகத்தில் பிரபலமான அறிஞர். அறிவுலகம் மதிக்கக்கூடிய ஒருவர். அந்த சந்திப்பைப் பற்றி  அரவிந்தர் தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பது:

நேற்றிரவு ஒரு பேராசிரியர் தன் அறைக்கு என்னை அழைத்தார். அங்கு ஓ.பி. எனப்படும் ஆஸ்கார் பிரவுனிங்கை நான் சந்தித்தேன். அவர் ஒரு அறிஞர். அவர் என்னிடம் சொன்னார்,  ‘நீ அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வானதால் உன்னுடைய தேர்வுத் தாள்களை நான் படித்தேன். நான் இதுவரை அதுபோன்ற விடைத்தாளைப் படித்ததில்லை. மிகவும் அற்புதமாக, உயர்ந்த தரத்தில் இருந்தன’ என்று கூறினார்…

கேம்பிரிட்ஜில் இருந்த இரண்டு ஆண்டுகளும் அரவிந்தர் படிப்பிலேயே கழித்தார் என்று கூற முடியாது. அவருக்கு விளையாட்டு பிடிக்காது என்பதால் அதைத் தவிர்த்து அவருக்குப் பிடித்தமான கவிதை படிப்பது, எழுதுவது, வெவ்வேறு துறைகளைப் பற்றி படிப்பது என நேரத்தைச் செலவிட்டார். அந்த நேரத்தில் அவர் எழுதிய பல கவிதைகள் அவரது முதல் கவிதை நூலில் பிறகு இடம் பிடித்தன. அந்தக் கவிதைகள் சிலவற்றைப் படித்த சக மாணவர் நார்மன் பெராரஸ் வெகுவாகக் கவரப்பட்டார். 1908இல் அவர் சிங்கப்பூர் செல்லும் வழியில் கல்கத்தா வந்தார். அப்போது அரவிந்தர் அலிப்பூர் வழக்கில் விசாரணைக் கைதியாக சிறையில் இருந்தார். நார்மன் சிறையில் அரவிந்தரைப் பார்ப்பதற்கு முயற்சி செய்தார். முடியாதபோது நீதிமன்றத்தில் அவரை கண்ணால் பார்ப்பதற்காக வந்திருந்தார். அவர் உதவி செய்ய வேண்டுமென நினைத்தாலும் அவரால் ஏதும் செய்ய முடியவில்லை. ஆனால் இந்தச் சம்பவத்திலிருந்து ஒரு விஷயம் தெரிகிறது. அரவிந்தருடன் கொஞ்ச காலம் பழகியவர்கள்கூட அவரால் வெகுவாக ஈர்க்கப்பட்டுள்ளனர்;  அவருக்காக ஏதாவது செய்ய முயற்சித்தார்கள்.

கேம்பிரிட்ஜ் போவதற்கு சிறிது காலம் முன்னமே அரவிந்தரின் கவனம் தன் தாய்நாட்டைப் பற்றியும் அங்கு நிலவும் அரசியல், ஆட்சி நிலைகளைப் பற்றியும் திரும்பியது. இதில் வேடிக்கை என்னவென்றால் அவருக்கு இந்தியா பற்றி எந்த விஷயமும் தெரியக் கூடாது என்று கருதிய அவரது தந்தை மூலமாகவே அது நிகழ்ந்தது. டாக்டர் கிருஷ்ண தன கோஷ் ஐரோப்பிய நாகரிகத்தை மிகவும் விரும்பியவர். என்றாலும் தன்னிச்சையான சிந்தனை கொண்டவர். அவர் அரசு மருத்துவராக இருந்ததால் ஆங்கில அரசின் அதிகாரத்துடன் அவருக்கு சில சமயம் உரசல்கள் ஏற்பட்டன. ஆங்கில அதிகாரிகளின் ஆணவ நடவடிக்கைகள் அவருக்குப் பிடிக்காமல் போயின. மாவட்ட நீதிபதியான இருந்த ஆங்கிலேயருடன் அவருக்கு ஏற்பட்ட மோதல் செய்தித்தாள்களில் ஒரு முறை வெளியானது. அந்தச் செய்தி நறுக்கை அவர் அரவிந்தருக்கு அனுப்பி இருந்தார். இப்படித்தான் பாரதம் பற்றியும் அங்கு ஆங்கிலேயர்களின் அட்டூழியங்கள் பற்றியும் அரவிந்தவருக்கு முதன்முதலில் தெரிய வந்தது.

