சுயாட்சிக்குத் தகுதியாவதெப்படி?

-மகாகவி பாரதி

ஜனவரி மாதம் 5, 1907

இருபது இருபத்தைந்து வருஷ காலமாய் நமது நேயர்கள் இந்தியாவானது கனடா, ஆஸ்திரேலியாபோல ஜனங்களினாலேயே ஆளப்பட்டு ஆங்கிலேயரின் மேற்பார்வையிருக்க வேண்டுமென்று யோசனை செய்து கொண்டிருந்தார்கள். இந்தியர்களிடத்தில் அனுதாபமுள்ளவர்கள் போல நடிக்கும் சில ஆங்கிலேய் பிரமுகர்களும் அந்த யோசனையைத் தழுவியும் அதற்குத் தாங்களும் உதவி புரிவதாகக் கூறியும் வந்தனர். ஆனால் மேற்கூறிய யோசனை. இந்தியாவுக்குத் தகுதியுடையதல்ல. அப்படி ராஜ்ஜியத்தைத் தந்து மேற்பார்வை மாத்திரம் பார்க்க ஆங்கிலேயர் இசைய மாட்டார்களென்று பல தடவையும் உதாரணங்களால் காட்டிவரும்  சில புத்திமான்களின் உறுதிமொழியைக் கேட்டும் இன்னும் சிலருக்கு புத்தி மாறவில்லை.

“வருங்காலம் வந்தால், தானே எல்லாம் வந்து சேரும். நாம் பொறுமையோடு இருக்க வேண்டும்” என்று புத்தி சொல்கின்றனர். இம்மாதிரியாக ஊழ்வினையை எதிர்பார்க்கும் சாதுக்கள் தங்கள் கோழைத் தனத்தையும் மூடபக்தியையும் கைவிட்டு நாம் சுயாட்சி பெற ஆவலுடையவராக இருக்கிறோமென்பதை ராஜாங்கத்தாருக்கு உறுதிமொழியாகச் சொல்லி அதைப் பெறும் வழியைத் தேடுவதே உசிதமாகும்.

நாம் ஒரே நெறியில் நின்று நமது குறையை முடியாராகில் ராஜாங்கத்தாருடன் நாம் ஒத்து நடக்க முடியாதென்று பகிரங்கமாய்ச் சொல்ல வேண்டும். இந்தியர்கள் இன்னும் ஆளும் திறமை வாய்ந்தில்லையென்று சாக்குச் சொல்லிப் பொழுது போக்குகின்றனர். அப்படியே ஆளும் திறமையில்லையென்பதை நாம் ஒத்துக் கொள்வோம். ஆனால்  ராஜாங்கத்தின் கீழ் அப்படி சுயாட்சிக்கு வேண்டிய கல்வி மார்க்கம் ஏதாவது ஏற்படுத்தியிருக்கிறார்களா? “நாம் என்றைக்கும், அதோ ராஜாங்கத்தார் குற்றம்  செய்தனர், இதோ எங்களுக்குத் தீமை நேர்ந்தது” என்று முறையிட்டுக் கொண்டிருப்போமேயன்றி நமக்கு சுயாட்சிக்கு வேண்டிய பழக்கங்கள் பெறுவது  அசாத்தியம் என்பது நிச்சயம்.

நமக்கு என்றைக்கும், ராஜாங்கத்தாருடைய சாதுர்ய செய்கைகளைக் கண்டு வியந்து பேசியும் ஆச்சரியப்பட்டும் அவர்களைப் பூஜித்தும் வருவதே தொழிலாகி விட்டது. இதுதான் நாம் பிறந்த நாட்டில் நாமடைந்திருக்கும் நிலைமை. ஆங்கிலேய ராஜாங்கத்தின் அன்பு பூண்டவரும் தற்கால ராஜதந்திரத்தில் சுயாட்சி கொடுப்பதற்கு வேண்டிய வழிகள் பெற முடியாதென்பதை ஒப்புக்கொள்வர்.

எல்லாரும் பிறக்கும் போதே ஸகல வித்தைகளிலும் வல்லவராய்ப் பிறப்பதில்லை. ஒவ்வொருவனும் தொழிலில் பழக்கமடைந்தால் தான் வல்லவனாகிறான். உதாரணமாக, வியாபாரத்தில் தேர்ந்த ஒரு வர்த்தகன் தனது பிள்ளையைத் தன்கீழ் வைத்துக் கொண்டு தனக்குப் பிறகு அவன் இக்காரியத்தைப் பார்க்க வேண்டியவனாதலால் எல்லாத் தந்திரங்களையும் அப்பப்போது சொல்லி வைக்கிறான். நமது பூர்வீக அரசர்கள் தங்கள் புத்திரர்களுக்கு இளவரசர் பட்டமெனத் தந்து அவர்களை ராஜகாரியங்களைப் பார்க்க விட்டுத் தான் மேற்பார்வை செய்து வந்த முறையையும்  கேட்டிருக்கின்றோம். இப்போது ஆட்சி புரியும் இவர்களும் ராஜதந்திரங்களுடன் பிறந்த தேவதைகளல்ல. எல்லாம் கொஞ்ச கொஞ்சமாய் குட்டுப்பட்டு வந்ததேயன்றி வேறில்லை. “ட்யூடர்” வம்சத்தார் இங்கிலாந்தில் அரசு புரிந்த காலத்தில் இவர்கள் நிலைமையைச் சரித்திரம் நன்கு விளக்குகின்றது.

எல்லோரும் அந்தந்தத் (துறையில்) பலதரம் விழுந்தெழுந்துதான் இந்த நிலையிலிருக்கின்றனர். குழந்தை நடப்பதற்கு முன் பலதடவை  விழுந்து காயப்படுகிறது. அதனால் எழுந்திருக்கவொட்டாமல் வைப்பது  உசிதமா? ஆகையால், ஜனங்களுக்கு ஆளும் திறமையுண்டாவது அவர்கள் அந்த ராஜதந்திரத்திலும் தொழிலிலும் ஊடாடினால் தான் வரும்.

நாம் நாளுக்குநாள் ஆடவர்களுக்குள்ள தன்மையை இழந்துகொண்டே வருகிறோம். இப்படிக் காலம் கழிப்போமானால் சிவாஜியும் அசோகர் முதலிய மன்னர்களையும் தந்த இப்பாரத பூமி ஸப் இன்ஸ்பெக்டர்களையும் கலெக்டரையும் மேன்மேலும் பேறுவதாய்ப் போய்விடும். இதுவரை செய்த விண்ணப்பங்கள் அனைத்தையும் திரஸ்கரித்தும் மாறுபடுத்தியும் நாம் எண்ணத்தை நிறைவேற்ற மனமில்லாத ராஜாங்கத்தாரிடம் இன்னும் கெஞ்சுவதானால் நமது மூடத்தனம் எத்தன்மையது பாருங்கள். ஆங்கில ராஜாங்கத்தார் கேள்விக்கு ஒப்பி நடப்பது எப்போதெனில், செய்யாவிடில் அபாயம் நேருமெனத் தெரிந்தால்தான். அமெரிக்கர்கள் வாய்ப்பேச்சில் சாயாத போது ஜனங்களைக் கூப்பிட்ட  போதுதான், அவர்களுடைய சுயாட்சியின் உரிமை வெளிவந்தது. அதைக் கண்டுதான் பிரிட்டிஷார் ஆளும் திறமையை மதிப்பிடுகின்றனர்” என்று ‘வந்தே மாதரம்’ கூறுகிறது.

  • இந்தியா (05.01.1907)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s