-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
98. நனிசிறந்த கவிமகள்
.
ஸர்வாலங்கார யுக்தாம் ஸரலபதயுதாம் ஸாதுவ்ருத்தாம் ஸுவர்ணாம்
ஸத்பிஸ் ஸம்ஸ்தூயமானாம் ஸரஸகுணயுதாம் லக்ஷிதாம் லக்ஷணாட்யாம் /
உத்யத்பூஷா விசேஷாமுபகதவிநயாம் த்யோதமானார்த்தரேகாம்
கல்யாணீம் தேவ கௌரீப்ரிய மம கவிதாகன்யகாம் த்வம் க்ருஹாண //
.
நல்லழகு நன்னடை நற்பாங்கு நற்பொலிவு
நல்லோர்கள் பாராட்டு நற்குணங்கள் நிறைமகள்
அணிகலன் அடக்கம் பொருள்வரியும் ஒளிவீசும்
நனிசிறந்த என்னுடைக் கவிமகளை ஏற்பீரே!
.
சிவானந்த லஹரி என்ற திருப்பெயரில் அமைந்த, 100 கவிதைகள் கொண்ட, சிவானுபூதி நல்கும் அற்புதமான இந்த பக்தி இலக்கிய நூலைப் படைத்திட்ட ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர், இந்த 98-வது கவிதையிலே, மிகச் சிறந்த இந்த கவிப் பொக்கிஷத்தை, தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய இரண்டையும் தமது உடுக்கை ஒலியின் மூலமே மொழிந்து, மொழிகளுக்கும் அதிபதியாக விளங்கும் பசுபதிக்கே அர்ப்பணம் செய்கிறார். இந்தச் செய்யுளை (ஸ்லோகத்தை) கவிதைக்கும், கன்னிப் பெண்ணுக்கும் சிலேடையாக அமைத்திருப்பது கூடுதல் சிறப்பு.
முதலில் கன்னிப்பெண்ணுக்குரிய லட்சணங்களைப் பார்ப்போம்: அனைத்து அலங்காரங்களும் பொருந்திய நல்லழகு, அழகிய நடை, நல்ல ஒழுக்கங்கள் நிரம்பிய மனப்பாங்கு, சிறந்த மேனிப் பொலிவு, பெரியோர்களாலும் நல்லோர்களாலும் பாராட்டப்படுகின்ற பெருமை, அதற்கேற்ற நற்குணங்கள் நிறைந்தவளாக சிறந்த கன்னிப்பெண் விளங்குகிறாள். மிகச் சிறந்த அணிகலன்களை அவள் அணிந்திருக்கிறாள். அதற்கெல்லாம் மேலாக அடக்கம் (பணிவு) என்ற ஆபரணமும் பூண்டிருக்கிறாள். அந்தக் கன்னியின் கரங்களிலே, தனரேகைகள் பிரகாசிக்கின்றன. அப்பேர்ப்பட்ட சிறப்புகளையுடைய மிகச் சிறந்த கவிதையைப் போன்ற இந்தக் கன்னியை, பரமேஸ்வரனே, தங்களுடைய மணப்பெண்ணாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்கிறார்.
இப்போது கவிதை நலன்களுக்கு இதே ஸ்லோகம் எப்படிப் பொருந்துகிறது என்பதைக் காண்போம்:
.உவமை, உருவகம் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களுடன் கூடிய நல்லழகு, எளிமையும் இனிமையும் நிறைந்த நடை, நல்ல பாங்குடன் அமைக்கப்பட்ட செய்யுள் கோவை, சிறந்த கருத்துகளோடு ஒளிவீசும் நற்பொலிவு, நல்லோர்களாலும் ஞானிகளாலும் பாராட்டப்படுகின்ற உள்ளடக்கம், பலவித சுவைகளைத் தருகின்ற நற்குணம் ஆகிய அனைத்தும் நிறைந்ததாக சிறந்த கவிதை திகழ்கிறது. சிலேடை, வஞ்சப்புகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு அணிகள் கவிதையை அழகு செய்கின்றன. பெரிய கருத்துகளை மிக எளிமையாகச் சொல்கின்ற அடக்கம், கவிதைக்குப் பெருமை சேர்க்கிறது. சிறந்த கவிதை, பொருள் பொதிந்த வரிகளைக் கொண்டு ஒளிவீசுகிறது. இப்படிப்பட்ட சிறப்புகளுடைய, குணவதியான மணப்பெண்ணைப் போன்ற இந்தக் கவிதை நூலை, பரமேஸ்வரனே, நீங்கள் பிரியத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள் என்கிறார்.
$$$