‘இந்தியா மஜ்லிஸ்’ என்பது இந்திய மாணவர்களுக்கான அமைப்பு. ஆரம்பத்தில் அது சோசியல் கிளப் போல தொடங்கப்பட்டாலும் அரசியல் ஆர்வம் கொண்ட மாணவர்கள் சந்திக்கும் இடமாகியது. இந்திய அரசியல் பற்றிய கருத்துரைகளும் வாதப் பிரதிவாதங்களும்  நடக்கும் இடமானது. அனல் பறக்கும் பேச்சுக்களும் கடுமையான மோதல்களை வெளிப்படுத்தும் அரசியல் விவாதங்களும் அங்கு தொடர்ந்து நடந்து வந்தன. அரவிந்தரும் அந்த விவாதங்களில் கலந்துகொண்டு ஆவேசமாகப் பேசியுள்ளார். அப்போது அவர்  ‘தாமரையும் குத்துவாளும்’ என்ற ரகசிய அமைப்பில் சேர்ந்து இந்திய விடுதலைக்காக உழைக்க சபதம் எடுத்துக் கொண்டார். அவருடைய கருத்துக்கள் மிகவும் தீவிரமான அரசியலையும் ஆங்கிலேய அரசு எதிர்ப்பையும் வெளிப்படுத்தின. அந்த அமைப்பு நீண்ட நாள் நீடிக்கவில்லை. ஆனாலும் ஆங்கில அரசு அதைக் கண்காணித்து வந்தது.

கல்லூரியில் சேர்ந்த இரண்டு ஆண்டுகளில் அவர் அதை விட்டு வெளியே வந்து விட்டார். சரியாகச் சொன்னால் அவர் பி.ஏ. பட்டப் படிப்புக்காக தேர்வை எழுதவேயில்லை. மூன்று ஆண்டுகள் படிப்பு அது. அவர் இரண்டாவது ஆண்டு முடிந்தவுடன் வெளியேறிவிட்டார். அவருக்கு பட்டம் வாங்குவதில் விருப்பமில்லை. கல்வித் துறையில் பணிபுரியவோ அல்லது ஏதோ ஒரு வேலையை தேடுவதற்கு பட்டம் தேவை. அவரோ ‘உண்மையான அறிவு உள்ளவருக்கு எப்பொழுதும் வேலை கிடைக்கும்’  என்று கூறுபவர்.

அவர் 1892 ஆகஸ்ட் மாதத்தில் ஐசிஎஸ் பரீட்சையில் தேர்ச்சி பெற்றார். பணியில் சேர ஒரே ஒரு சடங்கு தான் பாக்கியிருந்தது. அது குதிரையேற்றம். ஆகஸ்டில் இருந்து நவம்பர் வரை குதிரையேற்றம் செய்துகாட்ட அவருக்கு நான்கு முறை வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் அதைத் தவிர்த்து விட்டார். அவருக்கு ஐசிஎஸ் ஆகி அந்நிய அரசுக்கு சேவை புரிய விருப்பமில்லை. விருப்பமில்லை என்பது ஒருபுறம் இருக்க, குதிரையேற்றத்தை கற்றுக்கொள்ள பணமும் இல்லை. அவருடைய தந்தை பணம் அனுப்புவதையே நிறுத்திவிட்டாரே.

ஒருவேளை யோக சக்தியால் அதற்குப் போக வேண்டாம் என செய்தி வந்ததா? என்று பின்னாளில் கேட்டபோது, ‘எனக்கு யோகா என்றாலே என்னவென்று அப்போது தெரியாது. என்னுடைய தந்தை சொன்னாரே என்று ஐசிஎஸ்-ஸில் சேர்ந்தேன். பின்னாளில் அது நிர்வாகப் பணி என்று புரிந்து விட்டது. எனக்கு அதில் நாட்டம் இல்லை. எனக்குப் பிடித்ததெல்லாம் கவிதை, இலக்கியம், பல மொழிகளை கற்றுக் கொள்ளுதல், தேசத்திற்காகப் பணிபுரிதல் ஆகியவைதான்’  என்று சொன்னார்.

1892 கேம்பிரிட்ஜில் இருந்து லண்டன் வந்துவிட்டார். நவம்பர் 15-ஆம் தேதி குதிரையேற்ற பரீட்சைக்கு அவர் போகவில்லை. விஷயத்தைக் கேள்விப்பட்ட அவரது அண்ணன் வானமே இடிந்து விழுந்துவிட்டது போல அவரை கடுமையாக வசை பாடினார்.

அண்ணன் மட்டுமல்ல, அவருடைய ஆசிரியராக இருந்த பிராத்திரோவும் வருத்தப்பட்டார். அவர் ஜேம்ஸ் காட்டனுக்கு எழுதிய கடிதத்தில்,  “குதிரையேற்றம் செய்யாததால் அவர் ஐசிஎஸ் பரீட்சையில் தேர்வாகவில்லை என்று கேட்க வருத்தமாக இருக்கிறது. அவர் இங்கிருந்த இரண்டு ஆண்டுகளும் மிகவும் முன்மாதிரியான மாணவராக இருந்துள்ளார். பட்டப் படிப்புக்கான பாடங்களுடன் ஐசிஎஸ் பாடங்களையும் ஒரே நேரத்தில் படித்து தேர்ச்சி பெறுவது மிகவும் கடினமான பணி. அதை சுலபமாக செய்துள்ளார். ஆங்கிலேயர்களை விடவும் அதிகமாக ஆங்கில மொழிப் புலமை கொண்டவர். பல பரிசுகளை வென்றிருக்கிறார். இப்படிப்பட்டவர் குதிரை மீது உட்காரவில்லை என்பதால் பணியில் சேர்க்க முடியாது என்பது நம்முடைய அரசின் குறுகிய கண்ணோட்டத்தையே காட்டுகிறது. இது அவருக்கு இழைக்கப்படும் அநீதி. அவருக்கு வீட்டில் இருந்து எந்த உதவியும் வருவதில்லை என்பதும் தெரியும். அவர் கஷ்டத்தில் இருக்கிறார் என்பதும் தெரியும். அவர் பல திறமைகள் கொண்டவர் மட்டுமல்ல, நன்னடத்தையும் கொண்டவர். இதுவும் தெரிந்தே தேர்வு செய்யவில்லை என்றால் நஷ்டம் அரசுக்கு தான்”  என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆங்கில அரசில் உதவிச் செயலாளர் பதவியில் இருந்த ஜேம்ஸ் காட்டனும் இந்திய செயலாளருக்கு அரவிந்தரைப் பற்றி கடிதம் எழுதினார். ஐசிஎஸ் பணியில் சேர்த்துக்கொள்ளுமாறு சொன்னார். ஆனால் ஆங்கில- இந்திய அரசு அவற்றையெல்லாம் ஏற்கவில்லை. அவரது சிந்தனைகள் அரசுக்கு விரோதமாக இருப்பதால் அவரை அரசுப் பணியில் அமர்த்துவது முள் மீது அமர்வது போல் ஆகிவிடும் என்று ஆங்கில அரசு கருதியது. அரவிந்தரின் தேசபக்தியே அவரை ஐசிஎஸ் ஆகாமல் தடுத்தது என்றே சொல்ல வேண்டும். இது சாதாரணமான விஷயம் அல்ல; பலருக்கு முன்மாதிரியானது. பின்னாளில் (1920)  தேர்ச்சி பெற்றும் ஐசிஎஸ் பணியை வேண்டாம் என சுபாஷ் சந்திர போஸ் துறப்பதற்கு இதுவும் ஒரு உந்துதலாக இருந்தது.

இந்தியாவுக்குத் திரும்ப வேண்டும், நல்ல வேலையில் அமர வேண்டும் என்ற நிலையில் அரவிந்தருக்கு அரிய வாய்ப்பு தானாக வந்தது. பரோடா மன்னர் அப்பொழுது லண்டன் வந்திருந்தார். ஜேம்ஸ் காட்டன் அவரிடம் அரவிந்தரைப் பற்றிப் பேசினார். ஆங்கில அரசு அதிகாரியான அவருடைய வார்த்தைக்கு மதிப்பளித்தார் மன்னர். மாதச் சம்பளம் இருநூறு ரூபாய் கொடுப்பதாக சொன்னார். அரவிந்தர் இருந்த நிலையில் அதைவிடக் குறைவாக கொடுத்தால் கூட பணியில் சேர்வதாக இருந்தது. எனவே அதனை மிக அதிக சம்பளமாக அவர் கருதினார். மன்னரோ வெறும் இருநூறு ரூபாய்க்கு ஐசிஎஸ் அதிகாரி கிடைத்துவிட்டார் என்று மகிழ்ந்தார். ஐசிஎஸ் படிப்புக்கான உபகாரச் சம்பளம் இறுதியாக்க் கொடுக்கப்பட்டது. அதைக் கொண்டு கடனையெல்லாம் அடைத்தார் அரவிந்தர். ஆனால் ஒரு கடன்காரன் துரத்திக் கொண்டே இந்தியா வரை வந்தான். அது ஒரு சுவாரசியமான விஷயம்.

கேம்பிரிட்ஜில் படிக்கும்போது அங்கு ஒரு தையல்காரன்  அரவிந்திருக்கு நல்ல துணிகளில் கோட்டு, சட்டை தைத்துக் கொடுப்பான். விலை உயர்ந்த துணிகள் அவை. அவன் கடன் கொடுத்தான் ஆனால் ஒன்றுக்கு இரண்டு மடங்கு விலை வைத்தான். லண்டன் வந்தபோது அரவிந்தரின் அண்ணன் மன்மோகனையும் பேசி வசப்படுத்தினான். அவரும் ஆஸ்கார் ஒயில்டைப் பார்க்கப் போகும்போது நன்றாக இருக்கும் என வாங்கிக் கொண்டார்.  அரவிந்தர் இந்தியா வந்த பிறகு அந்த தையல்காரன் வங்காள அரசுக்கும் பரோடா அரசுக்கும்  தனது கடனை வசூலித்து தரும்படி கடிதம் எழுதினான். அவனோ இரு மடங்கு விலைக்கு விற்றான். கடனோ வெறும் நான்கு பவுண்டுகள் தான். ஆனாலும் கடிதம் எழுதினான். கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அரவிந்தர் கருதினாலும், பரோடா மன்னர் கொடுத்து விடுமாறு சொன்னதால் அவர் அதை அவனுக்கு அனுப்பி வைத்தார்.

இங்கிலாந்தில் பதினான்கு ஆண்டுகள் வசித்த போதிலும் அரவிந்தருக்கு இங்கிலாந்தின் மீது எந்தப் பிடிப்போ பற்றோ ஏற்படவில்லை. மாறாக ஐரோப்பிய மண்மீது அவருக்கு விருப்பம் ஏதாவது இருந்தது என்றால் அது பிரான்ஸ் மீது தான். அவர் அங்கு வாழவில்லை. ஆனால் அறிவுபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் பிரெஞ்சு தேசத்துடன் அவர் மானசீக உறவு கொண்டிருந்தார்.

1893 ஜனவரி 12-ஆம் தேதி அரவிந்தர் இங்கிலாந்தில் இருந்து  ‘கார்த்தேஜ்’ என்ற கப்பலில் இந்தியாவுக்குப் புறப்பட்டார். அச்சமயம், ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

அரவிந்தர் பாரதம் வருகின்ற விஷயம் தெரிந்து அவரது தந்தை டாக்டர் கிருஷ்ண தன கோஷ் அவரை வரவேற்க குல்னாவிலிருந்து பம்பாய் வந்தார். ஆனால் எந்தக் கப்பலில், எந்த நாளில் வருகிறார் என்ற விஷயம் தெளிவாக அவருக்குத் தெரியவில்லை. சில நாட்கள் காத்திருந்து விட்டு அவர் குல்னாவுக்கு திரும்பிப் போய்விட்டார். அவருடைய வங்கியாளர்களான கிரெண்லேஸ் கம்பெனி அரவிந்தர் இங்கிலாந்திலிருந்து ‘ரோமானியா’ என்ற கப்பலில் புறப்பட்டதாகவும் அந்க்த கப்பல் போர்ச்சுக்கல் அருகே பாறையில் மோதி உடைந்து விட்டதாகவும் அதில் பயணித்தவர்கள் யாரும் தப்பவில்லை என்றும் அவருக்கு தந்தி அனுப்பியது. கப்பல் விபத்தில் அரவிந்தர் மாண்டார் என்ற செய்தியை தந்தையின் இதயம் தாங்கவில்லை. நெஞ்சு வலியில் மகனின் பெயரைச் சொல்லியபடியே அவர் காலமானார்.

அரவிந்தர் பயணித்த கார்த்தேஜ் கப்பல் 1893 பிப்ரவரி ஆறாம் தேதி பம்பாய் வந்தது. அவர் பாரத மண்ணில் காலடி வைத்ததும் ஏற்பட்ட அனுபவத்தை நீங்கள் ஏற்கனவே முதல் அத்தியாயத்தில் படித்தீர்கள்.

$$$

(அடுத்த அத்தியாயம் புதன் கிழமை வெளியாகும்)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s